சென்னை மாநகராட்சியில் நடக்கும் பதவி உயர்வு ஊழல்கள் அடேங்கப்பா ரகமாக இருக்கிறது. இதிலிருக்கும் வில்லங்கங்கள் மாநகராட்சியையே கதிகலக்கிக் கொண்டிருக்கின்றன.

இதுகுறித்து விசாரித்தபோது, ‘’சென்னை மாநகராட்சியில் 6 நியமனக் குழுக்கள் இருக்கிறது. இதில், மேயர் பிரியா தலைமையில் இருக்கும் நியமனக் குழு (அப்பாயிண்ட்மெண்ட் கமிட்டி) பவர்ஃபுல்லானது. பதவி உயர்வுகள், நியமனங்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விசயங்கள் அனைத்தும் இந்த நியமனக்குழுவின் ஒப்புதல் பெறப்பட வேண்டும்.

cc

மாநகராட்சியில் பல்வேறு நிலைகளிலிலுள்ள பணியாளர்களுக்குப் பதவி உயர்வுகள் சமீபத்தில் நடந்தன. குறிப்பாக, தொழில்நுட்ப உதவியாளர்கள் உதவிப் பொறியாளர்களாகவும், உதவிப் பொறியாளர்கள் உதவி நிர்வாக பொறி யாளர்களாகவும், உதவி நிர்வாக பொறியாளர்கள் நிர்வாக பொறியாளர்களாகவும், நிர்வாக பொறியாளர்கள் மண்டல அதிகாரிகளாகவும் என பல்வேறு நிலைகளில் பதவி உயர்வுகளுக் கான கோப்புகள் தயாரிக்கப்பட்டு அப்பாயின்ட்மெண்ட் கமிட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த பதவி உயர்வுகளின் தன்மைக் கேற்ப முறையே 3 லட்சம், 3.5. லட்சம், 4 லட்சம், 5 லட்சம் என விலை நிர்ணயிக்கப்பட்டு விற்கப்பட்டுள்ளன. அப்பாயிண் மென்ட் கமிட்டியின் சேர்மனாக மேயர் பிரியாவும், உறுப்பினர்களாக சோ.வேலு, ராஜா அன்பழகன் ஆகிய 2 கவுன்சிலர்களும் இருக்கின்றனர். அதேபோல, மேயரின் உதவியாளராக சாருகேஸ், சிவசங்கரன், பிரசன்னா ஆகிய மூன்று பேர் உள்ளனர்.

மேயரின் உதவியாளர்களில் 2 பேரும், கமிட்டி உறுப்பினர் வேலுவும் சிண்டிகேட் அமைத்து இந்த பதவி உயர்வுக்கான வசூல் வேட்டையில் இறங்கினர். நிர்ணயிக்கப்பட்ட விலை, பேசி முடிக்கப்பட்டதும் பதவி உயர்வுக்கான கோப்புகளுக்கு கமிட்டியில் ஒப்புதல் கிடைத்தது. அந்த கோப்புகள் தற்போது அரசின் அப்ரூவலுக் காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

மாநகராட்சியில் எந்தெந்த வழிகளிலெல்லாம் பணம் பார்க்கலாம் என்கிற வித்தையையும் சூட்சமங்களையும் சொல்லிக் கொடுக்கிறார் தலைமைப் பொறியாளர் ராஜேந்திரன்.

இந்த பதவி உயர்வுக்கான விலையை வலுக்கட்டாயமாக வசூலித்திருக்கிறது சிண்டிகேட். அதாவது, சிண்டிகேட் அமைத்திருப்பவர்கள், பதவி உயர்வுக்காக காத்திருப்பவர்களை அணுகி பேரம் பேசினர். அதற்கு ஒப்புக்கொண்டவர்கள், அசோகா ஹோட்டலுக்கு வரவழைக்கப்பட்டு பணம் செட்டிலானதும் சம்பந்தப்பட்டவர்களின் பெயர் டிக் அடிக்கப்பட்டிருக்கிறது. இந்த பதவி உயர்வில் மட்டும் சுமார் 2 கோடியே 50 லட்சம் ரூபாய் கைமாறி யிருக்கிறது''’என்கிறார்கள் மாநகராட்சி அதிகாரிகள்.

இந்த ஊழல்கள் தற்போது மாநக ராட்சியில் பரபரப்பாக பேசப்பட்டுவரும் நிலையில், அதுகுறித்த புகார்கள் கோட்டையை முற்றுகையிட்டுள்ளன. மேலும் நாம் விசாரித்தபோது, ‘"பொதுவாக, மேயர் கையெழுத்துப் போட வேண்டிய கோப்புகள் மட்டும்தான் அவரது பார்வைக்கு செல்லும். ஆனால், சமீபகாலமாக மாநகராட்சியின் அனைத்துத் துறைகளின் கோப்புகளும் அவரது பார்வைக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும் என்கிற உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. இதுதான் ஊழல்களுக்கு அடிப்படையாக இருக்கிறது.

நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, மாநகராட்சியில் இப்படிப்பட்ட விவகாரங்களில் தலையிடுவதில்லை என்ப தால் அதனைப் பயன்படுத்திக்கொண்டு ஊழல்களில் புகுந்து விளையாடுகிறது மாநகராட்சித் தலைமை''’என்கிறார்கள் அதிகாரிகள்.

இது தொடர்பாக மேயர் பிரியாவின் கருத்தறிய கார்ப்பரேசன் கொடுத்திருக்கும் அவரது மொபைல் எண்ணுக்கு தொடர்பு கொண்டபோது, அவரது எண் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. அலுவலக எண்ணுக்கு தொடர்புகொண்ட போது ரிங் ஆனது. யாருமே எடுக்கவில்லை. மேயரின் பெர்சனல் மொபைல் எண்ணுக்கு பலமுறை தொடர்பு கொண்டபோதும் நமது அழைப்பை மேயர் ஏற்கவில்லை. அவர் கருத்து தெரிவித்தால் பிரசுரிக்கத் தயாராக இருக்கிறோம்.

இத்தகைய ஊழல் விவகாரங்கள் தமிழக அரசின் லஞ்ச ஒழிப்புத் துறைக்கும் பறந்துள் ளன. முதல்வர் ஸ்டாலின் தலையிடா விட்டால், மாநகராட்சி ஊழல்களே தி.மு.க. அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும் என்பதே நிதர்சனமாக இருக்கிறது.

Advertisment