காக்கிச்சட்டை போட்ட நீ உன் திமிரை காட்டிட்டே, அதே காக்கிச் சட்டை போட்ட நாங்கள் எங்கள் திமிரை காட்டுகிறோம் என்று சவால் விடும் வகையில், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் போலீஸôர், வாகன சோதனையை தீவிரப்படுத்தி, விதி மீறல்களுக்காக அரசு பேருந்து ஓட்டுனர்களுக்கு அபராதம் விதிக்கின்றனர்.
பிரச்சனைக்கு காரணமே, இதுதான்.!! சில நாட்களுக்கு முன்னர் திருநெல்வேலிவழியாக தூத்துக்குடிக்கு சென்ற அரசுப் பேருந்தில் நாங்குநேரி பேருந்து நிறுத்தத்தில் ஆறுமுகப்பாண்டி எனும் ஆயுதப்படை காவலர் ஏறியுள்ளார். அவரிடம் டிக்கெட் எடுக்கும்படி நடத்துநர் கேட்டுள்ளார். "" உங்க ஸ்டாஃப் டிக்கெட் இல்லாமல் பயணிக்கிறார். நானும் ஒரு அரசு ஊழியர் தான். டிக்கெட் எல்லாம் எடுக்க முடியாது. அரசுப் பேருந்தில் அரசுப் பணியில் உள்ளவர்கள் எவரும் பணி நிமித்தமாக பயணிக்கும்போது டிக்கட் எடுக்க தேவையில்லை. நாங்களும் அரசு வேலை பார்ப்பவர்கள் தான். எங்களுக்கு டிக்கெட் கிடையாது"" என்று டிக்கெட் எடுக்காமல் தொடர்ந்து காவலர் ஆறுமுகப்பாண்டியன் தகராறில் ஈடுபட்டுள்ளார். அதற்கு, ""அரசு பேருந்தில் காவலர்கள் பயணிக்க வேண்டும் என்றால் வாரண்ட் வேண்டும். வாரண்ட் இல்லாத பட்சத்தில் டிக்கெட் கிடையாது. அதனால், டிக்கெட் கண்டிப்பாக எடுக்க வேண்டும்"" என்று நடத்துநர் சொல்லியும் காவலர் கேட்கவில்லை. நான் டிக்கெட் எடுக்க மாட்டேன் என்று காவலர் சொல்ல, நான் பஸ்ûஸ எடுக்க மாட்டேன் என்றும் எதிர்வாதம் செய்த வீடியோவை, சம்பந்தப்பட்ட நடத்துனரே சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். இந்த வீடியோ வெளியாகி வைரலானது. அரசு பேருந்தில் காவலர்கள் டிக்கெட் எடுக்க வேண்டுமா.. வேண்டாமா.. என்று சர்ச்சை எழுந்த நிலையில், 'அரசுப் பேருந்துகளில், காவலர்கள் கட்டணமின்றி பயணிக்க அனுமதி இல்லை. வாரண்ட் இருந்தால் மட்டுமே காவல் துறையினர் பேருந்தில் கட்டணமின்றி பயணிக்க முடியும். மற்ற அனைத்து நேரத்திலும் காவலர்கள் டிக்கெட் எடுத்துதான் பயணிக்க வேண்டும்"" என்று போக்குவரத்துத் துறை அறிக்கை வெளியிட்டு தெளிவுப்படுத்தியது.
இந்த சம்பவம் எதிரொலியாக, நோ பார்க்கிங்கில் நிறுத்தப்படும் அரசுப் பேருந்துகளுக்கு போலீஸôர் அபராதம் விதித்து வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்டம் மணிமங்கலம் அருகே நோ பார்க்கிங்கில் வாகனத்தை நிறுத்தி, பொதுப்போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாக, அரசுப்பேருந்து ஓட்டுனர் கிருஷ்ணமூர்த்திக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல், தாம்பரத்தில் ஒரு அரசு பேருந்து ஓட்டுனருக்கும், சென்னை சிட்டி லிமிட்டில் ஒரு அரசுப் பேருந்து ஓட்டுனருக்கும் அபாரதம் விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான வீடியோவை போக்குவரத்து போலீஸôரே சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். அதில், “சார்… எங்க வேலையை எங்களை செய்ய விடுங்க…வாங்க கீழே இறங்கி வாங்க…’’ என்று பேருந்து ஓட்டுனர்களை அழைத்து அபாரதம் விதித்து அதற்கான சலான்களை வழங்குகின்றனர்.
இதுதவிர, காவல்துறையின் வாட்ஸ் அப் குரூப்களில், ஒரு செய்தியை பகிர்கின்றனர். அதில், “அனைத்து காவலர்களும் இனி பேருந்துகளில் டிக்கெட் எடுத்து சட்ட ரீதியாக பயணம் செய்வோம். அரசு அலுவலாக ஐந்து கி.மீ தூரம் பயணம் செய்தாலும் வாரண்ட் கேட்டு வாங்கி செல்வோம். அதேபோல வாரண்ட் வாங்க மறுக்கும் பேருந்து நடத்துனர்கள், செல்லாது எனக்கூறும் நடத்துனர்கள், பக்கம் தானே வாங்க சார் என கூறும் நடத்துனர்கள் என யாரையுமே விடாமல் வீடியோ எடுத்து, வாட்ஸ்அப்புகளில் பரப்புவோம். துறைரீதியான நடவடிக்கை வேண்டி போக்குவரத்து துறைக்கு பரிந்துரைப்போம். அப்படி தானே அதிகாரமே இல்லாத போக்குவரத்து துறையும் போக்குவரத்து தொழிலாளர்களும் செய்கிறார்கள்? அவர்களே செய்யும் போது அதை ஏன் நாமும் செய்ய கூடாது? அவர்கள் வழியிலேயே நாமும் பயணிப்போம். நமக்கு அதிகம் ஐம்பது ரூபாய் செலவாகும். அவ்வளவுதானே நாம செலவழிச்சுக்கிடுவோம். அதேபோல இனி பசநபஈ என போட்டுக் கொண்டு இரு சக்கர வாகனங்களில் வலம் வந்து, சார் சார் நான் டிரைவர் சார், கண்டக்டர் சார் வழக்கு போடாததீங்க சார் என கெஞ்சும் நபர்களையும் சாலையிலேயே நிறுத்தி வழக்கு பதிந்து அனுப்புவோம். இருநபர்கள் ஹெல்மெட் போடவில்லை எனில் 2000 ரூபாயை சட்டப்படி வழக்கு அபராத தொகையாக விதிப்போம். பாதிப்பேர் இன்சுரன்ஸ் இல்லாத வண்டி, தஈ இல்லாத வண்டியில் தான் வருகிறார்கள் அதற்கும் முறைப்படி வழக்கு பதிவோம், முடிந்தால் வாகனத்தை பறிமுதல் செய்வோம். குடித்து விட்டு வாகனம் ஓட்டினால் இனி முறைப்படி உஉ போடுவோம் அவர்கள் நீதிமன்றம் சென்று பத்தாயிரம் ரூபாய் செலவு செய்துவிட்டு வரட்டும்’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனடிப்படையில் கிளாம்பாக்கத்தில் மட்டும் 24 பேருந்துகளுக்கு அபராதம் விதித்துள்ளது போக்குவரத்து காவல்துறை.
இதன் மூலம் போக்குவரத்துதுறை, காவல் துறை இடையே உரசல் ஏற்பட்டுள்ளது. இந்தவிவகாரம் குறித்து பேசிய போலீஸ் அமைச்சுப் பணியாளர் ஒருவரோ, "" போலீஸ் காரங்க அலுவல் நிமித்தமாக வேலைக்கு போறாங்கன்னு தெரிஞ்சா, அவங்க பயணம் செய்ய அனுமதிக்கலாம். அது தப்பு கிடையாது. ஏன்னா, சென்னையில் இருந்து ஒரு போலீஸ்காரர் வெளியூர் போராருன்னா முக்கிய நகரங்களுக்குத்தான் வாரன்ட் கொடுப்பார்கள். அதாவது, சென்னை -மதுரை, சென்னை#தூத்துக்குடி,சென்னை –திருநெல்வே-ன்னு, சில ஊர்களில் இருந்து பெருநகரங்களுக்கு செல்லும்போது, வாரன்ட் கொடுக்க மாட்டார்கள். அப்படி இருக்கும் பட்சத்தில், நடத்துனர்கள் சூழ்நிலையை புரிந்து கொண்டு அட்ஜஸ்ட் செய்து கொள்ளலாம். ஆனால், இங்கே நீயும் காக்கிச் சட்டை, நானும் காக்கிச் சட்டை என்கிற ரேஞ்சில் வாக்குவாதம் செய்வதுதான் பிரச்சனையே! அதுலயும் இந்த கண்டக்டர்களுக்கு எல்லாம் கொம்பு முளைச்சது மாதிரிதான்"" என்கிறார்.
அதுபோல, ""எம்.டி.சி பஸ் காலியாகத்தான் இருக்கும், இவரு கடைசி சீட்ல உங்காந்துகிட்டு, டிக்கெட் வந்துவாங்க மாட்டீயான்னு, ஒருமையில் பேசுவார். வயசுக்குன்னு கொஞ்சம்கூட மரியாதை கொடுக்கிறதே கிடையாது. பையில் சில்லறை வச்சிருப்பாரு. ஆனால், எல்லோரும் நூறு ரூபாய நீட்டுனா நான் எங்கே போறதுன்னு, திட்டுறது, வேண்டா வெறுப்பாக நடந்து கொள்வது 95 சதவீத நடத்துனர்களின் செயல். 5 வயது முதல் 12 வயசுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு அரை டிக்கெட். வயதுக்கான புரூப் காட்டிட்டா, அரை டிக்கெட் கொடுக்கனும். ஆனால், அதை யெல்லாம் கேட்க மாட்டார்கள். நான் ஒருமுறை பயணிக்கும்போது, “உங்க பையன் பெரிய பையனா இருக்கான், எனவே நீங்க முழு டிக்கெட் எடுக்கனும் என்றார். ஆதார் அட்டையை மெயி-ல் இருந்து டவுன்லோடு பண்ணி மொபை-ல் காட்டினால், இது டிஜிட்டல் ஆவணம் இதை ஏற்க முடியாது. எனக்கு ஜெராக்ஸ் வேணும் அப்பத்தான் நான் ஏத்துப்பேன். அப்படின்னா நான் டிக்கெட் எடுக்க மாட்டேன் என்றேன். நீ எந்த போலீஸ் ஸ்டேசன்ல வேணாலும் நிறுத்து, எந்த டெப்போவில் வேண்டுமானாலும் நிறுத்து நான் பேசிக்கிறேன் என்றேன். அதுக்கு அப்புறம் வேண்டா வெறுப்பாக அரை டிக்கெட் போட்டு கொடுத்தார் அந்த கண்டக்டர்"" என்கின்ற குற்றச்சாட்டுக்களும் போக்குவரத்து கழக ஊழியர் மீது உண்டு.
ஓய்வுபெற்ற காவல்துறை எஸ்பி ஒருவரோ, "" எல்லா காக்கிச்சட்டையும் ஒன்றாக முடியாது. காவல்துறையின் காக்கி சீருடைக்கென மாண்பு உண்டு. ஒழுக்கம் உண்டு. சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவே இந்த சீருடை அனிந்து காவல்துறையில் பணிபுரிகின்றோம். அதற்காக சட்டத்தினை மீறும் வகையில் நீயும், நானும் ஒன்று வாதம் செய்யக்கூடாது. யார் தவறு செய்தாலும் தவறுதான். இத்தனை நாள் நீ ஹெல்மெட் போடாமல் வந்தாய்.. சீட் பெல்ட் போடலை.. நாங்க கண்டுகொண்டோமா.? என்கின்ற கேள்வியை எழுப்புகிறீர்கள். அப்படியெனில் அவர்கள் செய்த தவறுக்கு போலீஸ் உடந்தைதானே.? பேருந்து பயணம் குறித்து அரசிடம் கோரிக்கை வைப்பதுதான் நலம்."" என்கின்றார் அவர்.
இரண்டு காக்கிச்சட்டை பிரச்சனையில் பாதிக்கப்படுவது என்னவோ பொதுமக்கள்தான். அரசு கவனம் கொள்ளுமா..?