இந்து அறநிலையத் துறையின் பெயர் மாற்றம் குறித்தும், தமிழகத்தில் இந்துத்வா சக்திகளின் செயல்பாடுகள் குறித்தும் பல்வேறு கருத்துக்களை நம்மோடு பகிர்ந்துகொண்டார் விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன்.
இந்து அறநிலையத்துறையை சைவ, வைணவப் பிரிவுகளாகப் பிரிக்க வேண்டு மென நீங்கள் குரலெழுப்பியதன் நோக்கம் என்ன?
இந்து சமய அறநிலையத்துறை கூடாது என்று சங் பரிவார் அமைப்புகள் தொடர்ந்து சொல்லி வருகிறார்கள். அவர்களின் சுதந் திரத்தையும், உரிமைகளையும் பறிப்பதாகவும் சொல்லுகிறார்கள். கோயில்களை மேம் படுத்துவதற்காகவும், பராமரிப்பதற்காகவு மான நல்லெண்ணத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது தான் இந்து சமய அறநிலையத்துறை. சைவம் வேறு வைணவம் வேறு என்பது நீண்ட காலமாக வந்திருக்கக் கூடிய வரலாற்று உண்மை. அண்மையில் கூட மதுரை ஆதீனம், 'எங்களை இந்துக்கள் எனச் சொல்லக்கூடாது, சைவர்கள் என்று தான் சொல்ல வேண்டும்' என்றார்.
கர்நாடகாவில் லிங்காயத்து சமூகத் தைச் சார்ந்தவர்கள், "நாங்கள் இந்துக்கள் இல்லை, எங்களை சைவர்கள் என்றுதான் அழைக்க வேண்டும்' என வழக்கு நடத்தி வருகிறார்கள்.
ஆதிசங்கரர் காலத்திலேகூட ஷன் மதம் என்றுதான் புதிய பெயரைக் கொடுத் தார். இந்து மதம் என்று கொடுக்கவில்லை. ஆதிசங்கரர் இந்தியா முழுவதும் நடைப் பயணமாகச் சென்று எல்லோரையும் சந் தித்து ஒருங்கிணைத்து மடத்தை நிறுவினார். ஆனால் அவர் காஞ்சி மடத்தை நிறுவ வில்லை. நூற்றுக்கணக்கான பிரிவுகள் இருந் தாலும் அவர் ஆறு மிகப்பெரிய பிரிவுகளை மட்டும் ஒருங்கிணைத்தார். அவை, சைவம், வைணவம், சாக்தம், காணபத்தியம், கௌமாரம், சௌரம். இவற்றில், சைவம் சிவனை வழிபடுவது, வைணவம் திருமாலை வழிபடுவது, காணபத்தியம் கணபதியை வணங்குவது, சாக்தம் சக்தியை வழிபடுவது, கௌமாரம் என்பது குமரன் முருகனை வழிபடுவது, சௌரம் என்றால் சூரியன்... சூரியனை வழிபடுவது. இவையெல்லாம் தனித்தனி மதமாக அல்லது சமயங்களாக இருந்திருக்கின்றன. இவைகளை ஒருங்கிணைத்து அவற்றை ஷன் மதங்கள் என்று பெயர் சூட்டினார். அந்த வகையில் இவரும் இந்து என்ற பெயரை பயன்படுத்தவில்லை. பிற்காலத்தில் ஆங்கிலேயர்கள் ஆட்சிக்கு வந்தபிறகு, ஆங்கிலேயர்கள்தான் இவர்களை இந்துக்களாக அடையாளப்படுத்தினார்கள்.
ஆகவே சைவத்தையும் வைணவத்தையும் ஒருங்கிணைத்து இந்து சமயம் என்று சொல்கிறபோது, தன்னியல்பாக சைவமும், வைணவ மும் முன் நின்று, வழி நடத்தியவர்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டு, பிராமணர்களின் ஆதிக்கம் வருகிறது. இங்கே சைவம் ஓங்குவதைவிட சனாதனம் ஓங்குகிறது. வைணவம் ஓங்குவதைவிட மனுதருமம் வளர்கிறது. ஆக, அந்த சைவத்தையும் வைணவத்தையும் சனாதனம் உள்வாங்கிக் கொண்டு ஆதிக்கம் செய்கிறது. இந்த சனாதன ஆதிக்கத்தை தடுக்க வேண்டுமானால் இந்து சமயம் என்கிற பெயர் அகற்றப்பட வேண்டும். சைவம் சைவமாகவும், வைணவம் வைணவமாகவும் இயங்கவேண்டும்.
சிவனும் விஷ்ணுவும் இணைந்திருக்கும் சங்கரநாராயணன் கோவில்களையும், சிறுதெய்வ வழிபாட்டு இடங்களையும் எந்த அறநிலையத்துறையின் கீழ் கொண்டுவருவது?
சைவம், வைணவம் ஆகிய இரண்டு மதங்கள் தமிழ்நாட்டில் இருந்திருக்கிறது. ஆனால், அதிகமாக சைவம் தான் தமிழ்நாட்டில் இருந்திருக்கிறது. அதேபோல வடநாட்டைப் பொறுத்தவரைக்கும் வைணவம், சைவம் அங்கேயும் உண்டு. இங்கிருந்த ஆதினங்கள் மடங்களைக் கட்டி சிவனைப் பரப்பி வந்தார்கள். சிவன் பெரியவனா? விஷ்ணு பெரியவனா? என்கின்ற விவாதம் எல்லாம் நடந்திருக்கிறது. அதுவும் இது திருவிளையாடல் புராணங்களில் வருகிறது. சிவன் விஸ்வரூபம் எடுத்து விண்ணுக்கும் மண்ணுக்கும் நின்றபோது, சிவனின் அடியைக் காண்பதற்காக விஷ்ணு பன்றி அவதாரம் எடுத்த தாகவும் இவர்கள் உருவாக்கிய அவதாரமே சான்று. இவையெல்லாம், சைவம் வேறு, வைணவம் என்று தான் உணர்த்துகின்றன.
பின்னாளில் இவற்றையெல்லாம் ஒருங்கிணைக்கக்கூடிய முயற்சி களில் ஈடுபட்டார்கள். ஹரிஹரன் என்று பெயர் வைத்தார்கள். ஹரி விஷ்ணு. ஹரன் சிவன். அரியும் சிவனும் ஒன்று, அறியாதவன் வாயில மண்ணு என்ற பழமொடி அப்படித்தான் உருவானது. அப்படித்தான் மதுரை நாயக்கர் கள்ளழகர் திருவிழா வைணவத் திருவிழா, சொக்க லிங்கம் மீனாட்சி திருமணவிழா சிவன் விழா. இவை இரண்டும் இணைந்து திருமலை நாயக்கர் காலத்தில் சித்திரை திருவிழா கொண்டாப்பட்டது. இவையெல்லாம் பிற்காலத்தில் மாற்றப்பட்டவை.
சிறு தெய்வ வழிபாடு என்பது இதற்குள்ளே வருவதில்லை நடுகல் நடக்கூடிய வழிபாடு, முனீஸ்வரன், அய்யனார் இதுவெல்லாம் ஆசீவக மதத்தைச் சேர்ந்ததாக சொல்லப்படுகிறது. முன்னோர்களை வணங்குபவர்கள். பார்ப்பன இந்து மதத்தோடு தொடர்புடையதல்ல. இந்த சிறு தெய்வங்களுக்கும் தனியொரு அறநிலையத்துறை வேண்டுமென்றால் அதுவும் வரவேற்கத்தக்கதுதான். சனாதன மேலாதிக்கத்தை அனுமதிக்கக் கூடாது என்ற அடிப்படை யிலும், சைவத்துக்கும் வைணவத் திற்குமான தனித்துவத்தை பாதுகாப்பதற்கும் இதனை இரண்டாகப் பிரிக்கவேண்டும் எனக் கோரிக்கை வைக்கிறேன்.
தெலுங்கானா முதல்வரின் அரசியல் விழாவில் கலந்து கொண்டதன் மூலம், அவரை காங்கிரஸ் அணிக்கு கொண்டு வர முயற்சிக்கிறீர்களா? அல்லது மாற்று அணி சிந்தனையா?
புது அணி ஆபத்தானது. மூன்றாவது அணியே கூடாது, ஒரே அணிதான். அது பி.ஜே.பி.யை தனிப்படுத்தக்கூடிய அணிதான். பி.ஜே.பி. ஒரு அணியிலும், ஜனநாயக சக்திகள் அனைவரும் ஒரு அணியிலும் இணைய வேண்டும். அதில் டி.ஆர்.எஸ். தெலுங்கானா முதல்வர் சந்திர சேகரராவ் இருக்கவேண்டும். இதை நாங்கள் அவருடைய பொதுக்குழுவில் வெளிப்படை யாகப் பேசினோம். அதை கோரிக்கை மனுவாகவும் கொடுத் திருக்கிறோம். அதை அவர் புறந்தள்ளவில்லை, அங்கிருக்கும் சூழலைப் பொறுத்து பரிசீலிப் போம் என்றார்.
மதமாற்றம் செய்த தலித்துக் களுக்கு சலுகைகளா என மத் திய அரசு கமிஷன் அமைத்து விசாரிப்பதின் நோக்கம்?
பட்டியலின மக்கள் மதம் மாறக்கூடியவர்கள். பௌத்தம், முஸ்லீம், கிறிஸ்துவர்களாக மாறி வருவார்கள். இப்படி வட மாநிலத்தில்தான் அதிகமாக பௌத்தர்களாக மாறி வருகிறார் கள். அவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லீம் களுக்கும் அந்த வாய்ப்பு இல்லை. இதைத்தான் 1950-ல் போடப் பட்ட பிரசிடென்சி ஆர்டர் முன் மொழிகிறது. அதை நீக்கச்சொல்லி உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலு வையில் உள்ளது. இந்த சூழ்நிலை யில் இந்த விசாரணைக்குழுவை அமைத்துள்ளனர். வாக்குக்காக நடத்தக்கூடிய நாடகமாகத்தான் நான் இதைப் பார்க்கிறேன்.
திருக்குறள் ஆன்மிக நூல் என்பதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
திருவள்ளுவருக்கு காவிச் சாயம் பூசப் பார்க்கிறார்கள். ராஜ ராஜ சோழனுக்கு இந்து முத்திரை குத்தப் பார்க்கிறார்கள். திருக்குறள் என்பது உலகப் பொதுமறையான நூல். அறத்தை சொல்லக்கூடிய நூல். ஆகையால் இதை மதச் சாயம் பூசிப் பேச விரும்பவில்லை. ஆன்மிகம் என்று சொல்வதில் தவறில்லை, சொல்லும் உள் நோக்கம் வேறு. இந்து சாயம் பூசப் பார்க்கிறார்கள்.
சமூக நல்லிணக்க மனிதச் சங்கலி அறப்போர் பேரணியின் தற்போதைய தேவை என்ன?
ஆர்.எஸ்.எஸ்.ஸின் சதித் திட்டங்களை முறியடிப்பதற் காகவே இந்த பேரணி. தமிழ்நாட் டில் ஆர்.எஸ்.எஸ். பேரணி எதற் காக நடத்துகிறார்கள்? அவர்கள் இங்குள்ள மக்களுக்கு மனைப் பட்டா வேண்டும் என நடத்து கிறார்களா? இல்லை குடிநீர் வசதி கேட்டு போராடுகிறார்களா? கல்விக்கான போராட்டங்களா? அவர்கள் மத வெறியைப் பரப்புவதற்கு பேரணி நடத்துகிறார் கள். பா.ஜ.க.வுக்கு ஒரு அரசியல் கட்சி. அவர் கள் பேரணி நடத்துவதற்கு ஒரு அர்த்தம் இருக் கிறது. இவர்களுடைய பேரணிக்கு தமிழகத்தில் தேவை என்ன இருக்கிறது? ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பை தடை செய்ய வேண்டும் என நாங்கள் கோரிக்கை வைக்கவில்லை. ஆனால் அதே நாளில் நாங்களும் பேரணி நடத்துவோம் எனக் கோரிக்கை வைத்தோம். இவ்விரண்டு அமைப்புகளுக்கும் தடை விதிக்கப்பட்டது. ஆனால் இப்பொழுது நாங்கள் திட்டமிட்டபடி 77 அமைப்புகள் ஒன்று சேர்ந்து தமிழகம் முழுவதும் மனிதச் சங்கிலி அறப்போர் நடத்துகிறோம். இவை முழுக்க முழுக்க சங்பரிவார்களுக்கு தமிழ்நாட்டில் இடமில்லை எனச் சொல்வதற்கான அறப்போர்.
தற்போதைய தி.மு.க. அரசின் செயல்பாடும், மு.க.ஸ்டாலின் இரண்டாவது முறையாக தி.மு.க. தலைவராகியுள்ளதையும் எப்படிப் பார்க்கிறீர்கள்?
அவர் ஆளுமைமிக்க தலைவராக பரிணா மம் பெற்றிருக்கிறார். கலைஞருக்குப் பிறகு தி.மு.க. கட்சி ஒன்றுமில்லாமல் போய்விடும் என நினைத்தவர்களுக்கு, கட்சியையும் ஆட்சியை யும் சிறப்பாக நடத்தி சவுக்கடி கொடுத்து, ஆளுமைவாய்ந்த தலைமையென்பதை நிலை நாட்டியுள்ளார். இரண்டாவது முறையாக தி.மு.க.வின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டி ருப்பது அவருடைய ஆளுமைக்கு கிடைத்த மகத்தான சான்று. ஆகவேதான் அடுத்த நாளே அவரை நேரில் சந்தித்து விடுதலை சிறுத்தை களின் சார்பாக வாழ்த்து கூறியதோடு தமிழ் நாட்டோடு தங்களின் பணி முடிந்து விடக்கூடாது, அகில இந்திய அளவில் ஜனநாயக சக்திகளை ஒருங்கிணைக்க வேண்டிய வரலாற்றுக் கடமை இருக்கிறது என்பதை சுட்டிக்காட்டினோம்.
வி.சி.க.வின் பயணத்தில் அடுத்த இலக்கு என்ன?
நாங்கள் வலுவான அரசியல் இயக்கமாக வளர்ந்து வருகிறோம். தேசிய அளவில் இந்த இயக்கத்தை வளர்க்கச் செயல் திட்டங்களை தீட்டி வருகிறோம். பா.ஜ.க.வுக்கு மாற்று சக்தியாக விடுதலை சிறுத்தைகள் வளரும் என்ற நம்பிக்கையோடு நாங்கள் பயணிக்கிறோம்.