சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பெருங்குடி கல்லுக்குட்டைப் பகுதியில் திருவள்ளு வர், அம்பேத்கர் புரட்சி, ஜெ.ஜெ., சந்தியா, செம்பொன், அஞ்சுகம் அம்மையார், அண்ணல் அம்பேத்கர் நகர் என்ற பெயர்களில் பல குடியிருப்புக்கள் உண்டு. அங்கே 30 ஆண்டுகளுக்கும் மேலாக, தினக்கூலி வேலை செய்து வாழ்க்கை நடத்தும் விளிம்பு நிலை மக்களின் 15 ஆயிரத்துக் கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இப்பகுதி மக்கள் இன்றுவரை தங்களுக்கான பட்டாவைப் பெறப் போராடிக்கொண்டிருக்கிறார்கள். இந்த போராட்டத்துக்கிடையே, தங்கள் பகுதி மக்களின் முன்னேற்றத்துக்கான செயல்களிலும் ஒருங்கிணைந்து செயல்பட்டு பிரமிக்க வைக்கிறார்கள்.
இதுகுறித்து கல்லுக்குட்டை குடிசை வாழ் மக்கள் நலச்சங்கத்தின் தலைவர் ஜேம்ஸ் ராஜசிகாமணி கூறுகையில், "கல்லுக்குட்டை என்றால் ஏரியோ, குட்டை, குளமோ இல்லைங்க. தமிழக அரசால் 1956-ல் 180 ரூபாய்க்கு தனியாரிடமிருந்து வாங்கப்பட்ட நிலம்தான் இது. அந்தக் காலத்தில் இங்கே எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாமல் இருந்தது. திறந்தவெளி கழிப்பிடம் காரணமாக நோய்த் தொற்றுக்கள் பரவலாலும், விஷப் பூச்சிகள் கடியாலும் நூற்றுக் கணக்கான உயிர்களை இழந்துள் ளோம். இப்பகுதியில் வசிக்கும் குழந்தைகளின் கல்விக்காக, அரசு பள்ளியை அமைக்க எடுத்த முயற்சிகள் பல்வேறு காரணங்களைச் சொல்லி மறுக்கப்பட்டன. அதே போல், இந்த குடியிருப்புகளுக்கான பட்டா பெறுவதற்கும் பல்வேறு தடைகள்... போராட்டங்கள்.
2006ஆம் ஆண்டில் கலைஞர் ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட அரசாணையான, பத்து ஆண்டுகளுக்கு மேல் அரசு நிலத்தில் வசிப்போருக்கு பட்டா வழங்குவதற்கான ஆணை எண் 854ன் கீழ், பட்டா பெறுவதற்கு பல்வேறு முயற்சிகளும், மக்கள் மன்றத்தில் போராட்டங் களும், நீதி மன்றத்தில் சட்டப் போராட்டங்களும் நடத்தப்பட்டன. மாநகராட்சி ஆணையர், தலைமைச் செயலாளர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை முதன்மை செயலாளர், மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர்கள் என அரசின் பல்வேறு படிநிலைகளுக்கும் மனு அளித்தோம். பட்டா வாங்குவதற்கான சட்டப்போராட்டத்தின் இறுதியாக, மக்களின் வாழ்வாதார உரிமைகள் மறுக்கப்படுகிறது என தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் குறிப்பிட்டதையடுத்து, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்கு மக்களின் மனுவை அனுப்பி துரித நடவடிக்கை மேற்கொள்ளும்படி கூறியுள்ளது'' என்றார்.
நிலத்தின் தன்மை குறித்து சரியான கொள்கை முடிவு எடுத்தால் மட்டுமே இதற்கு தீர்வு என்ற நிலையில், இந்தப் பகுதிக்கு அடிப்படை வசதிகளோ, பட்டாவோ வழங்க முடியாது” என மாவட்ட ஆட்சியர் மறுத்து விட்டதாக கடிதங்களை காட்டினார் வழக்கறிஞர் அ.விஜயலட்சுமி. இவர், இப்பகுதி மாணவ மாணவிகளுக்கும், பெண்களுக்கும் சட்டம் குறித்த அடிப்படை விழிப்புணர்வை ஏற்படுத்திவருகிறார்.
பட்டாவுக்கான போராட்டம் ஒருபுறம் இருந்தாலும், இங்கே உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. இத்தொகுதியில் இரண்டு முறை எம்.எல்.ஏ.வாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அரவிந்த் ரமேஷ், தனது சொந்தச்செலவில் ஜே.சி.பி. மூலமாகப் பள்ளம் மேடுகளை நிரவி மண்ணடித்து மேம்படுத்தியதோடு, தார்ச்சாலைகளையும் அமைத்துக்கொடுத்துள்ளதாகப் பெருமிதத்துடன் கூறினார்கள். இதுகுறித்து எம்.எல்.ஏ. அரவிந்த் ரமேஷிடம் கேட்டபோது, தமிழக முதல்வரின், "தொகுதியில் நீண்டகாலமாக தீர்க்கப்படாத முக்கியப் பிரச்னைகளில் தீர்வு' என்ற துரிதத் திட்டத்தின்கீழ் இப் பகுதி இடம்பெற்றுள் ளது. கலைஞர் ஆட்சி யின்போதுதான் மின் இணைப்பு, வாட்டர் டேங்குகள், லாரிகள் மூலம் தண்ணீர் போன்ற பல்வேறு மக்கள் நலப்பணிகள் இப்பகுதியில் நிறை வேற்றப்பட்டன. இப் பகுதியின் நீண்டகாலக் கோரிக்கையான வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் என்ற கோரிக்கையையும், இந்நிலத்தின் தன்மை சார்ந்த பிரச்னைகளையும் சட்டமன்றத்தில் விளக்கி யுள்ளேன். முதல்வரின் வழிகாட்டுதலின்படி இப்பிரச்சனைகள் அனைத்தும் தீருமென்று நம்புகிறேன். இப்பகுதி மக்களின் நம்பிக்கையும் இதுதான்'' என்றார்.
அதேபோல், 184-வது வார்டு கவுன்சிலர் எஸ்.வி.ரவிச்சந்திரன், இப்பகுதி மக்களுக்காக முக்கிய சாலைகளில் இதுவரை சொந்தச் செலவில் தெருவிளக்குகள் அமைக்கும் பணிகளைச் செய்து கொடுத்துள்ளார். மேலும், இவரது முயற்சியால், சென்னை மாநகராட்சியின் மூலமாக 70 லட்சம் ரூபாய் செலவில் 900 தெரு விளக்குகள் அமைக்கும் பணிகளுக்கான தொடக்க விழா, சென்னை மாநகராட்சி 14 வது மண்டல குழுத் தலைவர் எஸ்.வி.ரவிச்சந்திரன் ஏற்பாட்டில் 10.07.2022, தென்சென்னை எம்.பி. தமிழச்சி தங்கப்பாண்டியன் சோழிங்கநல்லூர் எம்.எல்.ஏ. ச.அரவிந்த்ரமேஷ் தலைமையில் நடை பெற்றது.
இப்பகுதியில் மக்கள்நலப் பணிகளில் செயல்பட்டுவரும் "அன்பின் அக்ஷய பாத்திரம்' அறக் கட்டளை அமைப் பைச் சேர்ந்த ஆறு முகம் கூறுகையில், "அறம் செய விரும்பு' என்ற கூற்றுப்படி, கடந்த ஏழு ஆண்டுகளாக எங்கள் அறக்கட்டளையின் மூலம் அடித்தட்டு மக்களை மேம்படுத்தும் நோக்கோடு இப்பகுதியில் சமூகப் பணியாற்றிவருகிறோம். எங்கள் அமைப்பின் மூலமாக, கல்லுக்குட்டைப் பகுதியைச் சேர்ந்த 25 மாணவ, மாணவிகளுக்கு கையடக்க மடிக்கணினியும், 200 மாணவர்களுக்கு தலா 2,000 கல்வி ஊக்கத் தொகையும், மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு காது கேட்கும் கருவி உள்ளிட்ட பல்வேறு உபகரணங்களும், அரசு போட்டித் தேர்வுக்குப் பயின்றுவரும் மாணவ, மாணவிகளுக்கு 50,000 ரூபாய் மதிப்புகொண்ட புத்தகங்கள், விளையாட்டுத் திடலுக்குத் தேவையான உபகரணங்கள் உள்ளிட்டவைகளை வழங்கியிருக்கிறோம். கொரோனாவிலிருந்து தமிழக மக்களை மீட்டெடுப்பதற்காக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனின் அன்புக்குரிய மகன் அன்பழகனை கொரோனா பெருந்தொற்று பறித்துக்கொண்டது. அவரது மகனின் நினைவாக எங்கள் அறக்கட்டளைக்கு "அன்பின் அக்ஷய பாத்திரம்' என்று பெயர் மாற்றம் செய்தோம்'' என நெகிழ்வுடன் கூறினார்.
கடந்த பல வருடங்களாக பெருமளவில் நிலங்களை ஏமாற்றி விற்கும் ரியல் எஸ்டேட் கும்பலும், ரவுடியிசமும், கஞ்சா, கள்ளச்சாராயம் போன்ற போதைப் பொருள்களும் மலிந்து போய்க்கிடந்த கல்லுக்குட்டைப் பகுதியில் தற்போது அடையாறு காவல்துறை துணை ஆணையர் மகேந்திரன், தரமணி உதவி ஆணையர் ஜீவானந்தம் முன்முயற்சியில், குற்றங்கள் குறைக்கப்பட்டுள்ளன. காவல்துறை ‘போலீஸ் பாய்ஸ் கிளப்’ மூலம் ஏழை எளிய மாணவ, மாணவிகளுக்கு, பாக்ஸிங், சிலம்பம் போன்ற தற்காப்புப் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இதில் பயிற்சிபெற்று, மாவட்ட, மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகளையும் வென்றெடுக்கிறார்கள்.
கல்லுக்குட்டை குடிசைவாழ் மக்கள் நலச் சங்கம் சார்பில் விளையாட்டுத் திடல் அமைப்பு, கல்வி மேம்பாட்டு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாணவர்களின் கல்வி முன்னேற்றத்துக்காக, இரவு பாடசாலை, ஸ்பெஷல் கோச்சிங் மூலம் 50 மாணவர்களுக்கு டி.என்.பி.எஸ்.சி. தேர்வுப் பயிற்சிகள் மூலம் அரசு வேலைகள் மற்றும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., தேர்வுகளுக்குண்டான பயிற்சி முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளன. மக்கள் பிரதிநிதிகள், தொண்டு நிறுவனங்களோடு இப்பகுதிவாழ் மக்கள் ஒருங்கிணைந்து செயல்படுவதன்மூலம் கல்லுக்குட்டைப் பகுதி மக்களை இருட்டிலிருந்து வெளிச்சத்துக்கு அழைத்துச் சென்று கொண்டிருப்பதாக நம்பிக்கையோடு தெரிவிக்கிறார்கள் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள். விரைவில் பட்டா பெறுவதற்கான பணிகளும் நிறைவடைந்தால் மகிழ்ச்சி உச்சத்தை எட்டக்கூடும்.
-சுந்தர் சிவலிங்கம்