vik

விக்கிரவாண்டி இடைத்தேர்தலைப் புறக்கணித்திருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. இதனால் உற்சாகமாகியிருக்கிறது பா.ம.க.

Advertisment

அ.தி.மு.க.வின் இந்த புறக்கணிப்பு அக்கட்சியின் தேர்தல் அரசியலில் அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது. ஏன்? எதற்கு? என்கிற விவாதங்கள் அ.தி.மு.க.வில் ரெக்கைக் கட்டிப் பறக்கின்றன.

விக்கிரவாண்டியின் தி.மு.க. எம்.எல்.ஏ. புகழேந்தி மறைவைத் தொடர்ந்து அத்தொகுதிக்கு ஜூலை 10-ல் இடைத்தேர்தல் நடக்கிறது. தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, பா.ஜ.க. கூட்டணி, நாம் தமிழர் கட்சி என 4 முனைப் போட்டி நடக்கும் என சொல்லப்பட்ட நிலையில், போட்டியிலிருந்து ஜகா வாங்கியிருக்கிறது அ.தி.மு.க.

Advertisment

ஏன் இந்த முடிவு? என அ.தி.மு.க. முகாம்களில் விசாரித்தபோது, ‘’விக்கிர வாண்டிக்கு யாரை வேட்பாளராக நிறுத்தலாம் என்கிற சாய்சை முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்திடம் ஒப்படைத்திருந்தார் எடப்பாடி. அதேசமயம், சண்முகத்தின் சகோதரர் ராதாகிருஷ்ணனை நிறுத்தலாம் என்கிற ஒரு யோசனை எடப்பாடி மற்றும் சீனியர்களிடம் இருந்துள்ளது. ஆனால், இதனை ஏற்கவில்லை சண்முகம். இதனையடுத்து, முழுபொறுப்பும் அவரிடமே ஒப்படைக்கப்பட்ட நிலையில், மாவட்ட அ.தி.மு.க.வினருடன் சண்முகம் ஆலோசனை நடத்தினார்.

ஆனால், யாருக்குமே தேர்தலில் நிற்க ஆர்வமில்லை. காரணம், இடைத்தேர்தல் என்றாலே ஆளுங்கட்சி வரிந்து கட்டிக்கொண்டு களத்தில் இறங்கும். ஆளுங்கட்சி செய்கிற செலவுகளுக்கு நம்மால் ஈடுகொடுக்க முடியாது என சொன்ன அ.தி.மு.க.வினர், "தேர்தல் செலவுகளை கட்சி கவனித்துக்கொண்டால் போட்டியிட முன்வருகிறோம்... இல்லையெனில், கஷ்டம்' என தெரிவித்திருக்கின்றனர் மாவட்ட ர.ர.க்கள்.

இதனைத்தொடர்ந்து, அ.தி.மு.க. தலைமையகத்தில் ஆலோசனை நடத்தினார் எடப்பாடி. அதில் சி.வி.சண்முகம், கே.பி.முனுசாமி, ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி உள்ளிட்ட சீனியர்கள் பலரும் கலந்துகொண்டனர். கூட்டத்தில் மாவட்ட அ.தி.மு.க.வினரின் நிலையை எடுத்துச்சொன்னார் சண்முகம். அதனால், "ஆளுங்கட்சியின் அராஜகங்களை சுட்டிக்காட்டி விட்டு இடைத்தேர்தலை புறக்கணிக்கும் முடிவை எடுக்கலாம்' என்றும் சொன்னார்.

அப்போது, "ஈரோடு இடைத்தேர்தலில் தி.மு.க.வினர் நடத்திய காட்சிகளைவிட அதிகமாகவே விக்கிரவாண்டியில் நடத்துவார்கள். அதிகார பலம், பண பலம் மொத்தமாக இறங்கும். இந்த சிக்கலில் சிக்கிக்கொண்டு 3-வது இடமோ, 4-வது இடமோ அ.தி.மு.க.வுக்கு கிடைத்தால் அது கட்சியை பாதிக்கும். அதற்குப் பதில், தேர்தலை புறக்கணித்துவிடலாம்' என வேலுமணி சொல்லியிருக்கிறார்.

ஆனால், "இந்த தொகுதியில் நாடாளுமன்றத் தேர்தலின்போது தி.மு.க.வை விட 6,000 வாக்குகள்தான் நாம் பின் தங்கியிருக்கிறோம். மக்கள் எப்போதுமே நாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்றத் தேர்தல் என மாற்றி யோசிப்பார்கள். தி.மு.க. ஆட்சியின் மீதுள்ள அதிருப்தி, அ.தி.மு.க. ஜெயிக்க வைக்குமே! என எடப்பாடி சொல்ல, லாஜிக்படி சரியானது என்றாலும், பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க. போட்டியிடுகிறது. சீமானும் போட்டியிடுகிறார். அந்த வகையில், தி.மு.க.வுக்கு எதிரான அதிருப்தி வாக்குகள் நமக்கு மட்டுமே முழுமையாக கிடைத்தால் நீங்கள் சொல்வது நடக்கலாம். ஆனால், மூன்றாகப் பிரிய வாய்ப்பிருப்பதால், அ.தி.மு.க.வின் வெற்றிக்கு உறுதி கிடையாதில்லையா?' என ஜெயக்குமார் போன்றவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதேசமயம், தொகுதியில் 60 சதவீதம் வன்னியர்கள்தான். அவர்கள் முழுமையாக பா.ம.க.வை ஆதரித்தால் அ.தி.மு.க.வுக்கு டெபாசிட் கூட கிடைக்காது என்கிற ஒரு தகவல், இந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு முன்பே எடப்பாடிக்கு கிடைத்திருந்தது. அதை மனதில் வைத்துக்கொண்டே விவாதித்தபடி இருந்தார்.

ஒரு கட்டத்தில், "இடைத்தேர்தலை புறக்கணித்தால் அ.தி.மு.க. பயந்துவிட்டது என்ற விமர்சனம் வருமே' என எடப்பாடி சொல்லியிருக்கிறார். அதற்கு, "இடைத்தேர்தலை நாம் ஒன்றும் முதன்முதலாக புறக்கணிக்கவில்லை ஏற்கனவே, இடைத்தேர்தலை நாமும் (அ.தி.மு.க.) புறக்கணித்திருக்கிறோம்; தி.மு.க., பா.ம.க.வும் புறக்கணித்திருக்கிறது.

கடந்த 2009-ல் திமுக ஆட்சியின்போது கம்பம், பர்கூர், தொண்டாமுத்தூர், இளையான்குடி, ஸ்ரீவைகுண்டம் ஆகிய 5 தொகுதிகளுக்கு ஒரேசமயத்தில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டபோது, அதனை ஒட்டுமொத்தமாக புறக்கணித்தார் ஜெயலலிதா. அன்றைக்கு அவர் என்ன காரணத்தைச் சொல்லி புறக்கணித்தாரோ, அதையே நாமும் சொல்லி புறக்கணிக்கலாம். புறக்கணிப்புத்தான் சரியான முடிவாக இருக்கும்' என சண்முகம், முனுசாமி போன்றார் அழுத்தமாக வாதிட்டனர்.

"அ.தி.மு.க. டெபாசிட் இழக்கும் என ஏற்கனவே எடப்பாடிக்கு சொல்லப்பட்ட தகவலும், சீனியர்களின் யோசனையும் புறக்கணிப்பு முடிவை எடுக்க வைத்தது' என்று விரிவாக சுட்டிக்காட்டுகிறார்கள்.

இதற்கிடையே, இடைத்தேர்தலில் தி.மு.க. வீழ்த்தப்பட வேண்டும் என்று பா.ஜ.க. மேலிடம் எதிர்பார்க்கிறது. இதனையடுத்து, தொகுதியில் குறிப்பிட்ட வாக்கு வங்கியை வைத்திருக்கும் பா.ம.க.வுக்கு ஆதரவளிக்கும் வகையில் முடிவு எடுக்க பா.ஜ.க. தலைமையிடம் பேசியிருக்கிறார் டாக்டர் அன்புமணி.

இதுதொடர்பாக நடந்த பா.ஜ.க.வின் மேல்மட்ட ஆலோசனையில், "இடைத்தேர்தலில் பா.ஜ.க. போட்டியிட வேண்டும்; எனக்கு வாய்ப்பளியுங்கள்'’என்று வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த ஏ.ஜி.சம்பத் கோரிக்கை வைத்திருக்கிறார். ஆனால், அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டு, தி.மு.க.வை வீழ்த்த பா.ம.க.வுக்கு ஆதரவு அளிக்கும் முடிவை பா.ஜ.க.வினர் எடுத்தனர்.

மேலும், தி.மு.க.வுக்கு எதிரான அதிருப்தி வாக்குகள் சிதறிவிடாமல் இருக்கவும், ஒரே இடத்தில் அந்த வாக்குகள் குவிவதற்கும், அ.தி.மு.க. வாக்குகள் பா.ம.க.வுக்கு கிடைக்கச் செய்யவும் தேர்தல் புறக்கணிப்பு முடிவினை எடுக்க வைக்க அ.தி.மு.க. தலைமையிடம் பா.ஜ.க. தலைமையும் காய்களை நகர்த்தியிருக்கிறது. அதற்கேற்ப தேர்தல் புறக்கணிப்பு முடிவை அ.தி.மு.க. எடுத்தது' என்றும் அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். இதனைத்தான் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரமும் வெளிப்படுத்தியிருக்கிறார். இப்படிப்பட்ட அரசியல் சூழல்களில், அ.தி.மு.க. தலைவர்கள் எடுத்த புறக்கணிப்பு முடிவு, பா.ம.க.வுக்கு ஏகத்துக்கும் உற்சாகத்தைத் தந்துள்ளது.

இந்த நிலையில், பா.ம.க. சார்பில் யாரை வேட்பாளராக நிறுத்தலாம் என தைலாபுரம் தோட்டத்தில் மிக கனமான ஆலோசனை நடத்தினார் டாக்டர் ராமதாஸ். அப்போது, 1980-களில் நடந்த இடஒதுக்கீடு போராட்டத்தில் காவல்துறை நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில் 23 வன்னியர்கள் பலியானார்கள் அந்த 23 குடும்பங்களிலிருந்து ஒருவரை இந்த இடைத்தேர்தலில் போட்டியிட வைக்க டாக்டர் ராமதாஸ் விரும்பினார். இது குறித்து நடந்த பல்வேறு ஆலோசனைகளுக்குப் பிறகு, பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணியிடம் பொறுப்பினைக் கொடுத்தார். அன்புமணியும் அவரது மனைவி சௌமியாவும், இடஒதுக்கீடு தியாகிகளின் குடும்பங்களிடமும் பேசினர். ஆனால், அந்த குடும்பங்களில் தேர்தலில் போட்டியிடக்கூடிய அளவுக்கு குறிப்பிட்ட வயதை பூர்த்தி செய்த நபர்கள் யாரும் இல்லை. ஒரே ஒரு குடும்பத்தில் மட்டும் ஒருவர் இருந்தார். ஆனால், அவர் அரசு பணியில் இருந்ததால் அப்பணியை விட்டுவிட்டு வர அவர் விரும்பவில்லை. அதனால், கட்சியின் நீண்டகால உழைப்பாளியான அன்புமணியை, பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக நிறுத்தியிருக்கிறது பா.ம.க. தலைமை.

தி.மு.க.விடமிருந்து விக்கிரவாண்டித் தொகுதியைக் கைப்பற்ற டாக்டர் ராமதாஸ் தீவிர திட்டமிடலில் இருக்கிறார். நாடாளுமன்றத் தேர்தலில் 10 தொகுதியில் போட்டியிட்டு ஒரு தொகுதியிலும் பா.ம.க. வெற்றி பெறாததால் விக்கிரவாண்டியை கைப்பற்றி தங்களின் செல்வாக்கை நிலைநிறுத்துவது பா.ம.க.வுக்கு அவசரத் தேவையாக இருக்கிறது. விக்கிரவாண்டியில் கிடைக்கும் வெற்றிதான், 2026 தேர்தலில் பா.ம.க. மீது வன்னியர்களுக்கு ஒரு நம்பிக்கையை கொடுக்க வைக்கும்.

அது மட்டுமல்ல; அந்த தேர்தலில் தங்களின் பார்கெய்ன் பவரை அதிகரிக்கச் செய்யவும் விக்கிரவாண்டி தேர்தலின் வெற்றி பா.ம.க.வுக்கு முக்கியமாக இருக்கிறது. அதனால், அ.தி.மு.க.வின் தேர்தல் புறக்கணிப்பையும், பா.ஜ.க.வின் ஒத்துழைப்பும் கிடைத்திருக்கும் சூழலில் தொகுதியைக் கைப்பற்ற அனைத்து முயற்சிகளையும் எடுக்கத் தொடங்கியிருக்கிறது தைலாபுரம் தோட்டம்! தொகுதியின் தேர்தல் பொறுப்பாளராக சௌமியாவை நியமிக்கவும் வாய்ப்பிருப்பதாக பா.ம.க. தரப்பில் சொல்லப்படுகிறது.

தேர்தலை அ.தி.மு.க. புறக்கணித்ததாலும், தொகுதியில் வன்னியர் சமூகத்தினர் அடர்த்தியாக இருப்பதாலும் தி.மு.க.வுக்கு ஏகநெருக்கடியை பா.ம.க. ஏற்படுத்தியிருக்கிறது.