"சிறைக் காவலர்களுக்கு உரிய ஊதிய உயர்வு கிடைப்பதில்லை' என்கிற புகார் குரல், அவர்கள் தரப்பி-ருந்து எழுந்துகொண்டிருக்கிறது.

தமிழகத்தில் பொதுவாகவே அரசுப் பணியில் இருக்கக்கூடிய ஒவ்வொரு ஊழியர்களுக்கும் ஒவ்வொரு சதவீத சம்பள உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. ஒரு சில துறைகளில், அதற்கான தேர்வில், வெற்றிபெற்ற பின்னரே வருடாந்திர ஊதிய உயர்வு பெறமுடியும். இதற்கு எந்த ஊழியரும் எழுத்துப்பூர்வமாக விண்ணப்பிக்கத் தேவையில்லை. அவர்கள் மீது ஏதேனும் குற்றச் சாட்டு நிலுவையில் இருந்தாலும் ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டும் என்பது 24 (6) பிரிவின் அடிப்படை விதியாகும்.

jail

இந்த ஊதிய உயர்வு 3 ஆண்டுகளுக்குமேல் வழங்கப்படாமல் நிலுவையில் இருப்பின், இதைப்பெற துறைத்தலைவரின் அனுமதி பெற வேண்டும். அதேபோல் ஒரு அரசு ஊழியர் மீது குற்றச்சாட்டு குறிப்பாணையை வழங்க வேண்டுமானால் அதற்கான கால வரை முறையை மீறக்கூடாது என்றும் அரசு கடித எண் 1118-ல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படியெல்லாம் பாதுகாப்பு அம்சங்கள் இருந்தும்கூட சிறைக் காவர்களுக்கு மட்டும், பாரபட்சம் காட்டப் படுவதாகப் புலம்பு கிறார்கள் அவர்கள்.

Advertisment

இது குறித்து அவர்கள் தரப்பிடம் விசாரித்தபோது...

“தற்போது தமிழகத்தில் எட்டு ஆண்கள் சிறையும், நான்கு பெண்கள் சிறையும் உள்ளன. இங்கே எந்த வழிகாட்டல் நெறிமுறைகளும் கடைப்பிடிக்காமல் சீருடைப் பணியாளர்களான எங்களைத் தொடர்ந்து அரசு நிர்வாகம் அலைக்கழித்து வருகிறது. நியாயமான உரிமைகளைப் பெறக்கூட லஞ்சம் கொடுக்க வேண்டிய நிர்பந்தமும் இருக்கிறது. அதோடு தங்களுக்குத் தெரிந்தவர்கள், உறவினர்கள், வேண்டப்பட்டவர்கள் என்கிற பாகுபாட்டையும் சிறைத்துறையில் கடைப்பிடித்துவருகிறார்கள். அதிலும் இங்குள்ள பெண் காவலர்கள் என்றால் அவர்களுக்கு இன்னும் இளக்காரம்.

தற்போது சிறைத் துறையில் தமிழகம் முழுவதும் உள்ள சிறைக் காவலர்களுக்கு 8 மணி நேர பணி மற்றும் வாரத்திற்கு ஒரு முறை விடுமுறை என்ற நடைமுறை செயல்படுத்தப்பட்டு வருகிறது. வார விடுமுறை எடுக்க விரும்பாத காவலர்கள், அந்த நாளிலும் பணியாற்றினால் அவர்களுக்கு ஒரு நாளைக்கு உரிய ஊதியம் மற்றும் கூடுதலாக 200 ரூபாய் அரசு கொடுத்து ஊக்கப்படுத்துகிறது. ஆனால் பெண்கள் சிறைச்சாலையில் 8 மணி நேர பணி என்பது இல்லாமல், காலை 6 மணி முதல் மதியம் ஒரு மணி வரை ஒருவர் பணிக்கு வந்து, மீண்டும் அவர் அன்று மாலை 6 மணியிலிருந்து மறுநாள் காலை 6 மணி வரை பணியாற்றிவிட்டு, இடையில் ஆறு மணி நேர ஓய்வுக்குப் பிறகு மீண்டும் மதியம் ஒரு மணியிலிருந்து 6 மணி வரை பணியாற்றும் நிலை, தற்போது இருப்பது பெருங்கொடுமை.

Advertisment

இதன்படி பார்த்தால் பெண் காவலர்களுக்கு சரியாக ஆறு மணி நேர ஓய்வு மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. இங்கு பணிச் சுழற்சிமுறை கடைப்பிடிக்கப் படுவதும் இல்லை.

இந்த விடுமுறை நாள் பணிக்காக 200 ரூபாய் பெண் காவலர்களுக்குக் கொடுக்கப்பட்டாலும், அதே காவல் துறையில் இருக்கும் ஆண் காவலர்கள் என்றால் அவர்களுக்கு மட்டும் 500 ரூபாயாம்.

வார ஓய்வு என்பதும், தற்செயல் விடுப்பு என்பதும், பல மத்திய சிறைகளிலும், பெண்கள் தனிச் சிறைகளிலும் இன்றுவரை முழுமையாக கடைப்பிடிக்கப்படுவதில்லை. எனவே காவல் துறைக்கு எப்படி வார விடுமுறை நாளில் பணியாற்றினால் 500 ரூபாய் வழங்கப்படுகிறதோ, அதேபோல சிறைக் காவலர்களுக்கும் அந்த தொகையை வழங்க வேண்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கை. மேலும் பெண்கள் சிறையில் பணியாற்றக் கூடிய காவலர்களுக்கு எட்டு மணி நேர சுழற்சிமுறையை செயல்படுத்திட அரசு மனம் இரங்கவேண்டும்''’என்கிறார்கள் ஆதங்கமாய்.

சிறைத்துறைக் காவலர்களுக்கு, அவர்கள் அனுபவித்துவரும் சிக்கல்களில் இருந்து விடுதலை கிடைக்குமா?