உலக அளவில் இந்தியா முத்திரை பதிக்காவிட்டாலும், இந்தியாவுக்குள் கால்பந்து விளையாட்டு மீதான ஆர்வ முள்ளவர்கள் அதிகம். மாநிலங்களுக் கிடைப்பட்ட கால்பந்து போட்டிகள் மிகுந்த ஆர்வத்துடன் விளையாடப்படுகின்றன. சந்தோஷ் டிராபி கால்பந்துப் போட்டியில் இதுவரை தமிழ்நாடு அணி வென்றதே யில்லை. இப்போது சந்தோஷ் கோப்பை போட்டிகள் தொடங்கவுள்ள நிலையில், இந்த ஆண்டுக்கான தமிழ்நாடு அணிக்கான தேர்வில் ஏற்பட்டுள்ள சர்ச்சை ஏமாற்றமளிப்பதாக உள்ளது.
தமிழ்நாடு அணிக்கான வீரர்கள் தேர்வு, ஆவடியிலுள்ள அஜய் விளையாட்டு மைதா னத்தில் கடந்த மாதம் 8, 9, 10 ஆகிய தேதி களில் நடைபெற்றது. இந்தத் தேர்வில் 200க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்துகொண்டனர். அதில் முதற் கட்டமாக 65 வீரர்களைத் தேர்வு செய்து, அவர்களுக்கு தலைமை பயிற்சியாளராக ஜே.மோசஸ் டேவிட் ராஜ், துணை பயிற்சியாளராக எஸ்.சுரேஷ்குமார் ஆகியோரை நியமித்தனர். இவர்களின் மூலம் தேர்வு செய்யப்பட்ட 65 பேரிலிருந்து சிறந்த 40 வீரர்களைத் தேர்வு செய்து, அதிலிருந்து இறுதியாக மிகச்சிறந்த 22 வீரர்களைத் தேர்வு செய்வார்கள்.
இந்நிலையில், இரண்டாம்கட்ட வீரர்கள் தேர்வு முடித்து, இறுதிக்கட்டமாக 22 வீரர்களை தேர்வு செய்துள்ளார் ஜே.மோசஸ். இந்த இறுதித் தேர்வில், ஏற்கெனவே இந்த அணிக்காக ஆடியவர்கள் மற்றும் இதன் மூலமாக வேலைக்குச் சென்றவர்கள் யாருமில்லாமல், இவர்களுக்கு இணையாகவும் மிகத்திறமை வாய்ந்தவர்களையும் தேர்வு செய்துள்ளார்.
இதற்கிடையில் தமிழ்நாடு முன்னாள் கால்பந்து சங்கத்தின் தலைவரான ஜேசையா வில்வராயன் மற்றும் துணைத்தலைவர் சுரேஷ் மனோகர் இருவரும் அவர் களுக்கு வேண்டப்பட்ட நபர்களை மோசஸிடம் தேர்வு செய்ய சொல்லியுள்ளார்கள். அதற்கு சற்றும் செவி சாய்க்காத மோசஸ், நேர்மை யாக விளையாட்டு வீரர்களை தேர்வு செய்திருந்தார். ஆத்திரம் அடைந்த ஜேசையா டீம், உடனடியாக மோசஸை மாற்றி, அதற்குப் பதிலாக பெங்களூரைச் சேர்ந்த பெங்களூர் தனியார் கிளப்பில் பயிற்சியாளராக இருந்த ராஜன்மணியை அந்த பணியில் அமர்த்தியுள்ளனர்.
இந்த நிலையில் மோசஸ் தேர்வு செய்த தரமான வீரர்கள் பட்டியலை நீக்கிவிட்டு, புதிதாக வந்த பெங்களூர் கோச் மூலமாக, பழைய 65 பேரையும் மீண்டும் அழைத்து காஞ்சிபுரத்தில் சிறுசேரி மைதானத்தில் வைத்து 65 வீரர்களில் 20 வீரர்களையும், கூடுதலாக இந்தியன் சூப்பர் லீக் மற்றும் பெங்களூர், சென்னை லீக்கில் ஆடுகிற வீரர்களை தலா 10 வீரர்கள் என மொத்தமாக 30 வீரர்களையும் தேர்வுசெய்து, அதிலிருந்து இறுதியாக 22 வீரர்களை தேர்வு செய்துவைத்துள்ளார். இவர்கள் தான் வருகின்ற சந்தோஷ் கோப்பை போட்டியை எதிர்கொள்ளப் போகிறார்கள்.
இதில் நேரடியாக எடுக்கப்பட்ட 10 வீரர்கள், இந்தியன் சூப்பர் லீக் போன்ற தனியார் லீக்கில் ஆடுவதால் இவர்கள் சி.ஆர்.எஸ்.ஸிடமிருந்து என்.ஓ.சி. பெற்ற பிறகுதான் சந்தோஷ் கோப்பைக்கு ஆட முடியும். இங்கு என்ன சிக்கலென்றால், இவர்கள் தமிழநாட்டிற்காக ஆடுவதற்கு அரசு எந்தத் தொகையும் கொடுப்பதில்லை. அதேவேளை, இந்தியன் சூப்பர் லீக் ஆடுவதால் இவர்களுக்கு லட்சத்தில் சம்பளம் என்பதால், தமிழ்நாட்டிற்காக விளையாடும்போது அடிபட்டுவிட்டால் இவர்களை ஏலத்தி லெடுத்த நிறுவனம் மீண்டும் அணிக்கு எடுக்காது. ஆகையால் இவர்கள் தமிழ் நாட்டிற்காக விளையாடும் போது காயம் ஏற்படாமல் ஆடுவதிலே கவனமாக இருப்பார்கள். இப்படி விளையாடும் சூழலில் எப்படி தமிழ்நாடு சந்தோஷ் கோப்பையை வெல்லுமெனக் கேட்கிறார்கள் சீனியர் பயிற்சியாளர்கள்.
இதுகுறித்து பேசிய பயிற்சியாளர் மோசஸ், "என்னை மீண்டும் அப்பணியில் அமர்த்த வேண்டுமென்பதற்காக பேச வில்லை. அதற்கான ஆசையும் எனக்கில்லை. இம்முறை நிச்சயம் கோப்பையை வெல்வோமென நினைத்த எங்கள் கனவை அதிகார வர்க்கத்தின் மூலம் சிதைத்து விட்டார்கள். இதன் பின்புலத்தில் பணபலம் உள்ளது. கௌரவத்திற்காகவும், அரசு பணிகளுக்குமாக தேர்வு நடக்கிறதே ஒழிய, கோப்பையை வெல்லும் நோக்கமில்லை. 10 ஆண்டுகளாக இவர்களுக்குள்ளே எழுந்த மோதலால் தமிழகத்தில் சப்-ஜூனியர், ஜூனியர், யூத் ஜூனியர், சீனியர் என எந்த விளையாட்டும் சரியாக நடத்தப்படுவதில்லை'' என குற்றம் சாட்டினார்.
இதுகுறித்து தமிழ்நாடு முன்னாள் கால்பந்து தலைவர் ஜேசையா வில்வ ராயனிடம் கேட்டபோது, "இதைப்பற்றி எனக்கு எதுவும் தெரியாது. எதுவாக இருந்தாலும் துணைத்தலைவர் சுரேஷ் மனோகரிடம் கேளுங்கள்'' என்றார். அதேபோல சுரேஷ் மனோகரைக் கேட்டால், "ஜேசையாவை கேளுங் கள்'' என ஒருவரையொருவர் கைகாட்டிக்கொண்டனரே தவிர, கேள்விக்கு பதிலளிப்பதைத் தவிர்த் தனர்.
இப்போதுள்ள தேர்வு முறையைப் பார்த்தால் தங்கம் மட்டுமல்ல... வெங்கலக் கிண்ணம்கூட தமிழ் நாட்டுக்கு கிடைக்காதுபோல!