புதுச்சேரி, கதிர்காமம் இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் 800-க்கும் மேற்பட்டவர்கள் ஒப்பந்த ஊழியர்களாகப் பணியாற்றுகின்றனர். கடந்த 11 ஆண்டுகளாக ஒப்பந்த ஊழியர்களாக பணியாற்றும் தங்களைப் பணி நிரந்தரம் செய்யக்கோரி கடந்த 6-ஆம் தேதி 100-க்கும் மேற் பட்டவர்கள் மருத்துவமனைக் கட்டிடத்தின் மேல் ஏறிநின்று, தற்கொலை செய்துகொள்ளப்போவதாக அறிவித்தனர். இதைத் தொடர்ந்து நிலவரம் பதட்டமாக, அதிகாரிகளும் காவல்துறையினரும் ஸ்பாட்டுக்கு வந்து சமரசம் செய்ததையடுத்து அவர்கள் கீழே இறங்கினர்.

watertank

Advertisment

இதன்பிறகும் அவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படாததால், மீண்டும் 19-ஆம் தேதி போராட்டம் வெடித்தது. புதுச்சேரியிலுள்ள 350-க்கும் மேற்பட்ட நியாயவிலைக் கடைகளில் பணிபுரிந்து, கடந்த 7 ஆண்டுகளாக வேலையும் இல் லாமல், சம்பளமும் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ள 300-க்கும் மேற்பட்டவர்கள் தங்களது குடும்பத் துடன் புதுச்சேரி கோரிமேட்டில் உள்ள முதல்வர் ரங்கசாமியின் வீட்டை முற்றுகையிட்டனர்.

அப்போது ரங்கசாமி டென்னிஸ் விளையாடிக் கொண்டிருந்தார். ஊழியர்களின் முற்றுகையால் விளை யாட்டை நிறுத்திவிட்டு, டீசர்ட் - டவுச ருடன் ரங்கசாமி வீட்டுக்கு வெளியே வந்தார். அவரிடம், "கடந்த ஆட்சியில் ரேஷன் கடைகள் திறக்கப்படவில்லை. அதனால் உங்களுக்கு தான் நாங்கள் ஓட்டு போட்டோம். ஆனால் நீங்களும் கடையை ஏன் திறக்க மறுக்கிறீர்கள்? ரேஷன் கடை களை உடனடியாகத் திறந்து அரிசி, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வழங்க வேண்டும், நிலுவை சம்பளத்தை வழங்க வேண்டும், பணி நிரந்தரம் செய்ய வேண்டும், கடைகளை திறக்க முடியாவிட்டால் எங்களை வேறு துறைக்கு மாற்றிவிடுங்கள்'' என்று முறையிட்டனர்.

Advertisment

watertank

முதல்வர் ரங்கசாமியோ "ஏழு ஆண்டுகளாக என்ன செய்தீர்கள்? இப்போது வந்து போராடுகிறீர் கள்? கிளம்புங்கள், பார்க்கலாம்'' என அசால்ட்டாக சொல்லிவிட்டு உள்ளே சென்றார். அதன் பின்னர் காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர் களை வலுக்கட்டாயமாக கலைந்துபோகச் செய்தனர். அதனால் ஆவேசமடைந்த ஊழியர்கள், கோரிமேடு-திண்டிவனம் சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். காவல்துறையினர் கைது செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு தி.மு.க. மாநில அமைப்பாளரும், சட்ட மன்ற எதிர்க்கட்சித் தலைவருமான சிவா, எம்.எல்.ஏ.க்கள் சம்பத், செந்தில்குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செய லாளர் ராஜாங்கம் உள்ளிட்டோர் அவர் களைச் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர் . மேலும் இப்பிரச்சனையை சட்டசபையில் எழுப்புவதாக சிவா உறுதியளித்தார்.

இந்த நிலையில், 20-ஆம் தேதி காலை, பொதுப்பணித்துறையில் வவுச்சர் பிரிவில் 10 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் 1,311 பேர், தங்களைப் பணி நிரந்தரம் செய்யக்கோரி, சட்டமன்றத் தை முற்றுகையிடும் போராட்டத்தில் குதித்தனர். போலீசார் அவர்களைத் தடுத்து நிறுத்த, கடுமையான தள்ளு முள்ளு ஏற்பட்டது. போலீசார் அனைவரையும் கைது செய்து தீயணைப்பு நிலையம் அருகே யுள்ள குடோனில் அடைத்தனர். மதியம் அனைவரும் விடுதலை செய்யப்பட்ட நிலையில், வெளியில் வந்தவர்களில் 100 பேர், வீட்டுக்குப்போக மறுத்து, சோனாம்பாளையம் பகுதியிலுள்ள 80 அடி உயர நீர்த்தேக்க தொட்டிக்குச் சென் றனர். அதில் ஏறி நின்று, முதலமைச்சரைக் கண்டித்தும், கோரிக்கைகளை வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பியடி தற்கொலை மிரட்டல் விடுத்தனர். இவர்களோடு 100 பேர் சாலை மறியல் செய்தனர். போலீசாரின் சமரசத்தை ஏற்க மறுத்ததால் ஊழியர்களை வலுக்கட்டாயமாக கைது செய்தும், விரட்டிப் பிடித்தும் இழுத்துச் சென்றனர். இதனால் அந்தப் பகுதியே போராட்டக்களமானது.

watertank

எதிர்க்கட்சித் தலைவர் சிவா மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கல்யாணசுந்தரம், நேரு, அனிபால் கென்னடி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். முதலமைச்சர் ரங்கசாமியிடம் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் "விரைவில் பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்' என அவர் உறுதியளித்ததையடுத்து, 2 மணி நேரமாக நீர்த்தேக்கத் தொட்டியின்மேல் போராட்டம் நடத்தியவர்கள் கீழே இறங்கிவந்தனர்.

இதனிடையே சட்டமன்றக் கூட்டம் நடைபெறும் 7 நாட்களுக்கும் மேலாக சட்டமன்றம் அருகே தொடர் ஆர்ப்பாட்டம் நடத்திவந்த பாப்ஸ்கோ ஊழியர்கள், அதே நாளில் தலைமைச் செயலகம் எதிரில் கடலில் இறங்கி போராட்டம் நடத்தினர். இதேபோல் பாசிக் ஊழியர்கள் தொடர்ந்து 10 நாட்களுக்கும் மேலாக தட்டாஞ்சாவடி பாசிக் தலைமை அலுவலகம் முன்பு கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இப்படியாகப் பலதரப்பினரும் போராட்டத்தில் தொடர்ந்து குதித்து வருவதால் புதுச்சேரியே போராட்டச்சேரியாகக் காட்சியளிக்கிறது.

watertank

இதுகுறித்து தி.மு.க. மாநில அமைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான சிவா எம்.எல்.ஏ. நம்மிடம், "கடந்த 7 ஆண்டுகளாக குடும்ப அட்டைதாரர் களுக்கு மாதந்தோறும் ரேஷன் கடையில் அரிசி உள்ளிட்ட ரேஷன் பொருட்கள் நேரடியாக வழங்குவதற்குப் பதிலாக அவரவர் வங்கிக் கணக்கில் பணமாக செலுத்தப்படுகிறது. இதனால் ரேஷன் கடைகள் கடந்த 7 ஆண்டுகளாக மூடப் பட்டுள்ளன. அவற்றில் பணியாற்றிய ஊழியர்களுக்கும் கடந்த 55 மாதங்களாக சம்பளம் வழங்கப்படாததால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். விரைவில் ரேஷன் கடைகள் திறக்கப்படும் என்று பா.ஜ.க.வை சேர்ந்த குடிமைப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சாய் சரவணகுமார் பலமுறை உறுதியளித்தும் திறக்கப்பட வில்லை. இதேபோல் தான் பொதுப்பணித் துறையில் வவுச்சர் பிரிவில் பணியாற்றுபவர்கள், பாப்ஸ்கோ ஊழியர்கள், அமுதசுரபி, ஸ்பின்கோ, கே.வி.கே என 11 துறைகளைச் சேர்ந்த 10 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் ஒப்பந்த ஊழியர்களாகவும், தினக்கூலி அடிப்படையிலும் பணியாற்றுகின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அரசு மருத்துவமனையில் பணிபுரிந்த, கடந்த ஆட்சிக் காலத்தில் முதலமைச்சர் ரங்கசாமியால் நியமிக்கப்பட்ட, அவரது தொகுதியைச் சேர்ந்த சிலரின் ஆலோ சனையால் தற்கொலை மிரட்டல் போராட்டம் நடத்தினர். அதனால் அவர்களின் கோரிக்கையை உடனடியாக முதல்வர் ரங்கசாமி நிறைவேற்றினார். இதைப் பார்த்து, பலரும் அதேமுறையில் போராடுகின்றனர். முதலமைச்சரும் அவரைச் சார்ந்த ஏ.கே.டிஆறுமுகம், ரமேஷ் போன்றவர் களும் தங்களது சுயநலத்திற்காக ஒரு தரப்பினரை மட்டும் பணி நிரந்தரம் செய்துள்ளதால் புதுச்சேரியில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை அதிகரிப்பதுடன், மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்படுகிறது. எனவே இவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற முதல்வர் முன்வரவேண்டும்''’என்றார் அழுத்த மாய்.

ஏ.ஐ.டி.யு.சி மாநில பொதுச் செயலாளர் சேதுசெல்வம் கூறுகையில், "பாப்ஸ்கோ ஊழியர்களுக்கு கடந்த 65 மாதங்களாக ஊதியம் வழங்கவில்லை. நிறுவனத்தை செயல்பாட்டுக்கு கொண்டுவந்து ஊழியர்கள் அனைவ ருக்கும் வேலை கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பாப்ஸ்கோ ஊழியர்கள் 13 நாட்கள் போராட்டங்களை நடத்தி னார்கள். அதையடுத்து அமைச்சர் சாய்சரவணகுமார் அலுவலகத்தில் நடந்த பேச்சுவார்த்தையில், 2 மாதங்களுக்குள் நிறுவனத்தை மறுசீரமைப்பு செய்வது, ஊழியர்களின் ஊதியத்தைப் பட்டுவாடா செய்வது, அனைத்து கடன்களையும் தீர்ப்பது என்று எழுத்துப்பூர்வமாக உறுதி அளிக்கப்பட்டது. இரண்டு மாதங்கள் கடந்தும் எதுவும் நடைபெறவில்லை. அதனால்தான் சட்டமன்றக் கூட்டம் நடைபெறும் ஒவ்வொருநாளும் போராட்டம் செய்தோம். எட்டாவது நாளான 20-ஆம் தேதி கடலில் இறங்கி போராடினோம். அதனைத் தொடர்ந்து 21-ஆம் தேதி முதலமைச்சர் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் பாப்ஸ்கோவில் உள்ள மதுபானக் கடைகளுக்கு 27-ஆம் தேதி ஏலம்விட்டு அதிலிருந்து கிடைக்கும் தொகை 150 கோடியை வைத்து பாப்ஸ்கோ நிறுவனத்தை சீரமைப்பது, நிலுவை ஊதியங்களை வழங்குவது, கடன்களை அடைப்பது என்பன வற்றுக்கு உறுதியளித்திருக்கிறார்கள். இதேபோல் பாசிக் நிறுவனத்தில் விவசாயிகளுக்கான இடுபொருட்கள், மருந்துகள், உழுவடைக் கருவிகள் விற்பனை, குடிநீர், தோட்டக்கலை பண்ணை, காய்கறி செடிகள் விற்பனை உள்ளிட்ட பிரிவுகளில் 500-க்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு 113 மாதங்களாக சம்பளம் வழங்கப் படவில்லை. இதனால் ஊழியர்களின் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகள் காரணமாக பலர் உயி ரிழந்துள்ளனர். அவர்களும் தொடர்ந்து போராடி வருகின்றனர். அவர்களது கோரிக்கையையும் முதலமைச்சர் பரிசீலித்து நடவடிக்கை எடுக்கவேண்டும்'' என்றார்.

இது குறித்தெல்லாம் புதுவை முதல்வர் ரங்கசாமியிடம் கேட்டதற்கு, "சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தொடங்கும் நாளிலிருந்து சில இடங் களில், அரசு துறைகளில் பணியாற்று கின்ற தற்காலிக ஊழியர்கள், பணி நிரந்தரம், ஊதிய நிலுவை போன்ற கோரிக்கைகளை முன்வைத்து போ ராட்டங்கள் நடத்தி வருவதை பார்க்கின் றோம். இந்த ஆண்டும் அதேபோன்று போராடி வருகின்றனர். இவர்களுக்கு என்ன செய்ய முடியுமோ அதனை இந்த அரசு செய்து கொடுக்கும். பல ஆண்டுகள் பணியில் இருப்பவர்கள் குறைந்த ஊதியம் பெறும்போது அவர் களுக்கு சிரமமாகத்தான் இருக்கும். அதனால் கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொட ரில் இந்த ஊழியர்களுக்கு ரூபாய் 10,000 ஊதியம் கொடுக்க வேண்டும் என்று சொல்லி இருந்தேன். தற்போது அவர்களுக்கு ஊதியம் 15 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். எல்லோரையும் உடனடி யாக பணி நிரந்தரம் செய்வது என்பது முடியாத ஒன்று. ஊழியர்கள் அவர்களின் பணியை சரியாக செய்ய வேண்டும் என்பது என்னுடைய விருப்பம். அதனைப் பொறுத்தும், பணி நிரந்தரம் எப்படி செய்ய முடியும் என்பதை ஆலோசித்தும் அரசு முடிவு எடுக்கும்'' என்று முடித்துக்கொண்டார்.

அரசு ஊழியர்களின் மனக்கொதிப்பை புதுவை அரசு உடனடியாகத் தணிக்கவேண்டும். இல்லையெனில் நிர்வாகச் சீர்கேட்டைப் பழுது பார்ப்பது கடினம்.