அரசாங்க பணி வாங்கித் தருவதாகக் கூறி தமிழ் மாநில முஸ்லீம் லீக் கட்சியின் மாநில மகளிர் அணி செயலாளர் ரேஷ்மா தாவூத் மற்றும் நந்தினி ஆகிய இருவரும் சேர்ந்து கோடிக்கணக்கில் மோசடி செய்துள்ளது தெரியவந்துள்ளது. கொட்டிவாக்கத்தைச் சேர்ந்த ஆனந்தி என்பவர், கடந்த ஜூன் 24-ம் தேதி சென்னை கமிஷனர் அலுவலகத்தில் அளித்த புகாரில், வேளச்சேரி உதயம் நகரைச் சேர்ந்த நந்தினி-அருண் சைஜு என்ற தம்பதி, அரசாங்க வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணத்தை வாங்கி மோசடி செய்துவிட்டதாகவும், இவர்களைப்போல் மேலும் 85 பேர் இவர்களிடம் பணம் கட்டி, சுமார் 4.15 கோடி ரூபாய் வரை ஏமாந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/govtjob.jpg)
இந்த வழக்கை சென்னை கமிஷனர் சி.சி.பி. நாகஜோதி விசாரணை மேற்கொண்டுள்ளார். முதல்கட்ட விசாரணையில், நந்தினி உண்மை யாகவே இவ்வளவு தொகையும் கொடுத்துள்ளாரா? என்பதற்காக நந்தினியின் வங்கிக் கணக்கை ஆய்வு செய்துள்ளனர். அதில் 36 கோடி ரூபாய் பணப் பரிமாற்றம் நடந்திருப்பது தெரிய வந்துள்ளது. அதனைத் தொடர்ந்து, நந்தினி, அவரது கணவர் அருண் சைஜூ இரு வரையும் வளசரவாக்கத் தில் வைத்து காவல் துறையினர் கைது செய்து விசாரித்துள்ளனர். அதில் பணம் வாங்கியது உண்மைதான், அந்த பணத்தில் 2 கோடி ரூபாயை வங்கி மூல மாகவும், மீதிப் பணத்தை நேரிலும் ரேஷ்மா தாவூத்திடம் நான் தான் கொடுத்தேன் என்று ஒப்புக்கொண்டுள்ளார்.
அதனைத் தொடர்ந்து மறுநாளே திருவான்மியூர் பகுதியில் ரேஷ்மாதாவுத் கைது செய்யப்பட்டார். ரேஷ்மாவிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்களை நேரில் வரவழைத்து இவர்களிடம் தான் பணம் கொடுத்தீர்களா என்று கேட்டு, உறுதி செய்தபின் அவர்கள்மீது வழக்குப்பதிவு செய்து சிறையிலடைத்துள்ளனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/govtjob4.jpg)
நந்தினி தனது மோசடி வலையில் சிக்கவைக்க சில தந்திரங்களைக் கையாண்டிருக்கிறார். நந்தினி வீட்டில் வேலைசெய்து வந்த நரேஷ், வாட்டர் கேன் சப்ளையும் செய்துவந்திருக்கிறார். அவர், ஆனந்தி வீட்டில் வாட்டர் கேன் போடும்போது அவரிடம் பேச்சுக்கொடுப்பது போல, "உங்களுக்கு அரசு வேலை கிடைக்கணும்னா சொல்லுங்க, எனக்கு தெரிஞ்சவங்க இருக்காங்க'' என்று நைசாகப் பேசியிருக்கிறார். அதற்கு சரியென்றதும், நந்தினியை அறிமுகப்படுத்தி வைத்து, அவர் மூலமாக ஈ.பி. டிரைவர், ஈ.பி. ஓ.ஏ., பொ.ப.து. என அரசுத் துறைகளிலும், இதுதவிர்த்து மற்ற துறைகளிலும் வாங்கித்தருவதாகக் கூறி நம்பவைத்து, லட்சக்கணக்கில் பணத்தைப் பெற்றுள்ளார். ஆனந்தியைப் போலவே மேலும் பலரையும் நம்பவைத்து, ஆனந்தி மூலமாக இதே பாணியில் பணம் பறித்துள்ளனர். அடுத்ததாக, அவர்களுக்கு அரசு வேலை கிடைத்தது போலவே வேலைக்கான உத்தரவுகளை போலி அரசு முத்திரையை பயன்படுத்தித் தயாரித்து வழங்கியுள்ளார்.
தொடர்ச்சியாக, அரசுப் பணிக்குத் தேர்வானவர்களுக்கு பயிற்சியளிக்கப் படுவதாகக் கூறி அவர்களை பெசன்ட் நகர், நுங்கம்பாக்கம், மைலாப்பூர் ஆகிய இடங்களில் வாடகைக்கு எடுத்துவைத்துள்ள அறைகளில் பயிற்சி கொடுப்பதாக ஏமாற்றியிருக்கிறார். இப்படி பயிற்சி கொடுக்கப்படும்போதுதான் ரேஷ்மாவின் அறிமுகம் கிடைத்திருக்கிறது. பயிற்சிக்குப்பின் அவர்களுக்கு கூகுள் பே மூலமாக பயிற்சிக்கான சம்பளம் என்று 5 ஆயிரம் ரூபாய் அனுப்பியுள்ளனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/govtjob1.jpg)
பிறகு மேலும் காலம் கடக்கவே, பணம் கொடுத்தவர்கள் கேள்விகளை எழுப்பினர். கொரோனா காலகட்டம் என்று சொல்லித் தட்டிக் கழித்துள்ளனர். அதன்பிறகும் தொடர்ச்சியாக வற்புறுத்தியதால், அவர்களை வேலைக்கு அழைத்துச் செல்வதுபோல் ஒரு காரில், அரசு அலுவலகங்களுக்கு அழைத்துச் சென்று வெளியே நிற்க வைத்துள்ளனர். சிலரை ஏதேனும் குற்றம் குறைகூறி பணியிலிருந்து சஸ்பெண்ட் செய்வதுபோலவும் உச்சகட்ட நாடகமாடியுள்ளனர்.
காலப்போக்கில் இவர்களது மோசடி நாடகம் தெரியவந்ததும், இவர்களை நம்பிப் பணத்தைப் பறிகொடுத்தவர்கள், ஆனந்தியிடம் பணத்தைக் கேட்டு நச்சரிக்கவே, வேறுவழி தெரியாமல் வேளச்சேரி இன்ஸ்பெக்டர் ஜோஷின் ஜெர்ரியிடம் புகார் கொடுத்துள்ளார். ஆனால் இன்ஸ்பெக்டரோ அந்த புகாரை எடுத்துக்கொள்ளாமல், எதிர்த்தரப்பிடம் பெறுவதைப் பெற்றுக் கொண்டு, நந்தினிக்கு சாதகமாகப் பேசி, ஆனந்தியை மிரட்டி அனுப்பியுள்ளார் இன்ஸ்பெக்டர்.
இந்த மோசடியால் பாதிக்கப்பட்டுள்ள தனிஷ்கா கூறுகையில், "நானும் ஆனந்தியைப் போல 15 பேரை அழைத்துச் சென்று பணம் வாங்கிக் கொடுத்தேன். நந்தினியைப் பற்றி விசாரித்தபோதுதான் ரேஷ்மா பற்றி தெரிந்தது. ஏற்கனவே இந்த ரேஷ்மா தாவூத் மீது இதேபோல் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. 2016, 2018, 2019 என்று பல வருடங்களில் இவர்மேல் வழக்குகள் பதிவாகியுள்ளன. ரேஷ்மா தாவூத்தின் அப்பா தான் தமிழ் மாநில முஸ்லீம் லீக் கட்சியின் தலைவர் ஷேக் தாவூத்.
இக்கட்சியில் ரேஷ்மா தாவூத் பொதுச்செயலாளராக இருக்கிறார். அவருடன் அக்கட்சியின் தலைமை நிலைய செயலாளரான ஜாகீர் உசேன் என்பவர், இன்ஸ்பெக்டருடன் இணைந்து கட்டப் பஞ்சாயத்து செய்து எங்களை மிரட்டினார். ஷேக் தாவூத் மூலமாக அ.தி.மு.க. தயவு கிடைத்ததால், முந்தைய ஆட்சியில் அனைத்து வழக்குகளையும் சுலபமாக மூடி மறைத் துள்ளனர்.
அதேபோல ரேஷ்மா ஒரு ஆடியோ காலில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெயரைப் பயன்படுத்தி, "நான் சி.எம். மீட்டிங்கில் இருக்கும்போது தொடர்ந்து கால் செய்வது, மெசேஜ் போடுவது எவ்வளவு குற்றம் தெரியுமா?'' என பணம் கொடுத்து ஏமாந்தவர்களிடம் மிரட்டும் தொனியில் பேசியுள்ளார். இப்படியேதான் எல்லோரையும் மிரட்டுவார். போலீஸாரின் தேவையை பூர்த்தி செய்வதன்மூலம் அவர்களைக் கைக்குள் போட்டுக்கொள்வார். இவரின் அப்பா தான் இந்த மொத்த மோசடித்தனத்துக்கும் காரணம். அதில் எந்த சந்தேகமுமில்லை'' என்றார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/govtjob2.jpg)
ஆனந்தி கூறுகையில், "இந்தப் பிரச்சினையை எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலி னிடம் கொண்டு சென்றோம். அதன்பிறகு இந்த விவகாரத்தை அவரே அடிக்கடி விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கவைத்துள்ளார். அவருக்கு மிக்க நன்றி'' என்றார். இது தொடர்பாக தமிழ் மாநில முஸ்லீம் லீக் கட்சியின் தலைவர் ஷேக் தாவூத்திடம் கேட்டபோது, "இதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சட்டத்திற்குப் புறம்பாக யார் செய்தாலும் தவறுதான். அதன்படி, சட்டரீதியாக இப்பிரச்சனையை நாங்கள் எதிர்கொள்வோம்'' என்றார்.
இதுகுறித்து சென்னை கமிஷனரிடம் கேட்டபோது, "குற்றவாளிகளைக் கைது செய்துள்ளோம். வசூலிக்கப்பட்ட தொகை எங்கெங்கு உள்ளது என்பதையும், வேறு யாருக்கெல்லாம் இதில் தொடர்புள்ளது என்பதையும் குறித்து சி.சி.பி. தரப்பு விசாரணை செய்து வருகிறார்கள். சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.
அதேபோல், அரசு பணி கிடைக்கு மென்று குறுக்கு வழியில் ஆசைப்பட்டு இப்படி பணம் கொடுப்பது தவறென்பதைப் பொதுமக்கள் புரிந்துகொள்ள வேண்டும்'' என்றார். குறுக்கு வழியில் அரசாங்க வேலையைப் பெற நினைக்கும் அனைவருக்கும் இந்த மோசடி ஒரு பாடமாக அமையும்!
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-07/govtjob-t_0.jpg)