porkalam

கரண்ட் ஷாக்...

போலீஸ் வண்டி...

Advertisment

ஆம்புலன்ஸ் வேன்...

-கதறும் பெண்கள்

புருஷன, தகப்பன, மகன, சொந்தத்த....ன்னு இழந்து, கற்பையும் பறிகொடுத்த அப்பாவி மலைவாழ் ஜனங்களோட பேட்டி தொடருது...

Advertisment

சரசு தொடர்ந்து பேசறாங்க...

""போலீசு ரெண்டு கைலயும் கயிறக் கட்டி, கண்ணுல கருப்புத் துணியையும் கட்டி எங்க அம்மாவ இழுத்துட்டுப் போனாங்க. அப்ப நான் "எங்கம்மாவ போலீஸ் பிடிக்குது'ன்னு சொல்- கதறி அழுதேன். அப்ப வீட்டுக்குள்ள வந்த போலீஸ், ரேசன் கார்டு, பட்டா எல்லாத்தையும் கிழித்து போட்டுட்டாங்க. என் தங்கச்சி பாட்டி வீட்டுல இருந்தா. நான் ஒருத்திதான் வீட்டுல இருந்தேன். நான் போயி எல்லாரோட கால்லயும் விழுந்து கெஞ்சுனேன். யாரும் கண்டுக்கல. ஒரு போலீஸ்காரர் கா-ல் விழுந்து கெஞ்சினேன். அப்ப ஒரு போலீஸ்காரரு என்னை பிடிச்சுத் தள்ளிவிட்டுட்டு, கட்டையால் அடிக்க வந்தாரு. "சின்னக்குழந்தை அடிக்காத'ன்னு சொன்னாரு ஒரு தமிழ் போலீஸ்காரரு. அவர தடுத்து, "200 ரூபாய் கொடுத்து உங்கம்மாவை அய்யா கூப்பிட்டிருக்கிறாரு, கொண்டாந்து விட்டுடுவாங்க, அழுவாத'ன்னு சொன்னாரு.

23 நாள் கழிச்சி விடியக்காலம் 4 மணி இருக்கும், எங்கம்மாவை கொண்டாந்து விட்டாங்க. என்னென்ன சித்ரவதை பண்ணுனாங்களோ தெரியல... "கொடுமப் படுத்துனாங்க'ன்னு சொல்- அழுதாங்க. கையை கிழிச்சி ரத்தமா இருந்தது. காதுல கரெண்ட் ஷாக் கொடுத்து கொடுமப்படுத்தியிருக்காங்க. அப்ப எங்கம்மாக்கிட்ட போவ பயந்துக்கிட்டு இருந்தேன். ஒரு 15 நாள் கழிஞ்சிருக்கும். 5 மணி வாக்குல ஒரு வேன்ல வந்து, "அய்யா கூப்புடுறாரு'ன்னு சொல்- வேனுல ஏத்துவாங்க. மறுநாள் விடியக்காலம் 4 மணிக்கு கொண்டாந்து விடுவாங்க... இப்படியே பண்ணுவாங்க. எங்க பாட்டி இவுங்க வர்றதை பாத்து பயந்து எங்களை வீட்டுக்குள்ள போட்டு சாத்திடும். அடுப்பு எரிஞ்சாலும் தண்ணி ஊத்தி நெருப்ப அணைச்சிரும்.

எங்கம்மா அழுதுக்கிட்டே வரும். "ஏம்மா?'ன்னு கேட்டா அழும். அப்புறம் "ஒரு நாள் மேட்டூருக்கு அய்யா வரச் சொன்னாங்க, வாங்கன்னு கூப்பிட்டு போனாங்க. 3 மாதம் எங்க கொண்டுபோய் வைச்சிருந்தாங்க, என்ன பண்ணுனாங்கன்னு தெரியல. பண்ணாத சித்ரவதை பண்ணி, கொடுமை செஞ்சி எங்கேயோ விட்டுட்டாங்க'ன்னாங்க. எப்படியோ எங்கம்மா வந்துருச்சி. உடெம்பெல்லாம் காயம். துணியெல்லாம் ரத்தம். என்னென்னு கேட்டதுக்கு, "பண்ணாரில வச்சிருந்தாங்க. தொட்டியில கஞ்சி ஊத்துனாங்க. குடிச்சிட்டு கெடந்தோம்'ன்னு சொல்- அழும்.

எனக்கு கல்யாணம் பண்ணுறதுக்கு முன்னாடிதான் என்னென்ன கொடுமப் படுத்தியிருக்காங்கன்னு தெரியும். சின்ன குழந்தையா இருந்ததால என்கிட்ட என்ன கொடுமைப்படுத்துனாங்க, சித்ரவதை பண்ணுனாங்கன்னு அம்மா சொல்லல. போலீஸ் அடிச்சது, கொடுமைப்படுத்தியதை நினைச்சி நினைச்சி அழும். அழுது, அழுது மனஉளைச்சலாகி, என்ன பேசுறோம்ங்கிறதே அவுங்களுக்கு தெரியாமப் போச்சு. அந்த அளவுக்கு நெலமை மோசமா ஆயிடுச்சி. ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேத்தோம்.

"அவுங்க ரொம்ப மனவேதனை அடைஞ்சிட்டாங்க... கூப்பிட்டு போயிடுங்க... ஒண்ணும் பண்ண முடியாது'ன்னு சொல்-ட் டாங்க. ஆஸ்பத்திரியில் அப்படி சொன்னதால வீட்டுக்கு அழைச்சிட்டு வந்தோம். உடம்பு முடியாம அவுங்க இறந்துட்டாங்க'' ன்னு சொல்-ச் சொல்- அழுதுச்சு அந்தம்மா.

மணி (பழங்குடி இன பெண்)

""சேலம் மேட்டூர்தான் என் சொந்த ஊரு. கூடை பின்னுற தொழில் செஞ்சு பொழப்பு நடத்துனோம். எங்க வீட்டுக்காரர தமிழ்நாடு போலீஸ பிடிச்சு கர்நாடகாவுக்கு அனுப்பிட்டாங்க. எம் மாமன்காரரயும் மச்சான்காரரையும் கர்நாடகா போலீசு பிடிச்சு அடிச்சு கண்ணைக் கட்டி, கையைக்கட்டிக் கொண்டு போனாங்க. மாதேஸ்வரன் மலைலதான் வச்சு சித்ரவதை செஞ்சாங்க. அவங்க எல்லாருமே விவசாயம்தான் பண்ணிக்கிட்டிருந்தாங்க.

மூங்கில் பெரம்பு எடுக்கப் போவும்போது எங்க வீட்டுக்காரரையும் பிடிச்சுட்டுப் போயிட்டாங்க. அன்னிக்கு தினத்தில நாலு பேரைப் பிடிச்சுட்டுப் போயிட்டாங்க. அதுல எங்க வீட்டுக்காரரையும் இன்னொருத்தரையும் சுட்டுக் கொன்னுட்டாங்க. ஒண்ணர வருஷம் கழிச்சுதான் என்கிட்ட சொன்னாங்க. ஒங்க சாதில என்ன பரிகாரமோ அதச் செஞ்சுடுங்கன்னு சொல்-ட்டுப் போயிட்டாங்க.

நாச்சிமுத்து எம்.எல்.ஏ. காட்டுலதான் மூங்கில்கூடை பின்னி நாங்க சந்தைல விப்போம். அன்னிக்கு ஏற்கெனவே உள்ள இருந்த போலீசு என் வீட்டுக்காரரைப் பிடிச்சுட்டுப் போயி சுட்டுக் கொன்னுட்டாங்க. "வீரப்பனுக்கு சப்போர்ட்டு பண்ணுற'ன்னு சொல்- கூப்பிட்டுப் போயி சுட்டுக் கொன்னாங்க. என் வீட்டுக்காரரு பொணத்தைக் கூட கண்ணுல காட்டலை. அப்பப்ப ஒண்ணு ரெண்டு பேத்த வெளில விடுவாங்க. அவங்கதான் வந்து உன் மாமனார பாத்தேன், மச்சானைப் பாத்தேன்னு தகவல் சொல்வாங்க. எங்கப்பாவையும் பிடிச்சுட்டுப் போயி மைசூர் ஜெயில்ல போட்டுருந்தாங்க. அவர மைசூர் ஜெயில்ல பாத்தப்ப, அவரும் "உன் வீட்டுக்காரரையும், மச்சான்காரரையும் கொன்னுட்டாங்க'ன்னு சொன்னாரு. ஆனா ஒன்றரை வருஷம் கழிச்சுதான் போலீஸ் சொன்னாங்க. பிடிச்ச ஒடனே சுட்டுட்டாங்க. மொத்தம் ஒம்பது பேரை சுடுறதுக்காகக் கூப்புட்டுப் போயி எட்டு பேரை சுட்டுக் கொன்னுட்டாங்க. ஒம்பதாவது ஆளை சுடுறதுக்கு முந்தி யாரையும் சுட வேண்டாம்னு போன் வந்ததால அவரை சுடலை. அந்த போனு மொதல்ல வந்துருந்தா, அந்த எட்டு பேரும் தப்பிச்சுருப்பாங்க. இதுவரைக்கும். என் மாமனார் இருக்கறாரா? செத்துட்டாரான்னு எனக்குத் தெரியாது''ன்னு ரொம்ப வேதனையோட சொல்லுச்சு அந்தம்மா.

porkalam

சிவகாமி

""எங்க வீட்டுக்காரர் பேரு முருகன். எங்களுக்கு கல்யாணம் ஆனவுடனேயே அவருக்கு அம்மை போட்டதுனால அவரு எங்க வீட்டுலயே இருந்தாரு. விடியக்காலைல அஞ்சர மணி இருக்கும். வீட்டுல தூங்கிக்கிட்டு இருந்தவர... திடீர்னு வீட்டுக்கு வந்த போலீஸ் தடதட...ன்னு இழுத்துட்டுப் போனாங்க. "ஏன் எங்க வீட்டுக்காரர இழுத்துட்டுப் போறீங்க?'ன்னு நான் கேட்டதுக்கு, கன்னடத்துல அவங்க என்னத் திட்டுனாங்க. "எங்க வூட்டுக்காரரு என்ன தப்பு செஞ்சாரு?'ன்னு கேட்டுக்கிட்டே அவங்க பின்னாடியே போனேன். எதுவுமே தெரியல.

போலீஸ்காரங்களப் பாத்தாவே பயமா இருக்கும், ஓடி ஒளிஞ்சுக்குவோம். யார்கிட்டயாவது "எங்க வீட்டுக்காரர எங்க வச்சிருக்காங்க, அவங்க எங்க இருக்காங்கன்னு எதாவது தெரியுமா?'ன்னு கேட்டா யாருமே பதில் சொல்லமாட்டாங்க. ஒருத்தர்கிட்ட ரொம்ப கெஞ்சிக் கேட்டதுனால, "வீரப்பனுக்கு உதவுனான்னு தகவலு வந்ததுனால இழுத்துட்டுப் போனாங்க'ன்னு சொன்னாரு.

மாதேஸ்வரன் மலையில மேனேஜரா இருந்தாரு எங்க வீட்டுக்காரரு. கல்யாணத்துக்கு ஒரு மாசத்துக்கு முன்னாலதான் லீவு போட்டுட்டு வந்தாரு. அவருக்கு வீரப்பன் கருப்பா, சிவப்பான்னு கூட தெரியாது. ஏழு மாசம் கழிச்சித்தான் அவரை சுட்டுக் கொன்னாங்கன்னு தெரிஞ்சிது. எட்டு பேத்த சுட்டுக்கொன்னுôங்கன்னு கொளத்தூர் போலீஸ் ஸ்டேஷனில் சுட்டுக்கொன்ன போட்டோவ காமிச்சாங்க. "உங்க கணவரு இல்ல... செத்துப்போனாரு. உங்க சாதிப்படி, குலப்படி என்ன செய்யணுமோ செஞ்சிக்கோங்க'ன்னு சொன்னாங்க. அந்த போட்டோவ பாத்து அங்கேயே நான் மயக்கம் போட்டு விழுந்துட்டேன். என் வீட்டுக்காரரு பிரேதத்தைக் கூட காமிக்கல. எனக்கு 17 வயசுல கல்யாணம் ஆச்சி. இப்ப வரைக்கும் அந்த துக்கத்துல இருந்து என்னால மீள முடியல. இப்பவும் போலீஸ் வண்டிய, ஆம்புலன்ஸ் வேன பார்த்தா அதிர்ச்சியா இருக்கும். எங்க வீட்டுக்காரர போலீஸ் பிடிச்சிட்டு போய், சுட்டுக்கொன்ன போட்டோவ எல்லாம் காமிச்சத நினைச்சா இப்பகூட தூக்கம் வரமாட்டேங்குது. எங்கள இந்த நெலமைக்கு ஆளாக்குனவங்களுக்கு கட்டாயம் தண்டன குடுக்கணும். நாங்க பட்ட வேதனையை அவுங்களும் படணும். எங்களுக்கு நியாயம், நீதி கெடைக்கணும்...''னு அழுகைய கட்டுப்படுத்த முடியாம தவிச்சாங்க.

சுப்பன் மனைவி மணி

""ஏழு வருசத்துக்கு முன்னால எங்க கிராமத்துக்கு இன்ஸ்பெக்டரு ராம-ங்கமும், அசோக்குமாரும் போலீஸ்காரங்களோட வந்தாங்க. மாரி கோயிலு பக்கத்துல இருந்த என் கணவர புடிச்சு மேட்டூர் முகாமுக்கு கொண்டுபோயிட்டாங்க. அடுத்தநாளு நான் எங்க வீட்டுக்காரரப் பத்தி கேட்டதுக்கு, "மேட்டூர் முகாம்ல போய் பாரு'ன்னு சொன்னாங்க. நான் மேட்டூர் போலீஸ் முகாமுக்குப் போனப்ப, என் கணவர் மிக மோசமான நிலையில இருந்ததப் பாத்து... மேட்டூர் முகாம்ல இருந்த தேவாரத்துக்கிட்ட "டாக்டர்ட்ட காமிக்க ஏற்பாடு செய்யுங்க ஐயா'ன்னு கேட்டேன்.

"நீயே உன் புருஷன ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டுப் போயிட்டு, திரும்ப ஜங்கிள் பேட்ங் கிற இடத்துக்கு கூட்டிட்டு வா'ன்னு சொன்னாரு தேவாரம்.

மறுநாளு டாக்டர்கிட்ட என் புருஷன கூட்டிட்டுப் போயி, இந்த நிலைமைக்கு என்ன காரணம்ங்கிற உண்மையச் சொன்னேன்.

அடுத்த நாளு....

அவங்க சொன்னதக் கேட்டு... என் கொல நடுங்கிருச்சு....

(புழுதி பறக்கும்)