சமீபத்தில் சத்தியம் தொலைக்காட்சி மிகக்கடுமையாக தாக்கப்பட்டது. அந்த தாக்குதலில் ஈடுபட்ட ராஜேஷ்குமாரின் குடும்பம் இந்துத்வா சக்தி களுக்கு நெருக்கமானது என்கிற ஐயம் எழுப்பப்பட்டது. சிறைக்கு அனுப்பப் பட்ட ராஜேஷ்குமார், "சிறையில் வார்டனை அடித்து உதைத்து சிறையிலிருந்து தப்பிக்க முயன்றான்' என அதிக பாதுகாப்பு நிறைந்த புழல் சிறைக்கு அனுப்பப்பட்டான்.
"அவனுக்கு மனநோய் உள்ளது' என சென்னை நகர காவல்துறையே சான்றிதழ் அளித்த நிலையில், "என்னை லைவ்ல காட்டுங்க' என அவன் சத்தியம் டி.வி. தாக்குதலின்போது சொன்ன வார்த்தைகள், மற்றவர்களின் கவனத்தை தன்பக்கம் திருப்பும் மனநிலையைக் கொண்டவன் என காவல்துறை திடீர் விளக்கம் அளித்தது.
அதே பாணியில் நடிகை மீராமிதுன், அவர் தங்கியிருந்த கேரளாவிலிருந்து ஷ்யாம் அபிஷேக் என்பவர் உதவியுடன் டுவிட்டரில், பட்டியல் இன வகுப்பினரைப் பற்றி ஒரு பதிவை லைவ் கமெண்ட்டாக போட்டார். பட்டியலினத்தவர் பற்றி பேசும் அவரது பதிவில் பிரதமர் நரேந்திரமோடியை துணைக்கு அழைக்கிறார்.
"இதற்கு முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரை மோசமான வார்த்தைகளால் அர்ச்சித்த பா.ஜ.க.வின் கலாச்சாரப் பிரிவு தலைவர் காயத்ரி ரகுராம் மற்றும் கல்யாணராமன் ஆகியோரை முந்தைய அ.தி.மு.க. அரசு கைது செய்யவில்லை. தி.மு.க. அரசும் அவர்கள் மீது பதியப்பட்ட பழைய வழக்குகளை இன்றுவரை கண்டுகொள்ளவில்லை. அதனால் புதிய நபர்கள் தைரியமாகக் களமிறங்குகிறார்கள்'' என வருத்தப்படுகிறார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னியரசு.
முன்புபோல எச்.ராஜா, மதுவந்தி, எஸ்.வீ. சேகர் போன்றவர்கள் இப்பொழுது பேசுவதில்லை. தமிழக பா.ஜ.க.வில் முக்கிய பொறுப்பை எதிர்பார்த்திருக்கும் மதுவந்தி வாய் திறப்பதில்லை. அதனால், மீரா மிதுன், ராஜேஷ்குமார் போன்ற புதியவர்களை களமிறக்குகிறார்கள் என்கிறார்கள் பா.ஜ.க.வினர். மீராமிதுனுக்கு, காயத்ரி ரகுராம் போன்ற பா.ஜ.க.வினர் மட்டுமல்ல... அப்சரா ரெட்டி என்கிற அ.தி.மு.க. பிரமுகரின் ஆதரவும் இருக்கிறது என்கிறார்கள் அவருக்கு நெருக்கமான வர்கள். மூன்றாம் பாலினத்தவரான அப்சரா ரெட்டி, காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து அதன் பேச்சாளர்களில் ஒருவராக மாறி, அகில இந்திய மீடியாக்களின் கவனத்தை ஈர்த்தவர். பின்னர், கடந்த ஜனவரி மாதம் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். முன்னிலையில் அ.தி. மு.க.வில் சேர்ந்தார். இவர் மீராமிதுனின் நண்பர் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.
மீராமிதுன் தலித்துகளை பற்றிப் பேசியதை சினிமா துறையில் தலித்துகளுக்காக குரல் கொடுக்கும் பா.ரஞ்சித் போன்றவர்கள் சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் விடுதலை சிறுத்தைகள் தரப்பில், மீராமிதுன் மீது தமிழ்நாடு முழுவதும் அறுபதுக்கும் மேற்பட்ட புகார்களைக் கொடுத்து, தி.மு.க. அரசுக்கு நெருக்கடி கொடுத்தனர்.
மீராமிதுன் கேரள மாநிலம் ஆலப்புழாவில் ஒரு சொகுசு விடுதியில் தங்கி, போலீசுக்கு சவால்விடும் வகையில் வீடியோக்களை அப்லோடு செய்துவந்தார். "தமிழக போலீஸ் என்னை கைது செய்ய முடியாது' என வீடியோவில் சவால்விட்ட அவரை, அவரது செல்போன் டவர்மூலம் கண்டுபிடிக்க சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் துணைகமிஷனர் நாகஜோதி முயன்றார். சேலத்திற்கும் சென்னைக்கும் இடையே ரயிலில் நடந்த பணக் கொள்ளையை கண்டுபிடித்தவரான நாகஜோதிக்கு, மீராவை கண்டுபிடிப்பது ஒன்றும் கடினமான காரியமாக இல்லை.
சென்னை நகர போலீசின் பெண் காவலர் படையை அனுப்பி ஆலப்புழாவில் மீரா தங்கி யிருந்த விடுதியிலிருந்து அவரது நண்பர்கள் உதவியுடன் தூக்கினார் நாகஜோதி. இதை மீரா எதிர்பார்க்கவில்லை. கைதின் போதும் நரேந்திரமோடியை துணைக்கு அழைத்து அவர் ஒரு கதறல் வீடியோ போட்டார். அவரை சென் னைக்கு அழைத்து வந்து விசாரித்தபோதும் "பாருங்கள்... எனக்காக எடப்பாடி பேசுவார், மத் திய அரசு பேசும்...' என ஜம்பம் விட்டுக்கொண்டிருக்கிறார். அதன்பிறகு வழக்கறிஞரை துணைக்கு அழைத்து போலீசாரிடம் பேசினார் மீரா.
மீரா மீது ஏற்கனவே பல மோசடி புகார்கள், ஒரு காலத்தில் அவருக்கு நெருக்கமாக இருந்த மேனேஜர்களால் அளிக்கப்பட்டிருந்தது. அத்துடன் தலித்துகளுக்கு எதிராக அவர் வீடியோ போட்டதன் பின்னணி குறித்து, போலீசார் அவரிடம் கேள்விகளைக் கேட்டார்கள்.
"சினிமாவில் தலித்துகள் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். என் பெயர் தமிழ்ச்செல்வி, நானும் ஒடுக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்தவள் தான்'' என மீரா போலீசாரிடம் கூறினார். தாழ்த்தப்பட்ட வகுப்பினரை கேவலமாகப் பார்ப்பது -பேசுவது உள்ளிட்ட வன்கொடுமை சட்டத்தின்படி மீரா மீது வழக்குப்பதிவு செய்து சிறைக்கு அனுப்பிவைத்தனர் போலீசார்.
சத்தியம் டி.வி. மீது இந்துத்வா தத்துவத் தைப் பேசி தாக்குதல் நடத்தியவனை ஆதரித்தோ, நரேந்திர மோடியை புகழ்ந்து தலித்துகளை திட்டிய மீராமிதுன் குறித்தோ பா.ஜ.க. தலைவர்கள் இதுவரை வாய் திறக்கவில்லை. ஆனால் "இவையெல்லாம் அவர்களது ஆசியுடன் நடக்கும் புதிய தற்கொலைப்படை தாக்குதல்கள்' என்கிறார்கள் பா.ஜ.க.வில் இருப்பவர்கள்.