ss

(28) ஏறினா ரயிலு... இறங்கினா ஜெயிலு!

ந்த நெருக்கடி மிகுந்த நொடிகளில், அதிகார பீடங்களை நேருக்கு நேர் எதிர்கொள்ளும்போது கலகக்காரர்களுக்கும், புரட்சிகாரர்களுக்கும் பேச்சு ஒரு சிறந்த ஆயுதமாகிவிடுகிறது. அவர்கள் மொழியின் சூட்சுமம் அறிந்தவர்கள். சூட்சுமத்துடன் அவர்களின் நேர்பட பேசுதல், எல்லா இடங்களிலும் அவர்களை தலைநிமிர வைத்துவிடுகிறது. எத்தனை அதிகாரம் படைத்தவர்களாக இருந்தாலும், அவர்களை தலைகுனிய வைத்துவிடுகிறது.

Advertisment

கண்களை கறுப்புத் துணியால் நீதிதேவதை கட்டிக்கொண்டிருக்கிறாள். தராசு முள்ளின் நுனி நின்று அவள் தீர்ப்பு சொல்லவேண்டும். ஆனால் அவளால் என்ன செய்ய முடியும்? நீதி மன்றத்தில் நீதியில்லை. சமயம் பார்த்து சட்டம் ஒரு பக்கமாக சாய்ந்துவிடுகிறது. வசதி படைத்தவனுக்கு ஒரு நீதியையும், ஏழைக்கு மற்றொரு நீதியையும் நீதிமன்றங்கள் வழங்குகின்றன. இதை ‘நீதிமன்ற கலகமாக மாற்றிவிடுகிறார்கள் புரட்சிக்காரர்கள்.

தோழர் நல்லகண்ணு தொடர்புடைய நெல்லை சதி வழக்கு விசாரணையில், அரசாங்கத்தையும் நீதிபதிகளையும் கிண்டல் செய்து பார்க்கும் எத்தனையோ நிகழ்ச்சிகள் நடை பெற்றுள்ளன. இந்த சந்தர்ப்பங்களில் நீதிபதிகள் வழங்கும் தண்டனையை விட, புரட்சிக்காரர்கள் வெளிப்படுத்தும் சொற்கள் கூடுதல் அவமானத்தை தந்துவிடுகின்றது. "நீதிமன்றத்தை இவர்கள் அவமதிக்கிறார்களா? நீதிமன்றம் நீதியை அவமதிக்கிறதா?' என்ற கேள்வியை இவர்களால் சர்வ சாதாரணமாக எழுப்ப முடிகிறது.

தோழர் நல்லகண்ணுவுடன் ஆயுள் தண்டனை பெற்றவர்களில், தோழர் மாயாண்டி பாரதியும் ஒருவர். இவர்கள் இருவரும் பார்வைக்கு ஒன்று போலவே இருப்பவர்கள். கிராமப்புற மக்களின் எளிமை யை, தோற்றத்திலும் பேச்சிலும் கொண்டிருப் பார்கள்.

Advertisment

தோழர் நல்லகண்ணுவைவிட 7 ஆண்டு கள் மூத்தவர் மாயாண்டி பாரதி. இவர் மதுரையில் பிறந்தவர். இவரிடம் அமைந்த பன்முக ஆளுமை, இப்பொழுதும் பலரை திகைக்க வைத்துவிடுகிறது. இவர் தேர்ந்த பத்திரிகையாளர். தமிழக பத்திரிகை உலகின், முன்னோடி திரு.வி.க.வின் "நவசக்தி'யில் பணியாற்றியவர். பாரதியின் சீடர் பரணி நெல்லையப்பரின் "லோகோபகாரி' என்னும் பத்திரிகையிலும் இவரது பங்களிப்பு இருக்கிறது. ஆரம்ப காலத்தில் இவர் எழுதிய நூல்கள் பெரும் பரபரப்பை உருவாக்கியவை. அதன் தலைப்புகளை இப்பொழுது வாசித்துப் பார்த்தாலும் மனத்துக்குள் ஒருவிதமான துடிப்பு வந்துவிடும்.’"ஏறினா ரயிலு, இறங்கினா ஜெயிலு, படுகளத்தில் பாரததேவி' போன்றவை இதில் முக்கியமானவை.

அன்றைய மதுரை அரசியல், செயல் பாடுகளின் கொதிநிலையிலிருந்தது. சுதந்திரப் போராட்டத்தில் மதுரைக்கு வராத தலைவர் களே இல்லை. காந்தியடிகள் வந்திருக்கிறார், அவரை சந்தித்திருக்கிறார். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், நேரு போன்ற தலைவர்களைப் பார்க்கும் வாயப்பும் இவருக்கு கிடைத் திருக்கிறது. அந்நிய துணி எரிப்பு, கள்ளுக்கடை மறியல் போன்ற போராட்டங்களில் பங்கேற்கிறார். காமராஜர், முத்துராமலிங்க தேவர், கக்கன் ஆகியோர் இவரது சிறைச்சாலை நண்பர்கள்.

இளம்வயதிலேயே இவரிடம் ஒருவித மான தேடுதல் அமைகிறது. அந்த தேடுதலில் இவரிடம் இயல்பாக அமைந்த குறும்புத்தனம், அதிகாரங்களைக் கிண்டல் செய்து பார்க்கும் இயல்பைக் கொண்டிருக்கிறது. அதற்கு ஓர் உதாரணம்... அப்பொழுது இவரை, இளைஞர் என்றுகூட சொல்ல முடியாது, சிறுவன் என்றுதான் சொல்லவேண்டும். தொடர்ந்து போராட்டங்களில் பங்கெடுக்கிறார். வழக்கம் போல் இவர் அமர்ந்திருக்கும் டீக்கடைக்கு போலீஸ் வருகிறது. மாயாண்டி பாரதி எங்கே என்று கேட்கிறது. அங்கு அமர்ந்திருந்த ஒருவர் மிக நிதானமாக, எந்த பரபரப்பும் இல்லாமல் சொல்கிறார், "இப்பொழுதுதான் இங்கிருந்து புறப்பட்டார்' என்று. அந்த சிறுவன் சொல்வதைக் கேட்டு போலீஸ் திரும்பிச் சென்றுவிடுகிறது. அப்பாவித்தனமாக காணப்பட்ட அந்த சிறுவன் வேறு யாருமில்லை... தோழர் மாயாண்டி பாரதிதான்.

தலைமறைவு கம்யூனிஸ்டுகளிடம் பல இயல்பு களை நான் பார்த்திருக்கிறேன். சிலரை பார்த்த வுடன் பயம் வந்துவிடும். நான் கட்சியில் இணைந்த ஆரம்ப காலங்களில் பலரைப் பார்த்து பயந் திருக்கிறேன். கட்சிக்கு வெளியே உள்ள மக்களிடம் காணப்படும் சரளமான பழகும் முறைகளை இவர்களிடம் பார்க்க முடியாது. இது ஏன் என்றும் யோசித்திருக்கிறேன்.

கம்யூனிஸ்டுகளிடம் இன்றும் சில நடைமுறைகள் இருக்கின்றன. கமிட்டி கூட்டங்கள் நடக்கும் சில சந்தர்ப்பங்களில், விபரம் எதுவுமே தெரியாத ஒருவர் வந்துவிட்டால் பதட்டம் அடைந்து பேசுவதை நிறுத்திவிடுவார்கள். கூட்டமே அவரை திரும்பிப் பார்க்கும். வந்தவர் ஏதோ வரக்கூடாத இடத்திற்கு வந்துவிட்டோமா? என்று பரிதாபமாகக் காட்சி தருவார். கூட்டத்தில் எந்த ரகசியமும் இல்லை. கட்சியும் ரகசிய கட்சி இல்லை. பின் ஏன் இந்த பதட்டம்?. பல தலைமறைவு கால தாக்கங் களை கட்சி இப்பொழுதும் கொண்டிருக்கிறது என்ப தாகவே இதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. .

இதில் மிகவும் வேறுபட்டிருந்தார் மாயாண்டி பாரதி. இவரோடு உரையாடும் தருணங்களில் கட்சிக்கு வெளிப்படைத் தன்மை இந்தக் காலத்தில் தேவை என்பார். அதிகார கட்டமைப்புக்கு ஏற்ப இவர் தன் இயல்பை மாற்றிக் கொள்வதில்லை. தோழர் நல்லகண்ணு இவரைப் பற்றிய சுவை பொருந்திய பல கதைகளை கூறியிருந்தாலும், ஒன்றை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

கம்யூனிஸ்டுகள் மானுட சமத்துவத்தை அடிப்படைக் கொள்கையாகக் கொண்டவர்கள். காலம் இவர்களைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்திவிடுகிறது. அரசாங்கத்தின் பொய் வேடங்களையும், போலி நடைமுறைகளையும் இவர்கள் அறிவார்கள். இதை அம்பலப்படுத்தும் தகுந்த தருணத்தை குற்றவாளிக் கூண்டுகள் இவர்களுக்குத் தந்துவிடுகிறது. ஒரு நிமிடம் நீதியின் முகமூடியைக் கிழித்து, அதன் கோர முகத்தை பிறருக்கு காட்டிவிடுகிறார்கள்.

ss

சிறைச்சாலைகளில் இன்றும் ஏ, பி, சி, என்று மூன்று வகுப்புகள் இருக்கின்றன. "ஏ', "பி' கைதிகள் சில சலுகைகளை பெற்றவர்கள். "சி' வகுப்பு கைதிகளுக்கு சாப்பிடுவதற்கு அன்று களி மட்டுமே கொடுக்கப்படும். இவர்கள் மீதான அடக்குமுறையும் கொஞ்சம் கூடுதலாகவே இருக்கும்

நெல்லை சதிவழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தோழர் மாயாண்டி பாரதி நீதிமன்றத்தில் தனக்கு "பி' கிளாஸ் வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்துள்ளார். தனக்கு "பி' வகுப்பு கிடைக்காது என்பது இவருக்கு நன்றாகவே தெரியும். ‘இருப்பது ஜெயில் இதில் ஏழை என்ன? பணக்காரன் என்ன? "பி' கிளாஸ் என்ன? "சி' கிளாஸ் என்ன?’ இந்த கேள்வி இவர் மனதில் எழுந்துவிட்டது. இந்த உண்மையை வெளியுலகத்திற்கு தெரிவிக்கும் வாய்ப்பாக நீதிமன்றத்தை இவர் பயன்படுத்திக் கொள்கிறார்.

நீதிபதி, " "பி கிளாஸ் கேட்கிறாயே உனக்கு ஏதாவது சொத்து இருக்கிறதா?'' என்று கேட்கிறார். "இருக்கிறது'' என்று பதில் கிடைத்தவுடன், விபரங்களை எழுதுவதற்கு நீதிபதி பேனாவை கையில் எடுக்கிறார்.

அப்பொழுது செல்லுகிறார் தோழர் மாயாண்டி பாரதி. "எங்கள் குடும்பத்திற்கு மதுரையில் நிறையவே சொத்திருக்கிறது. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலும், திருமலை நாயக்கர் மகாலும் எங்களுக்குதான் சொந்தம்'' என்கிறார்.

சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற நீதிமன்ற நீதியின் உயிர்மூச்சு அந்த தருணத்தில் ஒரு நிமிடம் நின்று, மீண்டும் இயங்கத் தொடங்குகிறது..

இதில்தான் மாயாண்டி பாரதி என்னும் கம்யூனிஸ்டின் பெருமை இன்றுவரை நிலைத்து நிற்கிறது.

(தொடரும்)