""ஹலோ தலைவரே, திருச்சியில் நடந்த தி.மு.க.வின் விடியலுக்கான முழக்கம் சிறப்பு பொதுக்கூட்டமும் அதில் ஸ்டாலின் வெளியிட்ட தொலை நோக்குத் திட்டத்தையும் தொடர்ந்து, தி.மு.க.வின் வேட்பாளர் பட்டியல் மீது எதிர்பார்ப்பு அதிகமாகியிருக்குது.''’’
""ஆமாம்பா, 10 ஆம் தேதி வெளியாவதால் எதிர்பார்ப்பும் விறுவிறுப்பும் தெரியுது.''’’
""6ந் தேதியோடு நேர்காணல் முடிஞ்சிடிச்சி. கலைஞர் இருந்தப்ப, நேர்காணலில் கலந்துக்கிட்ட ஸ்டாலின் அவர் எதிரில் உட்கார்ந்தபடி பதில் சொன்னாரு. இப்ப ஸ்டாலின் நடத்திய நேர்காணலில் அவர் மகன் உதயநிதி, அப்பாவுக்கு எதிரில் நின்னுக்கிட்டே பதில் சொல்லியிருக்கார். இது தொடர்பான இரண்டு படங்களும் இப்ப சமூக ஊடகங்கள்ல சுவாரஸ்யமா வைரலாகிக் கிட்டு இருக்குது''’’
""நேர்காணலின் முதல்நாள் கன்னியாகுமரி யிலிருந்து ஆரம்பிச்சப்ப எல்லாரும் நாற்காலியில் உட்கார்ந்துதான் பதில் சொன்னாங்க. அதேதான் தொடர்ந்தது. கடைசிக்கட்டத்தில்தான் நிற்கவச்சி நேர்காணலை முடிச்சிட்டாங்க. உட்கார்ந்து பதில் சொன்னவங்ககிட்டேயும், நின்று பதில் சொன்னவங்கிட்டேயும் கேட்ட ஒரே கேள்வி, எத்தனை கோடி செலவு பண்ணுவீங்கங் கிறதுதான்.''
""உண்மைதாங்க தலைவரே, இளைஞரணியினர் உட்பட 60 பேர் கொண்ட ஒரு பட்டியலை கட்சித். தலைமையிடம் கொடுத்து, அவர்களை சீட்டுக்குப் பரிந்துரை செய்திருக்கிறாராம் உதயநிதி. அவர்களில் பலரும் கட்சியின் சீனியர்களுடன் ஒத்துப்போகாதவர்களாக இருப்பதுதான் செலக்ஷன் நேர சிக்கலாம். இதேபோல் இந்தமுறை பெண்களுக்கு குறிப்பிட்ட அளவில் சீட் தரணும்ங்கிறதை மகளிர்அணிச் செயலாளரான கனிமொழியும் வலியுறுத்தி இருக்காராம். அதனால் பட்டியல் வரும் போது எல்லாப் பக்கமும் புகைச்சல் இருக்கலாம்ன்னும் சொல்லப்படுது''’’
""அ.தி.மு.க. 6 பெர் கொண்ட முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டிருக்குதே?''
""ஆமாங்க தலைவரே, அமைச்சர்களில் பலரும், களநிலவரத்தை உணர்ந்து, தொகுதி மாறி நிற்கத்தான் ஆசைப்பட்டாங்க. அதிர்ச்சியடைந்த எடப்பாடி, அது உங்க இமேஜுடன் கட்சி இமேஜையும் டேமேஜ் ஆக்கிடும். அதனால், அவங்கவங்க தொகுதியில் நில்லுங்கன்னு சொல்லியதோடு, முதல்கட்ட பட்டியலை வெளியிட்டார். இதில், அமைச்சர் சி.வி.சண்முகம் பெயரும் இருக்குது. அவரும் தொகுதி மாறணும்னு நினைச்சிருந்தாராம். ஆனா, விழுப்புரம் தொகுதி வேட்பாளராவே அறிவிச்சிட்டாரு எடப்பாடி. சண்முகத்தை எதிர்த்து, டஃப் ஃபைட் தரும் வகையில் அ.ம.மு.க. தரப்பில் ஆவின் வைத்தியநாதன் களமிறக்கப்படலாம்னு எதிர் பார்ப்பு இருக்குது.''’’
""சசிகலாவுக்கும் தினகரனுக்கும் இன்னமும் முட்டல் மோதல்தானாமே?''’’
""தலைவரே... சசிகலா அரசியல் துறவறம் போகப்போறாருன்னு முன்கூட்டியே சொன்னது நம்ம நக்கீரன்தான். அதற்காக பல தரப்பிலிருந்தும் பாராட்டு குவியுது. சசி ஒதுங்கியது தினகரனுக்குப் பிடிக்கலை. ரெண்டு பேருக்கும் பேச்சுவார்த்தை இல்லையாம். இந்த நிலையில் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள பணம் வேணும்னு, உறவினர் ஒருவர் மூலமா சசிகலாவுக்குத் தகவல் கொடுத்திருக்கார் தினகரன். சசியோ, "நாடாளுமன்றத் தேர்தலுக்கு 1000 சி’ கொடுத்தேனே, அந்த கணக்கை கொடுக்கலைன்னா, இனி ஒரு பைசா தரமாட்டேன்னும் தினகரனிடம் சொல்லிடுங்க'ன்னு சொல்லிவிட்டாராம். அதனால் தினகரன் அப்செட்டில் இருக்கார்''’’
""அ.ம.மு.க.வை தேர்தலில் நிற்க வேண்டாம்னு பா.ஜ.க. நிர்பந்திக்குதே?''’’
""தேர்தல் பிரச்சாரத்துக்காக மீண்டும் தமிழகம் வந்திருக்கும் உள்துறை அமைச்சரான அமித்ஷா, சொன்னதின் பேரில், கட்சியின் அமைப்புச் செயலாளரான பி.எல்.சந்தோஷ், அ.ம.மு.க. தினகரனைத் தொடர்புகொண்டு, ""வரும் தேர்தலில் தி.மு.க. எக்காரணம் கொண்டும் ஜெயித்துவிடக்கூடாது. அதுக்கு அ.தி.மு.க வாக்குகள் பிரியக்கூடாதுன்னு நினைக்கிறோம். அதனால் உங்கள் கட்சி, தேர்தலைப் புறக்கணிக்கணும்''னு சொல்லியிருக்கிறார். அதுக்குப் பிரதிபலனா, தேர்தலுக்குப் பின், அ.தி.மு.க.வே சசிகலா மற்றும் உங்கள் இருவரின் கைக்கு வரும்படி செய்கிறோம் என்றும் ஆசைகாட்டி இருக்கிறாராம். இதைக்கேட்ட தினகரன், "அ.தி.மு.க.வின் முதல்வர் வேட்பாளரை மாற்றி அறிவிக்கச் செய்யுங்கள். அப்புறம் உங்கள் கோரிக்கையைப் பரிசீலிக்கிறோம்'னு சொல்லியிருக்காராம்''’’
""அமைச்சர் வேலுமணி மீது அமித்ஷாவிடம் ஒரு பஞ்சாயத்து போயிருக்கே?''’’
""அமைச்சர் வேலுமணி, சென்னை, கோவை உள்ளிட்ட மாநகரங்களில் குப்பை அள்ளுவதற்கான காண்ட்ராக்ட்டை, ஒரு வெளிநாட்டு நிறுவனத்திடம் ஒப்படைக்க டீலிங் பேசிக்கிட்டிருந்தாராம். அதற்காகக் கணிசமான ஒரு பெரும் அமௌண்ட்டும் கைமாறியிருக்கு. ஆனால் இடையில் இந்த விவகாரத்தில் சிக்கல் ஏற்பட, அந்த நிறுவனமோ கொடுத்த பணத்தைத் திருப்பிக் கேட்டுப் பிரச்சினை செய்ததுடன், இதை அமித்ஷா வரை கொண்டுபோயிருக்கு. அமித் ஷாவோ, அமைச்சர் வேலுமணிக்கு கடுமையான டோஸ்விட்டு எச்சரிக்கை விடுத்திருக்காராம். இதை அ.தி.மு.க.வில் இருக்கும் அமைச்சருக்கு எதிர் கோஷ்டிகள் வெளியே கசிய விட்டுக்கிட்டு இருக்கு''’’
""நானும் ஒரு முக்கியமான தகவலைச் சொல்றேன்… பா.ஜ.க.வின் மாநில அமைப்புச் செயலாளரா இருப்பவரும் அமித்ஷாவின் நட்புக்குரியவருமான கேசவவிநாய கத்தின் மீது டெல்லிக்குப் புகார்கள் பறந்துக்கிட்டிருக்கு. அவர் கட்சிப் பதவிக்கு "5 எல்'’ வீதமும், எம்.எல்.ஏ. சீட்டுக்கு "50 எல்'’ வீதமும் வசூலிக்கிறார்னு அந்தப் புகார்கள் சொல்லுதாம். இவர்தான் "சசிகலாவை மறுபடியும் அரசியல்ல நுழைய அனுமதிக்கக்கூடாது'ன்னு பா.ஜ.க. மேலிடத்திடம் சொல்லி வருகிறாராம்.''’’