நடந்து முடிந்த சட்டசபை கூட்டத் தொடரில் 22-ஆம் தேதி சட்டமன்றத்தில் அமைச்சர் கே.என்.நேரு, தமிழகத்திலுள்ள 776 கிராம ஊராட்சிகளை தரம் உயர்த்துவதும் இணைப்பதும் முறையாக கருத்து கேட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதனையடுத்து பல்வேறு மாவட் டங்களில் கிராம ஊராட்சிமன்ற மக்கள் பிரதிநிதிகளும் மக்களும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், கிராம ஊராட்சிகளை தரம் உயர்த்துவதாலோ, இணைப்பதாலோ அந்த ஊராட்சிகளுக்கும் மக்களும் பாதிப்பே தவிர எந்த நலனும் கிடைக்காது என குற்றம்சாட்டி நம்மிடம் பேசிய குமரி மாவட்ட முத்தலக்குறிச்சி கிராம ஊராட்சிமன்றத் தலைவர் சிம்சன், “"1999-ல் கலைஞர் முதல்வராக இருக்கும்போது தமிழகத்தில் வருவாய் குறைந்த 100-க்கு மேற்பட்ட பேரூராட்சிகளை மத்திய அரசிடம் போராடி ஊராட்சிகளாக மாற்றினார். ஆனால் இன்றைக்கு அதே தி.மு.க. அரசு அந்த ஊராட்சிகளை பேரூராட்சிகளாக்கவும், நகராட்சி, மாநகராட்சிகளுடன் இணைக்கவும் முயற்சி யெடுத்து வருகிறது.
இதில் குமரி மாவட்டத்திலுள்ள 95 ஊராட்சிகளில் 56 ஊராட்சிகள் அந்தப் பட்டிய லில் உள்ளன. இவை பேரூராட்சிகளாக தரம் உயர்த்தப்படும்போது, அந்த ஊராட்சியில் வசிக்கும் மக்கள், விவசாயிகள் என பல தரப்பினர் தங்கள் வாழ்வாதாரத்தை இழக்கநேரிடும். குறிப்பாக கிராம ஊராட்சியில் மட்டுமே உள்ள 100 நாள் வேலைத் திட்டம் குழிதோண்டி மண்ணோடு மண்ணாகப் புதைக்கப்படும். சாதாரண பெட்டிக் கடைக்குக்கூட தொழில் வரி கட்டணும். வீட்டு வரி, குடிநீர் வரி, ப்ளான் அப்ரூவல் கட்டணமும் பல மடங்கு உயரும். கிராம விவசாயம் அழிந்துவிடும்.
கிராம ஊராட்சிகளை மாற்ற முயலுவது ஒரு அதிகாரப் பரவல்தான். கிராம ஊராட்சித் தலைவர்களுடன் மக்கள் நெருக்கமாக இருக்கும் தொடர்பு... பேரூராட்சி, நகராட்சியாக மாறும்போது அறுந்துபோகும். பேரூராட்சி, நகராட்சித் தலைவர்கள் அரசியல் சார்ந்து வருவதால் அவர்களைக் கட்டுப்படுத்த முடியாது. இதனால் மக்கள் தங்கள் குறைகளையும் தேவைகளையும் எடுத்துச்சொல்லி எந்தப் பலனையும் பெறமுடியாத சூழல் உருவாகும். எனவே அரசு இம்முடிவைக் கைவிட வேண்டும்''’என்றார்.
நுள்ளிவிளை ஊராட்சிமன்றத் தலைவரும், ஊராட்சிகள் கூட்டமைப்பின் சட்ட ஆலோ சகருமான வழக்கறிஞர் பால்ராஜ் கூறும்போது, “"பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிக்கு இல்லாத வகையில் ஒன்றிய அரசின் 42 வகை யான திட்ட நிதிகள் நேரிடையாக கிராம ஊராட்சிகளுக்கு மட்டும் கிடைக்கிற நிலையில், கிராம ஊராட்சிகள் தரம் உயர்த்தப்பட்டால் ஒன்றிய அரசின் அந்த நிதிகள் கிடைக்காமல் போகும். மறைமுகமாக கிடைக்கிற 200-க்கு மேற்பட்ட சின்னச் சின்ன திட்டங்களும் கிடைக்காமல் போகும். மேலும் ஒவ்வொரு ஊராட்சியிலும் 2000 பேர் வரை 100 நாள் வேலைக்குப் பதிவுசெய்துள்ளனர். இதில் தினமும் 600 முதல் 700 பேர் வரை நாளொன்றுக்கு 294 ரூபாய்க்கு வேலைசெய்வதன் மூலம் ஆண்டுக்கு ஒரு நபருக்கு 25 ஆயிரம் ரூபாய் வருமானம் வருகிறது. இனி இந்த வருமானம் இல்லாமல் அந்த ஏழை எளிய மக்கள் கஷ்டப்படுவார்கள்.
பக்கத்து மாநிலமான கேரளாவில் பேரூராட்சி என்பதே கிடையாது. சொல்லப் போனால் அரசியலமைப்பு சட்டத்திலே பேரூராட்சி என்பது கிடையாது. தமிழகத்தில் வருவாய் அதிகமுள்ள பேரூராட்சிகளை மூன்றாம் நிலை நகராட்சி களாக மாற்றுவதை விட்டுவிட்டு கிராம ஊராட்சிகளை, பேரூராட்சிகளாக மாற்ற என்ன கட் டாயம் வந்து விட்டது?
கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் உள்ளாட்சி தேர்தல் நடத்தாததால் கிராம ஊராட்சிகளின் வளர்ச்சி பாதிக்கப் படுகிறது என ஊர் ஊராகச் சென்று கிராமசபைக் கூட்டங்களை நடத்தி ஊராட்சி களின் முக்கியத்துவத்தை மக்களிடம் எடுத் துரைத்தார் அன்றைய எதிர்க்கட்சித் தலைவரும் தற்போதைய முதல்வருமான ஸ்டாலின். இப்போது அதே ஊராட்சிகளை பேரூராட்சி, நகராட்சிகளாக மாற்ற நினைப்பது எந்த விதத்தில் நியாயம்?
நுள்ளிவிளை ஊராட்சியில் 32 குளங்கள் உள்ளன. இங்கு திரும்பிய பக்கமெல்லாம் விவசாயம்தான் பிரதானமாக உள்ளது. அப்படிப்பட்ட விவசாயம் நடக்கும் ஊராட்சி களை பேரூராட்சியாக மாற்றவோ இணைக்கவோ கூடாது என்று உள்ளாட்சி சட்ட விதி உள்ளது. அதை மீறி அரசு எடுக்கும் நடவடிக்கையை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? அதிகாரப் பகிர்வை விழுங்கி அதிகாரக் குவியலுக்கு பாதை காட்டும் அபாயம் இருப்பதால்தான் இதை எதிர்க்கிறோம்''’ என்றார்.
முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவர், வழக்கறிஞர் ரவிக்குமார் கூறும்போது, “"கிராம ஊராட்சிகளை தரம் உயர்த்துவதால் அரசுக்கு வருவாய் இழப்பு. ஊழியர்களுக்கு மகிழ்ச்சி. ஒரு ஊராட்சி என்றால் அங்கு ஊராட்சி செயலாளர் என்று ஒரு அரசு ஊழியர் மட்டும்தான் இருப் பார். அவருக்கு குறைந்தது 20,000 ரூபாய் மாதச் சம்பளம். அதுவே பேரூராட்சி என்றால் குறைந் தது 20 ஊழியர்கள். அவர்கள் எல்லோருக்கும் 6 லட்சம் வரை சம்பளம் ஆகும். இதனால்தான் நாகர்கோவில் நகராட்சியுடன் பல ஊராட்சி களை இணைத்து மாநகராட்சியாக தரம் உயர்த் தப்பட்டதும் அந்த ஊழியர்கள் அத்தனைபேரும் பட்டாசு வெடித்துக் கொண்டாடினார்கள். ஆனால் மக்களோ அதிக வரிச் சுமைகளை தாங்கிக்கொண்டு கஷ் டப்பட வேண்டும்''’ என்றார் சூடாக.
மக்களின் கோரிக்கைக்கு அரசு செவி சாய்க்குமா?