நகைச்சுவை நடிகரும், அ.தி.மு.க. பேச்சாளருமான போண்டாமணி, இரண்டு கிட்னி செயலிழந்து ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். மருத்துவச் செலவுக்கு பணமில்லாமல் கஷ்டப்படுகிறார் என வெளியான செய்திகளைத் தொடர்ந்து, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சு., மருத்துவமனைக்கு நேரடியாகச் சென்று உங்கள் மருத்துவ சிகிச்சைக்குத் தேவையான உதவிகள் அனைத்தையும் அரசே செய்யும்’என வாக்குறுதி தந்திருக்கிறார்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய தி.மு.க. நிர்வாகி யொருவர், “"ஆளும்கட்சி என்பது அதுசார்ந்த கட்சிக்கு மட்டுமல்ல, அனைத்து மக்களுக்கும் பொதுவானது என்பதை நாங்களும் அறிவோம். நடிகர் போண்டா மணிக்கு மருத்துவ உதவி வழங்கியதை வரவேற்கிறோம். அதேநேரத்தில், கட்சிக்காக உழைத்த, உழைக்கும் தி.மு.க.வினரையும் கண்டுகொள்ள வேண்டும் என்றே மன்றாடுகிறோம். ‘கலைஞர் முதல்வராக இருக்கும்போது, அரசுப் பணியில் தகுதியான, திறமையான கட்சிக்காரர் களின் பிள்ளைகளுக்கு வேலை தந்தார். இதனாலேயே தி.மு.க. எதிர்க்கட்சியாக இருந்தபோதும் அவர் மக்கள் மன்றத்தில் முதல்வராகவே இருந்தார்’ என்ற கருத்து சமூக வலைத்தளத்தில் ஆயிரக்கணக்கானவர்களை லைக் செய்ய வைத்துள்ளதை நம்மிடம் காட்டியவர், இது தான் கட்சியினரின் மன ஓட்டம்'' என்றார்.
பத்து ஆண்டுகளாக எதிர்க் கட்சியாக இருந்து இப்போதுதான் ஆளும்கட்சியாகி இருக்கிறோம். ஆட்சிக்கு வந்து 17 மாதங்களாகி விட்டது. இப்போதுவரை அடி மட்ட நிர்வாகிக்கும், தொண்டனுக் கும் எந்தப்பலனும் கட்சியால் கிடைக்கவில்லை. என்னைப்போல் அரசு காரில் பயணமாகும் மக்கள் பிரதிநிதிகளுக்கு எந்தக் குறையுமில்லை. ஆனால் எங்களுக்காக உழைத்த கிளைக் கழக, ஒன்றிய, நகரக் கழக நிர்வாகிகள், தீவிர தொண்டர்களுக்கு எதுவும் செய்யமுடியவில்லை. சொந்த கட்சிக்காரனுக் குச் செய்யத் தயங்கும் அமைச்சர்கள், மாற்றுக் கட்சியினர் கோரிக்கை வைத்தால் உடனடியாகச் செய்து தருகிறார்கள்.
ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே மருத்துவச் செவிலியர்கள் பணியிடம் நிரப்பப் பட்டது. வட மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு கிளைக் கழகத் தொண்டரின் மகள் நர்சிங் முடித்துவிட்டு பணிக்காகத் தகுதியோடு காத் திருந்தார். அவருக்கு வேலைகேட்டு அந்த நிர்வாகி மா.செ.வை சந்தித்தார். அவரும் அந்த தொண்டரின் உறுப்பினர் கார்டு, சான்றிதழ்கள் போன்றவற்றை இணைத்து, அவரின் கட்சி விசுவாசம் குறித்து கடிதம் எழுதி, ‘இவரின் மகளுக்கு வேலைக்கான தகுதியிருக்கிறது, தேர்வில் வெற்றி பெற்றுள் ளார், அவருக்கு பணி வழங்குங்கள்’ எனச் சொல்லி சுகாதாரத்துறை அமைச்சருக்கு கடிதம் அனுப்பினார். வேலையே போடவில்லை. நீதி மன்றத்தில் கிளர்க், அலுவலக உதவியாளர் பணிக்கு வேலைக்கு ஆள் எடுத்தபோது அந்தத் துறை அமைச் சர், “"என் அலுவலகம் பக்கமே வராதீர்கள்'’எனச் சொன்னார். அ.தி.மு.க. பிரமுகர் ஒருவர், லம்ப்பாக பணம் தந்துவிட்டு அந்த வேலையை தன் மகனுக்கு வாங்கிவந்தார். நாங்கள் என்ன சொல்கிறோம்...…பணம் கேளுங்கள், நாங்களே வாங்கித்தருகிறோம் அல்லது நேரடியாக கட்சிக்காரனை அழைத்து இவ்ளோ ஆகும் எனக் கேளுங்கள். அவன் தரத் தயாராகவுள் ளான். எதிர்க்கட்சிக்காரனிடம் பணம் வாங்கிக் கொண்டு வேலை போடும் அமைச்சர்கள், சொந்தக் கட்சிக்காரனிடம் அதே பணத்தை வாங்கிக்கொண்டு வேலை போடுங்கள்’ என்றுதான் கேட்கிறோம்.
வட மாவட்டத்தைச் சேர்ந்த அ.தி.மு.க. மாவட்ட பிரமுகர் ஒருவர் அ.தி.மு.க. ஆட்சியில் 10 வருடங்களாக இல்லீகலாக கல் குவாரி நடத்திவந்தார். தி.மு.க. ஆட்சி அமைந்தபின்பு அதே குவாரியை சட் டப்படி டெண்டர் பெறுகிறார். இல்லீகலாக குவாரி நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டியவர் கள் அமைதியாக இருந்தார்கள். அதே குவாரிக்கு தி.மு.க. பிரமுகர் முயற்சி செய்தும் கிடைக்கவில்லை.
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ந.செ. ஒருவர் நம்மிடம், "அமைச்சர்கள் அலுவலகங்களில் ந.செ., ஒ.செ. போனால் மதிப்பதேயில்லை. பள்ளிக்கல்வித் துறை, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை போன்றவற்றில் பணியாற்றும் தி.மு.க. மீது அபிமானம் கொண்ட ஊழியர்கள், தி.மு.க. நிர்வாகிகளின் குடும்பத்தினர், உறவினர்களைத் தேடித்தேடி கடந்த 10 ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியில் பந்தாடி விட்டார்கள், தொலைதூரத்திற்கு இடமாற்றம் செய்துவிட்டார்கள். நம் ஆட்சி வந்து 17 மாதங்களாகிவிட்டது. இடமாற்றம் செய்து தாங்கன்னு சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் களைச் சந்திக்கச் சென்றால் ‘"அதையெல்லாம் கவுன்சிலிங்கில் பார்த்துக்குங்க' அப்படீன்னு சொல்றாங்க. இது என்னங்க நியாயம்?’ ஒரு ஆசிரியர், வி.ஏ.ஓ, பி.டி.ஓ போன்றவர்களை இடமாற்றம் செய்யமாட்டேன்னு சொன்னா என்னங்க அர்த்தம்?
கிராமங்களுக்குச் சென்றால் சொந்தக் கட்சிக்காரன் முகத்தை நேரடியாகப் பார்த்துப் பேசமுடியவில்லை. நம்ம கட்சி ஆட்சியில் எம்புள்ளைக்கு வேலை வாங்கினேன்னு சொல்றதுதாங்க மரியாதை. அந்த மரியாதை யைக்கூட நீங்க கட்சிக்காரனுக்கு செய்ய மாட்டேங்கிறீங்க. எதிர்க்கட்சிக்காரனுக்கு விழுந்து விழுந்து செய்யறிங்களே நியாயமான்னு கேட்கறாங்க. என்ன பதில் சொல்றதுன்னு தெரியல. கடந்த 10 ஆண்டுகாலத்தில் அரசுப் பணியில் அ.தி.மு.க. நிர்வாகிகளின் பிள்ளை கள் நுழைந்துள்ளார்கள். பணியில் உள்ள அ.தி.மு.க. குடும்பத்தைச் சேர்ந்த ஊழியர்கள், அரசு அலுவலகங்களில் அ.தி.மு.க. கரை வேட்டியைப் பார்த்தாலே வேலை செய்து தருகிறார்கள். ஆளுங்கட்சியான தி.மு.க.வினரிடம் ரூல்ஸ் பேசுகிறார்கள். இவையெல்லாமே வேதனையாக இருக்கிறது''’என்று குமுறியவர்... "இந்த குமுறல்கள் கட்சித் தலைமைக்கு எட்டவேண்டும்''’என்றும் கூறினார்.