(61) என் படத்திற்கு கலைஞர் வசனம்!
43 கார்களில் திரைப் பிரலங்கள் ஊர்வலமாகச் சென்று, ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டிருந்த புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் உடலுக்கு மரியாதை செய்தோம். நான், மனோரமா, வைரமுத்து, மூவரும் சிவக்குமார் சாருடன் அவரது காரில் சென்றிருந்தோம். அஞ்சலி செலுத்த மக்கள் லட்சக்கணக்கில் வரிசையில் வந்தபடி இருந்தனர். தாங்க முடியாத துக்கத்தில் நூற்றுக்கணக்கான பெண்கள் தங்களின் தாலியை அறுத்து எம்.ஜி.ஆரின் உடல் வைக்கப்பட்டிருந்த இடத்தை நோக்கி வீசிக்கொண்டே அஞ்சலி செலுத்தினர். தாலியில் கால் படாமல் ஒரு ஓரமாக மனோரமாவை அழைத்து வந்தேன்.
எம்.ஜி.ஆரின் உடலைப் பார்த்ததும் "ஓ'வென பெருங்குரலெடுத்து மனோரமா அழுதது இன்னும் என் காதிலே ஒலித்துக்கொண்டிருக்கிறது.
தலைவரைப் பார்த்ததும் எனக்கு கண்ணு கலங்கீருச்சு. தூங்குகிற பாவனையில் தலைவர் உடல் இருந்தது. தலைமாட்டில் புரட்சித்தலைவி ஜெயலலிதா அவர்கள் நிற்கிறாங்க. அந்தப்பக்கம் ஜானகியம்மா நிற்கிறாங்க. தலைவரோட உடலைச் சுத்திலும் உறவுக் காரவங்க நிற்கிறாங்க. எல்லார் முகத்துலயும் அவ்வளவு சோகம். காலைத் தொட்டு கும்பிட்டு, தலைவருக்கு அஞ்சலி செலுத்திட்டு, அப்படியே நடந்தோம்.
"ராஜாஜி ஹால்லயே ஒரு பக்கம் ‘அடுத்த முதல்வர் யார்?'ங்கிற விவாதம் ஆர்.எம்.வீரப்பன் தலைமையில் தீவிரமா நடந்துக்கிட்டிருந்தது.
"யார் முதலமைச்சரா வருவாங்க'’என்கிற கேள்விக்குறி யோட, கார் நிறுத்தியிருந்த இடத்துக்கு நடந்தோம்.
மக்கள் திலகம் மறைந்ததை என்னால ஏத்துக்கவே முடியல. மனசு சமாதானமாக மாட்டேங்குது. என் கண்ணுல இருந்து கண்ணீர் கொட்டிக்கிட்டே இருக்கு.
பத்திரிகைக்காரங்கள்லாம் சூழ்ந்துக்கிட்டாங்க.
எம்.ஜி.ஆர் பத்தி சிவகுமார் பத்து நிமிஷம் பேசினார். வைரமுத்துவும் பேசினார். மனோரமாவும் தன்னோட நினைவுகளை பகிர்ந்துக் கிட்டாங்க. அந்த பத்திரிகை யாளர்கள் என்னைக் கண்டுக்கல. ஏன்னா... நான் யாருங்கிறதே அவங் களுக்குத் தெரியல.
சினிமாவோட முகம் நடிகன்தான். நடிச் சாத்தான் மக்களுக்குத் தெரியும்... டைரக்டர்லாம் மக்களுக்குத் தெரியாது.
காரில் ஏறி உட் கார்ந்தோம்.
"சினிமாவின் புகழ் வெளிச்சம் எப்போது என்மேல் விழும்?' என்கிற கேள்வி எனக்குள் எழுந்தது.
புரட்சித் தலைவரின் மறைவு எனக்குள் ஒரு பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தாலும், ‘"எப்படி, இப்படி பல லட்சக்கணக்கான மக்கள் தன்மீது பாசம் வைக்கும் படி நடந்துகொண்டார்?'’ என்பது பெரும் வியப்பாக இருந்தது. அந்த வியப்பி லிருந்து மீளவே எனக்கு வெகு நாள் ஆனது.
மெரினா கடற் கரையில் மக்கள் திலகத் தின் உடல் அடக்கத்திற் கான இறுதி யாத்திரை தொடங்கியது. ராஜாஜி ஹாலிலிருந்து சினிமா பிரபலங்கள் எல்லாம் நடந்தோம். அப்போது விஜயகாந்த் எங்களுடன் வந்து சேர்ந்துகொண் டார். அந்தச் சமயத் தில் விஜயகாந்த் தி.மு.க. அனுதாபியாக, கலைஞ ருக்கு நெருக்கமானவராக இருந்தார். இதனால் விஜயகாந்த்தைப் பார்த்ததும் சாலையில் இருபுறமும் நின்றிருந்த எம்.ஜி.ஆரின் அனுதாபி கள் கத்தினாங்க பாருங்க... அப்படிக் கத்துனாங்க.
ஆனால் அந்த எதிர்ப்புக் குரலுக்கு எந்த ரியாக்ஷனும் காட்டாமல் ராஜா போல நடந்து வந்தார் விஜயகாந்த். அவரின் ஒரு புறத்தில் நானும், மறுபுறத்தில் தயாரிப்பாளர் தாணுவும் நடந்து போனோம்.
சவக்குழிக்குள் புரட்சித் தலைவரின் உடல் வைக்கப்பட்டு, மண்ணிட்டு மூடப் பட்டது. விஜயகாந்த் அந்த சமாதியின் கால் மாட்டில் குனிந்து தொட்டு வணங்கினார்.
மீண்டும் ராஜாஜி ஹாலை நோக்கி நடந்து வந்தோம்.
"விஜி... உங்களுக்கு ரொம்ப ஃபேவரைட் புரட்சித் தலைவர். அவர் மேல உயிரையே வச்சிருப்பீங்களே...'' என்றேன்.
"டைரக்டர் சார், ஒங்களுக்குத் தெரியாது. எம்.ஜி.ஆரே, தான் நடிச்ச எல்லா படத்தையும் பார்த்திருப்பாரா?னு தெரியாது. ஆனா நான் பார்த்திருக்கேன். "எங்க வீட்டுப் பிள்ளை' மாதிரி பல படங்களை எத்தனை முறை திரும்பத் திரும்ப பார்த்திருப்பேன்னு கணக்கில்ல. எனக்கு ரோல் மாடல் எம்.ஜி.ஆர்.தான். எம்.ஜி.ஆர் வழியில நடக்கிறது தான் ஒரு நல்ல மனிதனுக்கு அடையாளம்னு எனக்குத் தோணுச்சு. அதனால நான் எம்.ஜி.ஆரோட சினிமா ரசிகனா மட்டும் இல்லாம, அவரோட கொள்கை ரீதியான ஃபாலோயரா மாறணும். நான் எம்.ஜி.ஆர். வழியில நடப்பேன்''’எனச் சொன்னார் விஜயகாந்த்.
எம்.ஜி.ஆர்.
நேரில் பார்க்காதவர்களாலேயே மறக்க முடியாத அந்த மனிதரை, நெருங்கிப் பார்த்தவர் களால் எப்படி மறக்க முடியும். இவ்வளவு பெரிய ஜன சமுத்திரத்தை தன் ஆட்களாக எப்படி மாற்றினார் எம்.ஜி.ஆர் என்பது இன்னும் விடை கிடைக்காத வியப்புதான்!
ராதிகாவின் சொந்தப் படத்தை இயக்கும் வாய்ப்பு எனக்கு அமைந்தது.
"கூன் பரி மாங்'’என்ற பெயரில் ரேகா நடிப்பில் வெளிவந்த இந்திப் படத்தின் உரிமையை வாங்கி, அதை தயாரிக்க திட்டமிட்டார் ராதிகா. அந்தப் படம் மூன்றுமணி நேரம் ஓடக்கூடியது. நம்ம ஊரில் மூன்றுமணி நேரம் படம் பார்க்கும் பொறுமை ஆடியன்ஸுக்கு இல்லை. அதனால் அரைமணி நேரம் குறைக்க விரும்பினேன், ஆனால் முடியவில்லை. சுமார் பத்து நிமிஷங்கள்தான் குறைக்க முடிந்தது.
படத்திற்குப் பெயர் "தென்றல் சுடும்.'
இதில் இன்னொரு மகிழ்ச்சியான செய்தி என்னவென்றால், கலைஞரை வசனம் எழுதக் கேட்பதாக ராதிகா சொன்ன தகவல்தான்.
கலைஞர் வசனம் எழுதும் படத்தை, நான் இயக்குவது என்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது.
காலை ஆறு, ஆறரை மணிக்கெல்லாம் கலைஞரின் வீட்டிற்குப் போய்விட்டோம். கலைஞரை சந்தித்தபோது திக்பிரமை பிடித்தவன் போல நான் அவரின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன்.
"வாய்யா... என்னய்யா...?''’என்று கேட்கிறார் கலைஞர். எனக்கு பதில் சொல்லத் தோன்றவில்லை.
ஒருவாறு சமாளித்துக் கொண்டு... “"ஒண்ணுமில்லப்பா''’என்றேன்.
என் மண்டைக்குள் கலைஞர் எழுதிய சூப்பர்ஹிட் படங்களின் வசனங்கள் எதிரொலித்தது. ‘கலைஞரோட வசனத்தை எப்படியெல்லாம் வியந்து பாராட்டியிருக் கோம். இவரோட பேச்சைக் கேட்க எங்கங்க கூட்டங்களுக்கு போயிருக்கோம். இவரு நம்ம படத்துக்கு வசனமா? "பாலா... உன் வாழ்க்கை எங்கயோ கொடி கட்டி பறக்குது'’என என்னை நானே மெச்சிக் கொண்டேன். அரசியலில் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் சினிமாக்காரர்கள் வந்தால், நேரம் ஒதுக்கி, அவர்களிடம் பேசி, அரவணைத்துச் செல்லும் குணம் கலைஞரிடம் உண்டு. தங்கள் படங்களுக்கு வசனம் எழுத யார் கேட்டாலும் மறுக்கமாட்டார். தாமதம் வேண்டுமானால் ஏற்படலாமே தவிர... மறுத்துவிடமாட்டார்.
சினிமாக்காரர்களை தன் சாதிக் காரன் என்பதுபோல பார்க்கிற எண்ணம் அவருக்கு எப்போதுமே உண்டு.
"டைரக்டரே... என்னய்யா இவ்வளவு ஒல்லியா இருக்க? நல்லா சாப்பாடு சாப் பிட்டு சதை போடுய்யா. ஷூட்டிங்ல ‘ஸ்டார்ட்’ சொல்லும்போது, தெம்பா சொல்லிட்டு "கட்'னு சொல்லும் போது கீழ விழுந்திருவ போல இருக்கேய்யா...'' என்றார்.
"நீங்க கிருஷ்ணன்-பஞ்சுவுக்கெல்லாம் வசனம் எழுதலையா?''’என்றேன்.
கலைஞர் வாய்விட்டுச் சிரித்தார்.
(கலைஞரின் பொறி பறந்த வசனம் கொண்ட "பராசக்தி'’படத்தை இயக்கிய கிருஷ்ணன்- பஞ்சு இரட்டையர் எப்போதும் ஒல்லியாகவே இருப்பார்கள்.)
தென்றல் சுடும்’ படத்திற்கு வசனம் எழுத ஒப்புக் கொண்டார் கலைஞர்.
ராதிகா போன்ற பெரிய கதாநாயகிகளுக்கு, ஹீரோயின் சப்ஜெக்ட் படங்களில் ஜோடியாக நடிக்க சரத்பாபு, நிழல்கள் ரவி போன்ற ஹீரோக்கள்தான் சரியாக வரும். "தென்றல் சுடும்'’ படத்தில் நிழல்கள் ரவி ஹீரோ. அவர் இராம.நாராயணன் இயக்கத்தில் மட்டும் 19 படங்களில் ஹீரோவாக நடித்திருந்தார்.
இருப்பினும், நிழல்கள் ரவியின் உதவியாளரே வருமான வரி கட்டுகிற அளவுக்கு ஏகப்பட்ட படங்களில் நிழல்கள் ரவி பிஸியாக நடித்துவந்தார்.
ஒவ்வொரு நாளும் காலை ஆறரை மணிக்கு கலைஞரின் வீட்டுக்குப் போனால், அன்றைய படப்பிடிப்பு காட்சிகளுக்கான வசனங்களை குறிப்புகளுடன் தயாராக எழுதி வைத்திருப்பார். அதில் அடித்தல் திருத்தலே இருக்காது. அப்படியே திருத்தவேண்டி வந்தாலும், அந்த திருத்த வேண்டிய இடத்தில் மட்டும் சிறிதாக ஒரு வெள்ளைத்தாள் கட் செய்து ஒட்டி, அதன் மேல் எழுதியிருப்பார். அவ்வளவு நேர்த்தியாக இருக்கும்.
டயலாக் பேப்பர் லெஃப்ட் ஸைடில் "இந்த இடத்தை டைரக்டரின் கற்பனைக்கு விட்டுவிடுகிறேன்'’என நோட் எழுதியிருப்பார். எப்போதும் ஒரு பிரதியை தன் வசம் வைத்துக் கொள்வார்.
இந்தியில் பெரும் வெற்றிபெற்ற படம், தமிழில் சரியான வெற்றியைப் பெறவில்லை. இதற்கு முக்கிய காரணம்... வழக்கமான தமிழில் வசனம் எழுதியிருந்த கலைஞர், க்ளைமாக்ஸில் பொறி பறக்கும் வசனங்களை தூய தமிழில் எழுதியிருந்தார். கூடவே... "இந்த வசனங்கள் பழைய நடையில் இருப்பதாக டைரக்டர் நினைத்தால் பேச்சுநடைக்கு மாற்றிக்கொள்ளலாம்'’ என நோட் எழுதியிருந்தார் கலைஞர். நானும் பேச்சு நடைக்கு மாற்ற விரும்பினேன். ஆனால் மாற்றுவதற்கு ராதிகா அனு மதிக்கவில்லை. “"மாத்துனா அப்பா (கலைஞர்) கோவிச்சுக்கு வார்'” எனச் சொல்லிவிட்டார். அதனால் மாற்றாமல் எடுத்தேன். அது ஆடியன்ஸுக்கு பிடிக்கவில்லை.
கலைஞர் -இளையராஜா -ராதிகா காம்பினேஷனில் நான் இயக்கிய "தென்றல் சுடும்'’படம் எனக்கு மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. படம் சுமாராக அமைந்தாலும் கூட கலைஞர் வசனம் எழுதிய படத்தை இயக்கிய பெருமை யும், அந்தச் சமயங்களில் கலைஞரின் மகள் சகோதரி செல்வியம்மா உள்ளிட்ட கலைஞரின் குடும்பத்தினருடன் பழகக் கிடைத்த வாய்ப்பும் மறக்க முடியாதது.
சார் என்று விளிக்கவேண்டா... மம்முக்கானு விளிச்சா மதி...
(பறவை விரிக்கும் சிறகை)