"ஹலோ தலைவரே, கோட்டையே விறுவிறுத்துப் போயிருக்கு.''

"ஆமாம்பா, முதல்வர் ஸ்டாலின், முக்கியத் துறைகளின் ஆய்வுக் கூட்டத்தைக் கூட்டினாரே?''

"உண்மைதாங்க தலைவரே, ஜூன் 1, 2 ஆகிய இரண்டு நாட்களாக நடந்த இந்தக் கூட்டத்தில், ஒவ்வொரு துறையின் உயர் அதிகாரிகளிடமும் பேசிய முதல்வர், தி.மு.க. ஆட்சி வந்த பிறகு அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளின் நிலை என்ன? அரசாணைகள் மட்டுமே திட்டங்களை மக்களிடம் கொண்டு போய்ச் சேர்க்காது. அதிரடி நடவடிக்கையிலும் இறங்கணும்னு அறிவுறுத்தி இருக்கார். மேலும், அரசுக் கல்லூரிகளில் காலிப் பணியிடங்களை நிரப்புவதில் கவனம் செலுத்துங்க. தொழில் நுட்பக் கல்லூரிகளில் படிப்பை முடித்தவர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கித் தருவதில் அக்கறை காட்டுங்க. திருநங்கைகளுக்கும் வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுங்கன்னு வரிசையாக அவர்களுக்கு ஆர்டர் போட, இதனால் கோட்டையே பரபரப்பா ஆயிடுச்சி.''”

Advertisment

cm

"முதல்வர் கறாரா சில வாய்மொழி உத்தரவுகளையும் பிறப்பிச்சிருக்காரே?''”

"ஆமாங்க தலைவரே, சில நிறுவனங்களில் முதல்வர் ஸ்டாலினின் உறவினர்கள் பெயர்கள் அடிபடுவது குறித்த செய்திகள், அவர் காதுக்கே போனதால் அவர் எரிச்சலாயிட்டாராம். அதனால், கோட்டை அதிகாரிகளிடம், எக்காரணம் கொண்டும் அரசு நிர்வாகத்தில் என் குடும்பத் தினரோ, உறவினர்களோ தலையிட அனுமதிக் காதீர்கள்னு கறாராகச் சொல்லி இருக்கார். ஆனாலும் கோட்டையில் கோலோச்சும் அதிகாரிகளின் ஆதிக்கம் தொடர்ந்துக்கிட்டுதான் இருக்கு. அண்மையில் நடந்த 44 ஐ.பி.எஸ். அதிகாரிகள் மாற்றத்தில் அமல்ராஜ், பாலகிருஷ்ணன், தேன்மொழி உள்ளிட்ட பலரையும் அவர்கள் விரும்பியபடி புதிய இடங்களில் பவர்ஃபுல் காக்கி அதிகாரி அமர்த்தியிருக்கிறார்னு சொல்றாங்க.''”

"அமைச்சர்கள் பலரும் உதயநிதிக்கு அமைச்சர் பதவி கொடுக்கணும்னு சொன்னாலும், முதல்வர் இன்னும் தயங்கறாரே?''”

"ஆமாங்க தலைவரே, அமைச்சர்கள் சொல்றது மட்டுமில்ல, ஒரு சில மாவட்டங்களில் தீர்மானமே போட்டாங்க. இதை முதல்வர் விரும்பலை. கேபினெட்டில் இவ்வளவு அவசரமா உதயநிதியை சேர்க்க வேண்டாம்னு ஸ்டாலின் நினைக்கிறாராம். அதேபோல் உதயநிதிக்கே அமைச்சராகும் விருப்பம் இப்போதைக்கு இல்லை என்றும் சொல்லப் படுகிறது. அமைச்சரானால் இப்போது போல் சுதந்திரமாக இயங்கமுடியாதுன்னு அவர் நினைக்கிறாராம். ஒவ்வொரு துறை அமைச்சரிடமும் முதல்வர் வாங்கும் ட்ரில்லை உதயநிதியும் பார்த்துக் கிட்டுத்தானே இருக்காரு. அதனால், இப்போதைக்கு அமைச்சர் பொறுப்பெல்லாம் வேண்டாம். நான் இன்னும் சில படங்களில் நடிக்க வேண்டியிருக்குன்னு அவரே தட்டிக்கழிக்கிறார்னு அறிவாலயத் தரப்பே சொல்லுது.''”

dd"தமிழக காங்கிரசும் சிந்தனையாளர்கள் கூட்டத்தை நடத்தி இருக்குதே?''”

"உதய்பூரில் தேசிய காங்கிரசின் சிந்தனையாளர்கள் மாநாடு நடந்தது போலவே, தமிழகத்திலும் 2 நாள் சிந்தனையாளர்கள் கூட்டம் நடத்தப்பட்டிருக்கு. கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரியின் ஏற்பாட்டில் மாமல்லபுரத்தில் நடந்த இந்த நிகழ்வில், கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் உள்பட பலரும் கலந்துக்கிட்டாங்க. இதில், எம்.பி. விஷ்ணுபிரசாத் தலைமையில் பொருளாதார அமர்வு, எம்.பி. ஜெயக்குமார் தலைமையில் அரசியல் அமர்வு, எம்.எல்.ஏ. விஜயதாரணி தலைமையில் மகளிர் சமூகநல அமர்வு, செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார் தலைமையில் விவசாய நலன் அமர்வு என 4 அமர்வுகள் நடந்தன. ஒவ்வொரு அமர்விலும் 50-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டு தங்களின் கருத்துக்களை வெளிப்படுத்தி இருக்காங்க.''”

"கூட்டணிக் கட்சியான தி.மு.க.வுக்கு எதிரான குரல்களும் இந்த நிகழ்ச்சியில் எழுந்திருக்கே?''”

"ஆமாங்க தலைவரே, பொருளாதார அமர்விலும், அரசியல் அமர்விலும்தான் காரசார விவாதங்கள் அதிகமா இருந்தது. குறிப்பாக, உள்ளாட்சித் தேர்தலில் உள்ளடி வேலைகளைச் செய்து நம் வேட்பாளர்களைத் தி.மு.க. தோற்கடித்து, துரோகம் செய்ததுன்னு சிலர் குற்றம் சாட்டியதோடு, ராகுல்காந்தியை பிரதமராக்குவோம்னு ஸ்டாலின் சொன்னார். ஆனால், எம்.பி. தேர்தலில் காங்கிரசுக்கு குறைவான சீட்டுகளையே அவர் ஒதுக்கினார். இதுவா, ராகுலைப் பிரதமராக்கும் நோக்கம்? நம் தலைவர் ராஜீவ் காந்தியை இழந்திருக்கிறோம். அதற்கு காரணமான நபர்களைக் கட்டித் தழுவுகிறார் ஸ்டாலின்... என்றெல்லாம் பட்டியல் போட்டுக் குமுறித் தீர்த்திருக்கிறார்கள்.''”

"ஆனாலும் ராஜ்யசபா தேர்தலில் தனக்கான 4 இடங்களில் ஒன்றை காங்கிரசுக்குத்தானே தி.மு.க. கொடுத்திருக்கு?''”

"உண்மைதாங்க தலைவரே, ஒரு சிலர் தி.மு.க.வுக்கு எதிரான தீர்மானங்களைப் போடணும்னு சொன்னபோது, மூத்த தலைவர்கள் எல்லோரும் தடுமாறிப் போயிட்டாங்களாம். இது குறித்து அவர்கள் ப.சிதம்பரத்திடம் கேட்க, நீண்ட கால அரசியல் உறவு நீடிக்கணும்னுதான் தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி உருவாக்கப்பட்டது. அது குறுகிய கால நோக்கத்திற்காக அல்ல. தேசிய அளவில் சில முன்னெடுப்புகளை எடுக்கவும் தி.மு.க.வுடன் நாம் கூட்டணி வைத்திருக்கிறோம். அதனால் எதிர் தீர்மானம் எதுவும் நிறைவேற்ற வேண்டாம்னு அவர் தடுத்துவிட்டாராம். இதனால் கடுப்பான சில நிர்வாகிகள், ப.சி., தி.மு.க. தயவில் எம்.பி.யாகியிருப்பதால் அவர் தி.மு.க.வுக்கு விசுவாசம் காட்டுகிறார்னு வெளிப்படையாகவே முணுமுணுத்திருக்காங்க.''”

dd"சரிப்பா, பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது கொடுக்கப்பட்ட வன்கொடுமைப் புகார்கள் கிடப்பிலேயே வைக்கப் பட்டிருக்கே?''”

"பட்டியலினத்தவர் சாதிப்பெயரைச் சொல்லி அண்ணாமலை இழிவுசெய்தார். அதனால் வன்கொடுமைச் சட்டத்தில் அவரைக் கைது செய்யணும்னு பல்வேறு காவல் நிலையங்களில் புகார்கள் கொடுக்கப்பட்டிருக்கு. இது தொடர்பாக மேலதிகாரிகளிடம் சம்பந்தப்பட்ட போலீஸார் கேட்டபோது, இப்போதைக்கு நடவடிக்கை எதுவும் எடுக்க வேண்டாம்ன்னு சொல்லப் பட்டிருக்கு. காரணம், உளவுத்துறையின் அறிவுரையாம் இது. ஆனால் பா.ஜ.க.வினர் சிலரோ, பட்டியிலினத்தவரைப் பற்றி தவறாகப் பேசிய நடிகை மீரா மிதுனைக் கைது செய்த தமிழக போலீஸுக்கு, அண்ணாமலை மீது கைவைக்க தைரியம் இல்லை என்று காவல்துறையை உசுப்பேத்தி வருகின்றனர். விடுதலை சிறுத்தைகள் போன்ற கட்சிகளும் கூட, அண்ணாமலை மீது பெயரளவுக்கு ஒரு புகாரைக் கொடுத்துவிட்டு அமைதி யாகிவிட்டன. அவர்களுக்கே அக்கறையில்லாதபோது, எதற்கு நாங்கள் கெட்டபெயர் வாங்கவேண்டும் என்கிறார்கள் காக்கிகள்.''”

"அ.தி.மு.க. பொதுக்குழுக் கூட்டம் சூடுபிடிக்கும் போலிருக்கே?''”

"ஆமாங்க தலைவரே, வரும் 23-ந் தேதி அ.தி.மு.க. பொதுக்குழு கூடும்போது ஒரு மினி டிராமாவை எடப்பாடி நடத்த இருக்கிறாராம். அதாவது, தன்னை மட்டுமே ஒற்றைத் தலைமையாகச் செயல்படும்படி வற்புறுத்த தன்னோட ஆட்களைத் தயார் செய்திருக்கிறாராம். இதை அவர்கள் பொதுக்கூட்டத்தில் பெருங் குரலோடு சொல்றப்ப, "ம்ஹூம்... நானும் ஓ.பி.எஸ்.ஸும் ரெட்டைத் தலைமையாக கட்சியை வழி நடத்துவோம்' என்று அவரே அறிவித்து, ஓ.பி.எஸ். ஆதரவாளர்களின் கைத்தட்டலையும் வாங்கப் போகிறாராம். இந்த நிலையில், பொதுக் குழுவில் என்னைக் கட்சியின் அவைத் தலைவராக அமர்த்தவேண்டும் என்று மாஜி மந்திரி ஜெயக்குமார் வலியுறுத்தி வருகிறார். இன்னொரு பக்கம், ஜெயக்குமாரை அவைத் தலைவராக்கினால் நான் தி.மு.க.வுக்குப் போய்விடுவேன் என்று, வடசென்னை அ.தி.மு.க. மா.செ. ராஜேஷ், எடப்பாடியிடமே சொல்லி இருக்கிறாராம்.''”

"நானும் இது தொடர்பா ஒரு தகவலைப் பகிர்ந்துக்கறேன். எடப்பாடியிடம் அ.தி.மு.க. மா.செ. அப்படி சொன்னதும், எப்படியும் நீயும், மற்றொரு மா.செ.வான வெங்கடேஷ்பாபுவும் தி.மு.க.வில் சேரப்போகிறீர்கள். இது பற்றி நீங்கள் அமைச்சர் சேகர்பாபுவிடம் பேசி வருவது எனக்குத் தெரியும். அதனால் ஜெயக்குமாரை சாக்காக ஆக்காதீர்கள்னு அவர் வாயை அடைத்தாராம் எடப்பாடி. ஒருவேளை இப்போது அ.தி.மு.க.வின் அவைத்தலைவ ராக இருக்கும் தமிழ்மகன் உசேனைத் தூக்கினாலும், அந்த இடத்தில் ஒரு தலித்தை அமரவைத்து அந்தத் தரப் பினரைக் குளிரவைக்க நினைக் கிறாராம் எடப்பாடி.''”