லைஞர் மூன்றாமாண்டு நினைவு நாளில் தி.மு.க. அலுவலகத்திலேயே வார்த்தை மோதல் நடத்தி கோஷ்டிகானத்தை வெளிப்படுத்தியுள்ளார்கள் தி.மு.க. நிர்வாகிகள்.

வேலூர் மத்திய மாவட்ட அலுவலகத்தில் ஆகஸ்ட் 7-ஆம் தேதி காலை கலைஞர் நினைவு தினத்தை முன்னிட்டு கலைஞர் சிலைக்கு மாலை அணிவிக்க வேலூர் மா.செ. நந்தகுமார் எம்.எல்.ஏ., வேலூர் மாநகரச் செயலாளர் கார்த்திகேயன் எம்.எல்.ஏ, கழக தலைமை தேர்தல் பணிக்குழு செயலாளர், முன்னாள் அமைச்சர் விஜய், பொதுக்குழு உறுப்பினர் அ.மா.ராமலிங்கம் என முக்கிய நிர்வாகிகள் குழுமியிருந்தனர்.

dd

மாநகரச் செயலாளரும், வேலூர் தொகுதி எம்.எல்.ஏ.வுமான கார்த்திகேயனிடம் முன்னாள் அமைச்சர் விஜய், "மாநகரத்தில் நடக்கும் எந்த நிகழ்ச்சிக்கும் ஏன் எங்களை அழைப்பதில்லை?'' எனக் கேட்டுள்ளார். “"நான் எல்லோரையும்தான் அழைக்கறேன்''’என அவர் நழுவ... "எங்கப்பா என்னைக் கூட நீ அழைக்கறதில்லை''” என்றுள்ளார் பொதுக்குழு உறுப்பினர் ராமலிங்கம். இந்த கேள்விகளால் கோபமாகி யுள்ளார் மாநகரச் செயலாளர்.

Advertisment

"எனக்கு தேர்தல் வேலை பார்த்தீங்களா? உங்க வார்டுக்கு வந்து ஓட்டுக்கேட்டேன், என்கூட வந்து ஓட்டுக்கேட்டீங்களா? நிகழ்ச்சிக்கு அழைக்கறதில்லைன்னு இப்பச் சொல்றிங்களே அப்போ எங்க போயிருந்தீங்க? பதவியில இருக்கன், என்னை ஏன் கூப்பிடறதில்லைன்னு அதிகாரமா கேட்கறீங்க? அப்படி கூப்பிடணும்னா நீங்க தேர்தல் வேலை செய்திருக்கணும்... அப்போதான் கூப்பிடுவன்''’என பதில் தந்துள்ளார். இதனால் கட்சி அலுவலகத்தில் பதட்டம் ஏற்பட்டுள்ளது.

"எங்கண்ணனையே கேள்வி கேட்கறியா?'' என கார்த்தியின் ஆதரவாளர்கள் முன்னாள் அமைச்சரிடம் கோபமாக கேட்டுள்ளனர். பதிலுக்கு விஜய் மற்றும் ராமலிங்கம் ஆதரவாளர்கள், "நடக்கறதைத்தானே கேட்குது, இதிலென்ன தப்பு?'' என மல்லுக்கட்ட இருதரப்புக்கும் கைகலப்பானது. அது பெரியளவில் வளரும்முன்பே மா.செ. நந்தகுமார் தலையிட்டு இரு தரப்பையும் சமாதானப் படுத்தியுள்ளார்.

இதுபற்றி கட்சி முக்கியஸ்தர்கள் சிலரிடம் பேசியபோது, "ராமலிங்கம் கழகத்தின் மூத்த முன்னோடி, மாநகரச் செயலாளராக இருந்தார். அவருக்கு வயதாகிடுச்சின்னு கார்த்தி நியமிக்கப்பட்டார். பொதுச்செயலாளர் துரைமுருகன் சிபாரிசில் மாநகரச் செயலாளரானாலும், மாநில அளவில் அரசியல் செய்யும் எ.வ.வேலு கோஷ்டியில் இணைந்துவிட்டார் கார்த்தி.

Advertisment

dd

இந்நிலையில்தான் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு முதலியார்களான அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் விஜய், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ஞானசேகரன், நீலகண்டனை தி.மு.க.வுக்கு அழைத்துவந்தார் துரைமுருகன். இது தனக்கு வைக்கப்படும் செக் என்பதை உணர்ந்தார் கார்த்தி. அதோடு, மா.செ. நந்தகுமார் வேலூர் தொகுதியை குறிவைத்தார். இதனால் அதிர்ச்சியான கார்த்தி, கதிர் ஆனந்த் வழியாக துரை முருகனிடம் சரண்டரானார். கடைசியில் சிறுபான்மை யின மக்கள் வசிக்கும் 8 வார்டுகளில் மட்டுமே தி.மு.க. முன்னிலை, அவர்களது வாக்குகளாலேயே கார்த்தி வெற்றிபெற்றார். எதனால் வாக்குகள் குறைந்ததென யோசிக்காமல், கட்சியினர் துரோகம் செய்து விட்டார்களென கார்த்தி புலம்புகிறார்.

தேர்தல் பிரச்சினையோடு மேயர் பதவி மோதலும் உள்ளது. வேலூர் மேயர் பதவி பட்டியலினப் பெண்களுக்கானது. 2011-ல் மேயருக்கு நிறுத்த கட்சியில் தகுதியான பெண்கள் இல்லையென அரசு மருத்துவர் ராஜேஸ்வரியின் வேலையை ராஜினாமா செய்யவைத்து தேர்தலில் நிறுத்தியது தி.மு.க. அப்போது அவர் தோல்வியடைந்தார். 2016 மேயர் தேர்தலில் மீண்டும் ராஜேஸ்வரியை முன்னிறுத்தினார் துரைமுருகன். மாநகரச் செயலாளர் கார்த்தி எம்.எல்.ஏ, தனது வலதுகரமாகவுள்ள ஒருவரின் மனைவிக்காக லாபி செய்தார். தேர்தல் ரத்து செய்யப்பட்டதால் விவகாரம் வெடிக்காமல் அடங்கியது.

இப்போது உள்ளாட்சித் தேர்தல் நடக்கவுள்ளது, மேயர் பதவியை பொதுப்பட்டியலுக்கு மாற்ற சிலர் அமைச்சர் துரைமுருகனை வலம் வருகின்றனர். அப்படி மாற்றப்பட்டால் விஜய்யும் ஞானசேகரனும் அப்பதவியில் அமர விரும்பி அரசியல் செய்கின்றனர். அப்படி மாற்றப்பட்டால் தன் சாதியைச் சேர்ந்த பிரபலங்கள் மூலமாகவே தனக்கு செக் வைத்துவிடுவார்கள் என நினைத்தே விஜய் உட்பட சிலரை ஓரம்கட்டுகிறார் கார்த்தி. அதனாலே கைகலப்பு'' என பின்னணியை சுட்டிக்காட்டுகிறார்கள்.