தமிழக அமைச்சரவை மாற்றப்படவிருக்கிறது என கடந்த சில மாதங்களாகவே செய்திகள் கசிந்து வந்த நிலையில், மூன்று அமைச்சர் களின் இலாகாவில் சில மாற்றங்களை செய்திருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இந்த மாற்றம், உள்ளாட்சி தேர்தலுக்கு பிறகு நடக்கவிருக்கும் கேபினட் மாற்றத்திற்கு முன்னோட்டம் என்கிறார்க்ள் தி.மு.க.வினர்.
மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்று 8 மாதங்கள் கடந்திருக்கின்றன. அமைச்சரவை பட்டியல் வெளியிடப்பட்டபோதே, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இலாகா குறித்த வருத்தமும், சிலருக்கு ஒதுக்கப்பட்ட இலாகாக்கள் மீது முணுமுணுப்பும் சீனியர் அமைச்சர்கள் பலரிடமும் இருந்தன.
முதல்வரைப் பொறுத்தவரை, அனுபவமிக்க சீனியர்களும் வேகமாக செயல்படும் ஜூனியர்களும் கலந்த அமைச்சரவையாக இருக்க வேண்டும் என்பதில், தேர்தல் முடிவுகளுக்கு முன்பே கொடைக்கானலில் தங்கியிருந்த போது, ஆலோசித்து முடிவெடுத்திருந்தார். எனினும், சீனியர்களிடம் இருந்த அதிருப்தியையும் வருத்தத்தை யும் அறிந்த ஸ்டாலின், மூன்று மாதம் போகட்டும் ; அமைச்சரவையை மாற்றியமைக்கும்போது எல்லாம் சரியாகும் என அவர்களை சமாதானப்படுத்தினார்.
பொதுவான அளவில் ஆட்சிக்கு நல்ல பெயர் இருப்பதாலும், கட்சியைத் தாண்டி பொதுமக்க ளிடம் வரவேற்பு இருப்பதாலும், 8 மாதங்களாகியும் கேபினட் மாற்றம் நடக்கவில்லை. இதனால் சீனியர்களிடம் மீண்டும் அதிருப்திகள் தலைதூக் கின. உள்ளாட்சி தேர்தல் நடந்து முடியட்டும் என்பதற்காக அவர்கள் காத்திருக்கிறார்கள். தேர்தல் முடிந்ததும் இதுகுறித்து ஸ்டாலினிடம் அவர்களே தெரிவிப்பார்கள் என தெரிகிறது.
இந்த நிலையில்தான் மூன்று அமைச்சர் களின் இலாகாக்களில் சில மாற்றங்களை செய்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். அதன்படி, தொழில்த்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு விடம் இருந்து வந்த சர்க்கரை ஆலைகளை வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்திடமும், போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பனிடம் இருந்த விமானப் போக்குவரத்தை தங்கம் தென்னரசுவிடமும், சிறுபான்மை நலத்துறை அமைச்சர் மஸ்தானிடம் இருந்த அயலக பணியாளர் நலனை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி. கணேசனிடமும் மாற்றி ஒதுக்கீடு செய் திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.
இந்த இலாகா மாற்றங்கள் குறித்து தலைமைச் செயலக வட்டாரங்களில் விசாரித்தபோது,” சர்க்கரை ஆலைகள் வேளாண்மையோடு சம்பந்தப்பட்டவை. அதனால் அவை வேளாண்மைத் துறையோடு இணைந்திருக்க வேண்டும். ஆனால், ஆலைகள் என்பதால் அதனை தொழில் துறையோடு இணைத்தே வந்திருக்கிறது தமிழக அரசு. இதனால் சர்க்கரை ஆலைகளோடு தங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை வேளாண்மைத்துறை அமைச்சரிடமும், தொழில்துறை அமைச்சரிடமும் கரும்பு விவசாயிகள் முறையிட வேண்டியிருந்தது. ஆனால், இரண்டு துறைகளின் அதிகாரிகளும் சொல்லும் காரணங்கள் பிரச்சனைகளை தீர்ப்பதாக இருக்கவில்லை. குறிப்பாக, தனியார் சர்க்கரை ஆலைகள் கரும்பு விவசாயிகளுக்கு 1,218 கோடி ரூபாய்க்கும் அதிகமாக பாக்கி வைத்திருக்கின்றன.
ஏற்கனவே கரும்பு விவசாயம் செய்வதற்கான உற்பத்திச் செலவு பல மடங்கு அதிகரித்திருப்ப தாலும், கரும்பு விவசாயிகள் எதிர்பார்க்கும் ஒரு டன் கரும்புக்கான ஆதார விலையை உயர்த்தித் தர தமிழக அரசு மறுப்பதாலும் கரும்பு விவசாயி கள் நொந்துபோயிருக்கும் சூழலில், தனியார் சர்க்கரை ஆலைகள் கரும்பு விவசாயிகளுக்கு தரவேண்டிய பாக்கி தொகையையும் தராமல் இழுத்தடிப்பதால் அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகவே இருக்கிறது.
சர்க்கரை ஆலை கள் பாக்கி வைத் திருப்பதை வேளாண் மைத்துறை அமைச்ச ரிடம் கரும்பு விவசாயி கள் முறையிடுகிற போது, "சர்க்கரை ஆலைகளுக்கு நான் அமைச்சர் இல்லையே! தொழில்துறை அமைச் சரை பாருங்கள்'' என சொல்லிவிடுகிறார். தொழில்துறை அமைச்சரிடம் முறையிடுகிறபோது, "கரும்பு விவசாயிகளின் பிரச்சினை என்பதால் வேளாண்மைதுறை அமைச்சர் இதில் தலையிட்டால்தான் பிரச்சினை தீர்க்கப்படும்'' என பந்தை வேளாண்மைத் துறைக்கு தள்ளி விட்டுவிடுகிறார். இப்படித்தான் கரும்பு விவசாயிகள் முந்தைய அரசாங்கத்தால் பந்தாடப்பட்டனர்.
இத்தகைய பிரச்சனைகள் தற்போதைய தி.மு.க. ஆட்சியிலும் வரத்துவங்கிய நிலையில் தான், வேளாண் துறை அதிகாரிகளையும் தொழில் துறை அதிகாரிகளையும் சந்தித்து கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் முறையிட்டனர். அப்போது, ‘"கரும்பு விவசாயத்தை ஆதார சுருதியாக வைத்துதான் சர்க்கரை ஆலைகள் இயங்குகின்றன. இதனை தொழில் துறை கையாள்வது பிரச்சனைகளை தீர்க்க உதவாது. கரும்பு விவசாயிகளின் பிரச்சனைகளை கவனிக்கவும் தொழில் துறைக்கு நேரம் இருக்காது. அதனால் வேளாண்மைத்துறையோடு இணைப்பது தான் பிரச்சனைகளை தீர்க்க உதவும்'' என்று வேளாண் அதிகாரிகளிடம் தங்களின் யோசனை களை கரும்பு விவசாயிகள் சொல்லியிருக்கிறார்கள்.
சரியான யோசனையாக இருப்பதை உணர்ந்து இதனை அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றிருக்கிறார்கள் வேளாண் அதிகாரிகள். அரசின் உயரதிகாரிகளும் முதல்வர் ஸ்டாலினிடம் இது குறித்து விவாதிக்க, அதனை ஆமோதித்த ஸ்டாலின், இது போன்ற பிரச்சனைகள் வேறு துறைகளில் இருக்கிறதா? என்றும் ஆராய்ந்தார். அப்போதுதான் அயலக பணியாளர்கள் நலன் துறை, சிறுபான்மை நலத்துறையோடு இருப்பதையும், தொழில் துறையோடு இருக்க வேண்டிய விமானப் போக்குவரத்து, போக்குவரத்து துறையோடு இருப்பதையும் உயரதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.
விமானப்போக்குவரத்து துறை ஒன்றிய அரசிடம் இருந்தாலும், அதன் உதான் திட்டத்தின் கீழ் இந்தியா முழுவதும் சிறு நகரங்களிலும் விமான நிலையங்களை உருவாக்க வேண்டும் என்பது பிரதமர் மோடியின் விருப்பம். இந்திய தொழில் துறையின் வளர்ச்சிக்காகவே புதிதாக விமான நிலையங்கள் உருவாக்குவது அவசியம் என மத்திய அரசு கருதியது.
அதன்படி 800-க்கும் அதிகமான விமான நிலையங்களை பல்வேறு மாநிலங்களில் உருவாக்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கடந்த ஆண்டு ஒப்புதல் அளித்திருந்தது. அதன்படி, அதற்கான பணிகள் நாடு முழுவதும் நடக்கத் துவங்கியுள்ளன. தமிழகத்திலும் புதிதாக 4 விமான நிலையங்கள் வரவிருக்கிறது. இதனை உருவாக்க, தமிழக தொழில்த்துறையோடு இணைந்துதான் ஒன்றிய அரசு முன்னெடுக்க வேண்டிய சூழல் இருக்கிறது. அதனால், போக்குவரத்து துறையோடு இணைந்த விமானப் போக்குவரத்தை ராஜகண்ணப்பனிட மிருந்து மாற்றி, தொழில் துறையோடு இணைக்கவும் தீர்மானிக்கப்பட்டது. ஏற்கனவே, ராஜ கண்ணப்பன் பல விவகாரங்களில் சிக்கலை ஏற்படுத்தி வைத்திருப்பதும் கூட அவரிடமிருந்து விமானப் போக்குவரத்தை பறிப்பதற்கு ஒரு காரணம்.
அதேபோலதான், அயலக பணியாளர்கள் நலனுக்கும் சிறுபான்மைத் துறைக்கும் பெரியளவில் தொடர்பு இல்லை. தொழிலாளர்கள் தொடர்பான அனைத்து பிரச்சனைகளையும் தொழிலாளர்கள் நலத்துறைதான் கவனிக்கிறது அதனால், அயலக பணியாளர்கள் நலன் தொடர்பான பிரச்சனைகளை தொழிலாளர் நலத்துறை கவனிப்பதுதான் சரியானதாக இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.
ஆக, இத்தகைய பின்னணி களில்தான் மூன்று அமைச் சர்களின் துறைகளிலும் மாற்றத்தை செய்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின் ‘’ என்று விவரிக்கிறது தலைமைச்செயலக அதிகாரிகள் தரப்பு.
போக்குவரத்துறை அதிகாரிகளோ,”சர்க்கரை ஆலைகளை வேளாண்மைத் துறையிடமும், அயலகப் பணியாளர்கள் நலத்துறையை தொழிலாளர் நலத்துறையிடமும் ஒப்படைத்திருப்பது சரி. ஆனால், விமானப் போக்குவரத்தை தொழில் துறையிடம் ஒப்படைத்திருப்பது தீர்வாகாது. விமானப் போக்குவரத்தை பொறுத்தவரை, விமான நிலையங்கள் உருவாக்கப்படும் போது அதற்கான நிலங்களை சர்வே எடுத்துத் தருவதும், தனியார் நிலங்களாக இருப்பின் அவர்களுக்கான இழப்பீடுகளைப் பெற்றுத்தருவதும்தான் தமிழக அரசின் பணி. பொதுவாக இத்தகைய பணிகளை தமிழக அரசின் வருவாய்த்துறைதான் கவனிக்கும். அந்த வகையில், விமானப் போக்குவரத்தை வருவாய்த்துறைக்குத்தான் மாற்றம் செய்திருக்க வேண்டும். மாறாக, தொழில் துறைக்கு மாற்றம் செய்யப்பட்டிருப்பதில் வேறு சில அரசியல் காரணங்கள் இருக்கலாம் ‘’ என்கிறார்கள்.
மூன்று அமைச்சர்களின் துறைகளில் மாற்றம் செய்த கையோடு தமிழக நீர்வளத்துறை மற்றும் கனிம வளத்துறை அமைச்சர் துரைமுருகனுக்கு சிலவற்றை ஒருங்கிணைத்து மாற்றித் தந்துள்ளார் ஸ்டாலின். அதாவது, தொழில் துறையோடு இணைந்திருந்த சுரங்கம் மற்றும் புவியியல் துறை இயக்குநரகம், சேலத்தில் இருக்கும் தமிழ்நாடு மேக்னசைட் நிறுவனம், தமிழ்நாடு கனிம வள நிறுவனம் ஆகியவற்றை ஒரே குடையின்கீழ் இயற்கை வளத் துறை என்பதாக ஒருங்கிணைக்கப் பட்டு துரைமுருக னிடம் கொடுக்கப் பட்டுள்ளது என் கிறார்கள் கோட் டை தரப்பினர்.