"எடப்பாடி பழனிச்சாமியின் ஒற்றைத் தலைமை முழக்கத்தால் இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். அணி என இரண்டாகப் பிளவுபட்டு நிற்கும் அ.தி.மு.க.வில் நடக்கும் அதிகார மோதல்களுக்கு 30-ந் தேதி ஒரு முடிவு கிடைக்கும்' என்கிறார்கள் அக்கட்சியின் சீனியர் வழக்கறிஞர்கள்.
இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ். என இரட்டைத் தலைமையில் இயங்கிய அ.தி.மு.க.வை தன் கஸ்டடியில் முழுமையாக கொண்டுவர ஒற்றைத் தலைமையை முன்னெடுத்த எடப்பாடி, இதற்காக கட்சியின் பொதுக்குழுவைக் கூட்டி, இரட்டைத் தலைமையை நீக்கிவிட்டு, கட்சியில் பொதுச்செய லாளர் பதவியை மீண்டும் உருவாக்கும் முயற்சியில், 6 மாதத்திற்குள் பொதுச்செயலாளர் தேர்தல் நடக்கும் என்கிற தீர்மானத்தை நிறைவேற்றினார். இடைக்கால பொதுச்செயலாளராகவும் தன்னை நியமிக்க வைத்துவிட்டார் எடப்பாடி பழனிச்சாமி.
இதனை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் ஓ.பி.எஸ். வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி ஜெயச் சந்திரன், "கட்சியின் சட்டவிதிகளின்படி பொதுக் குழு கூட்டப்படாததால் அந்த பொதுக்குழு செல்லாது. இருவரும் இணைந்து விதிகளின்படி பொதுக் குழுவை கூட்டவேண் டும். அதில் ஏதேனும் சிக்கல் வந்தால் நீதிமன்றத்தை அணுகலாம். நீதிமன்றம் நியமிக்கும் கமிட்டியின் மேற்பார் வையில் பொதுக்குழு நடக்கும்' என்று 75 பக்கத்துக்கு ஒரு தீர்ப்பை வாசித்தார்.
இந்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிச் சாமி மேல்முறையீடு செய்ய, தனி நீதிபதியின் உத்தரவை மறுக்கும் வகையில், "பொதுக்குழு செல்லும்'‘என்ற ரீதியில் தீர்ப்பளித்தது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி துரைசாமி தலைமையிலான அமர்வு. இதனால் அ.தி.மு.க.வில் திடீர் பரபரப்பு உருவாக, இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்தார் ஓ.பி.எஸ்.
அ.தி.மு.க.வின் இந்த பஞ்சாயத்து உச்சநீதிமன்றம்வரை சென்றிருக்கும் சூழலில், கட்சியில் தனக்குத்தான் அதிகாரம் இருக்கிறது என்கிற கோதாவில் குதித்த இ.பி.எஸ்.ஸும் ஓ.பி.எஸ்.ஸும் பரஸ்பரம் தங்களின் ஆதரவாளர் களை பதவியில் நியமித்தும், எதிர்த்தரப்பு ஆதர வாளர்களை கட்சியை விட்டு நீக்கவும் செய்து கொண்டிருந்தனர். இதனால் ஒவ்வொருநாளும் அ.தி.மு.க.வில் குழப்பமும் அதிர்ச்சியும் அதி கரித்தபடி இருந்தது. இந்த நிலையில்தான், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கு கடந்த செப்டம்பரில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, கெய்ஷ்னா முரளி, ’"பன்னீர் செல்வம் தாக் கல் செய்த மனுவுக்கு விளக்கம் கேட்டு பழனிச்சாமிக்கு நோட்டீஸ் அனுப்பு கிறோம். இந்த வழக்கில் இறுதி முடிவு எடுக்கும் வரையில் பொதுச்செயலாளர் தேர்தல் நடத்தக்கூடாது'’என்று உத்தரவிட்டனர். மேலும், வழக்கை நவம்பர் 21-க்கு ஒத்தி வைத்தனர்.
இந்த இடைக்கால தீர்ப்பு ஓ.பி.எஸ். தரப்புக்கு உற்சாகத்தையும் இ.பி.எஸ். தரப்புக்கு அதிர்ச்சி யையும் தந்த நிலையில்... கடந்த 2 மாதமாக இரு தரப்பிலும் பல்வேறு நடவடிக்கைகளை கட்சிக்குள் அமல்படுத்த, குழப்பங்கள் மீண்டும் அதிகரித்தது. இதற்கிடையே இவர்களின் பஞ்சாயத்தில் நுழைந்த பா.ஜ.க. தலைமை "ஓ.பி.எஸ்.-இ.பி.எஸ். இருவரின் தலைமையில்தான் அ.தி.மு.க. இயங்க வேண்டும்; சசிகலா, டி.டி.வி.தினகரனை மீண்டும் அ.தி.மு.க.வில் இணைத்துக் கொள்ள வேண்டும்'’என்றெல்லாம் நாட்டாமை செய்தது. இதனால் தங்களின் பிக்பாஸான பிரதமர் மோடியையும் அமித்ஷாவையும் தனிப்பட்ட முறையில் சந்தித்து முறையிட இருவரும் முயற்சித்தனர்.
அதற்கான வாய்ப்பைத் தராத மோடியும் அமித்ஷாவும், "ஒற்றுமையாக இருங்கள்' என்று மட்டுமே தொடர்ந்து வலியுறுத்த, "ஒற்றைத் தலைமையில்தான் அ.தி.மு.க. செயல்படும்; சசிகலா, தினகரனை கட்சியில் இணைத்துக்கொள்ளவே முடியாது' என்று பிடிவாதம் காட்டி வருகிறார் எடப்பாடி பழனிச்சாமி.
இந்த நிலையில் கடந்த 21-ந் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஏற்கனவே வழக்கை விசாரித்திருந்த நீதிபதிகள் ஷா மற்றும் கெய்ஷ்னா முரளிக்குப் பதிலாக, தினேஷ்மகேஷ்வரி, சுதான்சூ துலியா அமர்வுக்கு வழக்கு மாற்றப்பட்டிருந்தது. வழக்கின் விசாரணையின்போது, இரண்டு வாரத்துக்கு வழக்கை ஒத்திவைக்க வேண்டும் என ஓபிஎஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட, அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த எடப்பாடி தரப்பு, "இந்த வழக்கு ஜூலை 11-ந் தேதி நடந்த பொதுக்குழு தொடர்பானது. தேர்தல் நடத்த 6 மாத காலம்தான் அவகாசம் என்பதால் வழக்கை உடனடியாக விசாரித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும்' என வாதிட்டனர். இதனை எதிர்த்த ஓ.பி.எஸ். வழக் கறிஞர்கள், "இதற்கு பதிலளிக்க எங்களுக்கு அவகாசம் வேண் டும்' என்று முறையிட்டனர். இதனையடுத்து நவம்பர் 30-ந் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தனர் நீதிபதிகள்.
ஆக, 30-ந் தேதி இறுதிக்கட்ட விசாரணை நடந்துமுடிந்து ஒரு முடிவுக்கு இந்த வழக்கு வந்துவிடும் என எதிர்பார்க்கிறார்கள் அ.தி.மு.க. வழக்கறிஞர்கள். இதற்கிடையே, "இந்த வழக்கை தாக்கல் செய்ய ஓ.பி.எஸ்.ஸுக்கு தகுதியே இல்லை' என்று திடீரென ஒரு மனுவை எடப்பாடி தாக்கல் செய்யவும், கடந்த வாரம் அ.தி.மு.க.வில் பரபரப்பு உருவானது. எடப்பாடியின் மனுவுக்கு பதிலளிக்கும் வகையில், வலிமையான பாயிண்டுகளுடன் புதிதாக மனு தயாரித்துள்ளது ஓ.பி.எஸ். தரப்பு.
இப்படி திடீர், திடீரென இரு தரப்பும் மாறி, மாறி மனு போட்டுவரும் சூழலில், 30-ந் தேதி நடக்கும் இறுதிக்கட்ட விசாரணையின் முடிவு எப்படி இருக்கும் என்று அ.தி.மு.க. வழக்கறிஞர்கள் மத்தியில் பந்தயம் நடந்துகொண்டிருக்கிறது.
இதுகுறித்து நம்மிடம் பேசிய ஓ.பி.எஸ். ஆதரவு வழக்கறிஞர்கள், "ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கில் தனி நீதிபதி குன்ஹா வழங்கிய தீர்ப்புக்கு பெங்களூரு உயர்நீதி மன்றம் தடை கொடுத்தது. ஆனால், வழக்கு உச்ச நீதிமன்றத்துக்கு சென்றபோது, தனி நீதிபதி குன்ஹாவின் தீர்ப்பைத்தான் உறுதிசெய்தது. அதே போன்றுதான், தற்போதைய இந்த வழக்கிலும் தீர்ப்பு வரும். இந்த நம்பிக்கையில்தான் ஓ.பி.எஸ். இருக்கிறார். அதனால் இதனை உடைக்க இந்தியா வின் காஸ்ட்லியான வழக்கறிஞர்களை அணுகி யுள்ளது எடப்பாடி தரப்பு'’என்கிறார்கள். இந்த வழக்கில் எப்படியும் ஜெயித்தாக வேண்டும் என்கிற கங்கணம் கட்டிக்கொண்டிருக்கும் எடப்பாடி பழனிச்சாமி, வழக்கிற்காக பல கோடிகளை இறைத்திருக்கும் நிலையில், இந்த வழக்கின் நீதிபதிகள் மாற்றப்படலாம் என தெரிகிறது. இந்த மாதம் 30-ந்தேதி வழக்கு விசாரணைக்கு வருவ தால், வழக்கறிஞர்களுடன் தொடர்ச்சியாக விவாதித்தபடி இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.
அ.தி.மு.க. பலம் பெறவேண்டும் என விரும்பும் இருதரப்பு ஆதரவாளர்களும் வழக்கின் முடிவுக்காக காத்திருக்கிறார்கள். முடிவு தெரிந்ததும் முகாம் மாற பலரும் தயாராகி வருகிறார்கள். ஆக, ஓ.பி.எஸ்.-இ.பி.எஸ். இருவருக்கும் டென்சனை தந்துகொண்டி ருக்கிறது நவம்பர் 30-ந் தேதி.