தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 05-07-24 இரவு, பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் அருகே 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங்கின் உடல் பெரம்பூர் பந்தர் கார்டன் மாநகராட்சி பள்ளியில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் அடக்கம் செய்யப்பட்டது.
இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட ஆற்காடு சுரேஷ் தம்பி பொன்னை பாலு, ராமு, செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், அருள், கோகுல், விஜேஷ் சிவசக்தி உட்பட 11 பேரை போலீசார் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க 7 நாள் அனுமதி கேட்ட நிலையில் நீதிமன்றம் 5 நாட்கள்தான் விசாரணைக்கு அனுமதி வழங்கியது. இதையடுத்து கொலையாளிகளை, போலீசார் காவலில் எடுத்து பரங்கிமலை ஆயுதப்படை மைதானத்தில் வைத்து ஒவ்வொருவரையும் தனித்தனியாகவும் விசாரித்துள்ளனர். அதில் இந்த 11 குற்றவாளிகளுக்கிடையே எப்படி நட்புறவு ஏற்பட்டது, இவர்கள் கொலைக்கு திட்டமிட்டது எப்படி, இவர்கள் சொல்வது உண்மைதானா என்கிற கோணத்தில் அதற்கான ஆதாரத்தை கைப்பற்றும் நோக்கத்தில் விசாரித்தபோதுதான், ஆற்காடு சுரேஷ் தம்பியான பொன்னை பாலுவுடன் திருவேங்கடம் அடிக்கடி செல்போனில் பேசிவந்தது தெரியவந்தது.
அது தொடர்பான கேள்விகளை முன்வைத்த போலீசாரிடம் திருவேங்கடம், தான் சிறையில் இருந்தபோது ரவுடி ஆற்காடு சுரேஷுக்கும் தனக்கும் பழக்கம் ஏற்பட்டு, இருவரும் சேர்ந்து சில கொலைகளையும் செய்துள்ளதாகவும், அதில் தென்னரசு கொலையும் ஒன்று எனவும் தெரிவித்துள்ளான். மேலும் தன்னுடைய பகுதியான குன்றத்தூரில் பெரிய ரவுடியாகவும் வலம் வரத் தொடங்கியதாகவும், இந்த சூழ்நிலையில் ஆற்காடு கரேஷ் கொலைக்கு பழி தீர்க்கவும் பொன்னை பாலு திட்டம் தீட்ட, அதற்கு உறுதுணையாக இணைந்து செயல்பட்டதாகவும் தெரிவித்துள்ளான். மேலும் ஆயுதங் களைப் பற்றி போலீசார் விசாரிக்கவே, துப்பாக்கியை பதுக்கிவைத் துள்ளதாகவும் தெரிவித்துள்ளான். அதன்படி, பகலில் சென்றால் பரபரப்பாக பேசப்படும் என்பதால், உடனடியாக சனிக்கிழமை இரவே மாதவரம் அடுத்துள்ள ஆடுதொட்டி பகுதிக்கு கொடுங்கை யூர் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் தனிப்படை இன்ஸ்பெக்டர் முகமது புகாரி ஆகியோர் அழைத்துச் சென்றுள்ளனர். அங்கும் இங்கும் என அலையவிட்டு நினைவு வரவில்லை எனக்கூறி, இறுதியாக ரெட்டேரி ஏரிக்கரை ஆட்டு மந்தை செல்லும் வழியில் இயற்கை உபாதையை கழிக்கவேண்டும் என திருவேங்கடம் போலீசா ரிடம் கேட்கவே போலீசாரும் வாகனத்தை நிறுத்தி யுள்ளனர். வாகனத்தை நிறுத்தியவுடன் திருவேங்கடம் தப்பித்து ஓடியுள்ளான். போலீசாரும் பின் தொடர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அதில் புழல் காவல் எல்லைக்குட்பட்ட வெஜிட்டேரியன் வில்லேஜ் பகுதியில் ஆள் நடமாட்டமே இல்லாத ஏரிப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த ஷெட்டில் பதுங்கியிருந்துள்ளான். அதனைக் கண்டு போலீசார் சுற்றிவளைத்து பிடிக்க முற்பட்டபோது அவன் ஒளித்து வைத்திருந்த கள்ளத்துப்பாக்கியை எடுத்து எதையும் யோசிக்காமல் போலீசாரை பார்த்து கன்னாபின்னாவென சுட்டுவிட்டு தப்பிக்க முற்பட்டுள்ளான்.
வேறு வழியில்லாமல் இன்ஸ்பெக்டர் முகமது புகாரி தற்காப்புக்காக ரவுடியை சுட்டதில் வலது பக்கம் மற்றும் இடதுபக்க மார்பில் குண்டுகள் பாய்ந்து ரத்தவெள்ளத்தில் கீழே விழுந்த ரவுடி திருவேங்கடத்தை போலீசார் அருகாமையில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் பரிசோதனையில் ஏற் கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர் சொல்ல வே, திருவேங்கடத்தின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.
இதனைத்தொடர்ந்து சென்னை கமிஷனர் அருண் உத்தரவின்படி சம்பவ இடத்திற்கு சென்னை வடக்கு மண் டல கூடுதல் கமிஷனர் நரேந்திரன் நாயர் மற்றும் இணை கமிஷனர் விஜயகுமார் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். ரவுடி திருவேங் கடத்தின் உடல் ஸ்டான்லி அரசு மருத்துவமனை யில் பிரதே பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. 14ஆம் தேதியன்று நடைமுறை சிக்கலின் காரணமாக பிரேத பரிசோதனை செய்யவில்லை. ஆகையால் 15ஆம் தேதி காலையில் மாஜிஸ்திரேட் முன்னிலையில் வீடியோ பதிவுகளுடன் பரிசோதனை செய்யப்படுகிறது. அதன்பிறகு உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப் படும் என போலீசார் தெரிவித்தனர்.
அதேவேளையில் என்கவுன்டர் பிரச்சனை மக்கள் மத்தியில் பரபரப்பாகப் பேசப்பட்ட சூழ்நிலையில், உடனடியாக சென்னை கமிஷனர் அருண், ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சி.சி.டி.வி. காட்சியை வெளியிட்டு, கொலை குற்றவாளிக்கும், பிடிபட்ட குற்றவாளிக்கும் சம்பந்தமுள்ளது எனவும், அதற்காக முன்கூட்டியே திட்டமிட்டதையும் வெளிப்படுத்தக்கூடிய 3.32 நிமிட ஆதார வீடியோவை வெளியிட்டார். அதில் ரவுடி திருவேங்கடம்தான் முதலில் அரிவாளால் வெட்டியுள்ளதும், அதன்பிறகு மற்றவர்கள் வெட்டும் காட்சிகளும் இருந்தன. இதில் திருவேங்கடம், அருள், கோகுல், விஜய், சந்தோஷ் என அனைவரும் அந்த பகுதிக்கு முன்கூட்டியே வந்துசெல்வது மற்றும் வெட்டுவதைக் கோடிட்டு, இவர்கள்தான் எனவும் அடையாளம் காட்டி யுள்ளனர். இது பார்ப்போரின் மனங்களை பதற வைத்துள்ளது.
வெட்டியவர்கள் இவர்கள்தான் என சி.சி.டி.வி.க்கள் மூலம் தெளிவாகத் தெரிந்தாலும் உண்மைக் குற்றவாளிகள் அவர்கள் அல்ல என தொடர்ந்து திருமாவளவன் உட்பட ஆம்ஸ்ட்ராங் ஆதரவாளர்கள் பேசி வந்தார்கள். உண்மைக் குற்றவாளிகள் இவர்கள்தான் என வெறும் சி.சி.டி.வி. காட்சிகளை வைத்து முடிவு செய்தீர் களா? என போலீசாரிடம் கேட்ட தற்கு, “"இவர்கள் அனைவரும் புளியந்தோப்பு பகுதியில் இருந் தார்கள். இவர்கள் ஆம்ஸ்ட்ராங் ஆட்கள் தங்களைத் தாக்கக்கூடும் எனப் பயந்து ஒளிந்திருந்தார்கள். இவர்களது செல்போன் லொகேஷன்களை வைத்து போலீஸ் படை அங்கே சென்றபோது போலீசிடம் சரணடைவது பாதுகாப்பு என சரணடைந்தார்கள். இவர்களை கஸ்டடி எடுத்து விசாரித்து வருகிறோம். இவர்களது வங்கிக் கணக்குகளை ஆராய்ந்து வருகிறோம். இவர்கள் எவ்வளவு பணம் வைத்துள்ளார்கள். எங்கிருந்து பணம் வந்தது என ஆராய்ந்து வருகிறோம். ஒரு மாதத்துக்கு முன்பு வரை உள்ள கணக்குகளை எடுத்து வருகிறோம். அந்த கணக்குகளில் புரண்ட பணம் எல்லாம் ஆருத்ரா நிதி நிறுவனத்தின் பணம்தான். ஆருத்ரா என்பது மிகப் பெரிய சிலந்தி வலை. அதில் ஒருபக்கம் மா.த. மலை, அமர் பிரசாத் ரெட்டி, கேசவவிநாயகம், வழக்கறிஞர் அலெக்ஸ் ஆகியோர் பணம் கறந்திருக்கிறார்கள்''’என்றார்கள்.
இந்த உண்மைகள், 2022ஆம் வருடம் ஜூன் மாதமே நக்கீரன் உட்பட ஊடகங்களில் வெளி யானது. ஹரீஷ் என்கிற ஆருத்ராவின் இயக்குன ராக இருந்த நபரை ஜூன் மாதம் தமிழகம் வந்த பாரத பிரதமரை வரவேற்கும் கமிட்டியில் மா.த. மலை, கேசவவிநாயகம், அமர்பிரசாத் ரெட்டி ஆகியோர் நியமித்தார்கள். அப்பொழுதே இந்த சர்ச்சை வெடித்தது. ஹரீஷ், ஆருத்ரா கம்பெனியின் டைரக்டர் அல்ல, அந்த கம்பெனியில் அவர் எந்த பங்கும் வைத்திருக்கவில்லை, அவர் தமிழ்நாடு அமெச்சூர் கிக் பாக்சிங் அசோசியேஷன் தலைவர் என அமர் பிரசாத் ரெட்டி அறிவித்தார்.
ரூஷோ என்கிற நபரும், திரைப்பட இயக்குனர் ஆர்.கே.சுரேஷும் பா.ஜ.க. வுடன் தொடர்பு வைத்திருந்தார்கள் எனச் சொல்லப்பட்டது. இதுதவிர ஆம்ஸ்ட்ராங், ஆருத்ராவின் முதலாளி யான ராஜசேகரிடம் இருந்து கோடிக்கணக்கான ரூபாய் முதலீட்டாளர்களுக்கு தர வேண்டு மென மிரட்டியுள்ளார். ஆற்காடு சுரேஷும் அதற்கு ஒருபடி மேலே போக... இருவருக்கும் இடையே மோதல் வெடித்தது. அதில் ஆற்காடு சுரேஷ் கொல்லப்பட்டார். இப்பொழுது ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். ஆருத்ரா விவகாரம் பெரிதாகப் போவதால் அதிலிருந்து தப்பிக்க அமர்பிரசாத் ரெட்டி குஜராத்துக்குப் போய் தலைமறைவாகிவிட்டார்.
அமர்பிரசாத் ரெட்டியின் தலைமறைவு, ஆருத்ரா விவகாரத்தை பெரிதாக்கி உள்ளது. ஆருத்ரா விவகாரத்தை முழுமையாக விசாரித்து முடிக்காவிட்டால் தமிழகத்தில் கொலைகள் விழுவதை தடுக்கமுடியாது என்கிற நிலைக்கு காவல்துறை வந்துவிட்டது. ஆருத்ரா ராஜசேகர் மற்றும் அவரது உறவினர்கள் அடுத்தகட்டமாக கொல்லப்படுவார்கள் என தமிழக உளவுத்துறை எச்சரிக்கை குறிப்புகளை அனுப்பி உள்ளது. ஆகவே, இந்த விவகாரத்தில் பா.ஜ.க. தலைவர்களை விசாரிக்க வேண்டும். அப்படிச் செய்தால்தான் ஆருத்ரா விவகாரம் முடிவுக்கு வரும்” என போலீசார் சொல்கிறார்கள்.
இவ்வளவு நாள் ஆருத்ரா விவகாரத்தை விசாரிப்பதற்கு மத்திய பா.ஜ.க. அரசு தடையாக இருந்தது. ஆனால், ஆம்ஸ்ட்ராங் வழக்கில் திருவேங்கடத்தை போலீசார் என்கவுன்டரில் சுட்டுக் கொன்றதற்கு காரணம் அந்தப் படு கொலையில் தி.மு.க.வினர் மூன்று பேர் சம்பந்தப் பட்டிருப்பதால் ஏதோ ஒரு உண்மையை மறைக்க முயற்சிகள் நடப்பதுபோல தெரிகிறது என்று மா.த. கூறினார். ஆம்ஸ்ட்ராங் கொலைவழக்கு சரியான திசையில்தான் செல்கிறதா என பா.ஜ.க. மா.த. அறிக்கை கொடுத்து, போலீஸ் விசாரணையில் அவர் சிக்குவதற்கு களத்தை உருவாக்கி இருக்கிறார்.
ஏற்கெனவே அ.தி.மு.க. தலைவர் எடப்பாடியை ரகசியமாக சந்தித்து, நமக்குள் விரோதம் வேண்டாமென மா.த. சொன்னதை மீறி எடப்பாடி பேசியதால், ‘முதுகில் குத்திவிட்டார் எடப்பாடி’ என எடப்பாடியைத் தாக்கினார் மா.த. லண்டனுக்கு போகும் அவர் அங்கேயே செட்டிலாகத் திட்டமிட்டுள்ளார். எல்லாவற்றுக்கும் காரணம் ஆருத்ரா மோசடி வழக்கு. ஆப்பசைத்த குரங்கு போல ஆருத்ரா வழக்கு மூலம் சிக்கிக்கொண்டு இருக்கிறார் பா.ஜ.க. மா.த.
-தாமோதரன் பிரகாஷ், அருண்