"பயமா இருக்கு; என்னை காப்பாத்த முடியுமா? ஹெல்ப் பண்ணுங்க சி.எம். ப்ளீஸ்! என்று இரண்டு சீறுநீரகங்களும் செயலிழந்த சிறுமி ஜனனியின் உருக்கமான அந்த வீடியோ பேச்சு ஒட்டுமொத்த தமிழகத்தையும் கடந்த வாரம் உலுக்கி எடுத்தது. நெஞ்சை உருக்கும் அந்த சிறுமியின் பேச்சை கேட்டு, சிறுமிக்கான மருத்துவ சிகிச்சைக்கு உடனடியாக ஏற்பாடு செய்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
சிறுமிக்கு சிகிச்சை அளிக்கும் சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்குச் சென்ற முதல்வர் ஸ்டாலின், "குழந்தையின் உயிரைக் காப்பாற்ற அனைத்து உயரிய சிகிச்சைகளும் தரப்பட வேண்டும்' என்று டாக்டர்களிடம் வலியுறுத்தியவர், "கவலைப்படாதே பாப்பா! நீ குணமாகி விடுவாய். இனி எந்தப் பிரச்சினையும் இருக்காது'' என்று ஜனனிக்கும் அவரது தாய் ராஜநந்தினிக்கும் நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறார் மு.க.ஸ்டாலின்.
சேலத்தை சேர்ந்த ராஜநந்தினியின் மகள் ஜனனி. பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி. இரண்டு சிறுநீரகங்களும் ஜனனிக்கு செயலிழந்து விட்டன. கோவை தனியார் மருத்துவமனையில் ஜனனிக்கு மாற்று சிறுநீரகம் பொருத்தப்பட்டது. தாய் ராஜநந்தினி தனது சிறுநீரகத்தை தனது குழந்தையின் உயிரைக் காப்பாற்ற கொடுத்திருந்தார். ஆனால், ஓரிரு மாதங்களிலேயே அந்த சிறுநீரகமும் செயலிழந்து விட்டது. இதனால் ஜனனிக்கு டயாலிசிஸ் சிகிச்சை கொடுக்கப்பட்டு வந்திருக்கிறது. கணவனும் கைவிட்டிருந்த நிலையில், மகளைக் காப்பாற்ற போராடிவந்தார் ராஜநந்தினி.
இந்த நிலையில்தான் முதல்வர் ஸ்டாலினுக்கு, ஜனனி வைத்த உருக்கமான வேண்டுகோள் சிறுமியை காப்பாற்றியிருக்கிறது. ஜனனியை பாதுகாக்கும் பொறுப்பினை ஏற்றிருக்கிறார் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்.
அவரிடம் நாம் பேசியபோது,’"பிரைமரி ஹைபர் ஆக்சலேரியா எனும் அரிய வகை நோயினால் தாக்கப்பட்டிருக்கிறார் சிறுமி ஜனனி. முதல்வரின் உத்தரவுப்படி, உடனடியாக ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனையில் சிறுமியை அட்மிட் செய்தோம். சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள், "சிறுநீரகங்கள் மட்டுமல்ல, கல்லீரலும் பாதிக்கப்பட்டிருக்கிறது. இரண்டும் மாற்றப்பட வேண்டும்' என தெரிவித்தனர். இதனையடுத்து, மாற்று சிறுநீரகமும், கல்லீரலும் பெறுவதற்காக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அது கிடைக்கும் வரையிலான டயாலிஸுக்காக ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் ஜனனி. முதல்வரே நேரில்வந்து பார்த்து ஆறுதல் தந்தது, ஜனனிக்கும் அவரது அம்மாவுக்கும் பெரும் நம்பிக்கை தந்துள்ளது. உறுப்பு தானம் கிடைத்ததும், முழுமையாக சிறுமி காப்பாற்றப்பட்டு விடுவார்'' என்றார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்.
சிறுமி ஜனனியின் தாய் ராஜநந்தினியை தொடர்புகொண்டு நாம் பேசியபோது, "கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில்தான் என் குழந்தைக்கு தவறான சிகிச்சை அளித்தனர். இதனால்தான் 2 சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டது. எனது சிறுநீரகத்தை கொடுத்தேன். அவர்கள் என்ன ஆபரேசன் செய்தார்கள்னு எனக்கு தெரியலை. அதுவும் கெட்டு விட்டது. இதனால் கல்லீரலும் பாதிக்கப்பட்டுவிட்டது. 40 லட்சம் கொண்டு வந்தீங்கன்னா எல்லாம் சரி செய்துவிடலாம்னு சொன்னாங்க. ஆரம்பத்திலேயே கல்லீரல்தான் பிரச்சினையா இருந்திருக்கும்போல. ஆனா, கல்லீரலை சரிசெய்ய சிகிச்சை கொடுக்காம சிறுநீரகம் பாதிக்கப்பட்டு விட்டதுன்னு சொல்லி சிகிச்சை தந்திருக்காங்க. அதனாலதான் என் பொண்ணு உயிருக்கு போராடினா. மூணு நாளைக்கு ஒருமுறை டயாலிசிஸ் பண்ணணும். ஒவ்வொரு முறையும் 3,000 ரூபாய் ஆகும். கட்டிய கணவன் சரியில்லே... கணவன் குடும்பமும் ஆதரிக்கலை. ஒரு தாயாக என் குழந்தையை எப்படியாச்சும் காப்பத்திடணும்னு ஒரு வருஷமா போராடிக்கிட்டிருந்தேன். எல்லாருமே கைவிட்ட நிலையில்... சென்னைக்குப் போய் முதலமைச்சரை பார்த்து கதறுவோம்னு நினைச்சித்தான் சென்னைக்கு வந்தேன்.
"என் குழந்தையை காப்பாத்துங்க''ன்னு சி.எம். செல்லுல மனு கொடுத்தேன். உடனே ஸ்டான்லி ஹாஸ்பிட்டலுக்கு போங்கன்னு சொன்னாங்க. ஸ்டான்லிக்கு போய் பெரிய டாக்டரை பார்த்து கதறினேன். ஒண்ணும் நடக்கலை. பொண்ணுக்கு டயாலிசிஸ் பண்ணி மூணு நாளாயிடுச்சி. டயாலிசிஸ் பண்ணலைன்னா கஷ்டமாயிடும். அவளும் வலி வலின்னு துடிக்கிறா. ஹாஸ்பிட்டலிலும் சேர்த்துக்கமாட்டேங்கிறாங்க. என்ன பண்றதுன்னே புரியலை. அறிவாலயத்துக்கு போய் ஸ்டாலினையோ உதயநிதியையோ பாருங்க. நிச்சயம் நல்லது நடக்கும்னு சிலபேரு சொன்னாங்க.
பஸ்சை புடிச்சி அறிவாலயத்துக்கு வந்தேன். ரொம்ப சோர்வா இருந்த என் பொண்ணு அறிவாலயத்துக்குள்ளே நடக்கும்போதே மயங்கி விழுந்துட்டா. அப்போ யாரோ ஒரு மினிஸ்டர் அறிவா லயத்துக்குள்ள நுழைஞ்சாரு. அவரு ஓடோடி வந்து, "என்னம்மா ஆச்சு?' என விசாரிச்சாரு. என் குழந்தையின் நிலைமையை சொல்லி, "முதலமைச்சரை பார்க்க வந்தேன்' என சொன்னதும், "முதல்ல ஸ்டான்லி ஹாஸ்பிட்ட லுக்கு குழந்தைய கூட்டிட்டு போம்மா' என அவர் சொல்ல... ஸ்டான்லிக்கு போய் வந்ததையும் சொன்னேன். அவரால எதுவும் பேசமுடியலை. உடனே, "டயாலி சிஸ் பண்றதுக்கு எவ்வளவு செலவாகும்?''னு கேட்டாரு. "மூவாயிரம் ஆகும் சார்''னு சொன்னேன்.
"முதல்ல டயாலிசிஸ் பண்ணும்மா. மத்ததை அப்பறம் பார்த்துக்கலாம்''னு 3,500 ரூபாய் கொடுத்தாரு. அந்த மினிஸ்டர் பேரு என்னன்னுகூட எனக்கு தெரி யலை. டயாலிசிஸ் பண்ணதற்கு பிறகு என் பொண்ணுக்கு கொஞ் சம் தெம்பு வந்தது. அப்புறம்தான், "என் உசிரை காப்பாத்த முடியுமா சி.எம்.சார்'னு, ஸ்டாலின் அய்யாவுக்கு என் பொண்ணு வீடியோவில பேசினா.
முதலமைச்சர் இந்த வீடியோவை பார்த்திருக்காரு. உடனே எங்களை தொடர்புகொண்டு பேசினார். உடனே அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு அவர் உத்தரவிட்டிருக் கணும். உடனே என்னை தொடர்புகொண்டு பேசி, நேரில் வரவழைத்து அனைத்து உதவிகளையும் செய்ய ஆரம்பிச்சிட்டாரு அமைச்சர் மா.சுப்பிரமணியன். என் குழந்தைக்கு தேவையான அனைத்து மருத்துவ சிகிச்சைகளையும் அரசாங்கம் பார்த்துக்குது. ஹாஸ்பிட்டலுக்கு நேரிலேயே வந்து நலம் விசாரிச்ச முதலமைச்சர் ஸ்டாலின் அய்யாதான் எனக்கும் என் குழந்தைக்கும் கடவுள்.
தங்குவதற்குகூட இடம் இல்லாமல் அவதிப்பட்டு வந்த எங்களுக்கு எம்.எல்.ஏ. ஹாஸ்டல்ல ஒரு ரூம் ஒதுக்கி, தங்க வெச்சி ருப்பதுடன் சாப்பாட்டுக்கு தேவையானதையும் ஏற்பாடு செஞ்சி கொடுத்திருக்காரு அமைச்சர் மா.சுப்பிர மணியன். என் குழந் தைக்கு உறுப்பு மாற்று சிகிச்சை செய்ய வேண்டும். கல்லீரலும் சிறுநீரகமும் கிடைப்பதற் கான முயற்சியை அர சாங்கம் எடுத் திருக்கிறது. உறுப் புகள் கிடைக் கும்வரை, ஸ்டான்லி மருத் துவ மனையில் டயாலிசிஸ் சிகிச்சை என் பொண்ணுக்கு தரப்படுகிறது. அதற்கான அனைத்து நடவடிக்கையையும் முதல்வரய்யாவும் அமைச்சரும் எடுத்திருக்காங்க.
என் குழந்தையை காப்பாற்ற எவ்வளவோ கஷ்டங்கள், போராட்டங்கள், துரோகங்கள் என பலதையும் பார்த்துவிட்டேன். இனி நாங்க வாழ முடியுமா? என்ற மனநிலைக்கு தள்ளப்பட்ட நிலையில், கடவுளாக வந்து காப்பாற்றியிருக்கிறார் முதலமைச்சர். இருப்பினும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்தால் மட்டுமே என் மகள் முழுமையா காப்பாற்றப்படுவாள். ஸ்டாலின் அய்யா ஆட்சியில் நல்லது நடக்கும்ங்கிற நம்பிக்கையில் இருக்கிறோம்'' என்றார் கண்ணீர் மல்க.
தாயும் மகளும் தங்குவதற்கு இடமில்லாத நிலையில், தி.மு.க. எம்.எல்.ஏ. அரவிந்த் ரமேஷின் அறையை அவரிடமிருந்து பெற்று, ஜனனியும் அவரது அம்மாவும் தங்கிக்கொள்ள அவர்களுக்கு ஒதுக்கித் தந்திருக்கிறார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்.
அதேபோல, தென்காசியில் கொத்தனார் குடும்பத்துல இசக்கியம்மாள்னு 8 வயது குழந்தை ப்ளீச்சிங் பவுடரை சாப்பிட்டதில் அந்த குழந்தையின் உடல் வெறும் 4 கிலோவாக குன்றிவிட்டது. நெல்லையில் உள்ள மருத்துவமனைக்கு சென்றிருக்கிறார்கள். அங்கு சிகிச்சை அளிக்க முடியாமல் சென்னைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து நக்கீரன் விரிவான செய்தி வெளியிட்டிருந்தது.
சென்னையில் ஜி.ஹெச்.சில் அட்மிட் செய்யப்பட்ட அந்த குழந்தையைப் பார்த்துவிட்டு டாக்டர்களிடம் விவாதித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், "குழந்தைக்கு தேவையான அனைத்து சிகிச்சைகளையும் செய்யுங்கள்' என கேட்டுக்கொண்டார். "குழந்தையின் அப்பா, அம்மா, மற்றொரு பெண் குழந்தை மூவரும் நடைபாதையில் தங்கியிருப்பதையறிந்து, அவர்களைச் சந்தித்து எம்.எல்.ஏ. விடுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார் அமைச்சர் மா.சுப்பிரமணியன். அங்கு விடுதியில் உள்ள தனது அறையின் சாவியைக் கொடுத்து அந்த குடும்பத்தை தங்க வைத்துள்ளார். அவர்களுக்கு 3 மாதத்திற்கு சாப்பாட்டிற்கு தேவையான அனைத்தும் மா.சுப்பிரமணியன் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார். அரசு டாக்டர்கள் கொடுத்த முறையான சிகிச்சையில் அந்த குழந்தையின் உடல் எடை தற்போது 11 கிலோவாக அதிகரித்திருக்கிறது. இன்னும் ஓரிரு மாதங்களில் அந்த குழந்தை முழுமையாக குணமடைந்துவிடும்' என்கிறார்கள்.
தமிழகத்தின் மக்கள் நல்வாழ்வுத் துறையின் மூலம் பல குடும்பங்கள் காப்பாற்றப்பட்டு வருகிறது.