(55) பெரிய கம்பெனிப் படமும் படைப்பாளியின் சுதந்திரமும்!
சத்யா மூவீஸ் என்கிற பெரிய நிறுவனத்திற் காக, ரஜினியை வைத்து படம் இயக்கும் வாய்ப்பு.
சத்யா மூவீஸ் கதை இலாகாவால் வடிவமைக்கப்பட்ட கதையை, தயாரிப்பாளர் ஆர்.எம்.வீரப்பன் சாரோட ஆலோசனைப்படி திரைக்கதை உருவாக்கி, ரஜினிகாந்திடம் சொல்லத் தயாராகிக்கொண்டிருந்தேன். இருப்பினும் எனக்கு ரஜினியிடம் கதை சொல்ல கொஞ்சம் நெர்வஸாகவே இருந்தது.
சத்யா மூவீஸ் வசனகர்த்தாவான ஏ.எல்.நாராயணன்தான், "நீ கதையை கிளாஸிக்கா மாத்தியிருக்க. அதனால் தயக்கமோ, பதட்டமோ இல்லாம போய் கதையை கரெக்ட்டா சொல்லிடு''’என்று ஊக்கப்படுத்தினார்.
நண்பர் சத்யஜோதி தியாகராஜன்தான், ரஜினியிடம் கதை சொல்ல நேரம் வாங்கிக் கொடுத்தார்.
ரஜினியை சந்தித்தோம்.
ரஜினி எங்களை தாஜ் ஹோட்டலுக்கு கூட்டிட்டுப் போனார். ஒரு கார்னர் டேபிளில் உட்கார்ந்தோம்.
டபடபனு ஃபர்ஸ்ட் ஆஃப் கதையை சொல்லி முடிச்சேன்.
"சார், நான் ரெஸ்ட் ரூம் போய்ட்டு வந்துடுறேன்''’எனச் சொல்லிவிட்டுப் போனேன்.
நான் திரும்பி வந்தபோது ரஜினி மிகவும் குஷியாக இருந்தார்.
"சார்... செகண்ட் ஆஃப் சொல்லட்டுமா?''’எனக் கேட்டேன்.
"வேணாம்... வேணாம்... ஃபர்ஸ்ட் ஆஃப்பே இவ்வளவு நல்லாருக்குண்ணா... செகண்ட் ஆஃப் இன்னும் பிரமாதமா பண்ணீருப்பீங்க. கண்டிப்பா.. நல்ல படமா வர்றதுக்கான வாய்ப்பு இருக்கு. நல்ல சென்ட்டி மெண்ட்ஸ் இருக்கு. குறிப்பா லேடீஸ் சென்ட்டி மெண்ட் இருக்கு''’என திருப்தி தெரிவித்தார் ரஜினி.
கதையை ஓ.கே. பண்ணிட்டார் ரஜினிங்கிற விஷயத்தை ஆர்.எம்.வீ.யிடம் சொன்னோம். சொன்னதும் அவரும் குஷியாகிவிட்டார்.
எல்லாக் காலத்திலயும், கதையை ஹீரோ ஓ.கே. பண்ற வரைக்கும்தானே கஷ்டம். ஹீரோ ஓ.கே. பண்ணீட்டா... விறுவிறுப்பா பட வேலைகள் தொடங்கிடுமே.
ஊர்க்காவலன்’ பட வேலைகளும் பரபரவெனத் தொடங்கியது. மியூஸிகல் சப்ஜெக்ட் மாதிரி படத்தில் பாடல்களுக்கு முக்கியத்துவம் இருந்ததால், எனக்கு நன்கு பரிட்சயமான நாராயணன் என்கிற புதுமுக மியூஸிக் டைரக்டரை சிபாரிசு செய்தேன். 12 பாடல்களுக்கான ட்யூன்களை வாசித்துக் காட்டினார் நாராயணன். எல்லோருக்கும் திருப்திதான். ட்யூன்களைக் கேட்ட ஆர்.எம்.வீ., "இவரே இந்தப் படத்துக்கு மியூஸிக் டைரக்டராக இருக்கட்டும்''’ என்றார்.
மறுநாள் ஆபீஸ்லேயே படத்திற்கான பூஜை மிக எளிமையாக போடப்பட்டது.
ஒரு சின்ன படம் எடுத்தால், அதை பிரபலப்படுத்த உதவும் என்பதால் பட பூஜையை பிரம்மாண்டமாக செய்யலாம். ரஜினியே பிரம்மாண்டம் என்கிற போது, எதற்கு பெரும் செலவில் பூஜை? எளிமையாக படபூஜை போடலாம் என்பதில் உறுதியாக இருந்தார் ஆர்.எம்.வீரப்பன்.
பூஜை முடிந்து, மறு நாள் ஸாங் கம்போஸிங்!
வடபழநி முருகன் கோவிலில் மனமுருக வேண்டிக் கொண்டு வந்தார் மியூஸிக் டைரக்டர்.
நான் எல்லையம்மன் கோவிலில் அம்மனை கும்பிட்டு விட்டு கிளம்பினேன்.
சத்யா மூவீஸ் ஆபீஸுக் குள் நானும், மியூஸிக் டைரக்டரும் நுழைகையில்... உள்ளிருந்து ஆர்மோனியம் இசைக்கும் ஓசை காற்றில் கலந்து எங்கள் காதில் விழுந்தது.
புரியாமல் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டோம்.
தயாரிப்பு நிர்வாகி பழனியப்பனிடம், "உள்ள யார் ஆர்மோனியம் வாசிக்கிறது?''’எனக் கேட்டேன்.
"சங்கர்-கணேஷ் இருக்காங்க. அவங்கதான் "ஊர்க்காவலன்'’ படத்துக்கு மியூஸிக் டைரக்டர்னு முடிவு பண்ணிட்டாங்க''’என்றார்.
இதைக் கேட்டதும் நான் ஷாக் ஆக, நாராயணனோ மயக்கம் போட்டுவிட்டார்.
உடனே நான் அவரைத் தேத்தி அழைத்துக்கொண்டு வெளியே வந்து, தெருமுனைக் கடையில் டீ வாங்கிக் கொடுத்து குடிக்கச் சொல்லி, "நீ கவலப்படாத, இந்தப் படம் இல்லேன்னா இன்னொரு படம். நீ கண்டிப்பா பெரிய மியூஸிக் டைரக்டரா வருவ. நீ திறமையான ஆளுதான். அதை நிரூபிக்க சந்தர்ப்பம் மட்டும் தள்ளிப் போய்க்கிட்டே இருக்கு அவ்வளவுதான். நீ வருத்தப்படாம போ...''’என அவரை ஆறுதல்படுத்தி அனுப்பிவிட்டு, கோபத்துடன் ஆபீஸுக்கு வந்தேன்.
ஆர்.எம்.வீ. இருந்தார்.
"என்ன சார் இது? அவன் சின்னப் பையன். ’சத்யா மூவீஸ் படம், ரஜினி படம், நாம மியூஸிக் டைரக்டர்னு எவ்வளவு கனவோட இருந்திருப்பான்? வடபழநி முருகன்கிட்ட வேண்டிக்கிட்டு வந்திருக்கான். அவனை நீங்க தூக்கிப் போட்டுட்டீங்களே... ஏன் இப்படி? எனக்கு ஒண்ணுமே புரியலையே''’என்றேன்.
"மனோபாலா... நீங்க ஒண்ண புரிஞ்சுக்கணும். எப்பவுமே பெரிய படங்களுக்கு காம்பினேஷன் ரொம்ப முக்கியம். ‘இவருன்னா இவங்கள்லாம் இருக்கணும்னு ஒரு காம்பினேஷன் கணக்கு இருக்கு. ஏற்கனவே எங்க கம்பெனி படங்களுக்கு இளையராஜா மியூஸிக் பண்ணிருக்கார். இந்தப் படத்தைப் பொருத்தவரைக்கும் எனக்கும், இளையராஜாவுக்கும் மன ஒட்டுதல் இல்ல. அதனால பிரபலமா இருக்கிற சங்கர்-கணேஷை மியூஸிக் பண்ண வைக்கிறோம். சங்கர்-கணேஷ் நல்ல மியூஸிக் டைரக்டர்ஸ்தானே. அதனால உங்களுக்கு என்ன கஷ்டம்?'' எனக் கேட்டார் ஆர்.எம்.வீ.
"அதில்லை சார்... அந்தப் பையன் தன்னோட வாழ்க்கையே சூன்யமாயிட்ட மாதிரி...?''”
"அப்படியெல்லாம் இல்ல... ‘அடுத்த படத்துல வாய்ப்பு கிடைக்கும்னு சொல்லி சமா தானப்படுத்துங்க..''”
"சார்... பெரிய பேனர்ன்னா... எந்த நிமிஷம் வேணாலும் யாரையும் காம்பினேஷன்ல சேர்த்துப்பாங்க. யாரை வேணாலும் எந்த நிமிஷமும் தூக்கிப் போடுவாங்கன்னு இண்டஸ்ட்ரியில ஒரு பேச்சு இருக்கிறது உண்மைதானா சார்...?''” எனக் கேட்டேன்.
தொடர்ந்து ஒரு கண்டிஷனையும் அவரிடம் சொன்னேன். "சார்... இந்தப் படம் ஷூட்டிங் ஆரம்பிக்கிற வரைக்கும், ’ரஜினியை வச்சு சத்யா மூவீஸ் தயாரிக்கிற படத்தோட டைரக்டர் யார்னு வெளியில சொல்லாதீங்க சார். திடீர்னு என்னையும் தூக்கிப் போட்டுட்டீங்கன்னா... பயமா இருக்கு சார்''“என்றேன்.
உடனே அருகில் இருந்த சத்யஜோதி தியாகராஜன், "என்ன மனோ... ரொம்ப சில்லியா பேசுற? நாங்க டைரக்டரா உன்னைத்தான் ஃபிக்ஸ் பண்ணீருக்கோம். யூ ஆர் த கமாண்டர் ஆப் த ஃபிலிம்''’எனச் சொன் னார்.
"இல்ல தியாகு, ஏதோ உறுத்தலாவே இருக்கு... அதான் சொன்னேன்''’என்றேன்.
(நான் அழைத் துச் சென்ற அந்த மியூஸிக் டைரக்டர் நாராயணன், பின்னா ளில் பிரபலமாக விளங்கி, பல ஹிட் பாடல்களைத் தந்த சிற்பி)
சினிமாவுக்கு வந்ததிலிருந்தே ஸைடுவாக்கில் படிந்து விழும் ஹேர் ஸ்டைலோடு இருந்த ரஜினியை புதிய தோற்றத்திற்கு மாற்ற விரும்பினேன். ரஜினியின் ரசிகர்கள் இன்றுவரை கொண்டாடும் ரஜினியின் தூக்கி வாரி விடப்பட்ட ஹேர் ஸ்டைலுக்கு அவரை மாற்றினேன். அவரது ட்ரெஸ்ஸிலும் கூட ஸ்டைலான பல மாற்றங்களைக் கொண்டுவந்தேன்.
"ஊர்க்காவலன்'’படத்திற்காக ரஜினியையே புதிய தோற்றத்திற்கு மாற்றினேன்.
ஹீரோயின் யார்? என்கிற பேச்சு வந்தபோது... "ராதிகாதான்'’என்று சொன்னேன். அதே போல தம்பி பாண்டியன், தம்பி காதலிக்கும் பெண்ணாக "நல்லெண்ணெய்' சித்ரா என ஆர்டிஸ்ட்டுகளை ஒப்பந்தம் செய்தோம். சங்கிலி முருகன் வொண்டர்ஃபுல் கேரக்டர் பண்ணினார்.
அப்போதெல்லாம் செல்போன் வசதி ஏது?
ஷூட்டிங் ஸ்பாட் வரைக்கும் லேண்ட்லைன் போன் கனெக்ஷனை நீட்டித்து, ஸ்பாட்டில் என்ன ஸீன் எடுக்கப்படுது? யார் யார் நடிக்கிறாங்க? என லைவ் ரிப்போர்ட் ஒருத்தர் சொல்லிக் கொண்டேயிருப்பார். அதை ஆபீஸிலிருந்து கேட்டுக்கொண்டேயிருப்பார் ஆர்.எம்.வீ.
"இப்ப என்ன ஸீன் எடுக்குறார் டைரக்டர்?''”
"இந்த ஸீன் எடுக்குறார் சார்''”
"இந்த ஸீன்ல பர்ட்டிக்குலர் டயலாக்கை க்ளோஸ்-அப்பில் பேசினாத்தான் நல்லா இருக்கும். அதனால் அந்த டயலாகை மட்டும் ரீப்பீட் பண்ணி, ஒரு க்ளோஸ்-அப் எடுக்கச் சொல்லு.''”
-இப்படி ஒவ்வொரு ஸீனிலும், ஒவ்வொரு ஷாட்டிலும் ஆர்.எம்.வீ. ஆலோசனை சொல்லிக் கொண்டிருந்தார். ‘படம் சிறப்பாக வரவேண்டும்’ என்கிற ஆர்வம், அனுபவம் காரணமா அவர் அப்படிச் செய்தார் என்றாலும், எனக்கென்னவோ அது இடைஞ்சலாக, சுதந்திர உணர்ச்சி இல்லாதது போல இருந்தது.
நான் சத்யஜோதி தியாகராஜனுக்கு போன்செய்து, "என்ன தியாகு இது? என்னை சுதந்திரமா வேலை செய்யவிடாம செஞ்சா எப்படி? நீங்க பேசுங்க...''’என்றேன்.
"பெரிய மனுஷன் பெரிய மனுஷன்தான்' என்பார்களே... அதுபோல... அதன் பிறகு... ஆர்.எம்.வீ. என் விஷயத்தில் குறுக்கிடவில்லை.
சென்னையில் அதிகாலை நாலு மணிக்கு படப்பிடிப்பு முடிந்து மைசூருவில் படப்பிடிப் பிடிப்புக்கு ஆறு மணி ஃபிளைட்டில் கிளம்பினோம் நானும், ரஜினியும்.
அலுப்பு பார்க்காமல் அன்று மதியம் இரண்டு மணிக்கே ஸ்ரீரங்கபட்டணம் ஆற்றுப் படித்துறையில் பாடல் காட்சி.
"மாசி மாசம்தான், கொட்டு மேளதாளம் தான்'’எனும் புலமைப்பித்தன் பாடலுக்கான படப்பிடிப்பு. நான் முதல் ஷாட்டாக... பாடலின் பல்லவியில் வரும் இறுதி வரியான ‘வந்து "வாழ்த்துச் சொல்லணும் ஊரு ஜனம்'’என்கிற வரியை எடுத்தேன்.
ப்ளூ கலர் சட்டையில், புதிய தோற்ற ஸ்டைலில் வந்து நின்ற ரஜினியை கேமரா வழியே பார்த்தேன்.
எனக்கே பிடித்துப் போனது...
"ஹலோ... நானும் காமெடி நல்லா பேசுவேன்... நம்புங்க சார்''’என்றார் ரஜினி.
(பறவை விரிக்கும் சிறகை)
படம் உதவி: ஞானம்