பாலியல் வன்கொடூரத்தில் நேரடித் தொடர்புள்ளவர்களின் முக்கிய சகாவான "பார்' நாகராஜ், கோவை கலெக்டரிடம் புகார் கொடுக்க, அவரது வீடு, பார் ஆகியவற்றுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. "குற்றத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் பலரும் சுதந்திரமாக சுற்றித் திரிகிறார்கள்' என நம்மிடம் பொள்ளாச்சி மக்கள் தெரிவித்தனர். யார் அவர்கள் என நம்மிடம் பெயர் வாரியாக சொன்னார்கள்.

pollachijayaram-son

அதில் முக்கியமானவர் ஜேம்ஸ் ராஜா. குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள திருநாவுக்கரசு, ரிஸ்வந்த் என்கின்ற சபரிராஜன் ஆகியோருக்கு மிக நெருக்கமான ஜேம்ஸ்ராஜா, இவர்கள் மூன்று பேருக்கும் ஒரே தொழில் கந்து வட்டி. இளைஞர்களான திருநாவுக்கரசும் ரிஸ்வந்தும் தங்களுக்குத் தெரிந்த பெண்களை ஒருவருக்கொருவர் அறிமுகப்படுத்திக் கொள்வது வழக்கம். இந்த பழக்கம் கந்துவட்டி கடன்களை கொடுக்காத குடும்ப பெண்களிடம் நீண்டது. இந்தப் பெண்கள் விவகாரத்தில் ஜேம்ஸ்ராஜாவும் இணைந்துகொள்கிறார். இந்த மூவர் கூட்டணி இவர்களைப் போலவே கந்துவட்டி தொழில் செய்யும் கேபிள் கணேசன், வெல்லமண்டி பூபதி ஆகியோருடன் சேர்ந்து கொள்கிறது. இந்த பஞ்ச பாண்டவர் அணிதான் பொள்ளாச்சியை ஆளும் அணி. கேபிள் கணேசன் பொள்ளாச்சியின் ஆல் இன் ஆல் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனின் வலதுகை போன்றவர்.

Advertisment

ஜேம்ஸ்ராஜா, பொள்ளாச்சி நகரில் உள்ள டாஸ்மாக் கடைகளில் உள்ள பார்களில் தினமும் வரும் கலெக்ஷனை துணை சபாநாயகருக்கு அளிப்பவர். அந்த பார்களில் போலி சரக்குகளை விற்று கிடைக்கும் பணத்தை கொண்டுவந்து கொடுப்பதால் பொள்ளாச்சி ஜெயராம னிடம் இவருக்கு செல்வாக்கு அதிகம். கோடிக்கணக்கில் பணம் ஜேம்ஸ்ராஜா கொண்டுவந்து கொடுப்பார். இவர்களுக்கு கட்டப்பஞ்சாயத்து, அடிதடி ஆகியவற்றிற்கு ஆள் தேவைப்பட்டதால் பார் நாகராஜ் இந்த டீமுக்கு தோதான அடியாளாக மாறுகின்றான். அதே பாரில் கிளாஸ் கழுவும் வேலை பார்த்து, தற்போது உரிமையாளராக உள்ள பார் நாகராஜுக்கு அமைச்சர் வேலுமணி வரை நெருக்கம் உண்டு. இவர்களுடன், போலீஸ்காரரின் மகனான எஸ்.பி. வசந்த் என்பவர் இணைகிறார்.

pollachijayaram-son

வசந்த் ஒரு ஜிம் நடத்துகிறார். அந்த ஜிம்மில்தான் திருநாவுக்கரசை ரிஸ்வந்த் சந்திக்கிறான். இந்த ஏழுபேரையும் பொள்ளாச்சி ஜெயராமன் வீட்டுக்கு கேபிள் கனேசனும் ஜேம்ஸ்ராஜாவும் அழைத்துச் செல்கிறார்கள். அவரின் மகன் பிரவீன் இவர்களுக்கு நெருக்கமான நண்பராகிறார். இந்த டீம் சோலையாறு பொதுப்பணித்துறை விருந்தினர் மாளிகையை தங்களது கூத்துக்களை அரங்கேற்றும் இடமாக மாற்றிக்கொள்கிறது. 2017-ஆம் ஆண்டு அந்த விருந்தினர் மாளிகையில் பொள்ளாச்சி ஜெயராமன் மகன் அடிக்கும் கூத்துக்கள் புகாராக காவல்துறைக்குச் செல்கிறது. கடுமையான வனப்பகுதியில் அமைந்துள்ள மாளிகைக்கு போலீஸ் வருகிறது. அதைக்கண்டு ஜெயராமனின் மகன் ஆத்திரமடைகிறார். அங்கு வந்த காவல்துறையினரை தாக்குகிறார். இது காவல்துறையில் வேகமாகப் பரவுகிறது. பிரவீனை கைது செய்ய போலீஸ் தயாராகிறது. இதை கேள்விப்பட்டு சோலையாறு விருந்தினர் மாளிகைக்கு விரைந்த பொள்ளாச்சி ஜெயராமன் பிரவீனைக் காப்பாற்றுகிறார். பிரவீனும் இந்த எழுவர் அணியும் அவர்கள் அழைத்து சென்ற பெண்களுடன் அங்கிருந்து தப்பிக்கிறார்கள்'' என இந்த ஏழுபேரின் லீலைகளை வர்ணிக்கிறார்கள் அ.திமு.க.வைச் சேர்ந்தவர்கள்.

இறுதியாக அ.தி.மு.க.வின் நகரச்செயலாளரான கிருஷ்ண குமார் வசம் இந்த டீம் ஒப்படைக்கப்படுகிறது. இந்த டீமில் முக்கிய புள்ளியான எஸ்.பி. வசந்த் கவுன்சிலராகிறார். அந்த கவுன்சிலர்களை திரட்டி கிருஷ்ணகுமார் பொள்ளாச்சி நகரசபை தலைவராகிறார்.

"ஒவ்வொரு நாளும் பார்களை கண்காணிக்கும் ஜேம்ஸ்ராஜா வீட்டுக்கு பொள்ளாச்சியில் உள்ள அனைத்து காவலர்களும் ஆஜராவார்கள். அவர்களுக்கு ஜேம்ஸ்ராஜா ஒரு டோக்கன் கொடுப்பார். அதை வைத்து அவர்கள் குடிப்பதும் காசு வாங்குவதும் நடக்கும். இப்படி நகரசபை, போலீஸ் ஸ்டேசன் உட்பட அனைத்தும் இந்தக் கும்பலின் கைகளில்தான் இருக்கிறது' என்கிறார்கள் பொள்ளாச்சி நகர காவல்துறையைச் சேர்ந்தவர்கள். இதுபற்றி கிருஷ்ணகுமார், ஜிம்.வசந்த், கேபிள் கணேசன், ஜேம்ஸ்ராஜா ஆகியோரை தொடர்பு கொண்டு கேட்டோம். "இதற்கும் எங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை' என மறுக்கிறார்கள்.—

-தாமோதரன் பிரகாஷ்