இதுக்கிடையில வாசகர் முருகன்கிற அண்ணாச்சி, போர்க்களத்த பாராட்டி எழுதுன கடுதாசி உங்க பார்வைக்கு...
வாழ்க்கையே போர்க்களம்- துணிச்சலுடன்
வாழ்ந்துதான் பார்க்கணும்.
செப். 28-30, 2022 இதழில் "போர்க்களம்' தொடர் படித்தேன். ஏலாத பார்ப்பான் பிறரை ஏய்த்துப் பிழைப்பான் என்பது மாதிரி "சோ'வின் வேலை இருந்திருக்கிறது. நமக்கெல்லாம் வைகுண்டத்துக்கே போய் வைணவக் கடவுள்கிட்டேயும், கைலாசம்போய் அந்த சைவக் கடவுள்கிட்டேயும் இந்த உலகத்துக்கே தூது சொல்கிற அளவுக்கு சிந்தனை, புத்தியெல்லாம் இருக்கும்போது- "இந்தக் கோபால பெரிய ஆளுன்னு நினைச்சு, இங்க இருக்கிற சத்தியமங்கலம் புதருக்குள்ள ஒளிஞ்சிருக்கிற வீரப்பங்கிட்ட தூது அனுப்புறாங்களாம்'” அப்படிங்கிற ஆசன அரிப்புதான், வேற என்ன?
ஜெ., அக்ரஹாரம் சிறையில் அடைபட்டு கண்ணீர்விட இந்த மேதாவி யும் ஒரு காரணம். 1985 வரை மூன்று நேர உணவுக்கே வழியில்லாமல் தனது அரசியல் ஆசான் எம்.ஜி.ராமச்சந்திரனுக்கு எழுதி இரந்து வாழ்ந்துகொண்டி ருந்த ஜெ.வுக்கு, அதிகாரத்துக்கு வந்த இரண்டு வருடங்களுக்குள் (1991-92) -சொகுசு பஸ், ஏழு சூட்கேஸ் தங்க நகைகள், சொத்துப் பத்திரங்கள், ரோலக்ஸ் கடிகாரங்கள், 573 வைரங்கள், விலையுயர்ந்த 16 பச்சைக் கற்கள், வைரக்கற்கள் பதித்த ஒட்டியாணம், அரைக்கிலோ தங்கக் காசாலான மாலைகள், தங்கச் செங்கோல், வைரம், ரத்தினம் பதித்த விதவிதமான தங்க நெக்லஸ்கள், பட்டுச் சேலைகள், தங்கச் செருப்புகள், தட்டுகள் என 1066 பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு சென்னை ரிசர்வ் வங்கியில் கொண்டு போய் வைத்தார்கள். இந்தியாவிலுள்ள எல்லா ஊழல் அரசியல்வாதிகளையும் பின்னுக்குத் தள்ளி, பூலான்தேவி, வீரப்பனையெல்லாம் மிஞ்சி அக்யூஸ்ட் நெம்பர் 1 என்ற பட்டம் வாங்கிய ஜெ.வுக்கு, நடுநிலை இதழாசிரியர் நக்கீரன் கோபால் வீடு, அலுவலகங்களில் சோதனை செய்ய என்ன தகுதி இருக்கிறது என சோ போன்றவர்கள் துக்ளக்கில் துணிச்சலாக செய்தி போட்டிருந்தால் அவரைப் பாராட்டியிருக்கலாம்.
இந்திராகாந்திக்கு ஒரு சின்ஹா மாதிரி, இந்தக் கொள்ளைக்காரிக்கு ஒரு குன்ஹா வந்து, ஜெயி-ல் அடைத்து 100 கோடி அபராதமும், 4 வருட தண்டனையும் விதித்தபோது, "தெய்வத்துக்குத் தண்டனையா' என சினிமாக்காரனும், "காவிரிய வெச்சுக்கோ, எங்க தெய்வத்தாயை விட்டுரு'ன்னு கட்சிக்காரர்களும் சொன்னப்போ.. எப்படி எல்லாம் நாடகமாடுனாங்கன்னு... இப்ப நினைச்சாலும் சிரிப்பு சிரிப்பாத்தான் வருது.
கோ.முருகன்
கொட்டாகுளம் , தென்காசி மாவட்டம்.
என் உசுர பணயமா கேட்ட பத்ரகாளி ஜெயலலிதா!
"பாடி ஸ்ட்ராங்கு... பேஸ்மென்ட் வீக்கு'ன்னு அண்ணன் வடிவேலு சொல்லு வாருல்ல, அதுமாதிரி என் துணைவியார்ட்ட நாலு நாள்ல வந்துரு வேன்னு வீராப்பா சொன்னாலும், மனசுக்குள்ள பக்கு... பக்கு...ன்னு அடிச் சிக்கிட்டே இருந் துச்சு. இப்போதைக்கி ஒண்ணும் பண்ண முடியலன்னாலும், வீட்டம்மா முன் னாடி கெத்துவிடாம சொல்லிட்டுத்தான் கிளம்புனேன்.
நாலஞ்சு வெள்ளக் காயிதத்துல இங்கி லீசுல டைப் அடிச் சது... லேசுப்பட்ட விவகாரமாவா இருந்துச்சுங்கிறீங்க? எனக்கென்னமோ நம்ம ஒட்டுமொத்த தாலியையும் மொத்தமா அறுக்குற சதியா இருந்துச்சு. ஒரு மாநிலத்தோட சி.எம்., தனிப்பட்ட முறையில என்ன உசுரோட குழிக்குள்ள புதைச்சே தீரணும்னு வெறியா இருந்தது, இந்த ஃபேக்ஸ் கடிதத்த படிச்சா உங்களுக்கே தெரியும்.
"வாயக்கட்டி... வயித்தக்கட்டி...'ன்னு சொல்லு வாங்கள்ல... அதையே... நம்ம உசுரக்கட்டி, வாழ்க்கை சுகத்தக்கட்டி சிறுகச் சிறுக... சின்னச் சின்ன செங்கல வச்சு நக்கீரன் குடும்பத்துல இருக்கிறவங்க குருதியச் சேர்ந்து குழப்பி வச்சுக் கட்டுன இந்த நக்கீரன... ஒரே வெட்டுல சாய்ச்சுப்புடப் பாத்தது இந்த பத்ரகாளி ஜெயலலிதா.
இதோ... நம்ம உசுர பணயமா கேக்குற அந்த பாழாப்போன ஃபேக்ஸ்... (போயஸ் கார்டன்ல இருந்து நமக்கு வந்தது)
வீரப்பன் வழக்குகளில்
நக்கீரன் கோபாலின் பங்கு
7, December 2002
ஆர்.ஆர்.கோபால் அ ராஜகோபால் அ நக்கீரன்கோபால் (44), அருப்புக்கோட்டையிலுள்ள ஏழைக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்து, அரிசிக் கடையில் வேலை செய்வதன் மூலம் பிழைப்பை நடந்திவந்தவர். இலங்கைக்கு ரகசியமாக படகில் சென்று வந்தவர் என்பதிலேயே ஆரம்ப வயதுகளி லும், சட்டவிரோதமாகச் செயல்பட்டவர் என்பது வெளிப்படையாகிறது. குறுகிய காலம் சென்னை பட்டர்ஃப்ளை நிறுவனத்தில் வேலை பார்த்ததோடு, அவர் "தாய்' வாராந்தரியில் மிகக்குறைந்த காலம் வேலை பார்த்து, 1988-ல் அதை விட்டுவிட்டு நக்கீரன் பத்திரிகையை நடத்தச் சென்றுவிட்டார். புலனாய்வுப் பத்திரிகை நடத்துகிறேன் என்ற போர்வையில் அவர் அரசாங்க அலுவலர்களையும், அரசுப் பணியாளர்களையும் மிரட்டும், அவர் களுக்கு களங்கமேற்படுத்தும் இழிவேற்படுத்தும் கட்டுரைகளைப் பதிப்பிப்பதை வழக்கமாகக் கொண்டவர். இப்படியாக, அவர் மதிப்புக்குரிய முதல்வர், திருமதி மாலதி ஐ.ஏ.எஸ்., அதுல்யா மிஸ்ரா ஐ.ஏ.எஸ்., ஆர்.சி.பண்டா ஐ.ஏ.எஸ்., கே.ராஜ மாணிக்கம் ஐ.ஏ.எஸ். மற்றும் கோ.சி.மணி ஆகியோ ருக்கு எதிராக கட்டுரைகளை வெளியிட்டு அவர் ஆறு வழக்குகளை எதிர்கொண்டபடி இருக்கிறார்.
ஜூன் 1996 முதல் வன கொள்ளைக்காரன் வீரப்பனுடன், கோபால் நல்லுறவு வைத்துக்கொண் டிருக்கிறார். 1997-ல் கர்நாடக வனத்துறையின் 9 பணயக்கைதிகளை விடுவிக்கவும், பின் கன்னட நடிகரான ராஜ்குமார் மீட்பு நிகழ்விலும் சட்டவிரோதமாக மாநில அரசு அவரை பேச்சுவார்த்தை நடத்த தூதராக நியமிக்கும் அளவுக்கு வீரப்பனுடனான அவரது தொடர்பு கட்டுப்படுத்த இயலாதபடி தொடர்கிறது.
கோபால், கொள்ளேகால் காவல் நிலையத்தில் அவருக்கு எதிராக இருக்கும் சில குறிப்பிட்ட சட்டவிரோதச் செயல் பாடுகள் மற்றும் அரசுக்கு எதிராக செயற்பட்டது தொடர்பான வழக்கு களை திரும்பப் பெற பேரம் பேசியுள்ளார்.
வீரப்பன் தொடர்பான வழக்குகள் விசாரணையில், வன கொள்ளைக்காரன் வீரப்பனுடன் சேர்ந்து தமிழ் இனவாதிகள் சுதந்திர தமிழ்நாட்டை உருவாக்க பெரும் சதியில் ஈடுபட்டுள்ளது கண்டறியப் பட்டுள்ளது. தங்களது சதியைச் செயல் படுத்த, முக்கிய நபர்கள் கடத்தப்பட்டும், குண்டுகள் வெடிக்கப்பட்டும், காவல் துறைக்கு தகவல் சொல்பவர்கள் கொல்லப்பட்டும், என பல செயல்கள் நடத்தப்பட்டுள்ளன. நக்கீரன் கோபால் இவ்விஷயத்தில் பின்வரும் வழக்குகளில் உதவியாக இருந்தாரா அல்லது குற்றங்களைச் செய்யத் தூண்டினாரா என்பது விசாரிக்கப்பட்டு வருகிறது.
1. நக்கீரன் கோபால், சத்தியமங்கலம் காவல்நிலையத்துக்குட்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவர். P.S. Cr.No.226, 227/98 u/s. 147, 148, 364 A, 368, 307, 109, 120 (B) IPC r/w 25 (1-B) (A) இந்திய ஆயுதச் சட்டம், பேராசிரியர் கிருஷ்ணசாமி கடத்தல் வழக்கில், செய்தியாளர் மதன் முத்து அ பாயும்புலி மற்றும் புகைப்படக் கலைஞர் ரிச்சர்ட் மோகன் ஆகியோர் 13-09-2002-ல் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டனர். இந்த வழக்கின் மறுவிசாரணை யில் சிவசுப்பிரமணியின் குற்ற ஒப்புதல் அடிப்படையில் அவர் வழக்கில் சம்பந்தப்பட்டிருக்கிறார். நக்கீரன்கோபால் இந்த வழக்கில் முன்ஜாமீன் பெற்றிருக்கிறார்.
2. தாளவாடி காவல்நிலையத்தில் விசாரிக்கப்படும் ராஜ்குமார் கடத்தல் வழக்கில் நக்கீரன் கோபாலின் பங்கு ஏற்கனவே நிறுவப்பட்டிருக்கிறது. Cr.No. 90/2002, u/s. 147, 148, 364-A, 366, 368, 202, 212, 414, 120 (B), 124 (B), 307, 506 ii r\w 27 (2)ன் ஆயுதச் சட்டம் 1959 பிரிவு 5. நக்கீரன்கோபால் இந்த வழக்கில் முன்ஜாமீன் பெற்றிருக்கிறார். மேலும் மெட்ராஸ் உயர்நீதிமன்ற வழிகாட்டுதல்படி 20-06-2002 மற்றும் 29-06-2002ல் அவர் விசாரிக்கவும்பட்டார். பணயக்கைதிகள் அவர் வீரப்பனுக்கு பணம் எடுத்து வந்ததாக சான்றளித்திருக்கின்றனர். இந்த வழக்கு விசாரணையில் இருக்கிறது.
3. அந்தியூர் காவல்நிலையத்தில் விசாரிக்கப் படும் போலீசுக்குத் தகவல் தருபவரான கந்தவேல் கடத்தல் மற்றும் கொலை வழக்கில் கோபாலின் குழப்பமான பங்கும் ஏற்கனவே நிறுவப்பட்டி ருக்கிறது.
Cr.No. 676/98, u/s. 147, 148, 302, 201, 364, 121 (A), 123, 124 (A) IPC r/w 25 (1-B) (A) ஆயுதச் சட்டம். கந்தவேலை சித்ரவதை செய்து கொலை செய்ததன் பல்வேறு நிலைகளைக் காட் டும் போட்டோ நெகடிவ்கள் நக்கீரன் கோபாலிடமிருந்து மீட்கப்பட வேண்டும். இந்த வழக்கில் கோபால் இனிதான் கைது செய்யப்பட வேண்டும்.
4. பஸார் காவல்நிலையத்தில் விசாரிக்கப்படும் கோயம்புத்தூர் பக்தவச்சலத்தின் கொடூர கொலை Cr.No. 1500\98 147, 148, 364, 302, 109 IPC & 25 (1-B) (A) ஆயுதச் சட்டம், கேனான் கேமரா, புகைப்பட பிலிம் சுருள், பி.காளிமுத்து ஐ.பி.எஸ்.ஸுக்கு வீரப்பன் எழுதிய கடிதம் மற்றும் ஆடியோ கேசட்டுகள் நக்கீரன் கோபாலிடம் இருப்பதாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அவை கைப்பற்றவும் மீட்கப்படவும் வேண்டும்.
இன்னும் மீதி இருக்கு...
(புழுதி பறக்கும்)