dd

(63) ஒரு ரூவாய்க்கு... மூணு ரூவா!

விஜயகாந்த், ரூபினி, திலகன் உள்ளிட்ட நிறைய நட்சத்திரங்கள் நடிப்பில் "மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்'’படத்தின் படப்பிடிப்பு நாகர்கோவில் பகுதியில் ஒரு ஆற்றோரக் கிராமத்தில் நடந்தது. விஜயகாந்த் சவப்பெட்டி செய்யும் ராபர்ட் என்கிற கிறிஸ்தவ இளைஞராக நடித்தார்.

கதையைப் பற்றி அறிந்த ஆற்றின் அக்கரையில் உள்ள கிறிஸ்தவ கிராம மக்கள் திரண்டு வந்து "எப்படி எங்க கிறிஸ்தவ கதையை இந்த ஊர்ல எடுக்கலாம்?'’ என தகராறு செய்ய... “"கிறிஸ்தவ கதையை எங்க ஊர்ல எப்படி எடுக்க லாம்?'’என இந்த ஊர் இந்து நாடார் கள் அரிவாள் களுடன் வந்து தகராறு செய்ய... ஒட்டு மொத்த யூனிட்டையும் பாதுகாப்பாக அனுப்பி வைத்துவிட்டு, விஜயகாந்த் மட்டும் அந்த இரண்டு கிராம மக்களையும் எதிர் கொண்டார்.

Advertisment

அரிவாளோடும், ஆவேசத்தோடும் வந்த இரு கிராம மக்களும் கலவரத்துக்கு தயாராக... விஜயகாந்த் கூட்டத்திற்குள் புகுந்தார். உடனே அரிவாளுடன் பாயத் தயாரானவர்கள் பம்ம ஆரம்பித்தார்கள். சீறிய மக்களெல்லாம் பெட்டிப் பாம்பாய் அடங்கினார்கள். அந்த அளவுக்கு மனத் துணிவுடன் பிரச்சினையை எதிர்கொண்டார் விஜயகாந்த். அதுமட்டு மின்றி அந்தளவுக்கு விஜயகாந்த் மீது மரி யாதையும், அவருக்கு செல்வாக் கும் இருந்தது. விஜயகாந்த் சினிமாவில் மட்டுமல்ல, நிஜத்திலும் ஹீரோ.

இதற்கிடையே இரு கிராமங்களுக்கிடையே தகராறு ஏற்பட்டிருப்ப தாக போலீசுக்கு தக வல் கிடைக்க, அவர்கள் வந்துவிட்டார் கள்.

"இது ரொம்ப சென்ஸிடிவ்வான ஏரியா. அதனால அடிக்கடி இந்தப் பகுதியில் 144 தடையுத்தரவு போடுவோம். இப்பதான் பிரச்சினை இல்லாம இருந்தது. மறுபடி ஷூட்டிங் நடத்துறோம்னு பிரச் சினையை உண்டாக்கிட்டீங்க''’என இன்ஸ் பெக்டர் சொன்னார்.

Advertisment

விஜயகாந்த அவரை சமாதானப்படுத்தி, "அதெல்லாம் மக்கள் சமாதானமா போயிடு வாங்க. பிரச்சினை இருக்காது. நாங்க ஷூட் டிங்கை வேற பக்கம் நடத்திக்கிறோம்''’எனச் சொன்னார்.

இரு கிராம மக்களிடமும், "தயவுசெய்து எனக்காக நீங்க பிரச்சினை செய்யாம இருக் கணும்''’என கேட்டுக்கொண்டார். மக்களும் பிரச்சினை செய்யாமல் கலைந்து சென்றார்கள்.

போடப்பட்டிருந்த செட்டை பிரித்துக்கொண்டு, கிளம்பினோம்.

முட்டம்!

இது எனக்கு மிகவும் பரிட்சயமான கடலோரக் கிராமம். எங்க டைரக்டர் பாரதிராஜாவுக்கு பிடித்த லொகேஷன். அவரிடம் பணியாற்றியபோது அங்கே அடிக்கடி படப்பிடிப்பிற்கு சென்றிருக்கிறேன். இதுபற்றி ஏற்கனவே சொல்லியிருக்கேன்..

முட்டம் பகுதியில் படப்பிடிப்பு நடத்துவது அவ்வளவு சுலபமல்ல. ஆனால் பாரதிராஜா மட்டுமே அங்கே படப்பிடிப்பு நடத்த முடியும். அந்த மக்களுக்கு பாரதிராஜா மீது அப்படி ஒரு பிரியம்.

பாரதிராஜாவுக்குப் பிறகு, முட்டத்தில் படம் எடுத்தது நான்தான். இதற்குக் காரணம்... விஜயகாந்த்தும், விஜயகாந்த் ரசிகர் மன்றத் தலைவரும், விஜயகாந்த்தின் நண்பருமான மணியும் தான்.

தென்மாவட்டங்களில் விஜயகாந்த்திற்கு எவ்வளவு செல்வாக்கு இருந்தது என்பதை நான் அப்போதே உணர்ந்துகொண்டேன்.

மலையாள நடிகர் திலகன் பற்றி நான் சில விஷயங்களை இங்கே சொல்லியாக வேண்டும்.

ஏற்றுக்கொண்ட கேரக்டராகவே மாறிப் போகும் தன்மைகொண்டவர் திலகன். அவருக்கு ‘"மூன்றெழுத் தில் மூச்சிருக்கும்'’படத்தில் ‘நம்பூதிரி’ கேரக்டர்.

கேரளாவில் நம்பூதிரிகள் உள்ளாடையாக கோவணம்தான் அணிவார்கள். அதனால் கோவணம் கட்டி, மெல்லிய மேல்வேஷ்டி அணிந்து நடித்தார் திலகன். இதற்கான காஸ்ட்யூம்களை திலகனே கேரளாவிலிருந்து வாங்கி வந்துவிட்டார். இப்படி ஒரு நடிகர் தமிழ் சினிமாவில் இல்லையே என்கிற ஏக்கம் எனக்கு உண்டானது. தனது நாடக கால வாழ்க்கையி லிருந்து, சினிமாவரை பல்வேறு அனுபவங் களை என்னிடம் சொன்னார் திலகன்.

மனதைத் தொடும் ஒரு அருமையான ஃப்ளாஷ்பேக் போர்ஷனில் அன்றைய பிரபல கதாநாயகி ரூபினி நடித்தார்.

படத்தின் டபுள் பாஸிடிவ் ரெடி.

கதையில் ஒரு காதல் ஜோடியும் உண்டு. அந்த ஃபோர்ஷனும் முக்கியமாக இடம் பெற்றிருந்தது.

படம் பார்த்த இப்ராஹிம் ராவுத்தருக்கு ‘சுத்தமாகப் பிடிக்கவில்லை’ என்பது அவரின் முகத்திலேயே தெரிந்தது. அந்த அதிருப்தியை என்னிடம் வெளிப்படுத்தினார்.

"சார் நான் விஜயகாந்த் சாருக்கு "சிறைப் பறவை', "என்புருஷன்தான் எனக்கு மட்டும்தான்' என ரெண்டு படங்கள் ஹிட் கொடுத்தேன். அவருக்கு என்ன கதை சரியா இருக்கும்னு எனக்குத் தெரியாதா? ஆனா மம்முட்டிக்கு ரெடி பண்ணின கதையை நீங்க விஜயகாந்த்துக்கு மாத்தச் சொன்னீங்க. அது சரி வராதுனு சொல்லியும் கேட்கல. இப்ப அதிருப்தி படுறீங்க. பரவால்ல சார்... இந்தப் படம் பெரிய அளவில் வியாபாரம் ஆகியிருக்கு. அதுக்கேற்ப பங்கம் வராம, படத்தை விஜயகாந்த் சார் படமா எப்படி தேத்தணு மோ அப்படி தேத் திடலாம் சார்''’என ராவுத்தரிடம் சொன்னேன்.

இந்தச் சமயம்தான் ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில் "புலன் விசாரணை'’படம் முடிச்சு, ‘"கேப்டன் பிரபா கரன்'’ பட வேலைகள் நடக்குது. இதுக்கு நடுவுலதான் எங்க பட குழப்பம் நடக்குது.

அப்பதான் ராவுத்தர் ஒரு முடிவெடுத்தார்....

"இனிமே நம்ம கம்பெனி வருஷத்துக்கு அஞ்சு படம் எடுக்கும். இதில் ஒரு படம் விஜி நடிக்கட்டும். பாக்கி நாலு படங்கள்ல வேற ஹீரோக்கள் நடிக்கட்டும்'’என்பதுதான் அந்த முடிவு.

அதைத் தொடர்ந்துதான் பார்த்திபன் -டைரக்டர் ஆர்.சுந்தர்ராஜன் காம்பினேஷன்... இப்படி மாறுபட்ட காம்பினேஷன்கள்ல படங்கள் தயாரிச்சார் ராவுத்தர்.

இப்பவெல்லாம்... ரஜினிக்கு ஒரு கதையை எழுதிட்டு, அந்தக் கதையை யாரோ ஒரு ஹீரோவுக்கு அல்லது கிடைக்கிற ஹீரோ வுக்கு படம் பண்ற கலாச்சாரம் இருக்கு. ஆனா... இதுல எனக்கு உடன்பாடு இல்லை. எந்த ஹீரோவ நினைச்சு கதை எழுதினோமோ, அந்த ஹீரோவோட கால்ஷீட் கிடைக்கிற வரை வெய்ட் பண்ணனும். இல்லேனா அந்தக் கதையை படமாக்குவதை தற்காலிகமா நிறுத்தி வைக்கணும். மம்முட்டிக்காக உருவாக்கின கதையை, கூடவே ஒரு லவ் ஃபோர்ஷன் இருக்கிற கதையை விஜயகாந்த்துக்காக மாத்தினதால் எம்புட்டு அவஸ்தை.

"15 நாட்கள் விஜயகாந்த் கால்ஷீட் இருந்தா போதும்' என்று தொடங்கி, கடைசியில் ஒரு லவ் ஸ்டோரி, விஜயகாந்த்தின் படமாக உருமாறிப் போனது.

இதனால் படத்தின் எடிட்டிங் வேலைகள் நடந்தபோது நான் ராவுத்தரின் ஆபீஸ் பக்கம் போகவில்லை. எடிட்டிங் ரூமில் வேலை முடிந்ததும், நேராக வீட்டிற்கு வந்துவிடுவேன். எனக்கு இந்தப் படம் மூலம் நிறைய மனக்கசப்பு... என்றாலும் "மூன்றேழுத்தில் என் மூச்சிருக்கும்' படம் மூலம் எனக்குக் கிடைத்த ஒரு நல்ல நண்பர்... அந்தப் படத்திற்கு வசனம் எழுதிய லியாகத் அலிகான்.

படம் முடிந்து வெளியானது.

நான் உண்மையைச் சொல்வதானால்... ‘"மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்'’ படம் சுமாரான படம்தான். ஆனால் அதன் வெற்றி என்பது மிகப்பெரியது. ஒரு ரூபாய் முதலீட்டுக்கு மூன்று ரூபாயாக வசூலைத் தந்தது அந்தப் படம்.

"எங்க கம்பெனில குறைந்த செலவில் எடுத்து, அதிக வசூலைப் பார்த்த படம் ‘மூன்றேழுத்தில் என் மூச்சிருக்கும்’ படம்தான். மனோபாலா சார் படத்தால கிடைச்ச அபரிமிதமான லாபத்தை வச்சுத்தான் விஜயகாந்த்துக்கு நிறைய சொத்துக்கள் வாங்கினேன்'” என தன் கடைசிக்காலம் வரை சொல்லிக்கொண்டிருந்தார் ராவுத்தர்.

என் நண்பனை வைத்தே என்னை இன்சல்ட் பண்ணிய சம்பவம்....

(பறவை விரிக்கும் சிறகை)

படம் உதவி: ஞானம்