தமிழக உயர் கல்வித்துறையை ஆர்.எஸ். எஸ்.சின் கட்டுப்பாட்டில் கொண்டுவரும் முயற்சிகளை கடந்த 4 ஆண்டுகளாக ரகசியமாக எடுத்து வருகிறது பா.ஜ.க. அதன் ஒரு பகுதியாக, தமிழக பல்கலைக்கழகங்கள் மீது அதிக ஆதிக்கத்தைச் செலுத்துகிறார் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்.
இந்த நிலையில், சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் குழந்தைவேலுவின் பணிக்காலம் முடிந்து, பிரிவு உபசார விழாவும் நடத்தப்பட்ட நிலையில், திடீரென அவருக்கு பணி நீட்டிப்பு அளிக்கப்பட்டது. திருச்சி பாரதிதாசன் மணிசங்கருக்கும் பதவி நீட்டிப்பு அளித்துள்ளது ராஜ்பவன். இது பற்றிய கல்வியாளர்களின் எதிர்வினைகளை "நக்கீரன்' ஏற்கனவே பதிவு செய்திருந்தது.
அரசியல் தளத்திலும் எதிர்ப்புகளுக்குப் பஞ்சமில்லை. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்படி உயர்கல்வித்துறை முன்னாள் அமைச்சர் பொன்முடி. இந்தப் பணி நீட்டிப்பை கண்டித்ததுடன், "பணி நீட்டிப்பு உத்தரவை ஆளுநர் திரும்பப் பெற வேண்டும்' என்றும் தெரிவித்திருந்தார். பாரதிதாசன் பல்கலைக்கழக பேராசிரியர்கள் தரப்பில் நாம் விசாரித்த போது, ""பல்கலைக்கழக நிர்வாக விவகாரங்களில் ஆளுநர் மாளிகைக்கும் உயர்கல்வித்துறைக்கும் சில வருடங்களாகவே மோதல்கள் வெடித்தபடி இருக்கிறது. பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் மணிசங்கரின் பதவிகாலம் முடிவடைந்ததால் புதிய துணைவேந்தர் நியமிக்கப்படும் வரை அபூர்வா ஐ.ஏ.எஸ். தலைமையில் பல்கலைக்கழகப் பொறுப்புக்குழு நியமிக்கப்பட்டது. அப்படியிருக்கும் நிலையில்,மறு உத்தரவு வரும் வரை மணிசங்கருக்கு பணி நீட்டிப்பு வழங்குவதாக திடீரென ஆளுநர் மாளிகை உத்தரவிட்டதில் எல்லோருக்கும் அதிர்ச்சி''‘என்கிறார்கள்.
மேலும் விசாரித்தபோது, ""தமிழக உயர் கல்வித் துறையில், அழகப்பா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் ஒருவரின் தலையீடுகள் இல்லாமல் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர், பதிவாளர் நியமனங்களே நடக்காது. நியமனங் களுக்கான எந்த ஒரு சர்ச் கமிட்டி அமைத்தாலும் அதில் இவர் இருப்பார் அல்லது இவர் சுட்டிக்காட்டும் நபர் ஒருவர் இருப்பார். பதவிக்கு வரும் துணைவேந்தர்கள், இவரின் சொல்லுக்கு கட்டுப்பட்டு நடந்து கொள்வார்கள்.
அந்த வகையில் பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தராக மணிசங்கரை கொண்டு வந்ததே இவர்தான். பல்கலையின் சிண்டிகேட் உறுப் பினராக நித்யா என்கிற பெண்மணியை நியமிக்கவும் செய்தார். நித்யாவின் கணவரான கோபிநாத், தன்னை ஆர்.எஸ்.எஸ்.காரர் என சொல்லிக் கொண்டும் துணைவேந்தர் மணிசங்கரின் ஆசியுடனும் பல்கலை பணி நியமனங்களில் புகுந்து விளையாடுகிறார்.
அண்மையில், பல்கலைக்கழகத்தின் ஆசிரியர் பணியிடங்களுக்கான நியமனங்களுக்கு அறிவிப்பு செய்யப்பட்டிருந்தது. நேர்முகத் தேர்வின் மூலம் நிரப்பப்படவிருந்த இந்த பணியிடங்களில் நியமனம் பெற்று தருகிறேன் என 35, 40, 45 எல் என மூன்று கேட்டகிரியில் 30 பேரிடம் கோபிநாத் தரப்பில் வசூலிக்கப்பட்டிருக்கிறதாம். 30 பேரிடமும் உத்தரவாதம் அளித்த கோபிநாத், ஒரு அக்கவுண்ட் நெம்பர் தருகிறேன். அதில் போடுங்கள். அந்த அக்கவுண்ட் நெம்பர் கூட என்னுடையதில்லை. ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளுக்கு தொடர்புடையது எனத் தெரிவித்தாராம். அவருடைய வார்த்தைகளில் ஏற்பட்ட நம்பிக்கையால், அக்கவுண்ட்டில் போட விரும்பாத பலரும் வேறு ரூட்டுகளில் அவரிடமே பணத்தை கொடுத்திருக்கிறார்கள். பணி நியமனம் நடப்பதற்கு முன்பே மணிசங்கரின் பதவி காலம் முடிந்ததால், பணம் கொடுத்தவர்கள் கோபிநாத்தை நெருக்கியுள்ளனர்.
இந்த விவகாரம் உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகனுக்கும், துறையின் செயலாளர் அபூர்வா ஐ.ஏ.எஸ்.க்கும் தெரியப்படுத்தப்பட்டது. உடனே இதில் அவர்கள் அக்கறைக்காட்ட, அபூர்வா தலைமையில் பல்கலைக்கழக பொறுப்புக்குழு அமைக்கப்பட்டது. இந்த நிலையில், தனது மனைவியின் உதவியுடன் பல்கலைக்கழக கவர்னிங் கவுன்சில் மூலம் பணி நியமனங்களை நடத்த முயற்சித்தார் கோபிநாத். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அபூர்வா, ""பணி நியமனங்கள் நேர்மையாக நடக்க வேண்டும்; இதில் எந்த தவறுக்கும் இடம் கொடுக்கமாட்டேன்'' என கோபம் காட்டினார். இதனால், கோபிநாத்தின் புறவழி முயற்சிகள் எதுவும் நடக்கவில்லை.
அதன்பிறகு சில பல திட்டங்களின் அடிப்படையில் அபூர்வாவுக்கு எதிராக கோர்ட்டுக்கு சிலர் செல்ல, கோர்ட்டும் அபூர்வாவுக்கு குட்டு வைத்தது. இதனையடுத்தே, மணிசங்கரின் பதவியை நீட்டித்திருக்கிறது கவர்னர் மாளிகை. அங்கிருந்து மறு உத்தரவு வருவதற்குள் தங்களின் காரியங்களை சாதித்துக்கொள்ள திட்டமிட்டுள்ளது மணிசங்கர்-கோபிநாத் கூட்டணி''‘என்று பின்னணிகளைச் சுட்டிக்காட்டுகின்றனர் பேராசிரியர்கள்.
இதுகுறித்து கருத்தறிய துணைவேந்தர் மணிசங்கரைத் தொடர்பு கொண்டபோது அவர் நமது அழைப்பை ஏற்கவில்லை. நீண்ட முயற்சிக்குப் பிறகு பேசிய கோபிநாத், ""நான் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் சாதாரண இன்ஜினியர். அழகப்பா கல்லூரியில் பணியாற்றும் என் மனைவி, பாரதிதாசன் பல்கலைக்கழத்தின் சின்டிகேட்டில் மெம்பராக இருப்பதால் என்னைப் பற்றித் தவறான தகவல்களைப் பரப்புகிறார்கள். நான் ஒரு இந்து. ஆனால், ஆர்.எஸ்.எஸ் அல்ல. என் மீது சொல்லப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்''’என மறுத்தார்.
"நேர்மையான கல்வியாளர்களுக்கு துணைவேந்தர் பதவிகள் கிடைக்கும்வரை பல்கலைக்கழகங்களின் நிலை இப்படித்தான் இருக்கும்' என்கிறார்கள் நிலைமை அறிந்தவர்கள்.