இலங்கையில் உள்நாட்டு யுத்தம் 2009, மே 21-ந் தேதி முடிவுக்கு வந்தது. அதற்கு முன்னதாக ஆயுதங்களை மௌனிப்பதாக அறிவித்திருந்தது விடுதலைப் புலிகள் இயக்கம். பிரபாகரன் கொல்லப்பட்டதாக ஓர் உடலைக் காட்டியது இலங்கை ராணுவம். ஆனால், அது பிரபாகர னின் உடல் இல்லை; அவர் தப்பித்துச் சென்று விட்டார் என்கிற தகவலும் அப்போது சொல் லப்பட்டது. இதனால், பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா? இல்லையா? என்கிற விவாதங்கள் சர்வதேச அளவில் எதிரொலித்தபடி இருந்தன.
ஓரிரு வருடங்கள் இப்படிப்பட்ட விவா தங்கள் நடந்தநிலையில், அவர் இருக்கவேண் டும் என மனம் விரும்பினாலும், எதார்த்தத்தைப் புரிந்துகொண்டு அந்த விவாதங்களுக்கு முற்றுப் புள்ளி வைத்தனர். இதனால், அவர் இருக் கிறாரா? இல்லையா? என்கிற ஹேஸ்யங்களும் ஓய்ந்தன.
இப்படிப்பட்ட நிலையில் கிட்டத்தட்ட 13 வருடங்களுக்குப் பிறகு, "பிரபாகரன் உயிருடன் இருக்கிறார். சரியான நேரத்தில் வெளிவருவார். பிரபாகரனின் குடும்பத்தின் அனுமதியுடன் இதனைச் சொல்கிறேன்''’என்று உலகத் தமிழ்ப் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் வீசி யிருக்கும் குண்டு, சர்வதேச அளவில் பலத்த அதிர்வுகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.
தமிழ்த் தேசியத்தில் மதிக்கக்கூடிய ஒரு தலைவராக பழ.நெடுமாறன் இருப்பதால், அவரது அறிவிப்பை பலராலும் புறக்கணிக்க முடியவில்லை. இருப்பினும் ஆதரவும் எதிர்ப்பும் இந்த அறிவிப்புக்கு எதிர்வினையாற் றிக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக, கோவை ராமகிருஷ்ணன், வழக்கறிஞர் கே.எஸ்.ராதா கிருஷ்ணன், திருச்சி வேலுச்சாமி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் உள்ளிட்ட பலரும் நெடுமாறனின் செய்தியை வரவேற்கிறார்கள்.
அதேசமயம், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், "கடைசிவரை யுத்தக் களத்தில் நின்றவர் பிரபாகரன். போராளி களை இழந்துவிட்டு அவர் மட்டும் தப்பித்துச் செல்ல விரும்பியிருக்கமாட்டார். அவரே வெளிப்படையாக தோன்றினால் மட்டுமே நம்ப முடியும். 14 வருடங்களுக்குப் பிறகு இந்த பிரச்சனை திடீரென ஏன் வருகிறது? இதை ஆராய்ந்து பார்க்க வேண்டும்''’என்று நெடுமாறனின் அறிவிப்பை மறுக்கும் விதத்தில் பேசுகிறார். வைகோ, கொளத்தூர் மணி போன்றவர்கள் பட்டும்படாமலும் இந்த விசயத்தை அணுகி யுள்ளனர். இலங்கையிலுள்ள ஈழத் தமிழர்கள் மற்றும் புலம்பெயர்ந்த நாடுகளிலுள்ள ஈழத் தமிழர்கள் மத்தியிலும், இந்த விசயம் இருவேறு கருத்துக்களை உருவாக்கியபடி இருக்கிறது.
இதுகுறித்து பிரபாகரனின் நண்பரான வழக்கறிஞர் கே.எஸ். ராதாகிருஷ்ணனிடம் பேசிய போது, "சகோதரர் பிரபாகரன் இருக் கிறார். ஆதாரப்பூர்வமான தகவல்கள் அவரது குடும்பத்திலிருந்தே வந்துள்ளது. இது எனக்கும் நன்றாகத் தெரியும். பழ.நெடுமாறன் சொல்வது உண்மையானது. மெய்யானது. நிச்சயமாக ஒரு நாள் பிரபாகரன் வருவார். இதில் மாற்றுக் கருத்து கிடையாது. இப்போது, விடுதலைப் புலிகள் இயக்கம் மீது தடை இருக்கிறது. சட்டப்பூர்வமாக அது நீக்கப்பட்டதற்கு பிறகுதான் அவர் வருவார். போர் உச்சத்தில் இருந்தபோது, நீங்கள் வெளியேறுங்கள் என அவரிடம் வலியுறுத்தப்பட்டது. ஆனால், அதனை ஏற்க மறுத்து போர் முடியும் வரை களத்தில் இருந்தவர் பிரபாகரன். போர் முடிந்ததும் தான் அவர் வெளியேறினார். தப்பித்துப்போனார் என்கிற பேச்சுக்கே இடமில்லை.
உலகமே போற்றும் விடு தலைப் போராட்ட இயக்கத் தை வழிநடத்திய பிரபாகரன் இறந்திருந்தால் 3 விசயம் கட் டாயம் நடந்திருக்க வேண்டும். அதாவது, சந்தேகத்திற்கிட மின்றி அவரது இறப்புச் சான் றிதழ் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், கொடுக்கப் படவில்லை. அடுத்து அவ ருடைய டி.என்.ஏ. டெஸ்டின் அறிக்கையை வெளியிட்டி ருக்க வேண்டும். வெளியிடப் படவில்லை. மூன்றாவது, போர் முடிவுக்கு வந்த பிறகு ஒரு முழுமையான வெள்ளை யறிக்கையை இலங்கை அரசு தனது நாடாளுமன்றத்தில் வெளியிட்டிருக்க வேண்டும்.
ஆனால், மகிந்த ராஜ பக்சே செய்தாரா? செய்யவில்லை. பயங்கரவாதத்தை அழித்துவிட்டோம் என்று பேசினாரே தவிர, போரில் நடந்தது என்ன? போர் முடிவுக்கு வந்தது எப்படி? அதன் விளைவு கள் என்ன? என்பதையெல்லாம் நாட்டு மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் வெள்ளை அறிக்கையை அவர் தாக்கல் செய்திருக்க வேண்டும். அதை செய்வதில் அவருக்கு என்ன பிரச்சனை? ஆனாலும், வெள் ளையறிக்கை வெளியிடப்படவில்லை.
பிரபாகரன் இறந்திருந்தால் அந்த வெள்ளையறிக்கை வெளியிடப்பட்டிருக் கும். அப்படி ஒரு சம்பவம் நடக்காததால் தான் வெளியிடப்படவில்லை. ஆக, எங்களைப் பொறுத்தவரை, அவர் உயிருடன் இருக்கிறார் என்கிற நம்பகத்தன்மையுடன் கூடிய தகவல்கள் இப்போது கிடைக் கிறது''’என்கிறார் மிக அழுத்தமாக. பொதுவாக, புலிகள் இயக்கத் தின் அறிவிப்புகள் பொதுவெளியில் மூன்றாம் தரப்பினரின் வழியாக அறிவிக்கப்பட்டதில்லை. இயக்கத்தின் தலைமைப் பொறுப்பிலிருப்பவர்கள், குறிப்பாக அரசியல் பிரிவைச் சார்ந்தவர்கள் மூலமாகத்தான் அறிவிப்புகள் வெளியிடப்பட்ட துண்டு. புலிகள் இயக்கம் தங்களின் விடுதலைப் போராட்டத்தை மௌனித்துவிட்ட கடந்த காலங்களில் கூட மூன்றாம் தரப்பினரை அவர்கள் அணுகியதில்லை.
அப்படிப்பட்ட நிலைப்பாட்டிலுள்ள இன விடுதலைக் கான ஒரு இயக்கம், தங்கள் இயக்கத்தின் தேசியத் தலைவரான பிரபாகரனைப் பற்றிய மிகமிக முக்கியமான செய்தியை இயக்கத்தின் சார்பில் அறிவிக்காமல் மூன்றாம் தரப்பினரின் வழியாக அறிவிப்பார்களா? அப்படி அறிவிக்க வேண்டிய தேவை எதற்காக வந்தது? என்கிற கேள்விகள் தமிழீழத்திலும் வெளிநாடுகளிலும் எதிரொலிக்கவே செய்கின்றன.
ஈழ விடுதலை ஆதரவாளரும் ஆய்வாளருமான சுவிட்ஸர்லாந்தில் இருக்கும் முனைவர் விஜய் அசோகனிடம் நாம் பேசியபோது,”"தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் குறித்து, புலம் பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் இரண்டு கருத்துக்கள் உண்டு. மாபெரும் போராட்டத்தை முன்னின்று நடத்திய தலைவருக்கு முழுமையான நினைவஞ்சலி செலுத்தத் தவறியிருக்கிறோம் என்பது ஒரு சாராரின் மனவலி.
தலைவரின் இருப்போ, மரணமோ உறுதியாகாத ஒன்று என்பதும், அதனை அறிவித்துக் குழப்பத் தேவையில்லை என்பதும், ஒருவேளை மரணித்திருந்தாலும் அவர் இல்லை என அறிவிப் பது தமிழீழ விடுதலைக்கான கனவையும் இல்லாது செய்து விடுமோ என்ற அச்சமும் இரண்டாம் தரப்பினரின் கருத்தாக இருக்கிறது. இதற்கு மாறாக, தலைவர் வரட்டும்; பார்த்துக் கொள்ளலாம் என புலிகளின் முதலீடுகளையும், நிறுவனங்களை யும் ஆண்டு அனுபவித்துவரும் கூட்டமும் இருக்கவே செய்கிறது.
முள்ளிவாய்க்கால் இனவழிப்புப் போர் முடிந்து 13 வருடங்களான பின்பும், இனவழிப்புக்கு எதிரான நீதி கிடைக்க வோ, அரசியல் உரிமைகளின் குறைந்த பட்ச நியாயமான தீர்வுக்கோ வழியில் லாமல், ஈழத்தமிழர்கள் தவித்து வருகிற சூழலில், தமிழ்த்தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட சில அமைப்புகள் 13-வது சட்டத்திருத்தத்தை முன்வைத்தாவது தீர்வு கிடைக்குமெனில் இந்திய ஒன்றிய அரசு கட்டாயம் ஒத்துழைக்கும் என்கிற எதிர்பார்ப்பில் இருக்கின்றன.
ஆனால், எவ்விதத் தீர்வுக்கும் சர்வதேச நீதி விசாரணை மற்றும் சட்டங்களுக்குக் கட்டுப்படாத சிங்கள அரசு, இந்தியப் பெருங்கடலின் சர்வதேச முக்கியத்துவ அரசியலுக்கு தங்களின் தேவைக்கேற்ப சீனா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளை பயன்படுத்திக் கொண்டு ஐ.நா.விலும் தனது நயவஞ்சக அரசியல் ஆட்டத்தினை ஆடிக்கொண்டிருக்கிறது. இந்தியப் பெருங்கட லின் வணிகத்தைக் கணக்கிட்டே தமிழீழ தேசியத்தின் வலிமையை முன்னிறுத்தி சர்வ தேச நாடுகளும் கள்ள மௌனம் சாதிக்கின்றன. 13-வது சட்டத்திருத்தத்தை அரசியல் தீர்வாக முன்மொழிந்து வெற்றி பெற்றுவிட்டால் சர்வதேச நாடுகளின் ஆட்டம் முடிவுக்கு வந்து விடும். ஆனால், ஈழத் தமிழர்கள் தோற்றுப் போவார்கள். அதேசமயம், இனஅழிப்புக்கான நீதியைப் பெறும்வகையில் தமிழீழத்தை அங்கீகரித்தால் ஈழம் கிடைத்துவிடும். ஆனால், இந்தியா உள்ளிட்ட அனைவரும் தோற்றுப் போவார்கள். அதனால்தான் புத்தபிக்குகளைப் போராட வைக்கிறது சிங்கள அரசு.
ஆக, 13-வது சட்டத்திருத்தத்தை நிறைவேற்றாமல் சிங்களத்தைக் காப்பாற்றவும், ஈழத் தமிழர்களுக்கான நீதியை பெற்றுத் தராமல் சர்வதேச சமூகத்தை பாதுகாக்கவும், இந்தியப் பெருங்கடல் அரசியல் தன் கையைவிட்டுப் போகாமலிருக்கவும் துடிக்கிற இந்திய ஒன்றிய அரசுதான், பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்; தமிழீழ விடுதலைக்கு மீண்டும் உயிர் கொடுப்பார் என்கிற அறிவிப்பின் பின்னணியில் இருக்கிறது. இந்த புவிசார் அரசியலைப் புரிந்துகொண்டால் பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா? என்பதில் தெளிவு கிடைத்துவிடும்''’என்கிறார் உறுதியாக.
மேலும், "விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தடையை நீட்டிக் கச் செய்யவும், புலிகளைக் காட்டி தமிழ்நாடு அரசுக்கு எதிரான அரசியலைக் கட்டமைக்கவும், அகதிகளுக்கு குடியுரிமை வழங்காமல் இருக்கவும், ஈழத்தமிழர்களுக்கு தீர்வு கிடைக்காமல் செய்யவும், தமிழர்கள் மீண்டும் போராடாமல் பிரபாகரனின் வருகைக்காகக் காத்திருக்க வைக்கவும் என்கிற இந்திய அரசின் மாஸ்டர் ப்ளானின் ஒரு பகுதியாகவே பிரபாகரன் பற்றிய செய்தியை அவதானிக்க முடிகிறது'' என்கிறார்கள் புவிசார் அரசியலாய்வாளர் கள்.
இதற்கிடையே, பிரபாகர னின் மனைவி மதிவதனியும் மகள் துவாரகாவும் ஜெர்மனி யில் இருப்பதாகவும், துவாரகா வின் தலைமையில் விடுதலைப் போராட்டம் விரைவில் துவங்குமென்றும் ஒரு தகவல் புலம்பெயர்ந்த தமிழர்கள் தரப்பிலிருந்து பரப்பப்பட்டு வருகிறது.
மொத்தத்தில்... புலிகள் இயக்கத்தையும், பிரபாகரன் பெயரையும் தங்களின் அரசிய லுக்காக கடந்த 40 ஆண்டுகால மாகப் பயன்படுத்தியது போலவே இப்போதும் பயன்படுத்துகிறது இந்திய உளவுத்துறை!
-இரா.இளையசெல்வன்