கர்நாடக அரசு தொடர்ந்து தமிழக மக்களை வஞ்சித்துக்கொண்டேயிருக்கிறது. "மேகதாது அணையை யாராலும் தடுக்க முடியாது' என்ற கர்நாடக முதல்வர் எடியூரப்பாவின் கொக்கரிப்போடு பணிகள் தீவிரமடைவதால், காவிரியில் தண்ணீர் வரத்து குறைந்து, டெல்டாவில் குறுவை பயிர்கள் பாதிக்கப்படுகின்றன.
வழக்கு நிலுவையில் இருக்கும்போதே சட்டத்தை மதிக்காத கர்நாடகத்தின் செயல்பாட்டை தடுத்து நிறுத்தக் கோரி, தமிழக அரசின் அனைத்துக்கட்சி குழு, டெல்லி சென்று, மத்திய நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்து, "அணை கட்ட அனுமதி கொடுக்கக்கூடாது' என்று வலியுறுத்தியுள்ளது.
தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு அனுமதி மறுக்கப்பட்ட நிலையிலும் தமிழகம் முழுவதும் இருந்து வந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் உண்ணாவிரப் போராட்டத்தை நடத்தியுள்ளனர். தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் நடத்திய இந்த போராட்டத்தில் கைக்குழந்தைகளுடன் பெண்களும் கலந்துகொண்டனர்.
உண்ணாவிரதப் போராட்டத்தில் இருந்த பி.ஆர்.பாண்டியன், "2013 டிசம்பரில் தமிழக காவிரி விவசாயிகள் கடும் குளிரில் டெல்லியில் போராடினோம். பிரதமர் அலுவலகம் எங்களை சந்திக்க அழைத்தது. 3 பேர் போய் காத்திருந்தோம். மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வீட்டில் கூடியவர்கள் எங்களை பிரதமர் சந்திக்க விடாமல் தடுத்து விட்டனர். ஆனால், கர்நாடகத்தின் செயலை மத்திய அரசு தடுக்க வில்லை. குடியரசுத் தலைவரை சந்தித்து அணை கட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அனுமதி இல்லாமல் அணை கட்ட முடியாது, உச்சநீதிமன்ற தீர்ப்பை கர்நாடகம் மீறுகிறது என்ற எனது பேட்டியை பார்த்து தென்னிந்திய பசுமை தீர்ப்பாயம் தானாக முன்வந்து வழக்கு போட்டதை அன்றைய தமிழக அரசு தொடர்ந்து வாதிடாமல் போனதால் தேசிய பசுமை தீர்ப்பாயம் தள்ளுபடி செய்தது. இப்படியான தவறுகளை இன்றைய தமிழக அரசு செய்யக்கூடாது. 26-ந் தேதி தமிழக விவசாயிகள் ஆளுநர் மாளிகையை முற்றுகையிடவிருக்கிறோம்'' என்றார்.
சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை மத்திய அரசு வழக்கறிஞர் பா.ஜ.க. முரளி கணேஷ், "நானும் டெல்டா விவசாயிதான். தண்ணீர் இல்லாமல் பயிர்கள் கருகுவதை என்னால் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. தமிழக மக்களின் பக்கம் நாங்கள் நிற்போம். எந்த சூழ்நிலையிலும் தண்ணீரைத் தடுப்பதற்கு அனுமதிக்கமாட்டோம். அதற்காக மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்துவோம்'' என்றார்.
தஞ்சை மாவட்ட தி.மு.க. விவசாய அணி வீரசேணன், "நமக்கு கிடைக்க வேண்டிய அளவில், 2018 தீர்ப்பிலேயே பெங்களூரு குடிநீர் தேவைக்காக என்று 14 டி.எம்.சி. தண்ணீரை குறைத்துவிட்டார் கள். ஆனால் இப்ப குடிநீர் தேவைக்காக அணை கட்டுகிறோம் என்கிறார்கள். இந்த அணை கட்டும் போது நமக்கான தண்ணீரை அளவீடு செய்யும் பிலுகுண்டுவுக்கே தண்ணீர் வராமல் போகும். இதனால் கசிவு நீர்கூட முற்றிலும் நிறுத்தப்பட்டு நமக்கான பங்கு கிடைக்காது'' என்றார்.
காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப் பாளர் பெ.மணியரசன்... "எந்த அனுமதியும் பெறாமல் காவிரியில் ஹேமாவதி, கபினி உள்பட 5 இடங்களில் தண்ணீரை தேக்கிக்கொண்டதால்தான் நமக்கு தண்ணீர் வருவதில்லை. வெள்ளப்பெருக்கு காலத்தில் வரும் தண்ணீரையும் தேக்கத்தான் 67.15 டி.எம்.சி. தண்ணீரை சேமிக்க உள்ளார்கள். இதனால் முற்றிலும் நமக்கு தண்ணீர் கிடைக்காது. குடிநீருக்காக 4.75 டி.எம்.சி.தான் பெங்களூருக்குத் தேவை. பிறகு ஏன் 67.15 டி.எம்.சி. தண்ணீரை தேக்கவேண்டும் என்று கேள்வி கேட்கும் அதிகாரம் கூட காவிரி மேலாண்மை ஆணை யத்திற்கு இல்லாமல் ஒன்றிய அரசு முடக்கி வைத்திருக்கிறது.
4 மாநில அமைச்சர்களையும் அழைத்துப் பேசுவேன் என்று ஒன்றிய அமைச்சர் சொல்கிறார். எதற்காக? சமாதானம் பேசவா? எந்த உத்தரவுகளை யும் மதிக்காத கர்நாடகம் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டுவது தமிழகம், புதுச்சேரி மக்களை வஞ்சிக்கத்தான். அணை கட்டினால் 25 லட்சம் ஏக்கர் விளைநிலம் தரிசாகும். "சென்னை உள்பட 22 மாவட்டங்களில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும். "காவிரி காப்பு போராட்ட நாள்' என தமிழக அரசே அறிவித்து மாபெரும் மக்கள் கிளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும். கிடப்பில் உள்ள உச்சநீதிமன்ற வழக்கை மீண்டும் விசா ரணைக்கு எடுக்க வேண்டும். இவற்றை விரைந்து செய்யாவிட்டால் தமிழக மக்கள் பஞ்சம் பிழைக்கத்தான் போகவேண்டும்'' என்றார்.
தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் டெல்லி சென்ற அனைத்துக்கட்சிக் குழுவிடம் விரிவாகப் பேசிய ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர், "கர்நாடகத்தின் திட்டத்திற்கு முழு ஒப்புதல் அளிக்கவில்லை என்றும், கர்நாடக அரசு அளித்துள்ள ஆவணங்கள் சரியானவை அல்ல' என்றும் தெரிவித்துள்ளார்.
அரசியல் கணக்குகளைத் தாண்டி, காவிரி உரிமையை நிலைநாட்ட வேண்டிய ஒன்றிய அரசு என்ன செய்யப்போகிறது?