இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் சுதந்திரப் போராட்டத் தியாகியுமான தோழர் நல்லகண்ணு அய்யா வின் நூற்றாண்டு விழா, தமிழ்த்தேசியத் தலை வர் பழ.நெடுமாறன் தலைமையில் சென் னை கலைவாணர் அரங்கத்தில் டிசம்பர் 29ஆம் தேதி காலை முதல் இரவு வரை நடைபெற்றது. இவ்விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மக்கள் இயக்கங்களின் தேசிய கூட்டமைப்பின் மேதா பட்கர், ஓய்வுபெற்ற நீதியரசர் சந்துரு, இறையன்பு ஐ.ஏ.எஸ்., இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, முன்னாள் மேயர் சைதை துரைசாமி, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், கவிப்பேரரசு வைரமுத்து, இயக்குனர் பாரதி ராஜா, முனைவர் வசந்திதேவி, அறிவியலாளர் மயில்சாமி அண்ணாதுரை, கவிஞர் காசி ஆனந்தன், பாவலர் அறிவுமதி, திலகவதி ஐ.பி.எஸ்., இயக்குனர் வெற்றிமாறன், நடிகர் விஜய்சேதுபதி ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்தினார்கள்.
இந்நிகழ்வைத் தலைமையேற்று நடத்திய பழ.நெடுமாறன் பேசுகையில், "முதன்முதலாக தியாகத்தலைவர் ஐயா நல்லகண்ணுவின் நூற்றாண்டு விழாவை அவர் வாழும் காலத்தில் கொண்டாடிவருகிறோம். தியாகம், தொண்டு, எளிமை, இனிமை இவற்றால் நிறைகுடம் போன்றவர். எவ்வளவோ அடக்குமுறைகளுக்கு இடையே சிறை சென்று மக்களுக்காகப் போராடியவர். அவர் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் பேறு இந்த தலைமுறைக்குக் கிடைத்திருக்கிறது'' என்றார்.
விழாவின் நாயகர் நல்லகண்ணுவுக்கு சிறப்பு செய்து, "தோழர் இரா. நல்லகண்ணு 100, நூறு கவிஞர்கள், நூறு கவிதைகள்' என்ற நூலினை வெளியிட்ட பின், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில்... "இந்த விழா, பொதுவுடைமை, திராவிடம், தேசியம் ஆகிய வற்றின் சங்கமமாக நடைபெறுகிறது. எல்லோ ரும் ஒன்றிணைய ஐயா நல்லாகண்ணுவின் உழைப்பு ஒன்றே காரணம். வயதால் எனக்கு தம்பி, அனுபவத்தால் எனக்கு அண்ணன் என்று நல்லகண்ணுவை கலைஞர் புகழ்ந்துரைத்தார். ஒரு கண் முகத்தில் இருக்கிறது, இன்னொரு கண் அகத்தில் இருக்கிறது, அவர் நல்லகண்ணு என்று கலைஞர் கூறினார். கட்சிக்காகவே உழைத்தார், உழைப்பால் கிடைத்த பணத்தை யெல்லாம் கட்சிக்காகவே கொடுத்தார், அதனால் தான் உயர்ந்து நிற்கிறார். மார்க்ஸ், ஏங்கல்ஸ் எழுதிய தேர்தல் அறிக்கையை மொழிபெயர்த்து எழுதியவர் பெரியார். திராவிடக் கட்சியில் இல்லையென்றால் கம்யூனிஸ்ட் ஆகியிருப்பேன் என்று கூறினார் கலைஞர். இவ்வளவு பேசும் என் பெயர் கூட ஸ்டாலின் தான். இரு இயக்கங் களுக்குமான நட்பு, கொள்கை நட்பு. தேர்தல் அரசியலைத் தாண்டிய நட்பு. சாதியவாதம், வகுப்புவாதம், பெரும்பான்மைவாதம், எதேச் சதிகாரம் ஆகிய அனைத்திற்கும் எதிராக ஜன நாயக சக்திகள் ஒற்றுமையுடன் பணியாற்றுவது தான் தோழர் நல்லகண்ணுவிற்கு நாம் வழங்கும் நூற்றாண்டுப் பரிசாக அமையும்'' என்றார்.
ம.தி.மு.க. தலைவர் வைகோ பேசுகையில், "உலகம் போற்றும் தலைவர் ஐயா நல்லகண்ணு, காந்தியவாதியாக காங்கிரஸை பின்பற்றி, பல நூல்களை வாசித்ததன் விளை வால் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். அதன்பிறகு பல பொறுப்புகளை ஏற்று மக்கள் பணியில் இறங்கிவிட்டார். போராட்டக்களத்தில் தலை மறைவாக இருந்த அவரை காவல்துறை கண்டறிந்து பிடித்து, அவரின் மீசையில் நெருப்புச்சூடு வைத்தும், ஒவ்வொரு முடியாகப் பிடுங்கி யும் கொடுமைப்படுத்தினர். இருப்பினும் தான் கொண்ட கொள்கையில் உறுதியாக நின்றவர் ஐயா நல்லகண்ணு. அதைவிடத் தனக்கு கிடைத்த விருதுத் தொகைகளையெல்லாம் கட்சிக்கும், விவசாய சங்கங்களுக்கும், முதலமைச்சர் நிவாரண நிதிக்கும் வழங்கினார். ஒருமுறை அவரது மகள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் 3 நாட்கள் தங்கியிருந்தார். அப்போது 3 நாட்கள் தங்கியதற்கான வாடகை 110 ரூபாயை கட்சி அலுவலகத்திற்கு கொடுத்தார். அவரது தியாக வாழ்வு ஈடுசெய்ய இயலாதது'' என போற்றினார்.
நக்கீரன் ஆசிரியர் பேசுகையில், "நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம் மலையினும் மாணப் பெரிது என்று அய்யன் திருவள்ளுவர் எழுதிய குறள், ஐயா நல்லகண்ணு விற்கு உரித்தாகும். ஆரவாரமில்லாத அன்பு, பண்பு இதெல்லாம் யாருக்கு இருக் கிறதோ அவர்கள் மலையைவிடப் பெரியவர்கள் என்று அன்றைக்கு அய்யன் திருவள்ளுவர் கூறியிருக் கிறார். ஆசையே இல்லாத ஒரு மனிதன் 100 ஆண்டுகள் வாழ முடியுமா? நல்லகண்ணு அவர்கள் வாழ்ந்திருக்கிறாரே! ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் குடும்பத்தோடு அவரது இல்லத்திற்குச் செல்வோம். சுனாமி வந்த காலகட்டத்தில் அவர் திருமுல்லைவாயிலில் இருந்தார். அப்போது சுனாமியைக் கண்டு பதறிவிட்டார். அவருடைய உயிருக்காக இல்லை, பொதுமக்கள் என்னாவார்களோ என்கிற பார்வையில் அவர் பதறினார் என்பது எவ்வளவு பெரிய விசயம். எங்களை பொடா வழக்கில் கைது செய்தபோது, கலைஞர் தலைமையில் மிகப்பெரிய கண்டனக் கூட்டம் நடைபெற்றது. அதில் அவர் பேசியபோது, "பொடா கொடுமையைத் தடுக்கவில்லை என்றால் நாடே குட்டிச்சுவராகிவிடும். யாரும் அரசியலே பேச முடியாது. இன்றைக்கு நக்கீரன் ஆசிரியருக்கு நடந்தது நாளைக்கு அனைவருக்கும் நடக்கும். தலைவர்கள் கையைத் தூக்கி விட்டு இறக்கிவிடக்கூடாது. தொடர்ந்து கையை உயர்த்திக் கொண்டிருக்க வேண்டும். அனைத்து நகரத்திலும் இதுபோன்று கூட்டத்தை நடத்த வேண்டும்' என்று பொடா வழக்கில் கைதான எங்களுக்காக ஐயா நல்லகண்ணு பேசினார்'' என நினைவுகூர்ந்தார்.
நடிகர் விஜய்சேதுபதி பேசு கையில், "நல்லகண்ணு ஐயாவின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்வதில் பெருமை கொள் கிறேன். நல்லகண்ணு ஐயாவின் வாழ்க்கை வரலாறு பாடப் புத்தகத்தில் இடம்பெற வேண்டும் என்று தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன். "விடுதலை 2' படத்தில் மஞ்சு வாரியர் சொல்லக்கூடிய வசனங்களைப் போல தோளில் துண்டு போடுவதும், காலில் செருப்பு அணிவதும், தீபாவளி, பொங்கலுக்கு போனஸ் வாங்குவதும், 8 மணி நேர வேலை நேரமாக இருப்பதும், ஞாயிற்றுக்கிழமை விடுமுறையாக இருப்பதும் நல்லகண்ணு மாதிரி பல தோழர்கள் போராடி, ரத்தம் சிந்தித் தாக்கப்பட்டு, உயிரிழந்து வாங்கிக் கொடுத்தது என்று எத்தனை பேருக்குத் தெரியும். இது பற்றித் தெரியாத பலபேர்களில் நானும் ஒருத்தன். அதில் பலனடைந்த பல பேர்களில் நானும் ஒருத்தன். தோழர் நல்லகண்ணு பற்றி தெரிந்துகொள்வது எனக்கு சந்தோஷம்'' என்றார்.
கவிஞர் வைரமுத்து பேசுகையில், "நீங்கள் ஒருவரை வாழ்த்தும்பொழுது நூறாண்டு வாழ்க என்று கூறுவீர்கள். இவரை எப்படி வாழ்த்துவீர்கள்? நீங்கள் விரும்பும்வரை வாழுங்கள் என்று வாழ்த்துங்கள். எளிமைதான் இந்த உலகில் எளிமையானது. ஆடம்பரம் இல்லாத சொல் எளிமை. அந்த சொல்லுக்கு இனி நல்லகண்ணு என பொருள்படும். நல்லகண்ணு அவர்களே, தோழர்கள் இருக்கிறார்கள், சமூகம் இருக்கிறது... வாழுங்கள். நீங்கள் விரும்பும்வரை வாழுங்கள். இந்தச் சமூகம் எவ்வளவு வாழுமோ அவ்வளவு வாழுங்கள் என்று வாழ்த்து கிறேன். இப்படி ஒருவர் வாழ்வதை எதிர்காலம் நம்பாது'' என புகழாரம் சூட்டினார்.
வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் பேசுகை யில், "மகத்தான தலைவனுக்கு நடக்கும் இந்த விழாவுக்காக, 92 வயது கடந்தும் தவறாமல் தலை மையேற்றிருக்கும் பழ.நெடுமாற னுக்கு வாழ்த்துகள். நானும், வாழ்த்துவதைக் காட்டிலும் வாழ்த்துப் பெறத்தான் வந்தேன். பொதுவாழ்வில் தூய்மை, நேர்மை, தனிமனித ஒழுக்கம் இதெல்லாம் யார் வேண்டு மானாலும் பேசலாம். ஆனால் ஒரு மனிதன், தான் வாழ்ந்து கொண்டிருக்கிற நூறு ஆண்டிலும் அதைக் கடைபிடித்தார் என்றால் அது நல்லகண்ணு ஒருவர்தான். நல்லகண்ணு போல நல்ல மனிதர்களாக இளைய தலைமுறையினர் வரவேண்டும்'' என்றார்.
அனைத்துக் கட்சித் தலைவர்கள், முக்கிய பிரபலங்களின் புகழுரையால் தோழர் நல்லகண்ணு ஐயா மிகவும் நெகிழ்ச்சியுடன் காணப்பட்டார்.