செஞ்சிலுவை சங்கம் 1863-ம் ஆண்டு ஜெனிவாவில் தொடங்கப்பட்டது.. இந்தியாவை 1920-ல் வந்தடைந்தது. யுத்தங்களினால் காயமுற்ற மக்களுக்கு உதவும் நோக்கில் உருவாக்கப்பட்ட இவ்வமைப்பின் செயற்பாடுகள் தற்போது உலகமெங்கும் விரிவடைந்துள் ளன. இந்தியாவில் ஜனாதிபதியை தலைவராக கொண்ட ரெட் கிராஸ், ஒவ்வொரு மாநிலத்திலும் கவர்னரை தலைவராகவும் மாவட்ட அளவில் கலெக்டரை தலைவராகவும் கொண்டியங்குகிறது. தற்போது பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களின் தலைவர்களே தலைமைப் பதவிக்கு வர ஆசைப்படும் அளவுக்கு செஞ்சிலுவைச் சங்கம் பிரபலமாயிருக்கிறது.

redcross

மதுரை மாவட்ட ரெட்கிராஸில் கடந்த செப்டம்பர் 29-ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் வெற்றிபெற்ற 15 நபர்கள் ஒன்று கூடி சேர்மனை தேர்வு செய்ய விருந்த நிலை யில், திடீரென மூகாம்பிகை தலைமையில் ரெட்கிராஸ் உறுப்பினர்கள் ஒன்றுசேர்ந்து ரெட்கிராஸ் தேர்தலில் பல்வேறு முறைகேடுகளும் ஊழல்களும் நடந்துள்ளன. தேர்தலை ரத்துசெய்யவேண்டும் என்று புகார் கொடுக்க, மாவட்ட ஆட்சியர் தேர்தலை ரத்துசெய்திருக்கிறார்.

மறுநாள் காலை ரெட்கிராஸ் உறுப்பினர்கள் சித்திக் தலைமையில், ரத்துசெய்த முடிவை ரத்துசெய்யவேண்டு மென மாவட்ட ஆட்சியரிடம் மனுக் கொடுத்தனர். "29-9-2021 அன்று மதுரையில் ஆட்சியர் முன்னிலையில் ரெட்கிராஸ் தேர்தல் நடைபெற்றது. 250 பேர் கலந்து கொண்டு 15 நபர்களை பொறுப்பாளர்களாகத் தேர்ந்தெடுத்தனர். இது, 20 வருடங்களாக சேர்மனாக, பொதுச் செயலாளராக இருந்தவர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. தேர்வானவர்களில் 6 பேரைத் தவிர மீதம் 9 நபர்கள் புதியவர்கள். எங்கே இவர்கள் தங்களை சேர்மனாக தேர்வுசெய்ய மாட்டார்களோ என்ற பயத்தில் வடமலையான் மருத்துவமனை நிறுவனர் புகழகிரியும், கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஜோஸும் மூகாம்பிகையை புகார் கொடுக்கவைத்து தேர்தலை ரத்து செய்திருக்கிறார்கள்.

Advertisment

20 வருடங்களாக ரெட் கிராஸை வைத்து அரசு இரத்த வங்கியை முழுவதுமாக தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளார் புகழகிரி. இரத்தம் கொடுக்கும் ஆயிரக்கணக்கான டோனர்கள் மூலம் அவரது மருத்துவமனைக்கு தேவைப்படும்போதெல்லாம் தட்டுப்பாடின்றி இரத்தம் எளிதாகக் கிடைத்துவிடுகிறது.

”ரெட்கிராஸின் சேர்மன்”என்று சொல்லி அரசின் விதியை மீறி அவரது மருத்துவமனையை இணைக்கும் அந்த பாலம் கட்டப்பட்டது. கவர்னரையோ ஜனாதிபதியை யோ பார்க்கவேண்டும் என்றால் ரெட்கிராஸ் சேர்மன் என்றால் முன்னுரிமை உண்டு. ஐ.நா சபையில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு அழைப்பிதழ் இல்லாமலேயே சென்றுவரலாம். சர்வதேச நட்பு கிடைக்கும். உலக வங்கியை அணுகமுடியும். எனவேதான் இதுபோன்ற பெரிய நிறுவனங்கள், ரெட்கிராஸ் தேர்தலில் நுழைய ஆரம்பித்துள்ளனர்.

redcross

Advertisment

செயலாளராக இருக்கும் ஜோஸ், ரெட்கிராஸை சொல்லி பல்வேறு இடங்களில் வசூல்வேட்டை நடத்துகிறார். ரெட்கிராஸுக்கு வரும் பெண்களிடம் ஜோஸ் செய்யும் சேட்டைகளை, அவரோடு இருக்கும் ரஜாக்கும் கோபாலும் பேசிக்கொண்ட ஆடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானது. பேரிடர்க் காலங்களில் லட்சக்கணக்கானவர்கள் சேவையில் ஈடுபட, தலைமைப் பதவிகளை அலங்கரிப்பது பெரிய கார்ப்பரேட் மருத்துவமனை முதலாளிகள்தான். அவர்கள் தேர்தலன்று வருவதோடு சரி. மற்றபடி எந்தவித சேவையும் செய்வதில்லை'' என்று அடுக்கியபடியே சென்றார்.

இந்தப் புகார் குறித்து பேச ரெட்கிராஸ் செயலாளர் ஜோஸை சந்தித்தோம். “"அந்த ஆடியோ பற்றிதானே கேட்க வந்திருக்கீங்க'' என்று நாம் கேட்பதற்கு முன் அவராகவே பேச ஆரம்பித்தார். "சார் அவங்களுக்கு பொறாமை. எனக்கு வயது 70 ஆகிறது. இங்கு வரும் பெண்கள் அனைவருமே எனக்கு பிள்ளைகள் மாதிரி. அதனால் அவர்கள் என்னிடம் வந்து ஆசிர்வாதம் வாங்குகிறார்கள். நான் அவர் களை கட்டியணைத்து வாழ்த்துவேன். தப்பான கண்களில் பார்ப்பதால் அப்படித் தெரிகிறது. தேர்தலில் எந்த முறைகேடும் நடக்கவில்லை. தேர்தலை ரத்து செய்தது சரியான செயல்தான்''’என்றார்.

முன்னாள் காவல்துறை ஆய்வாளர் துரை பாண்டியோ, “"இந்த முறை தேர்தல் ஒழுங்காக நடந்தது. ஜோஸ் ஒழுங்கானவர் இல்லை. உறுப்பினர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்களுக்கு அழைப்பிதழே கொடுக்காமல் புதிதாக 200 பேரை உறுப்பினர்களாகச் சேர்த்து பேருந்தில் அழைத்துவந்தார்கள். நாங்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தடுத்துநிறுத்திவிட்டோம். ஆட்சியர் மிக நேர்மையாக தேர்தல் நடத்தினார். இதுவரை 50-க்கும் மேற்பட்டமுறை நான் ரத்தம் கொடுத்திருக்கிறேன். இது முழுக்க முழுக்க தன்னலம் கருதாமல் பேரிடர்க் காலங்களில் உயிரை துச்சமென கருதி மக்களுக்காக சேவை செய்யும் நோக்கத்தோடு இருப்பவர்களுக்கான இடம். இப்ப வேறுமாதிரிப் போகிறது. நமக்கு சரிப்பட்டு வராது''’என்று சலித்துக்கொண்டார்.

இதுகுறித்து வடமலையான் டாக்டர் புகழகிரியை சந்திக்க சென்றோம். நம்மை நேரடியாகச் சந்திக்கமறுத்த அவர், போனில் பேசினார். "ரெட்கிராஸில் நடக்கும் தேர்தல் குழறுபடிகள்''” என்று நாம் ஆரம்பித்ததும், "சார் நான் பத்திரிகைகளுக்கெல்லாம் பதில் சொல்லவேண்டிய அவசியம் இல்லை. ரெட்கிராஸ் பற்றி கேட்க வேண்டுமென்றால் செயலாளர் ஜோஸிடம் கேட்டுக் கொள்ளுங்கள், எனக்கு ஆயிரம் வேலை இருக்கு''’என்று பொரிந்து தள்ளினார்.

ரெட்கிராஸ் தேர்தல் பற்றி பதில் சொல்லவே இவருக்கு நேரமில்லையே, நேரம் ஒதுக்கி சேவை செய்ய நேரமிருக்குமா என்ற கேள்வியோடு அங்கிருந்து நகர்ந்தோம்.