நெல்லையில், கடந்த நவம்பர் 26, 27 தேதிகளில் பொருநை இலக்கி யத் திருவிழாவில், ஆதித்தமிழர்களின் சரித்திரச் சுவடுகள், பார்வையாளர்களைப் பிரமிக்க வைத்தன. இலக்கியத் திருவிழாவை, அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ராஜகண்ணப்பன் இருவரும் தொடங்கிவைத்தனர். "நாகரிகம் தோன்றிய பொருநை நதியான தாமிரபரணித்தாயின் மடியி லிருந்து இலக்கியத் திருவிழாவைத் தொடங்குவது உண்மையிலேயே மட்டற்ற மகிழ்ச்சி. 50 ஆண்டுகால அரசியல் வரலாற்றில் இது போன்று இலக்கியத் திருவிழா நடந்ததில்லை என்று வியப்புடன் குறிப்பிட்டனர். "இந்திய துணைக்கண்டத்தின் வரலாற்றை நாம் பொருநை நதியிலிருந்து தொடங்குவோம்'' என்று காணொலி மூலமாகப் பெருமிதமாகக் கூறினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
பாளை நூற்றாண்டு மண்டபம், மேடை போலீஸ் ஸ்டேஷன், நேருஜி கலையரங்கம் உள்ளிட்ட 5 அரங்கு களிலும் மண் வாசனை, சங்கமம் மாணவ மாணவிகளின் போட்டிகள், எழுத்தாளர்களின் உரைகள், ஓலைச் சுவடிகள் மற்றும் வட்டெழுத்துக் காட்சி, ஓவியக் கண்காட்சி, ஆதிகாலத் தமிழர்களின் அன்றாட வாழ்க்கையோடு வாழ்வாதாரமாகத் திகழ்ந்த பழங்கால பாத்தி ரங்கள், கைவினைப் பொருட்கள், நெற்குதிர்கள், புகைப்படக் கண்காட்சி, தமிழர்கள் பயிரிட்ட விதவிதமான நெல்மணிக ளெனக் காட்சிப்படுத்தி, வந்தவர்களை வியக்கவைத்தனர்.
இலக்கியம் பற்றிய ஓலைச்சுவடிகள், சித்த மருத்துவச் சுவடிகள், இலக்கணக் கொத்து, கட்டபொம்மனின் வாழ்க்கை கும்மிப் பாட்டுச் சுவடிகள், ஜோதிடச் சுவடிகள், திருப்புகழ் தொகுப்புச் சுவடிகள், திருக்குறளின் அத்தனைக் குறள்களையும் முழுமையாக கொண்ட சுவடிகள் என 200 வகையான ஓலைச் சுவடிகள் காட்சிப்படுத்தப்பட்டன. 1500க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் ஆவலாகச் சுவடிகளைப் படித்ததாக இதன் அமைப்பாளரும், ஓலைச்சுவடிகளை அரும்பாடுபட்டு சேகரித்தவருமான சங்கர நாராயணன் கூறினார்.
"மொத்த ஓலைச்சுவடிகளையும் 20 வருடங்களாக அலைந்து திரிந்து சேகரித்தேன். அற்புதமான தகவல்களும், தமிழர்களின் வாழ்வியலும் சுவடிகளாக ஆவணப்படுத்தப் பட்டுள்ளன. கட்டபொம்மனின் பிறப்பு முதல் இறப்பு வரையிலானவற்றை கும்மிப்பாட்டு மூலம் வெளிப்படுத்தும் சுவடிகளும், அந்தக் கால மன்னர்களால் கொண்டுவரப்பட்ட வெண்கலச் சட்டம் போட்ட சுவடிகளும் சேகரிப்பில் உள்ளன.
1964-ல், ஜெமினிகணேசனும், சாவித்திரியும் ராமேஸ்வரம் வந்தபோது, தனுஷ்கோடியை சுற்றிப் பார்க்க நினைத்தனர். அப்போது உடல்நலக்குறைவு காரணமாக தனுஷ்கோடி பயணத்தை கைவிட்டனர். அன்றைய தினம்தான் புயலால் தனுஷ்கோடியை கடல்கொண்டு அழித்தது. இவையனைத்தை யும் ஆவணமாக்கிய பதிவுகளும் இருக்கின்றன'' என்றார்.
ஓலைச்சுவடிகளைப் படித்துப் பார்த்த ராஜா என்ற இளை ஞர், "ஒவ்வொரு ஓலைச்சுவடியும் பார்க்கப் பார்க்க ரொம்ப ஆச்சர்யமா இருக்கு. அதிசயம்... மிராக்கிள்!'' என்றார் பிரமிப்புடன்.
பாளை. நேருஜி கலையரங்கில் நடைபெற்ற விழாவில் கனிமொழி எம்.பி. கலந்துகொண்டு மகளிர் திட்டம் சார்பில் அமைக்கப்பட்ட கண்காட்சியினைப் பார்வையிட்டார். மாணவ-மாணவிகள் எழுதிய தபால் கவிதைத் தொகுப்பை வெளியிட்ட அவர், "இன்று தமிழகத்தில் ஜாதி, மதம் என்ற பெயரில் யாரும் நுழைய முடியாத நிலை உருவானதற்கு திராவிட இயக்க எழுத்தாளர்கள்தான் காரணம். இளந்தலைமுறையினர், மாணவ-மாணவிகள் அனைவரும் பொருநை இலக்கிய திருவிழாவிற்கு வந்து ஓலைச்சுவடி வடிவிலான இலக்கியங்கள் அனைத்தை யும் தெரிந்துகொள்ள வேண்டும்'' என்றார்.
அங்கு நடந்த ஓவியக் கண்காட்சியில், வ.உ.சி., பாரதியார் உள்ளிட்டோர் தேசியக்கொடியை ஏந்தி வீதியில் போராடுவது எனப் பல்வேறு ஓவியங்கள் இடம்பெற்றன. ஒரு மூதாட்டியின் ஓவியத்தில் அவரது முகபாவங்கள், தோல்ச்சுருக்கங்கள், தங்க பாம்படம் என அனைத்தும் தத்ரூபமாக வரையப்பட்டிருந்தது. அடுத்த அரங்கில், சாகித்ய அகாடமி விருது பெற்ற கி.ராஜ நாராயணன், சு.சமுத்திரம், ஆதவன், பொன்னீலன், சோ.தர்மன், தோப்பில் முகம்மது மீரான் உள்ளிட்ட 21 தென் மாவட்ட எழுத்தாளர்களின் படங்கள் காட்சிப்படுத்தப் பட்டிருந்தது பொருநை இலக்கியத் திருவிழாவின் சிகரம்.
இலக்கியத் திருவிழாவின் நிறைவு நாளின் மாலையில், தமிழர்களின் தெருக்கூத்து, கலை நிகழ்ச்சிகள், நாட்டியங்கள், தண்டயச் சூரனின் தாண்டவம் போன்றவை நாட்டுப்புறக் கலைஞர்களால் நடத்தப்பட்டன.
பொருநை இலக்கியத் திருவிழாவை நிறைவு செய்து பேசிய சபாநாயகர் அப்பாவு, "குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று நிலங்களைப் பிரிப்பார்கள். இத்தனையும் ஒருங்கிணைந்து இருப்பது ஒன்றுபட்ட நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டத் தில் தான். இந்திய வரலாறு எழுதப்பட வேண்டியது பொருநை ஆற்றங்கரையிலுள்ள ஆதிச்ச நல்லூரிலிருந்தும், கொற்கையிலிருந்தும் தான். இதுவே நிதர்சனமான உண்மை'' என்று அழுத்தமாகப் பேசி பொருநை இலக்கியத் திருவிழாவை நிறைவுசெய்தார். ஆய்வுகளின் அடிப்படையில், 3155 ஆண்டுகள் பழமையான, மிகவும் தொன்மை யான நாகரிகமாக பொருநை நாகரிகம் உள்ளது. இதன் சிறப்புக்கு மணிமகுடமாக இந்த இலக்கியத் திருவிழா நடத்தப்பட்டுள்ளது.