சமீபத்தில், அ.தி. மு.க. தலைமை அலுவலகத்துக்குள் ஓ.பி.எஸ். தனது ஆதரவாளர்களுடன் நுழைந்து, அங்குள்ள ஆவணங்களை எடுத்துச் சென்றது குறித்து மகாலிங்கம் என்பவர் புகாரளித் துள்ளார். இதே மகாலிங்கம்தான் எம்.ஜி.ஆர். காலத்தில் அ.தி.மு.க. அலுவலகத்தில் பொறுப்பில் இருந்தார். எம்.ஜி.ஆர். மறைவுக்குப்பின், அ.தி.மு.க. இரண்டாகப் பிளவுபட்டு, ஜெ. அணி, ஜானகி அணி என்று செயல்பட்டபோது, ஜெயலலிதாவுக்கு தனது விசுவாசத்தைக் காட்டுவதற்காக, தலைமை அலுவலகத்தில் இருந்த ஆவணங்களை எடுத்து வந்து ஜெ.விடம் கொடுத்து, நற்பெயரைப் பெற்றார்.
பின்னர் இரு அணிகளும் இணைந்தபின்னர், அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தது. சொத்துக்குவிப்பு வழக்கில் 2014ஆம் ஆண்டில் சிறப்பு நீதிமன்றத்தால் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஜெயலலிதா, தனது முதலமைச்சர் பதவியை இழந்தார். பின்னர் வெளியேவந்த ஜெயலலிதா, 2015ஆம் ஆண்டு அ.தி.மு.க. அலுவலகத்தை மறுசீரமைப்பு செய்ய முடிவெடுத்தபோது, ஜானகி அம்மாவின் பெயரில் இருந்த அ.தி.மு.க.வின் சொத்துக்களை கட்சிப் பெயருக்கு மாற்றுவதற்காக, அது சம்பந்தப்பட்ட ஆவணங்களை மகாலிங்கம் மூலமாக, ஜானகி எம்.ஜி.ஆரின் மருமகனான 'முதல் மரியாதை' தீபனிடமிருந்து வாங்கிவரச் செய்தார்.
இப்படி பெறப்பட்ட ஆவணங்களை வைத்து, அ.தி.மு.க. சொத்துக்களான சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகம், நெல்சன் மாணிக்கம் சாலையிலுள்ள அண்ணா பத்திரிகை, ஜெ.வின் கார் உள்பட, மாவட்டந்தோறும் கட்சிக்காக எம்.ஜி.ஆரால் வாங்கப்பட்ட பெரும்பாலான கட்சிச் சொத்துக்களை தனது நம்பிக்கைக்குரிய பூங்குன்றனின் பெயருக்கு மாற்றி யிருக்கிறார். முன்பு பூங்குன்றனின் வீட்டில் வருமானவரிச் சோதனை நடத்திய அதிகாரிகள், "இந்த சொத்துக் கள் உங்கள் பெயரில் உள்ளதே, இது எப்படி வந்தது?" எனக் கேட்டபோது, "அதெல்லாம் எனக்கு தெரியாது. அம்மா கையெழுத்து போடச் சொன்னால் நான் கையெழுத்து போடுவேன், அவ்வளவுதான்'' என்று சொன்ன ஸ்டேட்மெண்ட் நினைவுக்கு வரும்.
இதுதொடர்பாக பூங்குன்றனோடு பேச்சு வார்த்தை நடத்த அவரை சசிகலா அழைத்தபோது பூங்குன்றன் மறுத்துவிட்டார். தற்போது ஓ.பி.எஸ். சில தினங்களுக்கு முன்பாக பூங்குன்றனை தன் பக்கத்துக்கு வளைத்து, அவரோடு பலவற்றை விவாதித்துள்ளாராம். குறிப்பாக, ஜெயலலிதா, பூங்குன்றனை உள்ளடக்கிய அ.தி.மு.க. டிரஸ்ட், தற்போது பூங்குன்றன் பொறுப்பிலிருப்பதால், அந்த டிரஸ்ட்டின் வசமுள்ள அ.தி.மு.க. மாவட்ட அலுவலகங்கள் தொடர்பாகப் பேசியிருப்பதாகத் தெரிகிறது. இப்படி பூங்குன்றனைத் தனக்கு சாதகமாக்குவதன் மூலம் எடப்பாடி தரப்புக்கு தனது குடைச்சலைத் தொடர ஓ.பி.எஸ். முடிவெடுத்திருப்பதாகத் தெரிகிறது.
நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தை வசப்படுத்தியுள்ள எடப்பாடி தரப்பின் குஷி நீடிக்குமா?