வாழ்க்கை நடத்துவதற்கு கால்கள் அவசியம். விபத்திலோ, எதிர்பாராதவிதமாகவோ ஒருவர் கால்களை இழந்தால் இயல்பாக நடக்கமுடியாது. அன்றாடச் செயல்பாடுகளை இயல்பாகச் செய்யமுடியாது. அந்த மனிதரின் வாழ்க்கையே முடங்கிப் போகும். இத்தகைய மனிதர்களுக்கு மீண்டும் கால்கள் முளைத்தால்… தரையில் நடப்பது மட்டுமல்ல, வானத்தில் பறப்பதுபோல் அளவில்லா ஆனந்தம் அடை வார்கள். கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கும், விபத்தில் கால்களை இழந்தவர்களுக்கும், செயற்கைக் கால்கள் வழங்கிய விழாவில் அத்தகைய ஆனந்தத்தை நேரில் காணமுடிந்தது.

dd

Advertisment

விருத்தாசலம் லயன் சங்கம் சார்பாக கால்களை இழந்தவர்களுக்கு செயற்கைக் கால் பொருத்தும் நிகழ்வு 2 வருடங்களுக்கு ஒருமுறை நடக்கும். தமிழ்நாட்டு ஆளுநராக இருந்த ரோசய்யா, பன்வாரிலால் புரோஹித் போன்றவர் கள் இந்நிகழ்வுகளில் கலந்துகொண்டு கால்களை இழந்தவர்களுக்கு செயற்கைக் கால்களை வழங்கி யுள்ளனர். இந்த ஆண்டு நடைபெற்ற விழாவில் நக்கீரன் ஆசிரியர் கோபால் கலந்துகொண்டு செயற்கைக் கால்களை வழங்கினார்.

பொன்விழா ஆண்டை முன்னிட்டு விருத்தாசலம் லயன் சங்கம், ஜெயின் ஜீவல்லரி, சென்னை முக்தி நிறுவனம் இணைந்து, கால்களை இழந்த 168 பேருக்கு இலவச செயற்கைக் கால்கள் வழங்கும் நிகழ்ச்சியை பிப்ரவரி 12-ஆம் தேதி விருத்தாசலம் பாத்திமா பள்ளி வளாகத்தில் நடத்தின. இந்த நிகழ்ச்சிக்கு விருத்தாசலம் லயன் சங்க தலைவர் அருள் தலைமை தாங்கினார். மாவட்ட ஆளுநர் சிவக்குமார், முக்தி நிறுவன சேர்மன் மீனா தாதா, பாண்டி-கடலூர் மாநில தலைமை அன்னை டாரியா ஜோஸ்பின் செல்வராணி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

Advertisment

dd

லயன் சங்க மாநாட்டு நடைமுறைகளின்படி மாவட்ட தலைவரும், ஜெயின் ஜீவல்லரி உரிமையாளருமான ம.அகர்சந்த் குத்துவிளக்கு ஏற்றி விழாவைத் தொடங்கி வைத்தார். அவர் பேசும்போது, "விருத்தாசலம் லயன் சங்கம் கடந்த 24 வருடங்களாக காலை இழந்தவர்களுக்கு செயற்கைக் கால் பொருத்துவதைத் தொடர்ந்து செய்துவருகிறது. இதுவரை 2500 பேருக்கு காலிப்பர் கால்களும், 4500 பேருக்கு லிம்ப் கால்களும் வழங்கியுள்ளது. கொரோனா காலகட்டத் தில் இரண்டு ஆண்டுகள் இந்நிகழ்ச்சியை நடத்த முடியவில்லை. அது வருத்தமாக இருந்தது. தற்போது மீண்டும் தொடங்கி யிருக்கிறோம்'' என்றார்.

அரிமா சங்க பன்னாட்டு இயக்கு னர் மதனகோபால், நக்கீரன் ஆசிரியர் கோபால் ஆகியோர் சிறப்பு விருந்தினர் களாகக் கலந்து கொண்டு மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச செயற்கைக் கால்களை வழங்கி சிறப்புரையாற்றினர்.

மதனகோபால் பேசும்போது "முன்பு காலிபர் கால் தயாரிக்கப்பட்டது. அதைத் தூக்கிக்கொண்டு நடப்பதே சிரமம். அதனால்தான் இஸ்ரோ துணையுடன் -அப்துல் கலாம் யோசனைப்படி உருவாக்கப்பட்ட லிம்ப் கால்கள் வந்தன. எடை குறைவான இந்தக் கால்களால் மாற்றுத் திறனாளிகள் சராசரி மனிதர் போல நடமாட முடியும்'' என்றார்.

நக்கீரன் ஆசிரியர் கோபால் பேசும்போது, "தன் பிள்ளை, தன் குடும்பம் என்று மட்டும் வாழ்பவர்கள் செத்த பிணத்திற்குச் சமமானவர்கள். அவ்வாறில்லாமல் தம்மைச் சுற்றியுள்ள மனிதர்களுக்கும், கல்வி பெற முடியாதவர் களுக்கு கல்வியைக் கொடுத்து, உணவு தேவைப்படுவோர்க்கு உணவு கொடுத்து, கை இல்லாதவர்க்கு கைகொடுத்து, காலில்லாதவருக்கு கால் கொடுத்து, கண்ணில்லாதவர்க்கு கண் கொடுத்து வாழ்கின்றவர்கள்தான் உண்மையிலேயே உயிர் வாழ்கின்றவர்கள். அத்தகைய தொண்டுள்ளம் கொண்டவர் கள் இந்த லயன் சங்கத்தில் இருப்பவர்கள்.

"ஊருணி நீர் நிறைந்தற்றே உலகவாம்

ff

பேரறிவாளன் திரு' எனும் குறள் "ஒப்புரவினால் உலகம் வாழுமாறு விரும்பும் பேரறிவாளனின் செல்வம், ஊரார் நீருண்ணும் குளம் நீரால் நிறைந்தாற் போன்றது' என்கிறது. அதாவது ஒரு வீட்டுக்குள் உள்ள நீச்சல் குளத்தால் அந்த குடும்பத்தைத் தவிர வேறு யாருக்கும் பயனிருக்காது. ஆனால் ஊரணி எனப்படும் ஏரி, குளம் போன்ற ஊருக்குப் பொதுவாக உள்ள நீர்நிலையால் ஊரிலுள்ள அனைவரும் பயன்பெறலாம், அதுதான் ஊரணி. அந்த ஊரணியைப் போன்றவர் அரிமா சங்க நிர்வாகி அகர்சந்த். உதவுவதற்கு மனம் வேண்டும். தன்னார்வத் தொண்டு நிறுவனங்களில் உள்ளவர்கள் பலருக்கு உதவுவதையே வாழ்க்கையாகக் கொண்டுள்ளனர். குறிப்பாக இந்த அரிமா சங்கத்தில் உள்ளவர்கள் அத்தகையவர்கள். அவர்களில் முதன்மையானவர் அகர்சந்த்'' என்று வாழ்த்தியமர்ந்தார்.

செயற்கைக்கால் பெற்றுக்கொண்ட ஆலடி புலியூரைச் சேர்ந்த ஸ்ரீதேவி நம்மிடம், "நான் டிப்ளமோ நர்சிங் படித்துவிட்டு கோயமுத்தூரில் ஹோம்கேர் நர்சாக வேலை பார்த்துக்கொண்டிருந்தேன். 2018-ஆம் ஆண்டு வேலை முடித்துவிட்டு ரோட்டில் நடந்து சென்றுகொண்டிருந்த போது லாரி மோதியதில் என் இடது கால் துண்டாகி விட்டது. 2 மாதம் ஆஸ்பிட்டலில் சிகிச்சை பெற்று வீட்டிற்கு வந்து நடக்கமுடியாமல் படுத்தே இருந்தேன். பின்னர் ஸ்டிக் வைத்துக்கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக நடக்க ஆரம்பித்தேன். ஆனாலும் அதிக தூரம் நடக்க முடியாததால் வேலைக்குப் போகமுடியாமல் வீட்டிலேயே இருந்தேன். லயன்ஸ் கிளப்பில் பதிவுசெய்தால் லிம்ப் கால் கொடுப்பதாகச் சொன்னார்கள். அதன்பிறகு ஜெயின் ஜீவல்லரியில் வந்து பதிவுசெய்தேன். கொரோனா பீரியட் என்பதால் 2 ஆண்டுகளாகக் கொடுக்கவில்லை. 10 நாட்களுக்கு முன்பு காலுக்கு சரியான அளவெடுத்து இந்த லிம்ப் கால் கொடுத்திருக்கிறார்கள். இனி என்னாலும் மற்றவர்கள்போல் இயல்பாக நடக்க முடியும் என்ற நம்பிக்கை பிறந்திருக்கிறது'' என்றார்.

63 வயதாகும் குணமங்கலத்தைச் சேர்ந்த குணசேகரன், "1992-ஆம் ஆண்டு கரும்பு ஏற்றிய டிராக்டரில் கரண்ட் லைன் பட்டு டிராக் டரில் அமர்ந்து சென்ற என் மேலேயும் மின்சாரம் பாய்ந்தது. கடலூர் கவர்மெண்ட் ஆஸ்பிட்டல்ல 2 காலையும் துண்டிச் சுட்டாங்க. வீட்டுக்கு வந்த பிறகு 2 கைகளைக் கொண்டு நடக்கும் ஸ்டிக் வச்சி அக்கம்பக்கம் நடந் தேன். வெளிவாசல் போறதுக்குக்கூட அடுத்தவங்க உதவி தேவைப்பட்டது. அப்புறம் விருத்தாசலம் ஜெயின் ஜூவல்லரியில் செயற்கை கால் கொடுக்கறதா சொன்னாங்க. 10 வருசத்துக்கு முன்ன செயற்கைக் கால் கொடுத்தாங்க. இப்ப வாங்குறது மூணாவது முறை. இந்த செயற்கைக் காலுங்க மூலமாத்தான் பத்து வருசத்துக்கும் மேலா நடந்துக்கிட்டிருக்கேன். விபத்துக்கப்புறம் என்னுடைய வாழ்க்கையே போனதா நினைச்சேன். இந்த செயற்கைக் கால்கள் மூலமாதான் மறுபிறவி எடுத்து வாழுறேன்'' என ஆனந்தக் கண்ணீர் விட்டார்.

கால்களை இழந்தவர்களுக்கு மீண்டும் கால்களை மட்டுமல்ல… நம்பிக் கையையும், வாழ்வதற்கான உத்வேகத் தையும் கொடுத்திருக்கிறது அரிமா சங்கத்தின் முயற்சி.