தமிழகத்தில் கடந்த சில தினங்களில் அடுத்தடுத்து பள்ளி மாணவிகளின் மீது ஆசிரியர்களாலும், பள்ளி நிர்வாகத்தினராலும் நிகழ்த்தப்பட்ட பாலியல் அத்துமீறல் சம்பவங்கள் மாநிலமெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டுவருகிறது. அந்தப் பள்ளிக்கு ஒரு கிலோமீட்டர் தொலைவிலுள்ள கிராமத்திலிருந்து 8-ஆம் வகுப்பு பயின்றுவந்த மாணவி திடீரென கடந்த ஒரு மாதகாலமாக பள்ளிக்கு வரவில்லை. இதுகுறித்து அந்தப் பள்ளியின் தலைமையாசிரியர், எதற்காக அந்த மாணவி பள்ளி வரவில்லை என்று சக மாணவிகளிடம் விசாரித்தார். அவர்களிடம் சரியான பதில் கிடைக் காததால், தலைமையாசிரியர் உடனே அந்த மாணவியைத் தேடி அவரது வீட்டிற்குச் சென்று விசாரணை நடத்தியுள்ளார். அப்போது தலைமையாசிரியர் அந்த மாணவியின் தாயாரிடம், "எதற்காக சிறுமியை பள்ளிக்கு ஒரு மாதமாக அனுப்பவில்லை?''’என்று கேட்டுள்ளார்.
அதற்கு, அந்த தாயார் எப்படி சொல்வது என்று தெரியாமல் தவிக்க... தலைமையாசிரியர் வலியுறுத்திக் கேட்ட நிலையில், மனம்நொந்து தன்னுடைய மகள் கர்ப்பமாக இருப்பதைத் தெரிவித்துள்ளார். இந்த தகவலைக் கேட்டு தலைமையாசிரியர் அதிர்ச்சியடைந்துள்ளார். சிறுமியின் தாயார் கூறிய தகவலைக் கேட்டு மாணவியிடமும் விசாரித்துள்ளார். அதன்பிறகு மாணவியின் இந்த விவகாரத்திற்கு முக்கிய காரணமாக இருந்தவர்கள் மாணவி பயிலும் பள்ளியில் பணிபுரியும் 2 பட்டதாரி ஆசிரியர்களும், ஒரு இடைநிலை ஆசிரியரும் என்பது தெரியவந்திருக்கிறது. 3 பேரும் சேர்ந்துதான் அந்த மாணவியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. உடனே இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரியிடம் புகார் தெரிவிக்க தாயாரை தலைமையாசிரியர் அறிவுறுத்தினார். அதன்பேரில் சிறுமியின் தாயார் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரியிடம் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் அதிகாரிகள் அந்த மாணவியை பிப்ரவரி 4-ஆம் தேதி இரவே விசாரித்து, உடனடியாக அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவப் பரிசோதனைக்காகச் சேர்த்தனர்.
இந்த சம்பவம் குறித்து மாவட்ட குழந்தை கள் பாதுகாப்பு அலுவலர், பர்கூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.
இதில், மாணவி பயின்ற அரசுப் பள்ளியில் பணிபுரிந்துவரும் ஆசிரியர்கள் பாரூரைச் சேர்ந்த சின்னசாமி, மத்தூரைச் சேர்ந்த ஆறுமுகம், வேலம்பட்டியைச் சேர்ந்த பிரகாஷ் ஆகிய 3 பேரும் மாணவியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததும், இதன்காரணமாக மாணவி கர்ப்பமான தும் தெரியவந்தது. இதுதொடர்பாக பர்கூர் டி.எஸ்.பி. தலைமையில் அனைத்து மகளிர் போலீசார் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் 3 பேரிடமும் தீவிர விசாரணை நடத்தினர். பிப்ரவரி 5-ஆம் தேதி இரவு, பாதிக்கப்பட்ட மாணவியிடம் மேஜிஸ்ட்ரேட் நடந்த தைக் கேட்டறிந்து உடனடியாக குற்றம் சாட்டப்பட்ட மூவரை யும் சேலம் சிறையில் அடைக்க உத்தரவிட் டார். சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப் பட்ட புகாரில் 3 ஆசிரி யர்கள் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ச.தினேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
ஓமலூர் சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே சிக்கனம்பட்டியில் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி செயல்பட்டுவருகிறது. விடுதி வசதியுடன் கூடிய இந்தப் பள்ளியில் 350-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படிக்கின்றனர். பிப். 2-ஆம் தேதி, பிளஸ்-1, பிளஸ்-2 மாணவ- மாணவிகளை ஓமலூரிலுள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் நடந்த உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சிக்கு ஆசிரியர்கள் அழைத்துச்சென்றுள்ள னர். நிகழ்ச்சி முடிந்ததும் மாணவிகள் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
பிளஸ் 1 படித்துவரும் 17 வயதான மாணவி ஒருவரைப் பார்த்து, அந்தப் பள்ளியின் தற்காலிக உடற்கல்வி ஆசிரியர் சிவக்குமார், "நேரில் பார்ப்பதைவிட போட்டோவில் நீ ரொம்ப அழகா இருக்க..,' என்று வர்ணித்துள்ளார். இதை அந்த மாணவி பெரிதாக எடுத்துக்கொள்ளாதபோதும், அடுத்தடுத்து ஒவ்வொரு அங்கமாகக் குறிப்பிட்டு வர்ணிக்கத் தொடங்கியதும்தான் விவகாரம் வேறு திசைக்குச் சென்றுள்ளது.
சக மாணவிகள் முன்பு வர்ணித்ததால் அதிர்ச்சியடைந்த அந்த மாணவி, இதுகுறித்து உட னடியாக பள்ளித் தலைமையாசிரியர் பாலமுருக னிடம் புகாரளித்தார். இதுகுறித்த புகாரின்பேரில், ஓமலூர் மகளிர் காவல் ஆய்வாளர் விஜயலட்சுமி மாணவியிடம் நடத்திய விசாரணையில், உடற்கல்வி ஆசிரியர் மீதான புகார் உறுதியானது. அவரை போக்சோ சட்டப்பிரிவில் கைதுசெய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
சேலம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் முரளி மற்றும் குழுவினர், பாதிக்கப்பட்ட மாணவிக்கு நிபுணர்கள் மூலம் மனநல ஆலோசனை வழங்கினர்.
திருச்சி
திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகே உள்ளது பழையபாளையம். இங்கு ஆதிதிராவிடர் நலத் தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டுவரு கிறது. இந்தப் பள்ளியின் ஆசிரியர் நாகராஜன் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சில தினங்களுக்கு முன்பு மகளிர் போலீசார் விசா ரணை செய்து கைதுசெய்தனர். இந்நிலையில் "நாக ராஜன் எந்தத் தவறும் செய்யவில்லை. இரண்டு ஆசிரியர்களுக்கு இடையே ஏற்பட்ட முன்விரோ தத்தில் கொடுக்கப்பட்ட பொய்ப் புகார்' எனக்கூறி மாணவர்களும், பெற்றோர்களும் பள்ளி முன்னே முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
"உடனே ஆசிரியரை விடுதலை செய்யவேண் டும். இல்லையென்றால் மாணவர்களை பள்ளிக்கு அனுப்பமாட்டோம்.' என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த துவரங்குறிச்சி போலீசார், வருவாய்த்துறை அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி மாணவர்களை வகுப்புக்குச் செல்ல வலியுறுத்தினர். தொடர்ந்து திருச்சி மாவட்ட ஆதிதிராவிட நலத்துறை தனித் துணை ஆட்சியர் சௌந்தர்யா மற்றும் குழந்தைகள் நல அமைப் பினர், போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அரசு அதிகாரிகள், “ஆசிரியர் நாகராஜால் குழந்தைகள் பாதிக்கப்பட்டது உண்மை. எனவே வழக்குப் பதிவுசெய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என்றனர்.
திருச்சி மாவட்டம், மணப்பாறையிலுள்ள தனியார் சி.பி.எஸ்.இ. பள்ளியில் பயின்ற 4-ஆம் வகுப்பு மாணவி பள்ளிக்கு வழக்கம்போல் சென்றிருந்தார். மதிய நேரத்தில் வகுப்பறை யிலிருந்த மாணவியிடம், பள்ளியின் அறங்காவலரும் தாளாளருமான சுதாவின் கணவர் வசந்தகுமார், 4-ஆம் வகுப்பு அறையில் ஓவிய பாடப்பிரிவு நேரத்தில் உள்ளே நுழைந்து, சிறுமியின் அருகிலமர்ந்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகின்றது.
இதையடுத்து மாலையில் பள்ளிமுடிந்து வீட்டிற்குச் சென்ற மாணவி நடந்த சம்பவத்தை பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், உறவினர்கள் பள்ளிக்குச் சென்று வகுப்பில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்புக் கேமராவைச் சோதித்தபோது, அதில் அவர் சிறுமியின் அருகில் அமர்ந்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டது உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து, வசந்தகுமாருக்கு தர்ம அடி கொடுத்தனர்.
மாணவியின் குடும்பத்தினர், உறவினர்கள் ஆத்திரத்தில் பள்ளிக்குள் புகுந்து அலுவலக அறையின் கண்ணாடியை அடித்து நொறுக்கினர். சம்பந்தப்பட்ட பள்ளியின் தாளாளர், நிர்வாகிகள், முதல்வர் உள்ளிட்ட அனைத்து நபர்களையும் கைதுசெய்து நடவடிக்கை எடுத்திட வலியுறுத்தி நொச்சிமேடு என்ற இடத்தில் திருச்சி- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் இறங்கினர்.
இந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான பள்ளியின் அறங்காவலர் வசந்தகுமார், நிர்வாகிகளான மராட்சி, செழியன், சுதா ஆகிய 4 பேரை போலீசார் கைதுசெய்தனர். தலைமறைவான பள்ளியின் தலைமை ஆசிரியை ஜெயலெட்சுமி சரணடைந்தார். வசந்தகுமார் மீது அதே பள்ளியில் பயிலும் 5-ம் வகுப்பு மாணவி, தான் பாதிக்கப்பட்டதாக புகாரளித்துள்ளார். இதையடுத்து அந்த சிறுமியின் புகாரையும் ஏற்றுக்கொண்டு மொத்தம் 5 பேரை கைதுசெய்த காவல்துறையினர், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.
தொடர்ந்து செய்திகளில் இடம்பெற்றுவரும் பாலியல் சீண்டல் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறுகையில், "பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் அங்கொன்றும், இங்கொன்றுமாக நடந்துகொண்டிருக்கிறது. அப்படியான சம்பவங்கள் நடக்கக்கூடாது என்பதற்காகத்தான் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் சட்டத்திருத்தம் கொண்டுவந்தார். இந்த சம்பவத் தில் உண்மைத்தன்மை நிரூபிக்கப்படும்பட்சத்தில், யாராக இருந்தாலும் நிச்சயம் தண்டனையுடன் அவர்களின் கல்வித் தகுதியை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகளையும் எடுப்போம். ஒவ்வொரு தலைமையாசிரியரும் அந்தந்த பள்ளிகளில் ஆசிரியர்களை அழைத்து கவுன்சிலிங் மற்றும் அறிவுரை அளிக்கும் பணிகளில் ஈடுபட வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் இருக்கக்கூடிய மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் உடனடியாக இதுபோன்ற பிரச்னைகளில் தலையிட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும்''’ என்றார்.
-துரை.மகேஷ், அ.அருண்பாண்டியன், இளையராஜா
____________________________
ரயிலில் கர்ப்பிணிக்கு நடந்த கொடூரம்! - ரயில்வே போலீஸ் அலட்சியம்!
பிப்ரவரி 6ஆம் தேதி காலை 6 மணிக்கு கோயம் புத்தூர் டூ திருப்பதி செல்லும் இன்டர்சிட்டி விரைவு ரயிலில், 32 வயது கர்ப்பிணிப்பெண் பயணித்துக் கொண்டிருந்தார். திருப்பூர் பனியன் கம்பெனி ஒன்றில் டெய்லராக பணியாற்றும் இவர், தனது சொந்த ஊரான சித்தூருக்கு செல்லவே போய்க் கொண்டிருந்தார்.
வேலூர் மாவட்ட காவனூர் கிராமத்தின் அருகே ரயில் மெதுவாக சென்றபோது, ரயிலிலிருந்து வீசி எறியப்பட்ட அந்த பெண், கீழே விழுந்து கதறினார். கை, கால், தலை போன்ற பகுதி களில் பலமாக அடிபட்டுக் கதறிய அந்த பெண்ணைப் பார்த்த ரயில்வே ஊழியர் கள், பதறிப்போய், ஆம்பு லன்ஸை வரவைத்து வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்தத் தகவலறிந்த ஜோலார் பேட்டை ரயில்வே போலீசார், இது தொடர்பாக விசாரணை மேற் கொண்டனர். பாதிக்கப்பட்ட அந்தப் பெண் தந்த வாக்குமூலம் வீடியோவாக வெளியாகியுள்ளது.
காட்பாடி ரயில் நிலையத்தி லுள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ரயில்வே போலீசார் ஆய்வு செய்தனர். வீடியோவில் குற்றவாளி யின் உருவம் சரியாகத் தெரி யாததால், ரயில்களில் தொடர் குற்றங்களில் ஈடுபடுகிற கிரிமினல்களின் புகைப்படங்களை அந்தப் பெண்ணிடம் காட்டினர். அப்போது ஒருவனின் படத்தைக் காட்டி, இந்தப் படு பாவிதான் என்றார் அந்தப் பெண்.
அவரால் அடை யாளம் காட்டப்பட்டவன், குடியாத்தம் பகுதியில் உள்ள பூஞ்சோலை கிராமத்தைச் சேர்ந்த ஹேம்ராஜ். பட்டதாரியான இவன் 2022ஆம் ஆண்டு அக்னிபாத் திட்டம் மூலம் ராணுவத்தில் சேர, தேர்வுக்காக சென்னைக்கு சென்றபோதும்.. பெண்கள் பெட்டியில் கத்தியைக் காட்டி மிரட்டி செல்போனைப் பறித்திருக்கிறான். இந்த வழக்கில் 11 மாதம் சிறையிலிருந்து, ஜாமீனில் வெளியே வந்தவன், அந்த நிலையிலும், தனது முன்னாள் தோழியான தீபா வை அவன் சீரழித்ததோடு, திருமணம் செய்துகொள்ள அவள் வற்புறுத்தியதால், அவளைக் கொன்று ரயில்வே டிராக்கில் வீசியதாகவும் கூறியிருக்கிறான். இதனால் அவனை குண்டர் சட்டத்தில் அடைத்திருக்கிறார்கள். அதிலிருந்து வெளியே வந்த நிலையில்தான் தற்போது கர்ப்பிணிப் பெண்ணிடம் அவன் பாலியல் துன்புறுத்தல் செய்யும் நோக்கில் மூர்க்கத் தனமாக செயல்பட்டு, அப் பெண் திமிறியதால் வெறி யோடு ஓடும் ரயிலிலிருந்து தள்ளிவிட்டிருக்கிறான். இதில் அப்பெண்ணின் வயிற்றிலிருந்த 4 மாத சிசு கலைந்துள்ளது.
இப்படிப்பட்ட சைக்கோ வை எப்படி இவ்வளவு நாள் எளிதாக போலீசார் நடமாட விட்டார்கள்? என்று கேட் கிறார்கள் பொதுமக்கள்.
-து.ராஜா