தமிழக காவல்துறையில் சட்டம் ஒழுங்கு, குற்றம், போக்குவரத்து ஆகிய முக்கிய துறைகளைக் கடந்து பெரிய அளவில் வெளியே தெரியாத பல துறைகள் உள்ளன. அதில், உணவு கடத்தல் தடுப்புப் பிரிவும் முக்கியமானது. இவர்களின் பணி, பொதுமக்களுக்கு சென்றடைய வேண்டிய உணவுப் பொருட்கள் சட்டவிரோதமாகக் கடத்தப்படுவதைத் தடுப்பது தான்.
இவர்கள் பெரிய அளவில் வெளியே தெரியாமலிருந்தாலும், மறைமுகமாகப் பல பெரிய அளவிலான கடத்தல்களைத் தடுத்து நிறுத்தி, கடத்தல்காரர்களைத் தொடர்ந்து கைது செய்து வருகின்றனர். அதே சமயம், அதிகளவில் லஞ்சப்பணம் புழங்கும் துறைகளில் இந்தத் துறையும் ஒன்று. நல்ல வருமானம் பார்க்கக்கூடிய துறை என்பதால் பலரும் ஆர்வமாக இத்துறைக்கு வர விரும்புவார்கள்.
தமிழகத்தில் ரேஷன் அரிசி கடத்தல் அதிகமாக உள்ளது. ரேஷன் அரிசியை கடத்தி அரிசி ஆலை உரிமையாளர்கள் வைத்திருக்கும் ஆலைகளில் அரைத்து குருணையாக்கி, கோழிப்பண்ணைகளுக்கு தீவனமாக விற்பது பெரும்தொழிலாக நடைபெற்று வருகிறது. இதில் பல கோடி ரூபாய் வருமானமாகப் பரிமாற்றப்பட்டு வருகிறது. தற்போது கோவையை சேர்ந்த ஒரு உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரி மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்படுகின்றன.
1996ஆம் ஆண்டு பேட்ஜ் காவல் உதவி ஆய்வாளராக பணியமர்த்தப்பட்டவர் எஸ்.பி. சந்திரசேகர். இவர் படிப்படியாக வளர்ந்து, இறுதியாக ஒரே நேரத்தில் இரு பதவி உயர்வு வழங்கப்பட்டு, உணவுக் கடத்தல் தடுப்புப் பிரிவு எஸ்.பி.யாக கோவையில் பதவி வகித்து வருகிறார். இவர்மீது முதன்மையாக வைக்கப்படும் குற்றச்சாட்டு, இவரது துறையில் தனக்கு கீழே பணியாற்றும் அதிகாரிகளுக்கு அதிகளவில் அழுத்தம் கொடுப்பதாகவும், இதனால் அவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி, இத்துறையிலிருந்தே வெளியேற முயற்சி செய்து வருவதாகக் கூறப்படுகிறது.
அப்படியென்ன அழுத்தம் கொடுக்கிறார் என்று விசாரித்தபோது, ""தனக்கு கீழேயுள்ள ஒவ்வொரு காவல் துணைக் கண்காணிப்பாளரும் மாதம் தவறாமல் 10 லட்சம் ரூபாயும், ஆய்வாளர் 5 லட்சம் ரூபாயும், உதவி ஆய்வாளர் 2 லட்சம் ரூபாயும் என மாதம் சுமார் 1 கோடி ரூபாய் அளவுக்கு தனக்கு வருமானம் வரவேண்டுமெனக் கட்டாயப்படுத்துகிறாராம். ஒவ்வொரு யூனிட்டும் தனியாக 5 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும். அதே சமயம், இந்த தொகையை முந்தைய மாதமே, அதாவது அட்வான்ஸாக கொடுக்க வேண்டுமென்றும் அடாவடியாக வற்புறுத்துகிறாராம். கொடுக்கத் தவறும் பட்சத்தில் அவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கையை எடுப்பதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, அவர்கள் மீது சார்ஜ் வழங்குவது, இட மாறுதல் வழங்குவது போன்ற பழிவாங்கும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறாராம்.
இதெல்லாம் துறைரீதியாகக் கொடுக்கப்பட்டாலும், அரிசி கடத்தும் கும்பல், அரிசி ஆலை உரிமையாளர்கள், கோழிப்பண்ணை உரிமையாளர்கள் என அனைவரும் மாதந்தோறும் இவரை சந்தித்து இவருக்கு பல லட்சம் லஞ்சமாகக் கொடுத்தேயாக வேண்டும் என்று கட்டாயப்படுத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
கோவை, ஈரோடு, தர்மபுரி, சேலம் ஆகிய இடங்களில் உள்ள அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் கோழிப்பண்ணை உரிமையாளர்கள் பெரும்பான்மையோர் கவுண்டர் சமூகத்தை சார்ந்தோராக உள்ளனர். இவரும் அதே சமூகத்தை சார்ந்தவர் என்பதால், கவுண்டர் சங்கம் மூலமாக வரவழைத்து, அவர்களின் தொழிலுக்கு எந்த இடையூறும் வராமல் பார்த்துக்கொள்வதாகக் கூறி, ஒரு பெரும் தொகையை லஞ்சமாகப் பெறுவதாகவும் கூறப்படுகிறது. ஆகவே இவரை பதவியிழப்பு செய்ய வேண்டும் என நீதிமன்றம் மூலம் ஆணை பெறப்பட்டுள்ள நிலையில், அந்த ஆணையை அதிகாரிகள் செயல்படுத்க்கூடாது என்பதற்காகவே அவர்களுக்கு மிகப்பெரிய தொகையை லஞ்சமாக வழங்கும் நோக்கோடு இவ்வாறு செயல்பட்டு வருகிறார்'' என்கிறார்கள்.
இதுதொடர்பாகக் கருத்தறிய அவரை செல்போன் மூலம் தொடர்புகொண்டு பேசியபோது, ""என்மீது காழ்ப்புணர்ச்சி காரணமாக இதுபோன்ற தவறான தகவலகளைப் பரப்புகிறார்கள். நான் தொடர்ந்து பாரபட்சமின்றி நடவடிக்கை எடுப்பதால், இதுபோன்ற குற்றச்சாட்டுகளை என்மீது வைக்கின்றனர். என்மீது எந்தத் தவறும் இல்லை. என்னுடைய நடவடிக்கையால் பலர் கடத்தல் சம்பவங்களில் ஈடுபடாமல் தடுக்கப்பட்டுள்ளனர். பல கடத்தல் சம்பவங்களில் ஈடுபட்டவர்களை நான் கைது செய்துள்ளேன்'' என்று தெரிவித்தார்.
உணவே விஷமாகக்கூடிய காலகட்டத்தில் நாம் வாழ்ந்துவரும் சூழலில், உணவுக் கடத்தலைத் தடுக்கவேண்டிய முக்கிய பொறுப்பிலுள்ள அதிகாரி மீதே இப்படியான குற்றச்சாட்டுகள் எழுப்பப்படுவது அதிர்ச்சியளிக்கிறது.இவ்விவகாரத்தில் தமிழக அரசு கவனத்துடன் நடவடிக்கை எடுக்கவேண்டும்.