ஐய்யோ மனிதர்களே... என் வயிற்றிலிருக்கும் பிஞ்சுக்காக உணவு கிடைக்குமா என்று உங்களிடம் தும்பிக்கையை நீட்டி யாசகம் தானே கேட்டேன். அந்த நம்பிக்கையை சிதைத்ததுடன் நில்லாமல், என் தும்பிக்கையையும் வாயையும் சிதைத்து விட்டீர்களே. நீங்கள் வாழும் இந்த மண்ணில் என் பிஞ்சுவை விட மனமில்லை. என் வயிற்றில் வளரும் கருவுடன் உங்களுக்கு தொல்லை யில்லாமல் இந்த உலகத்தை விட்டே போய் விடுகிறேன். நீங்கள், உங்கள், பிள்ளை குட்டிகளுடன் நன்றாக இருங்கள் என்று மரணத் தருவôயிலும் அந்த பெண் யானை ஆசீர்வதித்து விட்டு வடக்கிருந்து வைராக்கிய மனதுடன் உயிர் விட்டதாகத்தான் உணர வேண்டியிருக்கிறது.
கடந்த மே 25 அன்று கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தின் பள்ளத்தாக்குப் பகுதியின் தேசிய பூங்காவின் நிலம்பூர் அதிகாரியான மோகன கிருஷ்ணன்தான் ரோந்து சென்றபோது அந்த யானைக்கு ஏற்பட்ட கொடூரத்தை முதலில் கண்டவர். கும்கி யானைகள் மூலம் மீட்கும் முயற்சியும் பலன ளிக்கவில்லை. யானைக்கு என்ன நேர்ந்தது என விசாரித்திருக்கிறார் மோகன கிருஷ்ணன்.
""அந்தப் பகுதியில் காட்டுப் பன்றிகள் விலங்குகள் மலையோரமுள்ள ஊருக்குள் வந்து வாழை, கரும்பு, கிழங்கு உள்ளிட்ட விளை பொருட்களை சாப்பிட்டுச் செல்வதுடன் விவசாயமும் நாசமாக்கப்படுவதால் அதைத் தடுக்கும் பொருட்டு தேங்காய் மற்றும் அன்னாசிப் பழத்தில் வெடியை மறைத்து வைப்பது வழக்கம். அதை யானை சாப்பிட்டதால்தான் வெடித்து வாய் புண்ணாகியுள்ளது. பத்து நாட்களுக்கு மேலாகி சீழ் வடிந் ததால், ஈக்கள் மொய்க்கவே, அவற்றை விரட்ட அருகிலுள்ள ஆற்று நீரில் இறங்கித் தண்ணீருக்குள் நின்றிருக்கிறது. சீழ் முற்றிப்போன நிலையில், நுரையீரலில் தண்ணீர் புகுந்து இறந்திருக்கிறது பெண் யானை. பிரேதப் பரிசோதனையில் அந்தப் பெண் யானை கர்ப்பம் தரித்திருந்தது தெரிய வந்தது'' என்கிறார் யானையைப் பிரேதப் பரிசோதனை செய்த வனத்துறை டாக்டரான டேவிட் ஆப்ரகாம். தற்போதைய 67 நாட்கள் பொது முடக்கம் காரணமாக கேரளாவிலும் தொழில் முடக்கம், விவசாயம் பாதிப்பு. மேலும் லாக்டவுண் காரணமாக வனம், விவசாய மற்றும் ஊர்ப் புறங்களில் மனித நடமாட்டமில்லாமல் போனதால் வனவிலங்குகள் சகஜமாகவே தரையிறங்குகிறது. உணவுக்காக விவசாய நிலங்களில் கிடைப்பவைகளை உண்ணுகின்றன.
அவைகளைத் தடுக்கும் பொருட்டு அன்னாசிப் பழத்தில் வெடி பொருளை மறைத்து வைத்ததில், அந்தக் காட்டு யானை அதை விரும்பிச் சாப்பிட்டதில் வெடிபொருள் வெடித்துச் சிதைந்து மடிந்திருப்பது எதிர்பார்க்காத ஒன்று என்றும் சொல்லுகிறார்களாம் மன்னார்காடு பகுதியினர். இந்தக் கொடூரம் பற்றி அறிந்த உடனேயே, விசாரித்துக் குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருக்கிறார் முதல்வர் பினராய் விஜயன்.
மலப்புரத்தில் பழத்தில் வெடிவைத்ததின் காரணமாகச் சாப்பிட்ட கர்ப்பிணி யானையின் வாய் சிதறி மரணம் என்று டெல்லியின் டி.வி. சேனல் ஒன்று பிரேக்கிங் செய்தியை ஒளிபரப்பி யிருக்கிறது. கேரளாவின் மலப்புரம் என்ற பகுதி என செய்தியாக, அடுத்த கணம் வனவிலங்குகள் பாது காப்புத் துறையின் மத்திய முன்னாள்அமைச்சரான மேனகா காந்தி, மலப்புரம் பகுதியில் சட்டத்திற்குப் புறம்பான செயல்கள், அட்டூழியங்கள் நடக்கும் தப்பான பகுதி என்று ஒரு குறிப்பிட்ட பிரிவினரைப் பற்றி எடுத்துச் சொன்னது கேரளாவில் கொந்தளிப்பை உண்டாக்கிவிட்டது.
சம்பவம் திசை திருப்பப்பட்டு அரசியலாக்கப் படுவதாகும், மதச்சாயம் பூசப்படுவதாகவும் இதனால் பொது அமைதிக்குப் பங்கம் என்றும் மலப்புரம் காவல் நிலையத்திற்குப் புகார்கள் போனதில், மலப்புரம் காவல் நிலையத்தில் மேனகா காந்தி மீது ஆறு வழக்குகள் பதிவாகியிருக்கின்றன. சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடக்கிறது. இது குறித்துச் சிலர் பொய்யான தகவல்களையும், கேரளாவை அவமானப்படுத்தும் வகையில் கருத்துக்களைக் கூறி வருவது ஏற்கத்தக்கது அல்ல. என்று கேரள முதல்வர் தெரிவித்திருக்கிறார்.
தற்போதைய கொரோனா யுகத்தில் கேரளா முழுக்க மத்திய அரசின் மீதான அதிருப்தி பரவிவரும் நிலையில் அதைப் பேலன்ஸ் பண்ணுவதற்காகத்தான் சம்பவத்திற்கு அரசியல் மற்றும் மதச்சாயம் பூசப்பட்டு திசை திருப்பப்படுகிறது என்ற கொதிப்பும் அங்கே கனமாகவே ஓடுகிறது. இந்தக் கொதிப்பையும் மக்களின் ஆவேசத்தையும் அறிந்த அந்த டி.வி.யும், அதன் பெண் நிருபரும், தாங்கள் தவறுதலாக மலப்புரம் என்று பதிவிட்டுவிட்டதற்காக வெளிப்படையாக மன்னிப்பும் கேட்டுள்ளனர். இருப்பினும் எம்.பி.யான மேனகா காந்தி, தன் கருத்தை வாபஸ் பெறவில்லை.
""மற்ற மாநிலத்தைக் காட்டிலும் கேரள மக்கள் யானைகளை மதிப்பாகவும் மரியாதையாகவும் பூஜிப்பவர் கள். திருசூரில் 30 யானைகளை எதிரெதிரே நிறுத்தி, அம்பாரி வெண்கொடை, வெண்சாமரம், தங்க முலாம் ஆபரணங்கள் பதித்த அலங்காரப் பேழை களால் மாதங்கலீலாவாக அலங்கரித்து யானைகளுக் கென்றே நடத்தப்படும் பூரம் விழாவில் அவைகளைக் காண் பதற்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் திரள்வர். அதைக் காணக் கண் கோடி வேண்டும். திருசூர் கேசவன், தெரிக்காட்டு ராமச்சந்திரன், கொல்லத்தின் திர்க்கடவூர் ராஜூ போன்ற யானைகளுக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் உண்டு இந்த யானைகள் அம்பாரி, மாதங்கலீலா அலங்காரத் துடன் ராஜ நடையில் கம்பீரமாக வருவதைக்காண மக்களின் கூட்டம் அலை அலையாய் படை எடுக்கும். கேரளக் கோவில்களில் நடத்தப்படுகிற விழாக்களுக்கு இந்தப் பெயர் பெற்ற அரசு யானைகளைக் கொண்டு வருவதற்காக விழாக் கமிட்டியினரிடையே போட்டியே நடக்கும். அவைகளைக் கொண்டுவர 2 லட்சம் முதல் 5 லட் சம் வரை கட்டணம் செலுத்தினாலும் உரிய நேரத் திற்குக் கால்ஷீட் கிடைக்காத அளவுக்கு யானை களின் டேட் புக்கிங் ஆகிவிடும். யானைகளைக் கேரள மக்கள் அப்படிக் கொண்டாடுவார்கள். ஆனால் இந்த யானை சம்பவம் திசைத் திருப்பப் படுகிறது'' என்கிறார் கொல்லம் மாவட்டத்தின் கழுதுருட்டிப் பகுதியின் ஜோய்.
யானை மரணம் தொடர்பாக எடவண்ணா பகுதியின் வில்சன் என்பவரைக் கைது செய்திருக்கிறார்கள். அவரின் கூட்டாளிகளான பாலக்காட்டின் கரீம் மற்றும் ரியாசுதீன் இருவரும் தலைமறைவாகிவிட்டனர். இவர்கள் விவசாயம் செய்து வந்தாலும், அதனை அழிக்கும் வன விலங்குகளுக்காக இப்படி வெடி வைத்திருக்கிறார்களாம். வில்சன் வெடி தயாரிப்பில் கில்லாடியாம். அதோடு இவர்கள் மூவரும் அம்பலப்பாறை பகுதியின் காட்டுப் பன்றிகளை இந்த ரூட்டில் வேட்டையாடி அதன் கறிகளை விற்பனை செய்கிற தொழிலிலுமிருப்பவர்களாம்.
பாலக்காடு பகுதியிலுள்ள குவாரிகளில் கிடைக்கும் வெடி மருந்துகளைக் கொண்டு, அது வெடிக்கும் போது வீரியமாக இருப்பதற்காகவும், கடித்த சில மணி நேரங்களில் வாய் சிதறி மடியுமளவுக்கு உறுப்புகளைச் சிதைக்கிற கூரிய சீனிக்கற்கள், அல்லது ஷார்ப்பான முனை கொண்ட பொருட்களைக் கலவை யாகக் கொண்ட வெடியை வில்சன் தயாரிப்பதுண்டாம்.
இந்த வெடியை தேங்காய் அல்லது அவைகளுக்குப் பிடித்தமான அன்னாசிப் பழம் போன்ற வைகளில் திணித்து விடுவதால், அவைகளை ஆவலோடு பசியில் வனவிலங்குகள் கடிக்கும்போது வெடி பொருள் வெடித்து, அதி லுள்ள கூர்மையான கலவைகள் வாய்புறத்தைச் செதில் செதிலாய்ச் சிதற வைத்துவிடுவதால் ஒரு சில மணிகளில் மரணம் சம்பவித்துவிடும்.
இந்த ஃபார்மூலாவில் தயாரிக்கப்பட்ட வெடியைத்தான் காட்டுப் பன்றிக்காக வைத்துள்ளனர். அதில் கர்ப்பிணி யானை சிக்கி மரணமடைந் தது என்கிறார்கள். வெடிமருந்து வைக்கப்பட்டது, தேங்காயிலா, அன்னாசிப் பழமா அல்லது வேறு எதில் என விசாரணை நடக்கிறது. மற்ற விவரங்களை இப்போது தெரிவிப்பது விசாரணையின் போக்கைப் பாதிக்கும் என்கிறார் விசாரணை அதிகாரியான வனவிலங்குகள் பாது காப்புத் துறையின் தலைமை அதிகாரி சுரேந்திர குமார்.
கர்ப்பிணி யானை வெடிவைத்த பழத்தைக் கடித்து, வேதனையில் துடித்து, தன்னைத்தானே மாய்த்துக் கொண்ட கொடூரத்தை அரசியலாக்கி விளையாடுகின்றன திருந்தாத ஜென்மங்கள்.
- பரமசிவன்
படங்கள் : ப.இராம்குமார்