தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் மாற்றம் என்பது தேர்தல் நடந்து முடிந்த நாளிலிருந்து பெரிதாகப் பேசப்பட்டது. அது செயல் வடிவம் பெறுவதற்கான வேலைகள் டெல்லியில் வேகமாக நடைபெற்று இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது. அடுத்த தமிழக பா.ஜ.க. தலைவர் யார் என்கிற கேள்விதான் பா.ஜ.க. வட்டாரங்களில் சுற்றி வருகிறது என்கிறார்கள் தமிழக பா.ஜ.க.வில் டெல்லிக்கு நெருக்கமானவர்கள். இந்தியாவி லேயே கடந்த பாராளுமன்றத் தேர்தலில் மிகமோசமாக பா.ஜ.க. தோற்ற மாநிலம் தமிழகம்தான். இதுவரை பா.ஜ.க. வெற்றிபெறாத கேரளாவில் கூட திருச்சூர் தொகுதியில் சுரேஷ் கோபி வெற்றி பெற்றுவிட்டார். அந்தத் தொகுதியில் பா.ஜ.க. வெற்றிபெறும் என பா.ஜ.க.வினரே எதிர்பார்க்கவில்லை.
ஆனால், தமிழகத்தில் வேலூர், தருமபுரி, திருப்பூர், கோவை, நீலகிரி, நெல்லை, தேனி, ராமநாதபுரம், தென்சென்னை, பாண்டிச்சேரி உட்பட பத்து தொகுதிகளில் பா.ஜ.க. ஜெயிக்கும் என பிரதமர் மோடி உட்பட அனைவருமே நம்பினார்கள். அதனால்தான் பிரதமர் மோடி, தமிழக பா.ஜ.க. தலைவர் கூப்பிட்ட போதெல்லாம் தமிழகத்துக்கு வந்தார். தமிழக தேர்தல் களமே பா.ஜ.க.விற்கும், தி.மு.க.வுக்கும் இடையேயான தேர்தல் பிரச்சாரக் களமாக அமைந்தது. நூற்றுக்கணக்கான கோடிகளை தமிழகத்தில் வாரியிறைத்தது பா.ஜ.க. ஆனால், தேர்தல் முடிவுகளில் 21 தொகுதிகளில் பா.ஜ.க. டெப்பாசிட் இழந்தது. பா.ஜ.க., தி.மு.க. என அமைந்த தேர்தல் களத்தை நன்கு பயன்படுத்திக்கொண்ட தி.மு.க. 40 தொகுதிகளிலும் ஜெயித்தது. நிச்சய வெற்றி என தமிழக பா.ஜ.க.வினராலேயே எதிர்பார்க்கப்பட்ட பாண்டிச்சேரி, நெல்லை தொகுதிகளிலும் பா.ஜ.க. தோற்றது.
இந்தியாவிலேயே பா.ஜ.க. 0 தொகுதிகள் பெற்ற ஒரே தென்னிந்திய மாநிலம் தமிழகம்தான் என்ற பெருமையை பெற்றது. பேரிடியாக வந்த இந்த தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து நயினார் நாகேந்திரன் 4 கோடி ரூபாய் பணத்தைக் கடத்தினார் என ஒரு வழக்கும் வந்தது. அத்துடன் தமிழகம் முழுவதும் சாதாரண பா.ஜ.க. தொண்டர்களுக்கு தேர்தல் வேலை செய்ய பணம் வழங்கவில்லை என்ற புகார்கள் தமிழகம் முழுவதும் எதிரொலித்தது. நயினார் நாகேந்திரனை பணக்கடத்தல் வழக்கில் பா.ஜ.க. மா.த. சிக்க வைத்தார். தமிழிசை கொடுத்த பணத்தை மா.தலைவரின் ஆதரவாளர்கள் ஆட்டையை போட்டு விட்டார்கள் என தமிழிசையே நேரடியாகப் புகார் செய்தார். தேர்தல் தோல்வி ஒரு பக்கம், பண விநியோகத்தில் நடந்த குளறுபடிகள் மறுபக்கம் என பா.ஜ.க. தலைமையே குழம்பிப்போனது.
தமிழகத்தில் பா.ஜ.க. பத்து தொகுதிகளில் வெற்றி பெறும் என மா.தலைவர் சொன்னதை வைத்து மட்டும் அகில இந்தியத் தலைமை நம்பி விடவில்லை. தமிழகத்தில் மத்திய உளவுப்பிரிவு தலைவராக இருப்பவர் ரவிச்சந்திரன் ஐ.பி.எஸ். கடலூர் எஸ்.பி.யாக இருந்த இவர் தமிழகத்தில் போலீஸ் அதிகாரியாகப் பல பதவிகளை வகித்தவர். தமிழக நிலவரங்களை நன்கு அறிந்தவர். மாநிலத் தலைவர் இவரை வளைத்துப் போட்டுவிட்டார். ரவிச்சந்திரனும், பா.ஜ.க. மா.த.வும் சேர்ந்து தமிழகத்தில் ஜெயிப்போம் என மத்திய உளவுத்துறை அமித்ஷாவுக்கு ரிப்போர்ட் கொடுத்தது. இந்த ரிப்போர்ட்டை பார்த்துதான் அமித்ஷா, மோடி உட்பட பா.ஜ.க. தேசியத் தலைவர்கள் தமிழக பா.ஜ.க. மா.த. சொல்வது போலவே மத்திய உளவுப்பிரிவின் தலைவர் ரவிச்சந்திரனும் சொல்கிறார் என மாநிலத் தலைவரை நம்ப ஆரம்பித்தார்கள். என்னதான் மத்திய உளவுப்பிரிவும், பா.ஜ.க. மா.த.வும் சொன்னாலும் ஆர்.எஸ்.எஸ். நம்பவில்லை.
சுதந்திரமாக தனித்தன்மையுடன் தகவல் களை பரிமாறும் தமிழக ஆர்.எஸ்.எஸ். தலைவராக இருப்பவர் செந்தில். ரவிச்சந்திரனைப் போலவே அவரையும் சரிக்கட்டி விட்டார் மாநிலத் தலைவர். பொதுவாக ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் எந்தவித ஊழல் வளையத்திலும் சிக்க மாட்டார்கள். பிரம்மச்சாரிகளாக பற்றற்ற முனிவர்கள் போல ஒரு வாழ்க்கையை கடைப் பிடிப்பார்கள். அப்படிப் பட்ட தமிழக ஆர்.எஸ்.எஸ். தலைவர் செந்திலையும் பணம் கொடுத்து ஊழல்வாதியாக்கி விட்டார் பா.ஜ.க. மா.த. அதையடுத்து, செந்திலும் மா.த. சொல்வதையே பா.ஜ.க.வின் தேசியத் தலைமைக்கு ரிப்போர்ட்டாக அனுப்பினார். இதையெல்லாம் கண்காணிக்கிற பொறுப்பு ஆர்.எஸ்.எஸ்.ஸால் மாநிலத் தலைமைக்கு அனுப்பப்பட்ட கேசவவிநாயகத்துக்கும், ஆர்.எஸ்.எஸ்.ஸால் அகில இந்தியத் தலைமைக்கு அனுப்பப்பட்ட பி.எல்.சந்தோஷுக்கும் இருக்கிறது. இவர்கள் இருவரும் ரவிச்சந்திரன் மற்றும் செந்திலைப் போல மாநிலத் தலைவர் சொல்வதையே எதிரொலித் தார்கள். அத்துடன், கோவாவில் உள்ள ஒரு தீவில் வேத பாடசாலை ஒன்றை ஒரு தம்பதி நடத்துகிறார்கள். அந்தத் தம்பதியிடம் பிரதமரும் அமித்ஷாவும் அடிக்கடி பேசுவார்கள். அவர்களையும் வளைத்த மா.தலைவர், அவர்கள் மூலமாகவும் தமிழகத்தில் பத்து தொகுதிகள் பா.ஜ.க. ஜெயிக்கும் என பிரதமரையும் அமித்ஷாவையும் நம்ப வைத்தார்.
தேர்தல் முடிவுகள் வந்தபிறகு பிரதமருக்கும் அமித்ஷாவுக்கும் பேரதிர்ச்சி ஏற்பட்டது. ‘என்னை தமிழக பா.ஜ.க. மா.தலைவர் ஏமாற்றிவிட்டார்’ என அமித்ஷா புலம்பும் அளவிற்கு அந்த அதிர்ச்சி காணப்பட்டது. ரவிச்சந்திரன் அல்லாத ஐ.பி. அதிகாரிகள் கொண்ட டீம் ஒன்றை தமிழ்நாட்டுக்கு என்ன நடந்தது என விசாரிக்க அமித்ஷா அனுப்பிவைத்தார். அந்த டீம் தமிழகத்தில் விசாரித்துக்கொண்டு இருக்கும்போதே மாநிலத் தலைவரின் உதவியாளராக இருந்த பிருத்வி என்பவர் தங்கக் கடத்தலில் ஈடுபட்டார் என்ற செய்தி வெளியானது. இதனால் அதிர்ச்சியடைந்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒரு டீமை அனுப்பி விசாரித்தார். அதன் எதிரொலியாக சென்னை விமான நிலையத்தில் பணிபுரிந்த கஸ்டம்ஸ் அதிகாரிகள் கூண்டோடு மாற்றப்பட்டார்கள். நூற்றுக்கணக்கான கோடிகள் தங்கம் மற்றும் போதைப்பொருள் கடத்தலில் மாநிலத் தலைவரின் ஆதரவாளர்கள் ஈடுபட்டார்கள் என நிர்மலா சீதாராமன் ஒரு ரிப்போர்ட்டை அமித்ஷாவுக்கும் மோடிக்கும் அனுப்பினார்.
அமித்ஷா அனுப்பிய மத்திய உளவுப்பிரிவு டீம், சசிகலாவிடம் பணம் பெற்றுக்கொண்டுதான் மாநிலத் தலைவர் அ.தி.மு.க.வுக்கு எதிராகப் பேசினார். ஆருத்ரா மோசடி, மோடி கபடி லீக் மோசடி, அமலாக்கத்துறை, இன்கம்டாக்ஸ் பேரைப் பயன்படுத்தி தொழிலதிபர்களை மிரட்டுதல், மாநிலத்திலுள்ள பா.ஜ.க. தலைவர்களை நீலப்படம் எடுத்து மிரட்டுதல், எம்.பி. சீட் கொடுக்கிறேன் எனக் கூறி நடைபெற்ற மோசடி, சட்டமன்ற, பாராளுமன்றத் தேர்தல்களில் தேசியத் தலைமை கொடுத்த நிதியை சுருட்டுதல், மனைவி பெயரில் கோடிக்கணக்கில் முதலீடு, மச்சானின் அசுர வளர்ச்சி என எல்லாவற்றையும் ரிப்போர்ட்டாக தயார் செய்தார்கள். பா.ஜ.க.வின் இயல்பான தி.மு.க. எதிர்ப்பு, தி.மு.க. எதிர்ப்பால் விளைந்த சனாதன ஆதரவு போன்றவற்றை தனது பேச்சில் பயன்படுத்தி மாநிலத் தலைவர் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் சுருட்டி பக்கத்து மாநிலங்களிலும், வெளி நாடுகளிலும் சொத்து சேர்த்துள்ளார் என அறிக்கை கொடுத்தார்கள்.
இந்த அறிக்கையைப் பெற்றுக்கொண்ட அமித்ஷா, எடப்பாடியிடம் போனில் பேசினார். அ.தி.மு.க., பா.ஜ.க. உறவு, எடப்பாடி முதல்வர் வேட்பாளர் என பேசி முடிக்கப்பட்டது. மாநிலத் தலைவரை மாற்றும் பார்முலா உருவானது. அதன்படி அவரை லண்டனுக்குப் போகச்சொல்லி படிப்பைக் காரணம் காட்டி உத்தரவு போடப்பட்டது. மா.த.விடமிருந்து ராஜினாமா கடிதம் பெறப்பட்டது. அது ஜே.பி.நட்டாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டு ராஜினாமா ஏற்கப்பட்டது. அடுத்த தலைவர் யார்? என்கிற தேடலில் நயினார் நாகேந்திரன் கே.டி.ராகவன், வானதி சீனிவாசன், தமிழிசை, தென்காசி ஆனந்தன் ஆகியோரது பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. ஒருவர் பின் ஒருவராக டெல்லிக்கு அழைக்கப்பட்டு ஆலோசனைகள் வேகம்பெற்று வருகின்றன. மாநிலத் தலைவர் மாற்றம் உறுதி, அடுத்தது யார் என்கிற கேள்வி எழுந்துள்ளது.