"எங்கள் அரசியல் கோட்பாடுகள் சரி யென்று பட்டால் வாக்கு தாருங்கள்... அல்லது அவர்களுக்கே தாருங்கள்! எங்களை ரோட்டில் போட்டீர்கள்... இனி எங்களைத் தூக்கி சுடுகாட்டில் போடுங்கள்! அவர்களுக்கு வாக்கை போடுங்கள்... எங்களுக்கு வாக்கரிசி போடுங்கள்'' என்று நாம் தமிழர் கட்சித்தலைவர் சீமான் வேண்டிவிரும்பிக் கேட்டதால், அவரது கட்சிக்கு வாக்கரிசி போட்டிருக்கிறார்கள் பெரியார் பிறந்த ஈரோடு மக்கள்!
நடந்துமுடிந்த ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில், அ.தி.மு.க., பா.ஜ.க. உட்பட பல கட்சிகள் ஒதுங்கிக்கொள்ள, தி.மு.க.வுக்கு எதிராக சீமானின் நாம் தமிழர் கட்சியும், சுயேட்சைகள் 44 பேரும் களம்கண்டனர். தேர்தல் பிரச்சாரத்தின் போது தொடர்ச்சியாகப் பெரியாரை இழிவு படுத்திப் பேசிய சீமானால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த 5ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில், மொத்தம் ஒரு லட்சத்து 54 ஆயிரத்து 657 பேர் வாக்களித்தனர்.
இடைத்தேர்தல் என்றாலே ஆளுங்கட்சியின் அமைச்சர்கள் பட்டாளமாகக் களமிறங்க, திருவிழா போல பிரச் சாரம் செய்வதுதான் வழக்கம். ஆனால் இம்முறை, முக்கிய எதிர்க்கட்சியான அ.தி.மு.க. போட்டிக்கு வராததால் தி.மு.க., தேர்தல் பொறுப்பாளரான அமைச்சர் சு.முத்துசாமியை மட்டுமே கள வேலையை கவனித்துக்கொள்ளச்செய்தது. அவர், வேட்பாளர் சந்திரகுமாருடனும், தொகுதியிலுள்ள கூட்டணிக் கட்சிகள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகி களுடனும் வீடுவீடாகச் சென்று வாக்கு கேட்டது தொகுதி மக்களை ஈர்த்தது. மூத்த அமைச்சர்களான கே.என்.நேரு, எ.வ.வேலு மற்றும் வெள்ளக்கோயில் சாமிநாதன், செந்தில் பாலாஜி, சக்கரபாணி உட்பட சில அமைச்சர்கள் ஈரோட்டுக்குள் வராமல் அவ்வப்போது புறநகர் பகுதிகளுக்கு வந்து தேர்தல் செயல்பாடுகளை ஆய்வு செய்து, வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கு வைட்டமின் "ப' வழங்கி, உடன்பிறப்புக்களுக்கு உற்சாகம் ஏற்படுத்திவிட்டுச் சென்றார்கள். மற்றபடி எந்த அமைச்சர்களும் தொகுதிக்குள் வரவில்லை.
தி.மு.க.வின் பிரச்சார யுத்தி இப்படியிருக்க, நாம் தமிழர் கட்சி சீமானோ தந்தை பெரியாரை அவமரியாதை செய்து, அவரின் கருத்துக்களை, சமூக நீதிக்கான அவரது அர்ப்பணிப்பான போராட்டங்களைக் கேவலப்படுத்தி, எந்த அளவுக்கு தரம் தாழ்ந்து செல்ல முடியுமோ அந்த அளவுக்கு அருவருப்பான பிரச்சாரத்தை செய்து, பெரியார் மீதான தனது அரிப்பைத் தீர்த்துக்கொள்ளும் களமாகக் கட்டமைத்துக்கொண்டார் என்பதே உண்மை. சீமானின் கணக்குப்படி, அவரது கட்சி ஏற்கெனவே பெற்ற 11 ஆயிரம் வாக்குகள், அ.தி.மு.க.வின் 45 ஆயிரம் வாக்குகள், பா.ஜ.க.வின் 7000 வாக்கு கள் என 63 ஆயிரம் வாக்குகள் மொத்த மாகத் தனக்கு கிடைக்குமென்று அதீத நம்பிக்கையோடு இருந்தார். அதோடு, பெரியார் குறித்து இழிவாகப் பேசிவருவதால், பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். தரப்பிடம் நற்சான்றிதழ் பெற்று, ஆதாயமடையவும் திட்டமிட்டிருந்தார். பெரியா ரில் தொடங்கி, கலைஞர், முதல்வர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் வரை அவதூறுப் பிரச்சாரம் செய்தார் சீமான்.
தேர்தல் நன்முறையில் நடக்கவேண்டுமென்ற ஒரே எண்ணத்தில், சீமானின் வெடிகுண்டு வீசும் தீவிரவாதப் பேச்சைக்கூட புறந்தள்ளிவிட்டு, தேர்தல் பணியில் கவனம் செலுத்தியது தி.மு.க. அதேவேளை, தந்தை பெரியார் திராவிடர் கழகம், திராவிட விடுதலைக் கழகம், மே17 இயக்கம் உள் ளிட்ட கட்சிகளின் பெரியாரிய உணர்வாளர்கள், சில சுயேச்சைகளைக் களமிறக்கி, பெரியார் குறித்த சீமானின் பொய்களை வாக்காளர்களிடம் அம்பலப்படுத்திவந்தனர். ஏதேதோ செய்து கலவரத்தை ஏற்படுத்த முனைந்த சீமான், அவரது திட்டங்களிலும், தேர்தலிலும் தோல்வியையே சந்தித்தார்.
தேர்தலில், தி.மு.க. வேட்பாளர் வி.சி. சந்திரகுமார் ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 79 வாக்குகளும், எதிர்த்துப் போட்டியிட்ட நாம் தமிழர் வேட்பாளர் சீதாலட்சுமி 24,151 வாக்குகளும் பெற்றனர். 6109 வாக்குகள் நோட்டாவுக்கு கிடைத்துள்ளது. நாம் தமிழர் வேட்பாளர் டெபாசிட்டை இழக்க, தி.மு.க. வேட்பாளர், 91,558 வாக்குகள் வித்தியாசத்தில் சாதனை படைத்தார்.
"நான்காண்டு கால தி.மு.க. ஆட்சிக்கு மக்கள் கொடுத்த நற்சான்றிதழ்'' என தேர்தல் வெற்றி குறித்து பெருமிதத்துடன் முதல்வர் கூறினார்.
"தொகுதி மக்களின் தேவைகளை அறிந்து ஒரு முன்மாதிரியான எம்.எல்.ஏ.வாக நடந்து கொள்வேன்'' என சந்திரகுமார் கூறினார். வெற்றிபெற்ற சந்திரகுமார், பிப்ரவரி 10ஆம் தேதி, ஈரோடு கிழக்கு எம்.எல்.ஏ.வாக பதவியேற்றார். அவருக்கு சபாநாயகர் அப்பாவு பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். இந்நிகழ்வில், முதல்வர் ஸ்டாலின், துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், வைகோ, திருமாவளவன், செல்வப் பெருந்தகை உள்ளிட்ட இந்தியா கூட்டணிக்கட்சித் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
எல்லா விமர்சனங்களையும் தாங்கிய பெரியார் மண்ணில், மீண்டும் பெரியார் வாழ்க என்ற கோஷம் ஓங்கி ஒலித்துள்ளது எனத் தி.மு.க.வினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.
படுதோல்வியடைந்த சீமான், தேர்தல் முடிவுக்குப் பிறகு வெளியே தலைகாட்டாமல் அமைதியாக இருக்கும் நிலையில், தமிழகத்தில் கலவரத்தைத் தூண்டும் விதமாக கடந்த ஒரு மாதமாக சீமான் பேசிய பேச்சுக்களுக்கு சட்ட நடவடிக்கையை தி.மு.க. எப்போது எடுக்கப் போகிறது என்பதை தி.மு.க.வினரும், பெரியாரிய உணர்வாளர்களும் பெருத்த எதிர்பார்ப்புடன் பார்த்துக்கொண்டிருந்த நிலையில்... தற்போது சீமானுக்கு போலீஸ் தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருக்கிறது.
-ஜீவாதங்கவேல்