முன்னாள் முதல்வரான ஓ.பி.எஸ். தனது அதிகார பண பலத்தால் பஞ்சமி நிலத்தையே வாங்கி பட்டா போட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
தேனி கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள ராஜாக்களம் பகுதியைச் சேர்ந்த விவசாய சகோதரர்களான மூக்கன், முத்துசாமிக்கு 40 சென்டுக்கு மேல் உள்ள நிலத்தை 1991ஆம் ஆண்டு ஆதிதிராவிட நலத் துறை வழங்கியது. இந்த நிலத்தை 15 ஆண்டுகளுக்கு வேறு யாருக்கும் உரிமை மாற்றம் செய்யக்கூடாது எனவும், அதன்பிறகும் அந்த நிலத்தை பட்டிய லின இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே கொடுக்கமுடி யும் எனவும் நிபந்தனை உள்ளது. இந்த நிலத்தை பட்டியலின இனத்தைச் சேர்ந்த ஹரிசங்கர் என்பவ ருக்கு கடந்த 2008-ஆம் ஆண்டு அவர்கள் எழுதிக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் தான் அவரிடமிருந்து அடுத்த சில வருடங்களில் சுப்புராஜுக்கு விற்கப்பட்ட இந்த நிலம், அதன்பின் முன்னாள் முதல்வரான ஓ.பி.எஸ்.ஸிடம் விற்கப் பட்டு அந்த நிலத்துக்கு ஓ.பி.எஸ். பெயரில் பட்டா வாங்கப்பட்டிருக்கிறது. இந்த விஷயம் மூக்கன், முத்துச்சாமி குடும்பத்தினருக்குத் தெரியவே, மாநில பட்டியலின மற்றும் பழங்குடியினத்தவர் ஆணையத்தில் புகாரளித்திருந்தனர். இந்த புகாரை விசாரித்த சென்னையிலுள்ள மாநில எஸ்.சி., எஸ்.டி. ஆணையம், முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ். தனது அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி பஞ்சமி நிலத்தை வாங்கியதற்கு ஆதாரங்கள் உள்ளதாகக் கூறி அந்த நிலத்திற்கு அவர் பெயரில் வழங்கப் பட்ட பட்டாவை அரசு ரத்து செய்ய உத்தரவிட்டி ருக்கிறது.
"ராஜாக்கள பகுதி யைச் சேர்ந்த கோபால ராஜாவுக்கு 50 குழிக்கு மேல் நிலங்கள் இருந்தது. அந்த நிலங்களை நில உச்சவரம்பு சட்டப்படி அரசு எடுத்தது. அவரிடம் விவசாயம் செய்துவந்த பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த மூக்கனுக்கு 40 சென்டும், முத்துச்சாமிக்கு 40 சென்டும் நிபந்தனைகளின் அடிப்படையில் அரசு பட்டா வழங்கியது. இந்த 80 சென்டை கோபாலராஜாவின் மகன் ஹரிசங்கர், அவர்களை ஏமாற்றி எழுதி வாங்கி அதற்குப் பதிலாக தனது வீடோடு இருக்கும் 4 சென்டை அவர்களுக்கு எழுதிக்கொடுத்து மோசடி செய்துவிட்டனர். அதன்பின் அந்த 80 சென்டைத்தான் முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ்.ஸின் பினாமி யான சுப்புராஜுக்கு விற்றுவிட்டார். கடந்த 2023-ல் சுப்புராஜ் அந்த நிலத்தை ஓ.பி.எஸ்.ஸிற்கே விற்பனை செய்து பட்டா மாறுதல் செய்தார். அதன் அடிப்படையில் அந்த இடம் ஓ.பி.எஸ். பெயருக்கு கிரையம் வாங்கி முறைகேடாக பட்டா மாறுதல் செய்யப்பட்டது.
இந்த விசயம் மூக்கன், முத்துச்சாமிக்கு தெரியவும் எங்க இயக்கத்தில் புகார் கூறினார்கள். எஸ்.சி., எஸ்.டி. ஆணையத்திற்கு புகார் அனுப்பியதன் பேரில் கடந்த 11-2-2025 எஸ்.டி. ஆணையத்திலிருந்து ஓ.பி.எஸ். பட்டாவை ரத்து செய்யச் சொல்லி எஸ்.சி., எஸ்.டி. ஆணையம் உத்தரவிட்டிருக்கிறது. அதன்படி இந்த நிலத்தை எங்க உறவினர் களுக்கு, குடும்பத்திற்கு அரசு எடுத்துக் கொடுக்கவேண்டும். தவறினால் போராட் டத்தில் குதிக்கவும் தயாராக இருக்கிறோம்''” என்றார் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தேனி மாவட்டச் செயலாளர் ராமர்.
இதுசம்பந்தமாக ஓ.பி.எஸ். பினாமியான சுப்புராஜுக்கு நிலம் விற்பனை செய்த ஹரிசங்கரிடம் கேட்டபோது, “"அந்த நிலம் பஞ்சமி நிலமே இல்லை. எங்க தாத்தா காலத்திலிருந்து அந்த இடங்கள் எல்லாம் எங்களுக்குத்தான் சொந்தம். நில உச்சவரம்பு சட்டம் மூலம் அதை எடுத்தனர். அதற்குப் பதிலாக நான் என் பல கோடி ரூபாய் மதிப்புள்ள எனது வீட்டைக் கொடுத்துவிட்டு அந்த நிலங்களை முத்துசாமி, மூக்கனிடம் இருந்து பரிவர்த்தனையாக எழுதி வாங்கினேன். இப்படி எழுதி வாங்கிய நிலத்தையும் எனக்கும், என் தங்கைக்கும் சொந்தமான 200 சென்ட்டுக்கு மேலுள்ள நிலங்களையும் ஒட்டுமொத்தமாகத்தான் இந்த சுப்புராஜுக்கு விற்பனை செய்தேன். அதைத்தான் கடந்த 2023-ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ்.ஸுக்கு விற்பனை செய்திருக்கிறார்''’என்று கூறினார்.
இந்த குற்றச்சாட்டுகளைப் பற்றி முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ்.ஸிடம் விளக்கம் கேட்க செல்மூலம் தொடர்பு கொண்டும் லைனில் பிடிக்கமுடியவில்லை.
ஓ.பி.எஸ். ஆதரவாளர்களிடம் இந்த விவகாரம் குறித்துக் கேட்டபோது... “"எஸ்.சி., எஸ்.டி. ஆணையத் தில் இருந்து இந்த நிலம் பஞ்சமி நிலம் என்று சொல்லவில்லை. அப்படியிருக்கும்போது வேண்டு மென்றே அண்ணன் ஓ.பி.எஸ். பெயரை களங்கப் படுத்துவதற்காக அப்படி ஒரு பொய்யான தகவலை பரப்பிவருகிறார்கள்'’என்று கூறினர்.
ஏற்கெனவே அ.தி.மு.க. விவகா ரத்தில் தனி அணியை உருவாக்கி அதை வெற்றிகரமாகக் கொண்டுசெல்ல முடியாமல் பின்னடைவில் இருக்கும் ஓ.பி.எஸ்.ஸுக்கு, இந்த பஞ்சமி நில விவகாரம் மேலும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
-சக்தி
__________
இறுதிச்சுற்று!
சென்னை வடக்கு மண்டல போக்குவரத்துப் பிரிவு இணை கமிஷனர் மகேஷ்குமார் ஐ.பி.எஸ். மீது பெண் காவலர் ஒருவர் சமீபத்தில் பாலியல் குற்றச்சாட்டு புகாரை தமிழக டி.ஜி.பி.யிடம் கொடுத்திருந்தார். இதன்மீது உரிய விசாரணை நடத்த உத்தரவிட்டிருந்தார் டி.ஜி.பி. சங்கர் ஜிவால். மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி சீமா அகர்வால் தலைமையிலான விசாகா கமிட்டி, பெண் காவலர் கொடுத்த பாலியல் குற்றச்சாட்டினை தீவிரமாக விசாரித்தது. குற்றச்சாட்டில் முகாந்திரம் இருப்பதை கண்டறிந்த சீமா அகர்வால் தலைமையிலான கமிட்டி, இது குறித்த அறிக்கையையும் டி.ஜி.பி.யிடம் வழங்கியது. இதனைத் தொடர்ந்து ஐ.பி.எஸ். அதிகாரி மகேஷ்குமார் வியாழக்கிழமை (13-02-2025) அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பாலியல் குற்றச்சாட்டில் ஐ.பி.எஸ். அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள சம்பவம், காவல்துறை வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது.
-இளையர்