"நம் சுதந்திரம் நமக்கு எதிரே உள்ளவரின் மூக்கு நுனி வரை மட்டுமே, மூக்கை தொடுவது வரை அல்ல'' -இதனைப் புரிந்து கொள்ளும் தன்மையும் அதற்கான வரையறையும் இன்றைய சில விசைப்பலகை வீரர்களிடையே காணாமல் போய்விட்டதோ என்ற அச்சத்தையே அண்மைய சம்பவங்கள் ஏற்படுத்துகின்றன. ஒவ்வொரு சாமானியனும் ஓர் ஊடகமாகச் செயல்பட்டு, தான் வாழ்ந்துகொண்டிருக்கும் இச்சமூகத்தின் கவனிக்கப்படாத அவலங்களையும், தேவைகளையும், அடக்குமுறைகளையும் பொதுவெளியில் வெளிச்சமிட்டுக் காண்பிக்க முடியும் என்ற நம்பிக்கையை மக்கள் மனதில் விதைத்தவை சமூக ஊடகங்கள்.

சமூகம் சார்ந்து மட்டுமல்லாமல், தனிப்பட்ட ஒவ்வொருவரின் வெற்றி, தோல்வி, இயலாமை, முயற்சிகள், திறமை, அரசியல் எண்ணங்கள் எனப் பலவற்றையும் இவ்வுலகோடு பகிர்ந்துகொள்ள முடியும் என்ற நம்பிக்கையைக் கொடுத்தது இந்த சமூக வலைத்தளங்கள். ஆனால், இப்படியான நேர்மறையான தாக்கங்கள் காலப்போக்கில் மறையத் துவங்கி, தனி நபர் மீதும், இந்த சமூகம் மீதும் உள்ள வெறுப்புணர்வை உமிழும் ஒரு இடமாக மெல்ல உருமாறத் துவங்கியுள்ளன இந்த தளங்கள்.

ஆரோக்கியமான விவாதங் களும், எண்ணப் பரிமாற்றங் களும் இடம்பெற்றிருக்க வேண் டிய இத்தளங்களில், தனிமனித வெறுப்பும், மத வெறுப்பும், சமூகம் மீதான அவநம்பிக்கை யும் சற்று அதிகம் ஆட்கொண்டுவிட்டதோ என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது. சமீபத்திய கிஷோர் கே சாமி மற்றும் டாக்ஸிக் மதன் ஆகியோர் மீதான சட்ட நடவடிக்கைகள்.

கலகத்தை விளைவிக்கும் உட்கருத்தோடு செயல்படுதல், பொது அமைதிக்கு எதிராகக் குற்றம் செய்யத் தூண்டுதல், இருவேறு பிரிவினருக்கு எதி ராகக் குற்றம் செய்யத் தூண்டு தல் என மூன்று பிரிவுகளின் கீழ் கிஷோர் மீது வழக்குப் பதிந்து கைது செய்துள்ளது காவல் துறை. தீவிர வலதுசாரி ஆதர வாளரான கிஷோர் கே சாமி, தனது சமூக வலைத்தள பக்கங் களில் பெரியார், முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கலைஞர், தற்போதைய தமிழ்நாட்டின் முதல்வர் ஸ்டாலின், பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறு பரப்பும் வகையில் விமர்சித்ததாக அவர் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Advertisment

ஒருவர் செய்யும் அரசியல் மீதான விமர்சனம் என்பது அவரின் அரசியல் செயல்பாடு கள், கொள்கைகள் அடிப்படை யில் அமைய வேண்டுமே தவிர, கொச்சையான தனிப்பட்ட தாக்குதல்களாக அமைதல் கூடாது என்பது அரசியல் அறம். அவ்வாறு செயலாற் றாதவர்கள் சரியான முறையில் அரசியல்படுத்தப்படாதவர்கள் என்பதே நிதர்சனம். அவ்வாறு சரியாக அரசியல்படுத்தப்படாத சிலர், அரசியல் செயல்பாடு களுக்கு எதிர்வினையாக தங்க ளது வக்கிர வார்த்தைகளைக் கட்டவிழ்ப்பது அவ்வப்போது நடைபெறுவதே. ஆனால், அவை ஒவ்வொருமுறையும் தண்டிக்கப்படாமல் கடந்து சென்றுவிடக்கூடியதாக அமைந்துவிடுவதில்லை. அவ்வாறான ஒரு சூழலே தற்போது கிஷோர் விஷயத்திலும் ஏற்பட்டுள்ளது.

கிஷோர் போலவே சமூக ஊடக பிரபலமான மற்றொரு வர் மீதும் இவ்வாரத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. அவர்தான் மதன். யூ-ட்யூப் தளத்தில் தனது பெயரிலேயே பக்கம் ஒன்றை நடத்தும் மதன் எனும் அந்த நபர், தனது யூ-ட்யூப் பக்கம் மூலம் சிறுவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு பப்ஜி விளை யாட்டின் நுணுக்கங்களைக் கற்றுக்கொடுத்து வந்தார். பல லட்சம் சப்ஸ்க்ரைபர்களைக் கொண்ட மதன், பப்ஜி விளையாடும் வீடியோக்களை ஒளிபரப்பும் போது, அவ்வப்போது தகாத வார்த்தைகள் பேசுவது வாடிக்கை.

11

Advertisment

பெரும்பாலும் சிறுவர் சிறுமியர் பின்தொடரும் இந்தப் பக்கத்தில், அவரது பேச்சுகளுக்கு வரவேற்பு கிடைத்த தோடு, அவரது பக்கத்திற்கு சப்ஸ்க்ரைபர்களும் பெருகத் துவங்கினர். பின்னர் இதையே அடித்தளமாக வைத்து 'டாக்ஸிக் மதன் 18+' என்ற பக்கத்தையும் துவங்கினார். அதில் இரட்டை அர்த்தத்தில் பேசுவது, லைவில் கேள்வி கேட்பவரிடம் கொச்சையாகப் பேசுவது எனச் செய்துள்ளார். வயது, பாலின பேதமின்றி இவ்வாறு தொடர்ந்து அவர் பேசிவந்த சூழலில்தான், ஆன்லைன் விளையாட்டுகளில் சிறுமிகளை ஆபாசமாகப் பேசியதாகவும், அவர்களிடமிருந்து மோசடியாக நிதி வசூல் செய்ததாகவும் சைபர் க்ரைம் போலீஸார் வழக்குப் பதிந்து சம்மன் அனுப்பியுள்ளனர். ஆனால், மதன் இதுவரை காவல்துறையிடம் சிக்காமல் தலைமறைவாகச் சுற்றிவருகிறார்.

மக்கள் தங்களது கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ள உருவாக்கப்பட்ட ஃபேஸ்புக், ட்விட்டர், யூ ட்யூப் போன்ற தளங்கள், பொழுது போக்குக்காகப் பயன்படுத்தப் பட்ட காலங்கள் கடந்து வணிக நோக்குக்காகப் பயன்படுத்தப் படும் சூழல் இன்று ஏற்பட் டுள்ளது. இதில் மில்லியன் சப்ஸ்கிரைபர்களுடன் கலக்குபவர்கள் சினிமா ஸ்டார் போல புகழ் பெறுகிறார்கள். அந்தப் புகழுக்காகவும் வருமானத்திற்காகவும் சமூக ஊடகங்களில் சரியாக ஆராயப்படாத அரைவேக்காடு தகவல்கள், பொய்கள் இவற் றோடு சேர்த்து நாகரிகமற்ற உள்ளடக்கங்களையும் சிலர் பதிவிடுவது அண்மைக் காலங்களில் வழக்கமாகி வருகிறது.

காவல்துறை இவர்களைக் களையெடுக்கும்போதுதான், உள்ளங்கை வழியே உள்ளத்தில் நுழையும் வைரஸைத் தவிர்க்க முடியும். புடிச்சி உள்ள போடுங்க சார்.

-கிருபாகர்