(74) பிரபலங்களைத் தொற்றிய பிரமாண்ட வியாதி!
பிரமாண்டத்துக்கு பேர்போன ஆபாவாணனோட "முற்றுகை'’படத்தை இயக்கிய அனுபவத்தைச் சொல்லிட்டு வர்றேனில்லையா....
போலீஸ் அதிகாரி பானுப்ரியா ஆவேசமா பேசணும்கிறதுக்காக மனசுக்குள்ள ஊட ஊட ஒவ்வொரு கெட்டவார்த்தை சொல்லி, அப்புறமா டயலாக்கை பேசச்சொன்னேன்.
அப்படியே பேசி ரெண்டாயிரம் பேர்கள் முன்னாடி அப்ளாஸ் வாங்கிய பானுப்ரியா, “"சார், நீங்க சொன்ன மாதிரியே மனசுக்குள்ள கெட்ட வார்த்தைகளைச் சொல்லிட்டுத்தான் பேசினேன்''’என்றார்.
நான் சிரித்துவிட்டேன். ஆனாலும் உள்ளூர சில சங்கடங்கள் எனக்கு.
நடிப்பை திருப்திகரமாக வாங்குறதுக்காக பானுப்ரியாவ கெட்ட வார்த்தை பேச வச்சிட்டோமேனு ஃபீலிங்கா இருந்தது.
பிரமாண்டமாவே சிந்திக்கிற ஆபாவாணன், "படத்துல ஓபனிங்ல ஒரு பரிசல் போட்டி வரணும். அதுல ஹீரோ ஜெயிக்கிறான். ஹீரோ இண்ட்ரோ இந்த இடத்துலதான் வரணும், பரிசல் போட்டி நடக்கையில ஒரு பாடலும் இருக்கணும்'னார்.
மேட்டூர்லதான் பரிசல் போட்டி ஷூட்டிங். சுமார் இருநூறு பரிசல் போட்டியில கலந்துக்கிற ஏற்பாடு செஞ்சாச்சு.
அப்போ "பரிசல் ஓட்டிகள்ல யாரோ ஒருத்தன் பாடுற மாதிரி ஓபனிங் இருக்கணும்'னு ஆபாவாணன் விரும்பினார்.
"இவ்வளவு பிரமாண்டமா நடக்கிற பரிசல் போட்டியில ஹீரோவே பாடுற மாதிரி இருந்தாத்தானே நல்லா இருக்கும் ஆபா''’என நான் சொன்னேன்.
"வைதேகி காத்திருந்தாள் படத்துல, "மேகங்கருக்கையிலே'’என்கிற பரிசல் பாட்டு ஹீரோவோ, ஹீரோயினோ பாடல. கதை நாயகி அந்த பரிசல்ல இருப்பார். யாரோதான் பாடுவான். அந்த பாட்டு ஹிட்டாச்சு பாருங்க. அது மாதிரி இதுவும் நல்லா வரும். நாம ஏற்கனவே பேசினபடி ஹீரோ இண்ட்ரோ இருக்கட்டும். தண்ணீருக்கு அடியிலருந்து மேலெழும்பி, உறி பானையை உடைக்கிற அந்த இண்ட்ரோவே இருக்கட்டும்''”என்றார்.
அதன்படியே என்னோட அஸிஸ்டெண்ட் பாலுவை பரிசல் ஓட்டியாக்கி, அவன் பாடுற மாதிரி எடுத்தேன்.
"ரெண்டு கண்ணும் ரெண்டு கரையிலயும் இருக்கும்'னு கிராமத்துல சொல்வாங்க. அந்த மாதிரி அகண்ட பார்வையில சிந்திப்பவர் ஆபா. விட்டா 360 டிகிரி கோணத்திலயும் காட்சிகளை கண்ணில் விஷுவல் பண்ணிப் பார்க்கக்கூடியவர். இந்த பிரமாண்ட வியாதிதான் பின்னாடி விஜயகாந்த், இப்ராஹிம் ராவுத்தர் உட்பட பலரையும் தொத்திக்கிச்சு. "ஆபாவாணன் மாதிரி ஒரு படமாவது கிராண்டா எடுக்கணு'’என தயாரிப் பாளர்களும் ஆசைப்பட்டாங்கன்னா பாருங்களேன்.
"முற்றுகை'’படத்தையும் மிரட்டலா எடுத்து முடிச்சோம்.
அருண்பாண்டியன், பானுப்ரியா, ரஞ்சிதா, கீதா, ஆர்.பி.விஸ்வம், வெண்ணிற ஆடை மூர்த்தி, காந்திமதி, சார்லி, பாண்டு, விஜய கிருஷ்ணராஜ், சேதுவிநாயகம் மற்றும் பலர் நடித்தனர்.
இப்போ படத்துல டைட்டில் போட ணும்.
கம்பெனி பேர்ல ஆரம்பிச்சு, தயாரிப்பாளர் பேர் வரைக்கும் போட்டுட்டு, கடைசியாத்தானே டைரக்டர் பேர் போடுவோம்...
இப்ப டைட்டில்ல என்னோட பேர் போடணும்... ஆனா அதுக்கு பொருத்தமான இடம் அமையல.
ஒருத்தன் (கதைப்படி அருண்பாண்டியன்) ஆக்ஸா பிளேடால் ஜெயில் அறைக் கம்பியை அறுக்கற இடத்தில் போடலாம்னா... ‘டைரக் டர் நம்மள அறுக்கப் போறத ஸிம்பாலிக்கா காட்றான்னு சொல்லுவாங்க ஆடியன்ஸ்.
என்ன பண்ணலாம்?
அதுக்குப் பின்னாடி போடலாம்னா... தாலி அறுக்கிற சடங்கு ஸீன்.
"தாலி அறுத்திட்டாண்டா'னு சொல்லு வாங்க.
இப்படி ஒவ்வொரு இடமும் சென்டி மெண்ட்டா டைரக்டர் பேரை போட வாய்ப்பில்லாம இருந்துச்சு.
அதனால ரெண்டாவது ரீல்லதான் என் பெயரைப் போட வாய்ப்பு அமைஞ்சது.
ஜெயில்லருந்து தப்பிக்கிற ஸீன். யாரோ ஒருத்தன் கத்து வான்...
"பாலா தப் பிச்சிட்டான்'’என...
அந்த இடத்தில் "இயக்கம் -மனோபாலா' என போட் டேன்.
"சென்டிமெண்ட்டா படம் தப்பிச்சிடும்கிற மாதிரி இருக்கட்டுமே'னு இந்த இடத்துல போட்டேன்.
இத எதுக்கு சொல்றேன்னா... சினிமாவுல சின்னச் சின்ன விஷயங்களைக்கூட சென்டிமெண்ட்டோட பொருத்திப் பார்த்துத்தான் செய்யணும்.
ஆபாவோட பழகினதாகட்டும்... கேமராமேன் செல்வா கூட பழகினதாகட்டும்... மறக்க முடியாதது. ஆபாவோட யூனிட்டே அதர் ஹேபிட்டான தண்ணி, சிகரெட்டுனு எந்த கெட்ட பழக்கமும் இல்லாம இருந்தாங்க. ஆனா... சாப்பாடு விஷயத்துல அசத்திருவாங்க. எந்தெந்த ஹோட்டல்ல என்னென்ன ஸ்பெஷல்னு பார்த்துப் பார்த்து ஏற்பாடு பண்ணுவாங்க.
அப்படிப்பட்ட ஆபா இன்னைக்கி சோர்ந்துபோய் உட்கார்ந்திருக்கலாம். ஆபா... நீங்க மறுபடி சினிமாவுக்கு வரணும்னு இந்த தொடர் மூலமா உங்களை கேட்டுக்கிறேன்.
பிரமாண்டமா சிந்திக்கிற உங்களால இது முடியாத விஷயமில்லை.
(பறவை விரிக்கும் சிறகை)
படம் உதவி: ஞானம்
வில்லன் மனோபாலா!
கதாசிரியர் ஆர்.பி.விஸ்வம் ஒரு நடிகராகவும் பிரபலமானவர். அவர் ஒரு பிரமாதமான ரைட்டர். அவர்தான் "முற்றுகை'’படத்துக்கு டயலாக் எழுதினார். ரொம்ப அன்பான மனிதர்.
"மனோபாலா சார்... நான் டைரக்டரா ஜெயிச்சிட்டா, என்னோட படங்கள்ல உங்களை வில்லனா நடிக்க வைப்பேன்''’ என்றார்.
விஸ்வம் கண்ணுக்கு எனக்குள்ள ஒரு வில்லன் இருப்பது தெரிஞ்சிருக்கு. ஆனா மத்த டைரக்டர்கள் கண்ணுக்கு எனக்குள்ள இருக்க காமெடியன் தெரிஞ்சிருக்கான்.
அதனாலதான் நகைச்சுவை நடிகரா ஆகிட்டேன் போல.