தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர், த.வெ.க. தலைவர் விஜய் ஆகியோரின் சந்திப்பு தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சந்திப்பில் நடந்தது என்ன என்பது பற்றி தி.மு.க.வும் அதன் கூட்டணிக் கட்சிகளும் ஆராய்ந்து வருகின்றன. அவர்களின் சந்திப்பில் நடந்தது குறித்து நாம் விசாரித்தபோது நிறைய தகவல்கள் கிடைத்தன.
அரசியல் கட்சிகளின் வெற்றிக்காக தேர் தல் வியூகம் வகுக்கும் பணிகளை பல்வேறு நிறு வனங்கள் மேற்கொள்கின்றன. அதில் ஒன்று தான் ஐ-பேக் நிறுவனம். தங்களது கட்சியின் வெற்றிக்காக இப்படிப்பட்ட நிறுவனங்களை தேர்வு செய்யும் அரசியல் கட்சிகள், அந்த நிறுவனத்துடன் பல நூறு கோடிகள் கொடுத்து ஒப்பந்தம் போட்டுக்கொள்கின்றன.
கடந்த 2021 தேர்தலுக்காக பிரசாந்த் கிஷோர் தலைமையில் இயங்கிய ஐ-பேக் நிறுவனத்துடன் தேர்தல் வியூக ஒப்பந்தம் போட்டுக்கொண்டது தி.மு.க. தேர்தலில் வெற்றுபெற்று தி.மு.க. ஆட்சியைப் பிடித்த நிலையில், ஒப்பந்தம் முடிவுக்கு வந்தது.
இதனால், தமிழகத்திலிருந்து தனது சொந்த மாநிலமான பீஹாருக்கு சென்ற பிரசாந்த் கிஷோருக்கு நேரடி அரசியல் மீது நாட்டம் வந்தது. இதனையடுத்து பீஹார் அரசியலில் குதிக்க, புதிதாக அரசியல் கட்சியை துவக்கினார். இதனால், ஐ-பேக் நிறுவனத்தின் தலைமை பொறுப்பிலிருந்து விலகினார் பிரசாந்த் கிஷோர்.
அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் வியூகம் வகுத்து, ஆட்சியைப் பிடிக்க வழிவகுத்ததாக நம்பப்பட்ட பிரசாந்த் கிஷோர், தனது வெற்றிக்கான வியூகத்தை வகுத்துக்கொள்ள முடியவில்லையோ என்னவோ,…பீஹார் அரசியலில் சோபிக்க முடியவில்லை. முதல் முயற்சியிலேயே தோல்வி அடைந்தார்.
இப்படிப்பட்ட நிலையில், எந்த ஒரு பொலிட்டிக்கல் அசைன்மெண்ட்டும் இல்லாமல் அமைதியாக இருந்துவந்த பிரசாந்த் கிஷோரைத்தான் சென்னைக்கு வரவழைத்து விஜய்யை சந்திக்க வைத்திருக்கிறார் ஆதவ் அர்ஜுனா. அந்த சந்திப்புதான் தமிழக அரசிய லில் பரபரப்பை கிளப்பியது. இதுகுறித்து பிரசாந்த் கிஷோர் தொடர்புடைய தரப்புகளில் விசாரித்த போது, "த.வெ.க.வின்
தேர்தல் மேலாண்மைப் பிரிவின் பொதுச்செயலாளராக ஆதவ் அர்ஜுனாவை நியமித்தார் விஜய். தேர்தல் பணிகளைத் துவக்க, நந்தனத்தில் தனி அலுவலகம் கூட ஏற்பாடு செய்துவிட்டார் ஆதவ். இவருக்கு இருக்கக்கூடிய ஆலோசனை களை விஜய்யிடம் விவாதிக்கத் திட்டமிட்டார்.
இதற்காக ஆதவ் முயற்சித்தபோது, புஸ்ஸி ஆனந்த் மற்றும் ஜான் ஆரோக்கியசாமியோடு கலந்து பேசுங்கள். என்ன ஆலோசிப்பீர்களோ, விவாதிப்பீர்களோ எனக்குத் தெரியாது. ஆனா, தமிழகத்தில் த.வெ.க. தலைமையில் ஆட்சி அமையவேண்டும் என்பதை அழுத்தமாகச் சொல்லிவிட்டார் விஜய்.
ஏற்கனவே ஆதவ் அர்ஜுனாவின் வாய்ஸ் ஆஃப் காமன் நிறுவனம் எடுத்த சர்வே ரிசல்ட்டு கள், த.வெ.க.விற்கு குறிப்பிட்ட அளவிலான வாக்கு சதவீதம் இருப்பதாகத்தான் சொன்னது. அதனால், தனித்துப் போட்டியிட்டால் ஆட்சியைப் பிடிப்பது வெறும் கனவுதான் என்பது ஆதவ் அர்ஜுனாவுக்கு தெரிய வந்தது. இதனையடுத்து, டெல்லிக்குப் பறந்த ஆதவ், பிரசாந்த் கிஷோரை சந்தித்தார். அங்கு நடந்த ஆலோசனையில்தான், விஜய்யை சந்திக்கும் யோசனை முடிவானது.
உடனே அங்கிருந்தபடியே விஜய்யை தொடர்புகொண்ட ஆதவ், பிரசாந்த் கிஷோர் சந்திக்க விரும்புவதைச் சொல்ல, சந்திப்புக்கு தேதி குறிக்கப்பட்டது. அதன் படி ஆதவ் அர்ஜுனாவுடன் விஜய்யை சந்தித்தார் பிரசாந்த் கிஷோர். அந்த சந்திப்பில்தான் நிறைய விசயங்களை விஜய் யிடம் பகிர்ந்து கொண்டிருக்கிறார் பிரசாந்த் கிஷோர்.
குறிப்பாக, தி.மு.க.வைத்தான் உங்களின் பிரதான அரசியல் எதிரியாக தெரிவித்துவிட்டீர்கள். அதனால், தி.மு.க.வை வீழ்த்துவதுதான் உங்கள் நோக்கம் எனில், 2026-ல் ஆட்சி அதிகாரத்தில் நீங்கள் இருக்கவேண்டும். இதற்கு மாறாக, தி.மு.க. தனது ஆட்சியை தக்கவைத்துக்கொண் டால், உங்களின் அரசியல் எதிர்காலம் அவ்வ ளவுதான். உங்கள் கட்சியை அழித்தொழித்து விடுவார்கள். கட்சி ஆரம்பித்து முதல் தேர்தலை எதிர்கொண்ட மாத்திரத்திலேயே உங்கள் கட்சி யை காணாமல் செய்து விடுகிற வாய்ப்பு அதிகம்.
அதனால் உங்களுக்குத் தேவை பிரமாண்டமான வெற்றி; ஆட்சி அதிகாரம்! ஆனால், நீங்கள் போடும் வியூகத்தின்படி இயங்கினால், அது சாத்தியமில்லை. அதாவது, நீங்கள் திட்டமிடுவதன்படி, த.வெ.க. தனித்துப் போட்டியிட்டால் ஆட்சியைப் பிடிக்க முடியாது. தனித்துப் போட்டியிடுவதன் மூலம், குறிப்பிட்டுச் சொல்லத்தக்க வகையில் வாக்குகள் உங்கள் கட்சிக்கு கிடைக்கும். நீங்கள் போட்டியிட்டால் நீங்கள் ஜெயிப்பீர்கள். ஆனால், ஆட்சியைப் பிடிக்குமளவுக்கு உங்கள் கட்சிக்கு வெற்றி கிடைக்குமா எனில் அதற்கு உத்தரவாதம் கிடையாது.
தி.மு.க. தலைமையும், நீங்கள் தனித்துப் போட்டியிட வேண்டும்; அ.தி.மு.க. தலைமை யில் வலிமையான கூட்டணி அமையக்கூடாது; அ.தி.மு.க. -பா.ஜ.க. இணையக்கூடாது; தி.மு.க. கூட்டணி உடையக் கூடாது என்றெல்லாம் வியூகம் வகுக்கிறது. சுருக்கமாகச் சொல்ல ணும்னா, தி.மு.க. தலைமையில் மட்டுமே வலிமையான கூட்டணி இருக்க வேண்டும்; மற்ற கட்சிகள் தனித்துப் போட்டியிட வேண்டும் என்பது தான் தி.மு.க.வின் தேர்தல் வியூகம். அவர்களின் வியூகத்துக்குள் நீங்கள் சிக்கிவிடக்கூடாது.
த.வெ.க. தனித்துப் போட்டியிடுவதால் தேவை யான வெற்றி கிடைக் காது என்பதற்கு சில அடிப்படைக் கார ணங்கள் இருக்கின்றன. உங்களைத் தவிர, மாவட்ட அளவில், மாநில அளவில் த.வெ.க.வில் யார் மக்களுக்கு தெரிந்தவர்களாக இருக் கிறார்கள்? பிரபலங்களாக யார் இருக்கிறார்கள்? ஒருத்தரைக்கூட சொல்ல முடியவில்லை. உங்களின் சினிமா புகழ், இமேஜ் மட்டுமே இன் றைய தேர்தல் அரசியலில் வெற்றியைத் தந்துவிடாது. அதனால், தி.மு.க.வின் பொறிக்குள் சிக்கிக் கொள்ளாதீர்கள்.
கூட்டணி அரசியலில்தான் உங்களால் ஜெயிக்க முடியும். த.வெ.க. தலைமையில் கூட்டணி என நீங்கள் சொல்லி வருகிறீர்கள். உங்கள் தலைமை யை ஏற்றுக்கொண்டு, கணிசமான வோட் பேங்க் வைத்துள்ள மற்றும் அரசியலில் வெற்றிதோல்விகளை பார்த்த அனுபவம் வாய்ந்த கட்சிகள் உங்களை அணுகினால் அவர்களின் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும். அந்த எதிர்பார்ப்புகளை உங்களால் நிறைவேற்றுவது கடினம்.
அதனால், தி.மு.க.வுக்கு நேரடி எதிரியான பிரதான கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொண்டால், அந்த கூட்டணி வலிமையடையும். நீங்கள் நினைக்கும் மாற்றம் தமிழகத்தில் வரும். தி.மு.க.வை தோற்கடித்து ஆட்சி அதிகாரத்திற்குள் நீங்கள் நுழைந்தபிறகு உங்களின் எதிர்கால அரசியலை நீங்கள் திட்டமிடலாம். அதுதான் இன்றைய களச்சூழலில், உங்களுக்கு நன்மையை கொடுக்கும் என விவரித்திருக்கிறார் பிரசாந்த் கிஷோர்.
அ.தி.மு.க.வுடன் விஜய் கூட்டணி வைக்க வேண்டும், அந்த கூட்டணிக்குள் விடுதலை சிறுத்தைகளை அழைத்துச் செல்ல வேண்டும் என்பதுதான் ஆதவ்வின் அரசியல் திட்டம். அவரைப் பொறுத்தவரை தி.மு.க.வை தோற்கடிக்க வேண்டும். இதனை அவர் விஜய்யிடம் சொன்னால், விஜய் ஏற்கமாட்டார். அதனால், தனது வாய்ஸை பிரசாந்த் கிஷோர் மூலம் விஜய்யிடம் சொல்ல வைத்திருக்கிறார் ஆதவ் அர்ஜுனா.
ஆனால், இதையெல்லாம் மனதில் வாங்கிக்கொண்டாரே தவிர, அ.தி.மு.க.வுட னான கூட்டணிக்கு விஜய் ஓ.கே. சொல்லவில்லை. அதேபோல, த.வெ.க.வின் தேர்தல் வியூக வகுப்பாளராக பிரசாந்த் கிஷோரை நியமிக்க வைக்கும் ஒரு முயற்சியும் இந்த சந்திப்பில் நடந்திருக்கிறது. இதற்கு உடனடியாக விஜய் ஒப்புக் கொள்ளவில்லை.
அதேசமயம், தேர்தல் அரசியல் குறித்து, தனது தேர்தல் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமியை சந்தித்து விவாதியுங்கள் என விஜய் சொல்ல, அதன்படி ஜான் ஆரோக்கியசாமியை சந்தித்தும் விவாதித்தார்'' பிரசாந்த் கிஷோர்”என்று சந்திப்பு ரக சியங்களை சுட்டிக்காட்டி னார்கள்.
மேலும் நாம் விசாரித்த போது, த.வெ.க. தலைமையில் கூட்டணி என்பதில் இப்போது வரை உறுதியாக இருக்கிறார் விஜய். அவரை முதலமைச்சர் கேண்டிடேட்டாக ஏற்கும் கட்சிகளுடன்தான் கூட்டணி வைக்க வும் முடிவு செய்திருக்கிறார். அதுமட்டுமல்ல, தமிழகத்தின் தேர்தல் களம் எப்போதும் இல்லாத அளவுக்கு ஒரு மௌனத்தில் இருக்கிறது. மக்களின் மௌனம் என்பது ஆளும் கட்சி, ஆண்ட கட்சிகளுக்கு எதிராக இருக்கும். அதுதான் எங்களுக்குப் பலம். தனித்துப்போட்டியிட்டாலும் தி.மு.க.வை வீழ்த்தும் சக்தி விஜய்க்கு இருக்கிறது. நிறைய தொடர்புகளிடமிருந்து அமைதியாக பல விபரங்களை பெற்றுவருகிறார் விஜய்.
"அரசியல் முடிவுகளை எடுக்க இன்னும் காலம் இருக்கிறது. அ.தி.மு.க. கூட்டணிக்குள் விஜய்யை கொண்டு செல்லும் எந்த திட்டமும் பலிக்காது. தனித்து இயங்கவே விரும்புகிறார் விஜய்'’என்கின்றனர் புஸ்ஸி ஆனந்தின் ஆதரவாளர்களாக இருக்கும் த.வெ.க. மாவட்ட செயலாளர்கள்.