2021, டிசம்பர் 18-21, நக்கீரன் இதழில், 'முன்னாள் அமைச்சரின் 1500 கோடி சொத்து!' என்ற தலைப்பில் வெளியான கட்டுரையில், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் மீது, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக கிருஷ்ணமூர்த்தி என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்த புகார் மனு குறித்து எழுதியிருந்தோம். அதன்மீது நடைபெற்ற விசாரணையில், அரசு தரப்பில் மாநில அரசு தலைமை குற்றவியல் வக்கீல் அசன் முகமது ஜின்னா ஆஜராகி, "இந்த புகார் குறித்து ஆரம்பகட்ட விசாரணையை போலீசார் மேற்கொண்டுள்ளனர். எனவே, பதிலளிக்க 4 வார காலம் அவகாசம் வேண்டும்'' என்று கேட்க, அதை ஏற்றுக்கொண்டு விசாரணையைத் தள்ளிவைத்தார் நீதிபதி.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/anbalagan-raid.jpg)
இதைத் தொடர்ந்து, லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய விசாரணையில், முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன், ரூ.1500 கோடிக்கு மேல் சொத்து சேர்த்துள்ளது தெரிய வருவதாகவும், அவரது சொத்துக்கள் யார் யார் பெயரில், எங்கெங்கே இருக்கின்றன என்ற விவரங்களையெல்லாம் நமது கட்டுரையில் தெரிவித்திருந்தோம். இந்நிலையில், ஜனவரி 20-ம் தேதி, வியாழனன்று அதிகாலை 3 மணியளவில், முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழக னின் வீடு, தர்மபுரி, சேலம், சென்னையிலுள்ள அவரது உறவினர்கள், பினாமிகளின் வீடுகள், நிறுவனங்களென மொத்தம் 57 இடங்களில் 200க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை மேற்கொண்டனர். இவற்றில் பெரும் பாலானவற்றை நாம் முன்பே குறிப்பிட்டுள்ளோம்.
தர்மபுரி மாவட்டம் காரியமங்கலத்தை அடுத்த கேரகோடஹள்ளியைச் சேர்ந்தவர் கே.பி.அன்பழகன். முதன்முதலில் லாரி டிரான்ஸ்போர்ட் தொழில் செய்துவந்தார். பின்னர் அ.தி.மு.க.வில் இணைந்து, 1996-ம் ஆண்டு ஊராட்சிக்குழு உறுப்பினராக அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். பிறகு 2001-ம் ஆண்டு பாலக்கோடு தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். இதன்பிறகு தொடர்ந்து 5-வது முறையாக பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். இரண்டு முறை தமிழக அமைச்சராகப் பொறுப்பு வகித்தார். இவர் பாலக்கோடு, பெரியாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஜல்லி கிரஷர், எம் சேண்ட், கல் குவாரி,கிரானைட் உள்ளிட்ட தொழில்களை பினாமிகளின் பெயரில் நடத்தி வருகிறார். இவருக்குச் சொந்தமாக 50-க்கும் மேற்பட்ட டிப்பர் லாரிகள் இயங்குகின்றன. கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் உயர்கல்வித் துறை அமைச்சராக இருந்தபோது தருமபுரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள், பல ஏக்கரில் விவசாய நிலங்கள் வாங்கியதாகவும், ரூ.500 கோடிக்கு மேல் சொத்து சேர்த்துள்ளதாகவும், கடந்த 2021-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலின்போது வீடியோ ஒன்று வைரலானது. இதனால் பாலக்கோடு தொகுதியில் கடுமையாகப் போராடியே 5-வது முறையாக இவரால் வெல்ல முடிந்தது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/anbalagan-raid1.jpg)
கே.பி.அன்பழகன், அவரது மனைவி மல்லிகா, மகன்கள், மருமகள் உள்ளிட்டோர், வருமானத்துக்கு அதிகமாக ரூ.11.32 கோடி அளவுக்கு சொத்து சேர்த்துள்ளதாக வழக்குப்பதிவு செய்யப் பட்டு, லஞ்ச ஒழிப்புப் போலீசார் சோதனை மேற்கொண்டனர். தர்மபுரி மாவட்டம், கேரகோடஹள்ளியில் உள்ள அன்பழகனின் வீட்டிலும், அவரது உறவினர்களின் பெயரிலுள்ள 6 இடங்களிலும், தர்மபுரி நகரப்பகுதி அனசாகரம் பகுதியில் உள்ள அ.தி.மு.க. நகரச் செயலாளர் பூக்கடை ரவி, கே.பி. அன்பழகனின் உதவியாளர் பொன்னுவேல் வீட்டிலும், இலக்கியம்பட்டி பகுதியிலுள்ள பாப்பிரெட்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி மற்றும் அவருடைய அண்ணன் அன்பழகன் வீடு மற்றும் கடைகளிலும் சோதனை நடைபெற்றது. அதேபோல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஒருங்கிணைந்த மாவட்ட கூட்டுறவு சங்கத் தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல் வீட்டிலும் சோதனை நடைபெற்றது.
கே.பி.அன்பழகனின் மச்சான் சிவகுமார் பெயரில் சென்னை நுங்கம்பாக்கத்தில் ரூ.20 கோடி மதிப்பிலான சொகுசு வீடு இருப்பதை ஏற்கனவே குறிப்பிட்டிருந்தோம். அங்கே லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை செய்தபோது, அந்த சொகுசு வீட்டில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமன் வாடகைக்கு இருந்த விவரம் தெரியவந்துள்ளது. மேலும், கோபாலபுரம், அடையாறிலுள்ள சிவகுமாரின் அலுவலகங்களிலும், சிவகுமாரின் மகன், மருமகன் பெயரிலுள்ள இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டுள்ளது.
சேலத்தில், முன்னாள் கனிம வளத்துறை அதிகாரியும், தற்போது நாமக்கல்லில் பணிபுரிந்து வருபவருமான ஜெயபால் என்பவரின் இல்லத்தில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. இவர்தான் தர்மபுரி முழுவதுமுள்ள முன்னாள் அமைச்சரின் கல் குவாரிகளுக்கு உடந்தையாக இருந்ததாக ஏற்கனவே குறிப்பிட்டுள்ளோம். இன்னும் பல அதிகாரிகளும் சிக்குவார்கள் என்கிறது ல.ஒ. துறை. கர்நாடகாவிலுள்ள பாபுலால் சேட்டு என்பவரின் இடத்திலும், அரூர் -திருப்பத்தூர் செல்லும் வழியில், அ.தி.மு.க. அரூர் ஒன்றியச் செயலாளர், முன்னாள் அரசு வழக்கறிஞர் பசுபதியின் மனைவியின் பெயரிலிருக்கும் பி.டி.ஆர்.வி. மெட்ரிக் பள்ளியிலும் சோதனை நடத்தப்பட்டுள்ளது. இவை குறித்தும் நாம் முன்பே குறிப்பிட்டிருந்தோம்.
அன்பழகன் உயர் கல்வித் துறை அமைச்சராக இருந்தபோது நான்கு பேர் கொண்ட பேராசியர் கள் குழு ஒன்றை உருவாக்கி வைத்துக்கொண்டு அதன் தலைவ ராக மாறவர்மன், பணியிட மாற்றம், கெஸ்ட் லெக்சர் நியமனம் போன்றவற்றில் அமைச்சரின் பினாமியாகச் செயல்பட்டுவந்தார். இவர்களிடம் 700 கோடி ரூபாய்க்கு மேல் சொத்து மதிப்பு இருப்பதாகத் தெரியவருகிறது. எனவே அடுத்த கட்டமாக லஞ்ச ஒழிப்புத்துறை யினர் இவர்களையும் குறிவைப் பார்கள் எனத் தெரிகிறது.
-அருண்பாண்டியன்
படங்கள்: அசோக்
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-01/anbalagan-raid-t.jpg)