முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ்.ஸின் மூத்த மகனும் தேனி பாராளுமன்ற உறுப்பினரு மான ரவீந்திரநாத்துக்கு பெரியகுளம் அருகே கோம்பை வனப்பகுதியை ஒட்டி பல ஏக்கரில் தோட்டம் உள்ளது.

இந்த தோட்டத்திற்குள் வனவிலங்குகள் செல்லாமல் இருப்பதற்காக தோட்டத்தைச் சுற்றி கம்பி வேலி போடப்பட்டிருக்கிறது. இந்த கம்பி வேலியில் கடந்த 28-ஆம் தேதி ஒரு சிறுத்தை சிக்கி உயிரிழந்தது. இது தொடர்பாக தோட்டத்தில் தற்காலிகமாகக் கிடை அமைத்து ஆடு மேய்த்துவந்த ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த அலெக்ஸ்பாண்டியனை வனத்துறையினர் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

cheeta

Advertisment

தோட்டத்து உரிமையாளரான ஓ.பி.எஸ். மகன் ஓ.பி.ஆரை காப்பாற்றுவதற்காக ஆடு மேய்ப்பவர் மீது வனத்துறையினர் பொய்யான வழக்குப் பதிவுசெய்துள்ள தாக கூறி தமிழ்நாடு கால்நடை வளர்ப்போர் பாதுகாப்பு சங்கத்தினர் குற்றச்சாட்டு சுமத்தியதுடன்... தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், ஈரோடு, கோயம்புத்தூர், திருச்சி, மதுரை மாவட்டங்களைச் சேர்ந்த இரண்டா யிரத்திற்கும் மேற்பட்ட கால்நடை வளர்ப்பவர்கள் தேனி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட் டத்தில் குதித்தனர். அதைத் தொடர்ந்துதான் ஓ.பி.ஆர். தோட்ட மேலாளர்களான தங்கவேல், ராஜவேல் ஆகிய இருவரை வனத்துறையினர் கைதுசெய்திருக்கிறார்கள்.

கால்நடை வளர்ப்போர் சங்க பொதுச்செயலாள ரான வக்கீல் சரவணன், "எம்.பி. ரவீந்திரநாத்தின் தோட்ட மேலாளர்களான தங்கவேல், ராஜவேல் ஆகியோருடன் வனத்துறையினர் சேர்ந்து, கம்பி வேலியில் சிக்கியிருந்த சிறுத்தையை அடித்துக் கொலை செய்துவிட்டு அதை எரித்து ஓ.பி.ஆர். தோட்டத்துக்குள்ளேயே புதைத்தும் இருக்கிறார்கள். அதை நேரடியாகவே போய் பார்த்துவிட்டு வந்தோம். இது ஓ.பி.ஆர்.க்கு எப்படி தெரியாம இருக்கும். எல்லோரும் கூட்டுச் சதி செய்துதான் சிறுத்தையை கொலைசெய்திருக்கிறார்கள். ஓ.பி.ஆரும் குற்றவாளி. அவரையும் கைது செய்யவேண்டும் என்று போராட்டத்தின்போதே வலியுறுத்தி கலெக்டரிடமும், எஸ்.பி.யிடமும் மனு கொடுத்திருக்கிறோம். அப்படி இருக்கும்போது அலெக்ஸ் பாண்டியனை மிரட்டி, கட்டாயப்படுத்தி சிறுத்தையை கொலை செய்ததாக ஒப்புக்கொள்ளச் சொல்லி வீடியோ எடுத்து அதனை வனத்துறையினரிடம் கொடுத்திருக்கிறார்கள். அதோடு வனத்துறையினரும் குற்றத்தை ஒப்புக்கொள்ள சொல்லி அலெக்ஸ்பாண்டியனை அடித்துத் துன்புறுத்தி கைது செய்திருப்பது எந்த விதத்தில் நியாயம்?

ops son

Advertisment

சிறுத்தையை ஒரு ஆள் எப்படி அடித்துக் கொலை செய்துவிட முடியும்? இப்ப வனத் துறையினரோ இது வேற சிறுத்தை என்கிறார்கள். நாங்கள் அதுதான் இது என்கிறோம். சிறுத்தையின் மரணத்தில் தோட்ட உரிமையாளர், மேலாளர்கள் மற்றும் வனத்துறை ஆகியோர் தங்களை தற்காத்துக்கொள்ளவே அப்பாவி ஆடு மேய்க்கும் விவசாயி மீது வழக்குப் பதிவுசெய்துள்ளதாகத் தெரிகிறது. எனவே அப்பாவி ஆடு மேய்க்கும் விவசாயியை உடனடியாக விடுதலை செய்யக் கோரியும், கூட்டுச் சதி செய்து சிறுத்தையைக் கொலைசெய்த தோட்டத்தின் உரிமையாளர் ஓ.பி.ஆர். மற்றும் மேலாளர்கள் மீது புலன் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கக் கோரியும் மனித உரிமைகள் ஆணையம் மற்றும் முதலமைச்சர் உள்பட அனைத்து அதிகாரிகளுக்கும் புகார் மனு கொடுத்திருக்கிறோம். தேவைப்பட்டால் சிறுத்தை யின் மரண வழக்கை சி.பி.சி.ஐ.டி. அல்லது சி.பி.ஐ.க்கு மாற்றி விசாரணை நடத்தவேண்டும். உரிய நீதி கிடைக்காவிட்டால் தலைமைச் செயலகம், பாராளுமன்றத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்துவோம்''’என்றார்.

இது சம்பந்தமாக தேனி ரேஞ்சர் செந்தில்குமாரிடம் கேட்டபோது, "ஓ.பி.ஆருக்குச் சொந்தமான தோட்டத்தில் போடப்பட்ட முள்வேலியில் சிறுத்தை சிக்கியிருப்பதாக கடந்த 28-ஆம் தேதி அதிகாலை தகவல் வந்தது. வனத்துறையினரை அழைத்துக்கொண்டு அங்க போய் பார்த்தபோது இரண்டு வயதான பெண் சிறுத்தை முள்வேலியில் சிக்கித் தவிப்பதைக் கண்டு அதை மீட்கும் முயற்சியில் இறங்கினோம். அப்போது எங்களுடன் வந்த ஏ.சி.எப். மகேந்திரன் அதை வீடியோ எடுக்க பக்கத்தில் செல்லும்போது அவரைக் கடித்துவிட்டு முள்வேலியில் இருந்து தப்பி ஓடிவிட்டது. உடனே அவரை மருத்துவமனைக்கு அழைத்துவந்து சிகிச்சையளித்தோம். எங்களுடன் தோட்ட மேலாளர்களும் உடனிருந்தனர். அதன்பின் மீண்டும் மாலையில் தோட்டத்திற்கு போய் சுற்றிப் பார்த்தபோது கம்பி வேலியில் சிக்கி தப்பியோடிய சிறுத்தை இருந்த இடத்திலிருந்து 150 மீட்டர் தூரத்தில் ஆண் சிறுத்தை ஒன்று இறந்துகிடந்தது. அதைத்தொடர்ந்து விசாரணை நடத்தியதின் பெயரில்தான் தோட்டத்தில் ஆடு கிடை அமைத்திருந்த அலெக்ஸ்பாண்டியனை கைது செய்திருக்கிறோம். அதோட தோட்ட மேலாளர்கள் இருவரையும் கைது செய்திருக் கிறோம்.

ss

ஏற்கனவே இரண்டு ஆடுகளை சிறுத்தை தாக்கியிருக்கிறது. அதன் அடிப்படையில்தான் இந்த சம்பவம் நடந்திருக்கிறதே தவிர தப்பி ஓடிய சிறுத்தை இல்லை. இது வேற சிறுத்தை. அதோடு இந்த விஷயத்தை உயர் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியதன் பேரில் முறையாக போஸ்ட்மார்ட்டம் செய்து புதைத்துவிட்டோம். இதுசம்பந்தமாக தொடர்ந்து விசாரணை நடந்து வருவதால் தோட்ட உரிமையாளர் மீது நடவடிக்கை வருமா? என்பது போகப் போகத்தான் தெரியும்''” என்று கூறினார்.

இந்த குற்றச்சாட்டுகளைப் பற்றி விளக்கம் கேட்பதற்காக ஓ.பி.எஸ். மகனான ஓ.பி.ஆரிடம் பலமுறை தொடர்புகொண்டும் விளக்கம் பெற முடியவில்லை.