railway

நீண்டதூர இரவுப்பயணம் என்றாலே நடுத்தர, அடித்தட்டு மக்கள் நாடுவது ரயில் பயணங்களையே. ரயிலில் இருக்கையை முன்பதிவு செய்துவிட்டால் படுத்து உறங்கியபடியே அலுப்பில்லாமல் ஊருக்கு சென்றுவரலாம். இந்த ரயில் பயணங்களில் வழக்கமாக முன்பதிவு செய்யப்படாத பொதுப்பெட்டிகளில் தான் இருக்கைக்கான சண்டைகள் விடியவிடிய கூட நடக்கும். ஆனால் தற்போது, முன்பதிவு செய்த பெட்டிகளிலும்கூட அவரவர்க்கான இருக்கையைப் பிடிப்பது போராட்டமானதாகி வருகிறது. கடந்த 11ஆம் தேதி செவ்வாய்க்கிழமை, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து ஹவுரா செல்லக்கூடிய எக்ஸ்பிரஸ் ரயிலில், முன்பதிவு செய்யப்பட்ட எஸ்3 பெட்டியில், முன்பதிவில்லாத வட மாநிலத் தொழிலாளர்கள் ஆக்கிரமித்துக்கொண்டதால், அப்பெட்டியில் முன்பதிவு செய்திருந்த 18 பேர் ஏறவே முடியாமல் வேறுவழியில்லாமல் வீடு திரும்ப வேண்டிய மோசமான நிலை ஏற்பட்டது.

Advertisment

இந்த சம்பவம் தொலைக்காட்சி, பத்திரிகை, சமூக வலைத்தளங்களில் வெளியாகி கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது. அதையடுத்து ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், அனைத்து மண்டல ரயில்வே பொது மேலாளர்களுடன் வீடியோ கான்பரன்ஸில் பேசி, முன்பதிவு செய்யப்பட்ட ரயில் பெட்டிகளில் பயணிகளுக்கு ஏற்படும் பிரச்சினைகளுக்குத் தீர்வு வேண்டுமென்றும், தேவைப்பட்டால் கூடுதல் ரயில்வே போலீஸôர் மற்றும் டி.டி.ஆர்.களை பணியமர்த்தவும் ஆலோசனை கூறினார்.

இதுபோன்ற சம்பவம் தமிழ்நாட்டில் நடப்பது முதல்முறையல்ல... சமீப காலமாக அடிக்கடி இதுபோன்ற சம்பவங்களைப் பார்க்க முடிகிறது. கடந்த ஆண்டில், கன்னியாகுமரியிலிருந்து திருச்சி வழியாக ஹவுரா செல்லக்கூடிய எக்ஸ்பிரஸ் ரயிலில், ஐநூறுக்கும் மேற்பட்ட வடமாநிலத் தொழிலாளர்கள் கும்பலாக முன்பதிவு செய்யப்பட்ட ரயில் பெட்டிகளில் ஏறியதால், முன்பதிவு செய்த பயணிகளுக்கு இடம் கிடைக்காமல் பிரச்சனையானது. பொதுவாக இப்படியான சம்பவங்கள் மாநிலங்களில் அடிக்கடி நடக்கக்கூடியதாக இருக்கிறது. ஆனால் அந்த அளவுக்கு ஒழுங்கீனமாக தமிழ்நாட்டில் நடந்ததில்லை. ஆனால் தற்போது வட மாநிலத் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் அதிகரித்துள்ள சூழலில், இங்குள்ள ரயில்களிலும் இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்துவருவது, ரயில் பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்திவருகிறது.

Advertisment

இப்படியான சம்பவங்களைத் தடுப்பது குறித்து ரயில்வே துறை சார்ந்தவர்களிடம் விசாரித்தபோது, இந்தியாவிலுள்ள மக்கள் தொகைக்கேற்ப ரயில் போக்குவரத்து அதிகரிக்கப்படாதது அடிப்படைக் காரணமாக இருப்பதால், சாமானியர்களுக்கான ரயில்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதே நிரந்தரத் தீர்வாக இருக்குமென்று தெரிவித்தார்கள். குறிப்பாக, மோடி அரசாங்கம் வந்தபிறகு, வந்தே பாரத் போன்ற டிக்கெட் விலை அதிகமுள்ள, தொழில்முறைப் பயணம் மேற்கொள்பவர்களுக்கான ரயில்கள் தான் அதிகமாக அறிமுகப்படுத்தப்படுகின்றன. சாதாரணக் கட்டணமுள்ள ரயில்கள் அதிகம் இயக்கப்படவில்லை. ரயில்வே துறையில் பணியாளர்கள் எண்ணிக்கையும் குறைவாக இருக்கிறது. ரயில்வே போலீசார் மற்றும் டிக்கெட் பரிசோதகர்களின் எண்ணிக்கையும் குறைவாக இருக்கிறது. இப்போதுள்ள சூழலில், ரயில்வே துறை சார்ந்த பணிகளான, ரயில் நிலையங்களை மேம்படுத்துவது, பாலம் கட்டுவது, ரயில் பாதைகள் அமைப்பது போன்ற பணிகளை தனியாருக்கு விட்டு கமிஷன் பார்ப்பதே அதிகரித்துவருகிறது. பயணிகளுக்கு ரயில் பெட்டிக்குள் ஏற்படும் பிரச்சனைகள் குறித்தெல்லாம் சிந்திக்கக்கூடிய நிலையில் ரயில்வே அமைச்சகமோ, ரயில்வே அதிகாரிகளோ இல்லை என்றே கூறுகிறார்கள்.

முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் பயணிக்கும் மக்களுக்கான பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு ரயில்வே அமைச்சகம் மனதுவைத்தால் முடியும். தற்போது ஒவ்வொரு நீண்டதூர ரயில்களிலும் முன்புறத்திலும் பின்புறத்திலும் ஒன்றரை பெட்டிகள் முன்பதிவில்லாத பயணிகளுக்காக இணைக்கப்படுகின்றன. இந்த பெட்டிகள் எண்ணிக்கையை மூன்று - மூன்று என 6 பெட்டிகளாக எண்ணிக்கையை உயர்த்தினால், முன்பதிவில்லாத பயணிகள் இந்த பெட்டிகளைப் பயன்படுத்திக்கொள்வார்கள். முன்பதிவுப் பெட்டிகளில் ஏறக்கூடிய கட்டாயம் ஏற்படாது.

அடுத்ததாக, தற்போது முன்பதிவில்லாமல் பயணிக்கும் மக்களுக்காக அந்தியோதயா விரைவு ரயில் இயக்கப்படுகிறது. இதில் 22 பெட்டிகள்வரை முன்பதிவில்லாத பெட்டிகளாக உள்ளன. இந்த ரயிலை இரவு 10 மணிக்கு மேலாக சென்னையிலிருந்து இயக்குகிறார்கள். இதே ரயிலை, இரவு 7 மணிவாக்கிலும் இன்னொன்றாக இயக்கினால், மற்ற எக்ஸ்பிரஸ் ரயில்களில் முண்டியடிக்கும் முன்பதிவில்லாத பயணிகள் அனைவரும் இந்த ரயில் வண்டியைப் பயன்படுத்திக்கொள்வார்கள். எனவே சென்னையிலிருந்து கன்னியாகுமரிக்கும், சென்னையிலிருந்து கோவை, பெங்களூர் என வெவ்வேறு மார்க்கங்களுக்கும் அந்தியோதயா விரைவு ரயில்களை அதிக எண்ணிக்கையில் இயக்கினால் இதுபோன்ற சிக்கல்களுக்கு தீர்வு காணலாம்.

இப்போதுள்ள ரயில் பயணங்களில், 4 அல்லது 5 பெட்டிகளுக்கு ஒரு டிக்கெட் பரிசோதகர் என்று குறைவான எண்ணிக்கையில்தான் டிக்கெட் பரிசோதகர்களைப் பயன்படுத்துகிறார்கள். இந்த எண்ணிக்கையை, இரண்டு பெட்டிகளுக்கு ஒரு டிக்கெட் பரிசோதகர் என்ற அளவுக்கு அதிகப்படுத்தினால், முன்பதிவில்லாமல் பயணிப்பவர்களைக் கண்டறிந்து வெளியேற்றுவது எளிது. அதேபோல் ரயில்வே பாதுகாப்பு காவலர்களையும் அதிகரித்து, அவ்வப்போது ரயிலில் அவர்கள் நடமாடிக்கொண்டிருந்தாலே இதுபோன்ற தவறுகள் நடப்பதற்கான வாய்ப்புகள் குறைவு. தென்னக ரயில்வே இதில் கவனம் செலுத்தினால், சாமானிய மக்களின் ரயில் பயணம் ரணகளமாக இல்லாமல், நிம்மதியான பயணமாக அமையும்!

-