தமிழகத்தை குறிவைத்து அரசியல் செய்யத் திட்டமிட்டிருக்கிறார் பிரதமர் மோடி. இதற்காக போடப் பட்டிருக்கும் "ஆபரேஷன் சௌத்' ப்ளானை கையிலெடுக் கிறது டெல்லி என்கிறார்கள் தமிழக பா.ஜ.க.வினர்.
அக்டோபர் 30ல் தேவர் குரு பூஜையில் கலந்துகொள்ள பிரதமர் மோடி தமிழகத்திற்கு வருவதாக அவரது பயணத் திட்டம் தயாராகி வருகிறது.
இதுகுறித்து பா.ஜ.க.வின் கொள்கை வகுப்பாளர்கள் சிலரிடம் பேசிய போது, "பா.ஜ.க.வுக்கு செல்வாக்கு இல்லாத மாநிலங்களில் கட்சியைப் பலப்படுத்துவதற்கு அந்த மாநிலத்தில் செல்வாக்குமிக்க தலைவர்களின் பிறந்தநாள் விழாக் களை விமரிசையாக கொண்டாடுவது, அவர்களுக்கு சிலை வைப்பது, அவர்களின் பெயர்களை முக்கிய இடங்களுக்குச் சூட்டுவது என பல்வேறு செயல்களைச் செய்து வருகிறது பா.ஜ.க.
அந்த வகையில், தமிழகத்தை குறி வைத்து பல திட்டங்கள் போடப் பட்டுள்ளன. இதற்கு "ஆபரேஷன் டி.என்.' என பெயர் வைத்திருக்கிறது ஆர்.எஸ்.எஸ். ஆப்ரேஷன் டி.என். திட்டத்தை "ஆபரேஷன் சௌத்', "ஆபரேஷன் நார்த்', "ஆபரேஷன் வெஸ்ட்' என மூன்றாகப் பிரித்துள்ளனர். மூன்றுக்கு மான தனித்தனி செயல்கள் வகுக்கப்பட்டுள்ளன.
"ஆபரேஷன் சௌத்' திட்டத்தை செயல்படுத்தும் முதல்படியாக தேவர் குரு பூஜையில் பிரதமர் மோடி கலந்துகொள்வதற்கான ஒரு ஆலோசனை டெல்லியில் நடந்து முடிந்திருக்கிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை 2.62 சதவீதமாக இருந்த பா.ஜ.க.வின் செல்வாக்கு (2021 சட்டமன்ற தேர்தல்), தி.மு.க. ஆட்சியில் நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சராசரியாக 5 சதவீத வாக்கு களாக (மாநகராட்சிகள்-7.17, நகராட்சிகள்-3.31, பேரூ ராட்சிகள்-4.30 சதவீதம்) உயர்ந்திருக்கிறது.
ஆக, மெல்ல மெல்ல கண்ணுக்குத் தெரியாமலே அதன் வளர்ச்சி ஊடுருவி வருகிறது. இந்த நிலையில் தான், 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க, 2024-ல் நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலை பயிற்சிக்களமாக மாற்றவிருக்கிறார்கள். மோடி, அமித்ஷா இருவரில் ஒருவர் தமிழகத்தில் போட்டியிட வேண்டும். குறிப்பாக, மோடி போட்டியிட்டால் ஒட்டுமொத்த தமிழக மக்களிட மும் பா.ஜ.க. பேசுபொருளாகும் என இருவரிடமும் தொடர்ந்து வலியுறுத்திவருகிறார்கள்.
அந்த வகையில், தற்போது உத்தரப் பிரதேசத்திலுள்ள புண்ணியஸ்தலமான வாரணாசி (காசி) தொகுதியின் எம்.பி.யாக இருக்கும் மோடி, மற்றொரு புண்ணியஸ்தலமான ராமேஸ்வரம் அடங்கியிருக்கும் ராமநாதபுரம் தொகுதியிலும் போட்டியிட வேண்டும் என அவரிடம் சொல்லப்பட்டுள்ளது. இரண்டிலும் வெற்றி பெற்றால் வாரணாசியை உதறுவார் மோடி. தமிழகத்தில் 2026-ல் ஆட்சியை பிடிக்க வேண்டுமானால் தமிழகத்தில் மோடி போட்டியிடுவது அவசியம் என்பதை அவரிடம் அழுத்தமாகச் சொல்லிவருகிறார்கள்.
இந்த சூழலில்தான், மோடியின் சகோதரர் பங்கஜ் மோடி கிட்டத்தட்ட 1 மாதமாக ராமேஸ்வரத்தில் தங்கியிருந்து, ஆன்மீகவாதிகள், ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. தொண்டர்கள், தென் மாவட்ட சமுதாய பெரியவர்கள், தொழிலதிபர்கள் என அனைத்து தரப்பினரிடமும் பேசி வருகிறார். இதன் ஒரு பகுதியாக, ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பசும்பொன் கிரா மத்திற்கு சென்று தேவர் நினைவிடத் தில் வழிபட்டி ருக்கிறார் பங்கஜ் மோடி.
இதன் பின் னணியில்தான் தேவர் குரு பூஜையில் கலந்து கொள்ளும் வகை யில் மோடியின் பயணம் திட்டமிடப் படுகிறது. கடந்த வருடம் தேவர் ஜெயந்தி விழாவின் போது முத்துராமலிங்கத் தேவரின் துணிச்சலையும் பொதுநலனையும் நினைவுகூர்ந்து தனது சமூகவலைத்தளத்தில் பதிவு செய்த மோடி, இந்த முறை நேரில் அஞ்சலி செலுத்துவதன் மூலம் முக்குலத்தோர் சமு தாயத்தின் அரசியலில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தலாம் என நினைக்கிறார்கள்.
அதன் செயல் திட்டங்கள்தான் ’"ஆப் ரேஷன் சௌத்'தில் வகைப்படுத்தப்பட்டுள்ளது. அந்த செயல் திட்டத்தின் ஒரு பகுதிதான் தேவர் குருபூஜையில் மோடி கலந்து கொள்ளவேண்டும் என்கிற அரசியல். தமிழகத்திலுள்ள சில விமானநிலையங்களுக்கு சமுதாய தலைவர்கள், சுதந்திரப் போராட்ட தியாகிகள், வீராங்கனைகள் உள்ளிட்டவர்களின் பெயர்களை வைக்கும் திட்டமும் மத்திய அரசிடம் இருக்கிறது. அதனை நிறைவேற்ற மதுரையில் ஒரு அரசு விழாவை நடத்திவிட்டு அப்படியே தேவர் குருபூஜைக்கு செல்லலாமா? என்றும் டெல்லியில் ஆலோசிக்கப் படுகிறது. தமிழகத்தில் அழுத்தமாக காலூன்ற மோடியை வைத்து இத்தகைய திட்டங்கள் தீட்டப்படுகின்றன''’என்று விரிவாக சுட்டிக் காட்டுகிறார்கள் பா.ஜ.க.வின் கொள்கை வகுப்பாளர்கள்.
தேவர் குருபூஜைக்கு மோடி வருவதாக பரவும் தகவலையடுத்து, தேவர் நினைவிடத்தில் அவரை சந்தித்து பேசவேண்டும் என்று எடப்பாடி, பன்னீர், சசிகலா, தினகரன் நால்வரும் திட்டமிடுகின்றனர் என்கிற தகவலும் பரவியுள்ளது. இதில், சசிகலாவும் பன்னீரும் இணைந்து மோடியை சந்திக்கலாம் என்று ஓ.பி.எஸ்.ஸிடம் அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துவருகின்றனர்.
குறிப்பாக, தேவர் குரு பூஜையின்போது, தேவருக்கு அணிவிக்கப்படும் தங்கக்கவசத்தை மோடியை வைத்து அணிய வைக்கலாம் என்று சசிகலா தரப்பில் யோசிக்கிறார்களாம். மோடியின் வருகை உறுதியானால், தங்கக்கவசம் அணிவிப்பது குறித்து ஓ.பி.எஸ்.ஸிடம் சசிகலா விவாதிப்பார் என்றும் அவரது முகாம் வட்டாரங்களில் சொல்லப்படுகிறது.
காரணம், வங்கியில் இருக்கும் அந்த தங்க கவசத்தை பெறும் உரிமை அ.தி.மு.க.வின் பொருளாளருக்கு மட்டுமே இருக்கிறது என்பதுதான். அ.தி.மு.க.வின் பொருளாளராக இருக்கும் ஓ.பி.எஸ்.ஸை எடப்பாடி பழனிச்சாமி நீக்கிவிட்டு, புதிய பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசனை நியமித்திருக்கிறார். இந்த நிலையில், ஓ.பி.எஸ்., திண்டுக்கல் சீனிவாசன் இருவருமே தங்கக்கவசத்தைப் பெற உரிமை கோருவதால், தங்கக்கவசத்தை வங்கி நிர்வாகம் யாரிடம் ஒப்படைக்கும் என்பது புதிராக இருக்கிறது.
இப்படிப்பட்ட சூழலில், தேவர் குரு பூஜைக்கு மோடி வருகிறாரா? என தமிழக உளவுத் துறை வட்டாரங்களில் விசாரித்தபோது, "தமி ழகத்திற்கு பிரதமர் வருவதாக இருந்தால் அவரது வருகை மாநில அரசுக்கு முறைப்படி தெரிவிக்கப் படும். அவருக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மாநில அரசு கவனித்துக் கொள்ளும். ஆனால், இதுவரை பிரதமர் மோடியின் வருகை குறித்து எந்த தகவலும் மாநில அரசுக்கு வரவில்லை.
குறிப்பிட்ட ஒரு இடத்துக்கு மோடி வருவதாக இருந்தால், அந்த இடத்தை 15 நாட்களுக்கு முன்பே பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகள் சோதனையிடுவதும், அந்த இடத்தை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதும் நடக்கும். இப்போதுவரை அப்படிப்பட்ட நிகழ்வுகள் ஏதும் இல்லை.
அதேசமயம், தமிழகத்திற்கு மோடி செல்வது குறித்து டெல்லியில் திட்டமிடப்படுவது உண்மை தான். ஒருவேளை இனிவரும் நாட்களில் மோடியின் தமிழக விசிட் உறுதியாகலாம். ஆனால், தற்போதுவரை உறுதி செய்யப்படவில்லை'' என்கிறார்கள் உளவுத்துறையினர்.
தமிழகத்தை குறிவைத்து பிரதமர் மோடியின் ஆபரேசன் துவங்கினாலும் தமிழக பா.ஜ.க.விற்கு தொண்டர்களின் பலம் இல்லாததால் ஆபரேஷன் சக்சஸ் ஆகாது. கேடர்ஸ் இல்லாததால் பூத் கமிட்டியை அமைக்கக்கூட ஆளில்லாமல் திண்டாடிவருகிறது தமிழக பா.ஜ.க. அந்த வகையில் எத்தகைய ஆபரேசன்களை டெல்லி நடத்தி னாலும், நோயாளியை (பா.ஜ.க.) உயிர்ப்பிக்க முடியாது என்பதே தற்போதைய கள நிலவரமாக இருக்கிறது.