kk

(15) உரல் குழி!

ரல் என்ற பொருள் இப்பொழுதுள்ள தலைமுறைக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. நெல்லைக் குத்தி அரிசியாக்குவதற்கும், வேறுபல காரியங்களுக்கும் உரல் பயன்பட்டு வந்தது. அந்தக் காலத்தில் உரல் இல்லாத வாழ்க்கையில்லை. உரலில் உலக்கை மோதும் சத்தம் வீடுகள் தோறும் தாள லயத்தோடு கேட்டுக் கொண்டேயிருக்ககும். இந்த தாள லயத்தை எந்த சங்கீத வித்வான்களிடமும் அது கற்றுக்கொள்ளவில்லை.

Advertisment

உரலில் இரண்டு உண்டு. ஒன்று கல்லுரல், மற்றொன்று மர உரல். நெல் அரவையில், இயந்திரங்கள் வருவதற்கு முன்பு உரல்கள் அரிசியை உருவாக்குவதிலும், மற்றைய தானியங்களை அதன் உமியிலிருந்து பிரித்தெடுப்பதற்கும் பயன்பட்டுக்கொண்டேயிருந்தன. ஏழை, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இந்த உரல் வசதியும் இருக்காது. அவர்கள் அதற்கு வேறொரு முறையை உருவாக்கி வைத்திருந்தார்கள்.

இடிந்துபோன மண் சுவர் இருக்கும். இது இல்லாவிட்டால், வீட்டைச் சுற்றி பனை ஓலை அல்லது தென்னை ஓலையிலான பாதுகாப்பை ஏற்படுத்தியிருப்பார்கள்.

மழை வந்தால் கூரை ஒழுகும். இது

Advertisment

தான் ஏழைகளின் வீடு. அதில் தனிச் சிறப்பு என்னவென்றால் அந்த குடிசையின் அடிப் பகுதி செம்மண் தரை. வாரம் இருநாட்கள் சாணி போட்டு மொழுகி தரையை அழகு செய்யாத ஏழைகளின் வீட்டைப் பார்க்க முடியாது.

கூரைகளில் சுரைக்கொடி ஓடி, சுரைக் காய்கள் காய்த்து தொங்கிக்கொண்டிருக்கும். பறங்கிக் கொடி எல்லா இடங்களிலும் படர்ந்துகிடக்கும். என் அனுபவத்தில் பார்த்த அந்த குடிசை வீடுகள் என் ஞாபகத்திற்கு வருகிறது. அதன் தரை மனக்காட்சியில் ஆழமாகப் பதிந்ததைப் போல இன்றுள்ள கான்கிரிட் வீடுகளின் செயற்கைத் தரைகள் மனதில் பதிய மறுக்கின்றன. கோடை வெயில் காலங்களில் கோரைப்பாயில் படுத்திருந்து, அந்த மண் தரையில் பெற்ற குளிர்ந்த சுகத்தை, என் உடலால் எப்படி மறக்க முடியும்?

எளிய மக்களின் இந்த தரையில் ஒரு சிறப்பான ஏற்பாடு உண்டு. அது அவர்களின் அன்றாட வாழ்க்கையில் இணைந்த ஒன்று அதுதான்... ‘உரல் குழி’. இதை உரக்குழி என்பார்கள். இந்த மண் குழியும் அழகோடு மெழுகப்பட்டிருக்கும். எளிய மக்கள் நெல் குத்துவதற்கும் மற்ற இதர காரியங்களுக்கும் இதைப் பயன்படுத்திக்கொள் வார்கள். இந்த உரக் குழியிலிருந்து கைதி எண் 9658 வாழ்க்கையின் சிறை அத்தியாயம் ஆரம்பமாகிறது.

ss

அய்யா நல்லகண்ணு இந்தக் உரக் குழியில்தான் ஆறு வெடிகுண்டுகளை வைத்திருந்தார் என்று காவல்துறையின் ஆவணங்கள் கூறுகின்றன. இவருக்கு நீதிமன்றத் தீர்ப்பில் ஆயுள் தண்டனையைத் தவிர மேலும் ஆறுவருட தண்டனையை இந்த வெடிகுண்டுகள் தேடித் தந்துவிடுகின்றன.

அய்யா அவர்களுக்கும் ஆயுதங்களுக்கு மான தொடர்பு என்ன என்ற கேள்வி இங்கு எழுகிறது.

ஆயுதங்களை மக்கள் சார்ந்து பயன்படுத்து வதற்கும், சுயநலத்திற்காக -அதிகாரம் சார்ந்து பயன்படுத்துவதற்கும் பெரிய வித்தியாசங் கள் இருக்கின்றன. காவல்துறை, ராணுவம் ஆகியவற்றில் ஆயுதங்கள் நாட்டின் பாதுகாப்பு, மக்களின் பாதுகாப்பிற்கு என்றபோதிலும் எளிய குடிமக்களைப் பாதுகாப்பதைவிடக் கூடுதலாக ஆதிக்க சக்திகளைப் பாதுகாப்ப திலேயே கவனமெடுத்துக்கொள்கிறது.

இதிலும் கம்யூனிஸ்டுகள் உருவாக்கும் செயல் திட்டங்கள் மறுக்கப்பட்ட எளிய மக்கள் சார்ந்ததாகவே இருக்கிறது.

ஆயுதங்களைப் பயன்படுத்துவதில் பகத்சிங் தொடங்கி இன்றுவரை கம்யூனிஸ்டுகளிடம் ஒரு பொறுப்புமிக்க, மக்கள் சார்ந்த கொள்கை இருந்து வருவதை யாராலும் மறுக்கமுடியாது. ஆயுதங்களைத் தூக்குவது ஆளும்வர்க்கத்தை அச்சுறுத்தும் மிரட்டல் கருவியாக மட்டுமே இருந்து வந்திருக்கிறது. இது, ஆயுதப் போராட்டத்தில் இவர்களின் சிந்தாந்த கோட்பாடு.

ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தில் கட்சிப் பணிகளில் நான் ஈடுபட்ட காலங்களில் நாணலூர் சதி வழக்கு என்ற ஒன்றை கேள்விப் பட்டிருக்கிறேன். 1948ஆம் ஆண்டு மார்ச்சு மாதத்தில் நடைபெற்றுள்ளது நாணலூர் கலவரம். இன்றைய திருவாரூர் மாவட்டத்தில் அமைந்த களப்பால் அன்றைய புரட்சி நடவடிக்கைகளின் மையமாக செயல்பட்டது. இதை எப்படியும் நசுக்கிவிட வேண்டும் என்று பண்ணையாரும், போலீசாரும் செயல்பட்டனர். ஆலத்தூரில் நடந்த ஒரு கொலையில் முன்னணி கம்யூனிஸ்டு தலைவர்கள் குற்றவாளிகளாக சேர்க்கப் பட்டனர்..

அன்றைய காலத்தில் களப்பால் குப்பு துணிவுகொண்ட இளைஞன். களப்பால் குப்பு இதில் குற்றவாளியாக சேர்க்கப்படுகிறார். கம்யூனிஸ்டு தலைவர்களில் அன்று இரண்டு "குப்பு'கள் இருந்தனர். ஒன்று பெரிய குப்பு, மற்றொருவர் சின்ன குப்பு. இருவருமே சகோதரர்கள். இந்த வழக்கில் சின்னகுப்புதான் கைது செய்யப்பட்டு தூக்குத் தண்டனையும் பெற்றிருந்தார். இதில் வேதனைமிக்க மற்றொரு நிகழ்வு நடைபெறுகிறது. குப்புவுக்கு தூக்குத்தண்டனை அளிக்கப்பட்டால் ஆட்சியாளருக்கு நெருக்கடி ஏற்படும் என்பதால் அவர் சிறைச்சாலையில் மிகுந்த சூழ்ச்சியோடு விஷம்வைத்து கொல்லப்பட்டார்.

இந்தக் காலத்தில் நாணலூர் கலவரமும் தீயாய் பரவுகிறது. இதில் நடேசன், அஞ்சான் என்ற இருவர் காவல்துறையால் சுட்டுத்தள்ளப்படுகிறார்கள். இந்த வழக்கில் முக்கிய பகுதி வெடிகுண்டுகளை கம்யூனிஸ்டுகள் பயன்படுத்தினார்கள் என்பது. ஆற்றுப்பாலம் ஒன்றை வெடித்துத் தகர்க்க முயற்சி செய்தனர் என்று காவல் துறை வழக்குப் பதிவு செய்துகொண்டது. இதில் வெடிகுண்டுகளை தயாரித்துக்கொள்ளும் நடைமுறை தலைமறைவு இயக்கத்தில் களப்பால் பகுதியில் இருந்ததா? என்ற கேள்வி எழுகிறது.

தமிழ்நாட்டில் வெடிகுண்டோடு தொடர்புகொண்ட மற்றொரு பெயர் உண்டு. அது ஏ.எம். கோபு, தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணத்திற்கு அருகில் அமைந்த திருநீலக்குடி என்னும் கிராமத்தைச் சார்ந்தவர். கல்லூரிப் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு கம்யூனிஸ்டு கட்சியில் இணைந்தவர். இவர் வெடிகுண்டை பயன்படுத்தினார் என்ற குறிப்புகளும் கிடைத்துள்ளன. இந்த வெடிகுண்டு கொஞ்சம் வித்தியாசமானது.

அன்றைய காலத்தில், அரசு கருவூலங்களிலிருந்து பணத்தை ரயில்வே பாதைகளில் டிராலிகளின் மூலம் இழுத்துவரும் வழக்கம் இருந்தது. இன்றைய நன்னிலம் பகுதியில் டிராலியில் இழுத்து வந்துள்ள கருவூலப் பணத்தை கோபு கொள்ளையடித்தார் என்ற குற்றச்சாட்டில் அவர் காவல்துறையால் தேடப்பட்டு வந்தார்.

இலைகள் அடர்ந்த ஒரு மரத்தின் மீதிருந்து குண்டுகளை வீசி அந்தப் பணத்தைக் கைப்பற்றினார் என்று வழக்குப் பதிவாயிருந்தது. தலைமறைவு கால புரட்சிகர நடவடிக்கைக்கு பணம் தேவைப்பட்டிருக்கலாம் என்பதை நம்மால் யூகித்துக் கொள்ள முடிகிறது. இதைப்போல தமிழகத்தின் பல பகுதிகளில் வெடிகுண்டு வீச்சு நடந்துள்ளது.

கைதி எண் 9658 அய்யா நல்லகண்ணுவின் வாழ்க்கையில் வெடிகுண்டுகள் Manufacturing and distributing என்னும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இது பற்றிய முழு தகவல்களும் கிடைக்கவில்லை என்றாலும்... இவர் வெடிகுண்டு வைத்திருந்தார், தயாரித்தார், வினியோகித்தார் என்பது நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் அரசுத் தரப்பால் ஆதாரங் களோடு வைக்கப்பட்டிருக்கிறது.

ஆனால் இதில் நடந்ததுதான் என்ன?

(தொடரும்)