(12) தேடுதல் வேட்டை!
தேடுதல் வேட்டையின் உள்ளரசியல், வேடிக்கையாகவும் கிண்டலாகவும் மாறிவிட்டது. இரண்டு குழுக்கள் களமிறங்கினால் அதன் நோக்கம் அரசு விருதுகளைப் பெறுவதில் கொண்டுபோய் நிறுத்திவிடுகிறது. இதில் அமைந்த நகைச்சுவை, நக்கலும் கிண்டலும் நிறைந்த காட்சிகளாகத் திரைப்படங்களில் காட்டப்பட்டு வருகின்றது. யாருடைய முகத்திலும் வலுக்கட்டாயமாக மாட்டி, படமெடுத்துக்கொள்ளும் பயங்கரவாதிகளின் முகமூடி ஒன்றை காவல்துறை எப்பொழுதுமே தன் கையில் வைத்திருக்கிறது.
கைதி எண் 9658, அய்யா நல்லகண்ணு அவர்களின் தேடுதல் வேட்டையிலும் இரண்டு குழுக்கள் ஈடுபட்டிருந்தன. இரண்டு குழுக்களுக்கு இடையில் அமைந்த வேறுபாடுகளும் தேடுதல் வேட்டையில் தலைதூக்கின. நட்ர்ர்ற் ஹற் ள்ண்ஞ்ட்ற் என்பது காவல்துறையின் நடைமுறைகளில் ஒன்று. அன்றைய நெல்லை மாவட்டத்திலும் கண்டவுடன் சுட்டுப் பிடிக்கும் உத்தரவு ஒன்று, காவல்துறையின் கையில் இருக்கத்தான் செய்தது. இதை எதிர்த்து காலந்தோறும் மனித உரிமை அமைப்புகள் போராட்டங்களை நடத்திப் பார்க்கின்றன. அது இன்றும் காவல்துறையின் மர்மச் செயல் பாடுகளில் ஒன்றாகவே திகழ்ந்து வருகிறது.
சுதந்திரத்திற்கு அடுத்த ஆண்டுகளில், சுட்டுத் தள்ளும் பட்டியலில், அரசாங்கம் கம்யூ னிஸ்டுகளை முதலிடத்தில் வைத்திருந்தது. இந்தியா முழுவதும் காடுகளிலும் மலைகளிலும் கம்யூனிஸ்டு களை சுட்டுத் தள்ளும் சத்தம் கேட்டுக்கொண்டே யிருந்தது. அப்படி என்ன கம்யூனிஸ்டுகள் குற்றம் செய்தார்கள்? ஒரு சிலரிடம் ஒட்டு மொத்தமாகக் குவிந்து கிடந்த நிலத்தை, உழு பவனுக்குச் சொந்தமாக்க வேண்டும் என்பதில் தீவிரமாகச் செயல்பட்டார்கள் என்பதைத் தவிர வேறெதையும் சொல்ல முடியவில்லை.
தஞ்சையின் காவிரி வடிநிலம் தமிழ்நாட்டிலேயே கூடுதலான நிலக் குவியல் முறையைக் கொண்டிருந்தது. அதாவது ஒருவரிடமே ஏக்கர், ஹெக்டேர் கணக்கில் நிலம் உரிமையாக இருக்கும். தலைமறைவாக கம்யூனிஸ்டு கள் இங்கு அதிகம் செயல்பட்டுக் கொண்டிருந்தார்கள். பண்ணையார் ஒருவருக்கு நாலாயிரம் ஏக்கர் வரை நிலம் சொந்தமாக இருந்தது. உலக நாடுகள் ஒவ்வொன்றிலும் பண்ணையடிமை ஒவ்வொரு முறையில் வளர்ந்திருந்தது என்றால் இங்கு வேறுவிதமாக இருந்தது. இது கொத்தடிமை முறை. விவசாய உழைப்பின் சுமை, நுகத்தடியை தூக்க முடியாமல் சுமந்துசெல்லும் வாய் பேசாத மாடுகளைப் போல, இவர்கள் மேல் சுமத்தப்பட்டிருந்தது. இந்த நில உரிமையாளர்களுக்கு எதிராகத்தான், சீனிவாசராவ் போராட்டங்களை கட்டுப்பாடு கொண்ட செயல்பாட்டு அமைப்பாக மாற்ற முயற்சி செய்துகொண்டிருந்தார்.
இந்த மக்கள் ஒவ்வொரு பண்ணையிலும் அடிமைக் குடிமக்கள். ஒரு பண்ணையில் வேலை செய்பவர், இன்னொரு பண்ணைக்கு வேலைக்குச் செல்ல முடியாது. அவர்கள் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்றால் பண்ணையின் அனுமதியைப் பெற்று தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும். வேலை செய்வதில் இவர் களுக்கு நேரம், காலம் என்று எதுவுமே இல்லை. இதை யாராவது எதிர்த்து நின்றால் அவர்களுக்கு சவுக்கடியும், சாணிப்பாலும் தண்டனையாக வழங்கப்பட்டது.
இந்தக் கொடுமையை எதிர்ப்பதில் முன்னணியில் நின்றவர்கள் இரண்டு தலைமறைவு கம்யூனிஸ்டுகள். ஒருவர் இரணியன். மற்றவர் சிவராமன். இவர்கள் இருவருமே போலீசாரால் சுட்டுக்கொல்லப் பட்டவர்கள். இன்றைய திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டைக்கு அருகில் அமைந்த சாம்புவான் ஓடை என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவராமன். பதுக்கல் எடுப்பில் மும்முரமாக செயல்பட்டவர். காவல்துறை தொடர்ந்து இவரைத் தேடியும் பிடிக்க முடியவில்லை. கடைசியில் நாட்டுச்சாலை என்னும் இடத்தில் ஒருவரால் காட்டிக் கொடுக்கப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டார்.
இதைப்போல இரணியன் வாட்டாக்குடியைச் சார்ந்தவர். மலேசியாவில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் இந்திய தேசிய ராணுவத்திலிருந்து போரில் ஈடுபட்ட கம்யூனிஸ்டு குழுவைச் சேர்ந்தவர். கையில் ஒரு துப்பாக்கியுடன் கடல் கடந்து தஞ்சை மாவட்டம் வந்துசேர்ந்தார். ஆதிக்க சக்திகளை ஒரு காலத்தில் நடுநடுங்க வைத்தவர். வடசேரிக்கு அருகில் காட்டிக்கொடுக்கப்பட்டு சுடப்பட்டார்.
தஞ்சையைப்போல தீவிரம்கொண்ட கம்யூ னிஸ்ட்டுகளின் நிலம், திருநெல்வேலியின் தாமிர பரணியின் வடிநிலம். அந்த சீமையில் செயல்பட்ட கம்யூனிஸ்டுகளையும் தேடுதல் என்ற பெயரில் சுட்டுத்தள்ளும் நோக்கம் காவல்துறைக்கு இருந்தது. ஆனால் எளிதாக அவர்களைப் பிடிக்க முடியவில்லை. தஞ்சை டெல்டாவைப் போல, காடுகளற்ற பகுதி இல்லை நெல்லை. சீருடை அணிந்த காவலர்கள் காடுகளையே குறிவைத்துச் செயல்பட்டனர்.
சீருடை அணிந்த இரண்டு குழுக்களும் கைதி எண் 9658-ஐயும் அவரது தோழர்களையும் கண்டுபிடிப்பதில் போட்டி போட்டுக்கொண்டிருந்தன. அதில் ஒரு குழு கண்டவுடன் சுட்டுத் தள்ளுவதற்கு தயாராக இருந்தது. மற்றொரு குழு அவரைப் பிடித்துச் சென்று காவல்துறையில் சரணடைய வைக்கும் நோக்கத்தில் இருந்தது. தேடுதல் வேட்டை இரவு, பகலென்று தொடர்ந்துகொண்டே இருந்தது.
இரண்டாவது குழுவினர் சீருடை அணிந்திருந்தாலும் அவர்கள் காவல்துறையைச் சேர்ந்தவர்கள் இல்லை. இவர் கள் யார் என்பதும், இவர்களது நோக்கம் என்ன என்பதும் அன்றைய காவல்துறை அதிகாரிகளுக்கு முழுமையாகத் தெரியவில்லை; இந்த இரண்டாம் குழுவினர் தீவிரம் கொண்டு காடு மலைகளில் தேடிக்கொண்டிருந்தனர்.
ஒருநாள் கைதி எண் 9658, மலை உச்சி ஒன்றிலிருந்து இரண்டாம் குழுவைப் பார்த்துவிட்டார். அவருக்கு பெரும் அதிர்ச்சி. அவர்களின் கண்ணில்படாமல் மறைந்துவிடுவது அவருக்கு கடினமான ஒன்று அல்ல. ஆனாலும் அவர் மிகவும் உணர்ச்சிவயப்பட்டவராக இருந்தார். அவருக்கு என்ன நடக்கிறது என்பதை தெளிவாகப் புரிந்துகொள்ள முடிந்தது. வாழ்க்கையில் யாருக்குமே இப்படி ஒரு சூழ்நிலை ஏற்படக்கூடாது என்று அவர் நினைத்துக் கொண்டார்.
சீருடை அணிந்திருந்த இரண்டாவது குழு சுங்க இலாகா அதிகாரி அய்யா முத்துராலிங்கம் குழு வினுடையது. அய்யா நல்லகண்ணுவின் அண்ணன் அதற்குப் பொறுப்பேற்றிருந்தார். பத்து சுங்க இலாகாவினர் குழுவில் இருந்தனர். அவரிடம் கைதி எண் 9658-யை கைதுசெய்யும் எந்த உத்தரவும் கையில் இல்லை. இவர் கடத்தல்காரர்களைப் பிடிக்க முயற்சிகள் நடக்கின்றன என்று மற்றவர்கள் நினைத்துக்கொள்ளட்டும் என்று தனது தேடுதலை மேற்கொண்டிருந்தார். இவ்வாறு செய்வது முறையல்ல என்பது அவருக்கு மிக நன்றாகவே தெரிந்திருந்தது. ஆனால் தம்பியின் மீது அவர் கொண்டிருந்த அன்பு அவரை அவ்வாறு செய்யத் தூண்டியிருக்கிறது.
இவரது நோக்கம். கைதி எண் 9658-ஐ பிடித்து காவல்துறையில் ஒப்படைப்பது மட்டுமே. அந்த நேரத்தில் பாலதண்டாயுதம், மாணிக்கம் ஆகியோரை கொன்று உடலைக் கைப்பற்றும்படியான உத்தரவு காவல்துறையால் பிறப்பிக்கப்பட்டிருந்தது. இவர் இதை அறிவார். அவ்வாறு தன் தம்பி கொல்லப்பட்டுவிடக்கூடாது என்ற அக்கறையே இவரது தேடுதல் வேட்டைக்குக் காரணமாக இருந்தது.
மிகவும் நேர்மையான அதிகாரி அய்யா முத்துராம லிங்கம் எத்தனை உறுதி கொண்டவர் என்றபோதிலும், தம்பி என்ற பாச உணர்ச்சி இவரை இவ்வாறு செய்ய வைத்துவிட்டது. மதுரை சிறைச்சாலைக்கு சென்று பார்க்கவில்லை என்பதையும் இந்த நிகழ்ச்சியையும் ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்கிறேன்.
மனித மனங்களில் எத்தனை விதமான செயல்பாடுகள்.
(தொடரும்)