(19) சிவப்பு பிரதேசம்!
அரசு உருவாக்கத்தைப் பற்றி, மார்க்சீயம் ஒரு கருத்தை சொல்லுகிறது. அரசு எந்த வர்க்கத்தைச் சார்ந்தது என்பது இதில் முக்கியமானது. சுரண்டலுக்கு ஆதரவான அரசாங்கங்கள் பல்வேறு முகங்களைக் கொண்டிருக்கின்றன. கருணை மேகங்கள் சூழ்ந்த குளிர் முகம் ஒன்று. ரத்தக் கறைபடிந்த கைகளையும், வேட்டையாடிக் கைப்பற்றும் வஞ்சகக் கண்களைக் கொண்டிருக்கும் முகமுமாக மற்றொன்று. இவ்வாறாக வேறு பல முகங்கள் இதற்கு இருந்த போதிலும், இதன் பயங்கரவாத முகத்தை மற்றவர்கள் அறிந்துகொள்வது அத்தனை எளிதாக இல்லை.
மக்களாட்சி என்று அரசியல் சட்டத்தை வகுத்துக்கொண்ட அரசாங்கங்கள் என்னதான் ஜனநாயக வேடத்தை அணிந்திருந்தபோதிலும், அதன் பயங்கரவாத முகத்தை முதலில் கண்டறிந்து கொண்டவர்கள் கம்யூனிஸ்டுகள்தான். சமுதாய வளர்ச்சியில் அரச பயங்கரவாதத்தோடு மோதவேண்டிய கட்டாயம் மக்களுக்கு ஏற்பட்டு விடுகிறது. இதை முதலில் எதிர்த்து நிற்பவர்கள் யார் என்ற கேள்வி இயல்பாகவே எழுந்து விடுகிறது. பூனைக்கு யார் மணி கட்டுவது என்பதில், நாங்கள் மணி கட்டு கிறோம் என்று வந்து நின்றவர்கள்தான் கம்யூனிஸ்டு கள். அவர்கள் கற்றறிந்த தத்துவம் அவர்களுக்கு அறிவுப்பூர்வமான தைரியத்தை வழங்கிவிடுகிறது.
யாரிடமும் சமரசம் செய்துகொள்ளாத எளிய மக்களின் உரிமைக்காக எதையுமே தியாகம் செய்யும் மனநிலை எத்தகைய சிறப்புக்குரியது. இவர்களுக்கு உயிர்ப்பயம் என்ற ஒன்று இருப்பதில்லை. அடக்கு முறை ஆட்சியாளர்களுக்கு இவர்களுடன் நேருக்கு நேர் நிற்கும் தைரியமும் இல்லை. அவர்களுக்கு எதற்கெடுத்தாலும் உயிர் பயம் வந்துவிடுகிறது. காடுகளில் சுதந்திரமாகத் திரியும் சிங்கம்புலி போன்றவற்றை தந்திரமாகப் பிடித்துக் கூண்டுகளில் அடைத்து மனிதர் தமது பயத்தைப் போக்கிக் கொள்வதைப் போல, கம்யூனிஸ்டுகளையும் சிறையில் அடைத்து தங்களுக்கு ஏற்பட்ட பயத்திலிருந்து இவர்கள் தப்பிக்கொள்கிறார்கள்.
ஒரு நாயைக் கொலை செய்ய வேண்டுமென் றால் அதற்கு பைத்தியம் பிடித்துவிட்டது என்று சொல்ல வேண்டும். பிரச்சனைகளால் கொந்தளிக்கும் மக்கள் எழுச்சியை சந்திக்கும் நேர்மை, அரசாங்கத் திற்கு இல்லாமல் போய்விடுகிறது. தந்திர வலை விரித்து வைக்கிறது. இந்த தந்திர வலையின் பெயர்தான் சதி வழக்குகள்.
இன்றும் குற்றவாளிகளை யார் என்று கண்டு பிடிக்க முடியாமல் தேங்கிக்கிடக்கும் வழக்குகள் மிகவும் அதிகம். ஒரு காலத்தில் இவ்வாறான எல்லாக் குற்றங்களையும் யார் செய்தார்கள் என்பதை அவர் களால் எளிதாகப் பதிவு செய்துகொள்ள முடிந்தது. ஆடு திருடியவர்கள், மாடு திருடியவர்கள், கோழி திருடியவர்கள் என்று எல்லா குற்றங்களையும் சிலர் மீது அவர்களால் பதிவு செய்துகொள்ள முடிந்தது. இவர்கள் அனைவருமே தலைமறைவு கம்யூனிஸ்டு கள். நாடு முழுவதும் இவ்வாறாகத்தான் கேள்வி முறையில்லாமல் சதி வழக்குகள் போடப்பட்டன. கைதி எண் 9658, நெல்லை சதி வழக்கில் சேர்க்கப் பட்டிருந்தார்.
தலைமறைவு கம்யூனிஸ்டுகள் செயல்படும் விரிவு, எல்லையற்றது. எத்தகைய விரிவான செயல் பாட்டைக் கொண்டிருந்தார்கள் என்பதை இந்த சதி வழக்குகளிலிருந்து நம்மால் புரிந்து கொள்ள முடி கிறது. தமிழ் நாடு முழுவதும் தொடர்புகள் இருந்தன என்பது ஒருபுறம் இருக்க, ஆந்திரா, கேரளா என்று இந்திய நிலப்பரப்பெங்கும் தொடர்பில் இருந்தனர். சதி வழக்குகள், இதன் எல்லை எது வரை? என்பதை நமக்கு தெளிவுபடுத்துகிறது. தலைமறைவு கம்யூனிஸ்டுகளின் செயல்பாட்டு எல்லையை ழ்ங்க் ஸ்ரீர்ழ்ழ்ண்க்ர்ழ்ள் என்பார்கள். இந்த சிவப்புப் பிரதேசத்தின் எல்லைகள் பற்றிய விபரங்கள் இன்றும் காவல் துறையின் ஆவணங்களை தேடி எடுத்துக் கொள்ள முடியும்.
தமிழ் நாட்டின் சதி வழக்குகளில், சென்னை, கோவை, மதுரை, திருச்சி, நெல்லை, இராமநாதபுரம் ஆகிய சதி வழக்குகள் முக்கியமானவை. இதைப் பற்றி அன்றைய ஊடகங்கள் எத்தனையோ கற்பனைக் கதைகளை எழுதிக்கொண்டிருந்தன. இதைத்தவிர புதுச்சேரியில் செயல்பட்ட கம்யூனிஸ்டுகள் புகழ் வாய்ந்த தலைவர்கள் வ.சுப்பையா, டாக்டர் ரங்க நாதன் போன்றவர்கள் வேலூரை மையமாகக் கொண்ட சதி வழக்குகளில் இணைத்துக் கொள்ளப் பட்டனர். பிற்காலத்தில் தமிழ்நாட்டின் எல்லையிலிருந்துகொண்டு புதுச்சேரி விடுதலைக்கான போராட் டத்தை, இவர்கள் கொரில் லா தளம் அமைத்து நடத்திக் கொண்டிருந்தார்கள்.
மனித வாழ்வில் இரு பது முதல் நாற்பது வயது வரை எத்தகைய காலம் என்பதை நாம் அறிவோம். சதி வழக்கில் சேர்க்கப் பட்டிருந்த இளைஞர்கள் அனைவரும் மிகவும் குறைந்த வயதை உடையவர்கள். மோகன் குமாரமங்கலம், பார்வதி கிருஷ்ணன் போன்றவர்கள் ஜமீன் குடும்பத்தைச் சார்ந்தவர்கள். இவர்களது தந்தை சுப்பராயன் அமைச்சர் பொறுப்பில் இருந்த போது, இவர்கள் தலைமறைவு கம்யூனிஸ்ட்டாக தேடப்பட்டு, பின்னர் சிறையில் அடைக்கப்பட்டவர்கள். கே.டி.கே.தங்கமணி, லண்டன் சென்று பாரிஸ்டர் பட்டம் பெற்று தமிழகம் திரும்பியவர். இவரும் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
திருச்சி மாவட்டத்தில் முதன்முதலில் அமைச்சர் பொறுப்பை யார் ஏற்றிருந்தார் என்ற கேள்விக்கு சரியான விடை ஒன்று கிடைத்துள்ளது. அந்த அமைச்சரின் பெயர் டி.எஸ்.எஸ் ராஜன். இவரது முழுப்பெயர் தில்லைஸ்தானம் சேஷையங்கார் சௌந்தராஜன். இவர் ஒரு மருத்துவர். லண்டன் ‘மிடிலெக்ஸ்’ மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயின்றவர். இவர் 1937ஆம் ஆண்டின் காங்கிரஸ் அமைச்சரவை யில் சுகாதார அமைச்சராக செயல்பட்டவர். இவர் மிகவும் அன்பு கொண்ட அவரது பேரன் எஸ்.ராமசாமியும், கமலா என்ற நாகப்பட்டினத்தைச் சார்ந்த மதிப்பிற்குரிய அம்மையாரும் மாணவப் பருவத்திலேயே கம்யூனிஸ்டு இயக்கத்தில் பங்கேற்று பின்னர் திருமணம் செய்து கொண்டவர்கள். இருவரும் தலைமறைவு கம்யூனிஸ்டுகள். இவர்களும் கைது செய்து சிறையிலடைக்கப்பட்டனர்.
தோழர் ஏ.பாலசுப்ரமணியம், புகழ்மிக்க வழக்கறிஞரின் மகன், தோழர் சங்கரய்யா தொழிலதிபர் குடும்பத்தில் பிறந்தவர். இவ்வாறாக எத்தனையோ வசதிபடைத்த குடும்பத்தைச் சார்ந்த வர்கள், கம்யூனிஸ்டு கட்சியில் இணைந்தனர். தலைமறைவு வாழ்க்கை நடத்தினர். இந்தப் பின்னணியில் கல்லூரிப் படிப்பை பாதியிலேயே நிறுத்திக்கொண்ட கைதி எண் 9658, நெல்லை சதி வழக்கின் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தார்.
பிடிபட்ட உடன் இவர் ஓராண்டு, ஆறுமாத காலம் விசாரணைக் கைதியாக காவல்துறையால் வைக்கப்பட்டார். இந்த காலம் இவருக்கான சித்ரவதை காலம். வேறு யாரையும் விட மிகவும் மோசமாக சித்ரவதை செய்யப்படுகிறார். இதற்கான காரணங்களும் இருக்கத்தான் செய்கின்றன.
ஒரு முக்கியமான தலைவரை காவல்துறையால் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர்தான் தமிழகத்தின் நெல்லை பகுதியில் நடைபெறும் பல்வேறு மக்கள் எழுச்சிக்கு அடிப் படை சூத்திரதாரி என்று காவல் துறை முடிவு செய்திருந்தது. அவரைப் பற்றிய அனைத்துத் தகவல்களையும் கைதி எண் 9658 மீது சித்ரவதை செய்தால் பெற்றுவிட முடியும் என்று காவல்துறை உயரதிகாரிகள் நினைத்துக்கொண்டனர்.
காற்றைப் போல எதிலும் உள்நுழைந்து வெளியே வந்துவிடும் வாழ்க்கை, அந்த மாவீரனுக்கு சொந்தமானது. தலைமறைவு வாழ்கையில் அவருடன் கைதி எண் 9658க்கு அமைந்த தோழமை என்பது வீரசாகசங்களைக் கொண்டது. அதை என் மனம் கற்பனை செய்து பார்க்கிறது.
(தொடரும்)